அரிமளம் என்ற கிராமத்தில் சோமு என்ற ஏழை வசித்து வந்தான். அந்த கிராமத்தில் வசித்து வந்த பெரும்பாலோர் விவசாயிகள். அவர்களுக்கு சொந்தத்தில் நிலங்கள் இருந்தது. விவசாயத்தைத் தவிர மற்ற தொழில்கள் எதுவும் அங்கு இல்லை. ஆதலால், உணவுப் பொருட்களைத் தவிர மற்ற எந்தப் பொருட்களையும் வாங்க கிராமத்து மக்களுக்கு நகரம் செல்ல வேண்டியிருந்தது.
சோமுவிற்கு சொந்தத்தில் நிலம் ஏதுமில்லை. மற்ற விவசாயிகள் தேவைப்பட்டசமயங்களில் மட்டுமே சோமுவை கூலி வேலைக்கு அழைத்தனர். ஆதலால் சோமுவிற்கு நிரந்தர வருமானம் இன்றி, அவன் வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டான். அவனுடைய மனைவி பார்வதி கணவனுடைய சிரமத்தைப் போக்க, வீட்டிலேயே பல தின்பண்டங்கள் தயார் செய்து கிராமத்து மக்களுக்கு விற்பனை செய்து வந்து, பணம் சம்பாதித்து வந்தாள். இவ்வாறாக தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த அந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தனர். மகள் தன் அன்னைக்குத் தின்பண்டங்கள் தயாரிப்பதிலும் தன் தம்பியைக் கவனிப்பதிலும் உதவி செய்து வந்தாள்.
இப்படியிருக்கையில், ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு யோகானந்தர் என்ற சாமியார் தன் சீடர்களுடன் வந்தார். தினமும் கிராம மக்களுக்கு அவர் நல்ல பயனுள்ள அறிவுரைகள் வழங்கி வந்தார். ' 'நல்ல உ டல் நலமும், மன அமைதியும்தான் மக்களுக்கு நன்மை பயக்க வல்லது. ஆதலால் நலமாயிருக்க, நீங்களே தயாரித்த உணவுப் பண்டங்களை உண்ணுங்கள். வெளியிடத்தில் வாங்கி உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல” என்று அவர் ஒருநாள் உபதேசம் வழங்க, அன்று முதல், அனைவரும் விற்பனையாகும் தின் பண்டங்களை வாங்கி உண்பதை நிறுத்தி விட்டனர். அதன் விளைவு சோமுவின் குடும்பத்திற்கு விபரீதமாக முடிந்தது. சோமுவின் குடும்பம் பட்டினியால் அவதிப்பட்டது.
இதனால் சோமுவிற்கு அந்த சாமியார் மீது கோபம் ஏற்பட்டது. மனத்தில் ஆத்திரம் பொங்க, அவன் யோகாநந்தரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை சந்தித்தான்.
"ஐயா! ஏதோ அரை வயிறுக்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த என் குடும்பம் இன்று பட்டினியால் பரிதவிக்கிறது. அதற்குக் க ஈரணம் நீங்கள்தான்!” என்று அவரிடம் நடந்த விஷயத்தை சோமு விளக்கினான்.
“அப்பா! எல்லாரும் என் உபதேசத்தால் பயன் அடைந்து இருக்கின்றனர். நீ ஒருவன் மட்டும் தான் குறை கூறுகிறாய். பலருக்கு நன்மை பயப்பது சிலருக்கு தீங்காக முடியும் என்பது உலக நியதி!” என்று சாமியார் சமாதானம் கூற, “உபதேசிப்பதை விட்டு விட்டு நானும்,என்கு டும்பமும் அரை வயிறுக் கஞ்சியாவது குடிக்க வழி சொல்லுங்கள்!” என்றான் சோமு.
சற்று நேரம் யோசித்த சாமியார், பிறகு சோமுவை நோக்கிப் புன்னகை புரிந்து, “உன் வாழ்வு மு ன்னேறும் வழியை நீதான் கண்டு பிடிக்க வேண்டும். அதை நீயாகத் தெரிந்து கொள்ளும் வரை, உனக்கு உதவி செய்ய என் சீடனான பரதனை உன்னுடன் இருக்கச் செய்கிறேன். உனக்கு வேறு ஏதாவது நல்ல வேலை கிடைக்கும் வரை, அவன் தன்னுடைய மந்திர சக்தியால் உன்னையும் உன் குடும்பத்தி னரையும் ரட்சிப்பான். நான் இன்று இந்த கிராமத்தை விட்டுச் செல்கிறேன்!” என்று கூறியவர் தன் சீடனான பரதனை அழைத்து, ‘பரதா! இந்த சோமு பரம ஏழை. என்னுடைய உபதேசத்தால் இவன் மனைவி செய்து வந்த தொழில் நின்று போயிற்று. பட்டினியால் வாடும் இவன் குடும்பத்திற்கு, நீ உதவி செய். இவர்களுடன் பதினைந்து நாள் தங்கியிரு. அதற்குள் சோமு, தன் வருமானத்திற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடித்து விடுவான். பிறகு நீ என்னிடம் வா!” என்று பணித்தார்.
தனது குருவை வணங்கி விட்டு, பரதன் சோமுவைப் பின் தொடர்ந்தான். சோமுவின் வீட்டிற்குச் சென்ற பரதன், “உங்களுக்கு என்ன வேண்டும், சொல்லுங்கள்!” என்று கூற, அனைவரும், “எங்களுக்கு சாப்பிட ஏதாவது தாருங்கள்!” என்றனர். அனைவரையும் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளைக் குறிப்பிட்டு விட்டு, கண்களை மூடிக் கொள்ளச் சொன்ன பரதன், அவர்கள் அவ்வாறே கண்களை மூடிக்கொண்டதும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை தன் மந்திர சக்தியால் கொண்டு வந்து விட்டான். அனைவரும் அவனுக்கு நன்றி கூறினர்.
அதற்கு பரதன், 'நினைவிருக்கட்டும்! பதினைந்து நாள் மட்டுமே, நான் இதையெல்லாம் செய்வேன். அதற்குள் பிழைக்கும் வழியை நீங்களே யோசித்துக் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்!” என்றான்.
உடனே சோமு, “உன்னுடைய மந்திர சக்தியை மட்டும் எனக்குக் கற்றுத் தந்து விடு! அது ஒன்றே போதும்! அதை வைத்து நாங்கள் பிழைத்துக் கொள்வோம்!” என்றான்.
கடகடவென்று சிரித்த பரதன், “அந்த வீணான ஆசையை விட்டு விடு! வேறு உருப்படியாக ஏதாவது யோசனை செய்!' என்றான்.
“எது எப்படியாயினும், நான் உங்களிடம் இருந்து மந்திரசக்தியைப் பெற ஆவலாக இருக்கிறேன்!” என்று சோமு பிடிவாதம் பிடித்தான்.
"நல்லபடியாக வாழ்வதற்கு எத்தனையோ நல்ல வழிகள் உள்ளன. அவற்றை விடுத்து மந்திரம் கற்றுக் கொள்ள ஆசைப்படாதே! மந்திரத்தை வைத்து வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அது உனக்குத் தீங்காக முடியும்” என்று பரதன் எச்சரித்து விட்டுச் சென்று விட்டான்.
அன்றிரவு சோமுவும், பார்வதியும் நீண்ட நேரம் அதைப் பற்றி விவாதம் செய்தனர். பார்வதி சோமுவிடம், 'மந்திரவாதி சொல்வது உண்மை என்றே தோன்றுகிறது. மந்திர சக்தியைக் கொண்டு பணம் சம்பாதிப்பதால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் உண்டாகும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. அதனால் நாம் வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்க முடியுமா என்பதைப் பற்றி மும்முரமாக சிந்திப்போம்” என்றாள். சோமுவிற்கும் அது நியாயமாகத் தோன்றியது.
மறுநாள் முதல் அவர்கள் இருவரும் அலைந்து திரிந்து தீவிர மாக வேலை தேடினர். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. சலித்துப்போன சோமு, மீண்டும் பரதனிடம் மந்திர சக்தியைப் பெற விரும்பினான். ஆனால் பரதன், “அலாவுதீன் அற்புத விளக்கு கதை கேட்டிருக்கிறாயா? அதில் வரும் பூதம் விளக்கின் அடிமையாக இருந்தது. பாதாள பைரவி கதை தெரியுமா? அதில் மந்திரவாதியின் கதி என்னவாயிற்று தெரியுமா? நிதானம் தவறிய மந்திரவாதி அழிந்து போனான். ஆகவே மந்திர சக்தி பெறுவதைப் பற்றி யோசிக்காதே! நீ வேறு ஏதாவது வழி கண்டு பிடி!” என்றான். பார்வதியும் தன் கணவனுக்கு தைரியமூட்டி வேறு ஏதாவது வழி யோசிக்கச் சொன்னாள்.
இவ்வாறு பரதன் வந்து பதினைந்து நாள்கள் முடிந்து விட்டன. பரதன் சோமுவையும் பார்வதியையும் நோக்கி, “நான் பிரியும் நேரம் வந்து விட்டது. உங்களுக்கு ஏதாவது வழி தோன்றியதா? இல்லை, மந்திர சக்திதான் வேண்டுமா?” என்றான்.
சோமுவும் பார்வதியும் , ஒரே குரலில், ''வேண்டாம் உன்னுடைய மந்திர சக்தி! ஒருவாறாக, பணம் சம்பாதிக்க எங்களுக்கு ஒரு நல்ல வழி தோன்றி விட்டது. கிராமத்து மக்களுக்குத் தேவையான பொருட்களை நாங்கள் இருவரும் நகரத் தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வோம். கிராமத்தில் உற்பத்தியாகும் தானியங்களை நகரத்திற்குச் சென்று விற்போம். இவ்வாறு விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவோம்!” என்றனர்.
'சபாஷ்! தீவிரமாக யோசித்தால் பிழைப்பதற்கு ஏதாவது ஒரு நல்ல வழி தோன்றுமென்று சொன்னேன் - அல்லவா! உங்களுடைய இந்த யோசனை பிரமாதம்” என்று அவர்களை வாழ்த்திவிட்டு பரதன் விடைப் பெற்றுக் கொண்டான்.
Post a Comment