.

மிகக் குறுகிய காலத்தில் அதிக மழைப் பொழிவு,வெள்ளத்திற்குப் பின்னர் உடனடியாக ஏற்படும் வறட்சி, கொளுத்தும் வெயில், கொட்டும் பனி, நடுங்க வைக்கும் குளிர்,வெளியில் தலைகாட்ட முடியாத வெப்பம், காற்று மாசு, காட்டுத் தீ என தொடர்ந்து காலநிலையில் ஏற்படும் மாற்றங்களினால் ஒட்டுமொத்த பூமியும் ஆபத்தை, நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது. இத்தகைய அதீத காலநிலை நிகழ்வுகளால் நோய்கள், உற்பத்திக் குறைவு, மனித வளங்கள் அழிப்பு, மனித இனத்திற்குள் நெருக்கடி போன்றவை ஏற்படும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

கடந்த ஆண்டுகளின் தரவுகளை எடுத்துப் பார்த்தால், வெள்ளம் போன்ற அதீத காலநிலை நிகழ்வுகள் 5-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். சமீபத்தில் அப்படியில்லை.வருடந்தோறும் நடக்கின்றன. வறட்சி இன்னும் மோசமாக உள்ளது.கடலோரப் பகுதிகளில் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தொடர்ச்சியாக மாறி மாறி நிகழும் வெள்ளம், வறட்சி உள்ளிட்டவை காலநிலையின் மோசமான மாற்றத்திற்கான அறிகுறிகள், உலக வெப்பநிலை உயர்வால் தான் இவை ஏற்படுகின்றன என்று சூழலியல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். 

காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் எதிர் கொண்டுள்ள ஆபத்திலிருந்து இலங்கையும் தப்ப வில்லை.அண்மைய காலங்களாக பருவம் தவறி பெய்யும் மழையும் அதனால் ஏற்படும் பெரு வெள்ள மும் முழு நாட்டையும் விவசாய செய்கைகளையும் புரட்டிபோடுவதும் மக்களை நோயாளிகளாக்குவதும் அதன்பின்னர் ஏற்படும் கொடிய வெப்பம், வறட்சியும் விவசாய செய்கைகளை அழிப்பதும் நோய்களைப் பரப்புவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கும் பேரழி வுகளாகிவிட்டதனால் இலங்கையும் காலநிலை மாற்றத்தினால் பெரும் ஆபத்துகளையும் நெருக்கடி களையும் எதிர்கொண்டுள்ளது. 

இயற்கையினால் நாட்டில் ஏற்படும் பேரழிவுகளுக்கும் பெரும் நெருக்கடிகளுக்கும் காலநிலை மாற்றத்தை குற்றவாளிகளாக்கும் நாம் அத்தகைய பேரழிவுகளையும் பெரும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும ளவுக்கு காலநிலையில் மாற்றம் ஏற்பட காரணமானவர்கள் யார்? இயற்கையை சீண்டி பேரழிவுகளை ஏற்படுத்த தூண்டும் குற்றவாளிகள் யார் என்பது தொடர்பில் சிறிதளவேனும் கவனம் செலுத்துவதில்லை. மக்களாகிய நமக்கு மட்டுமல்ல நம்மை ஆளும் அரசுகளுக்கும் இது தொடர்பில் அக்கறையில்லை.

காலநிலை நெருக்கடி நாம் வாழும் பூமி எதிர் கொள்ளும் சவால்களில் முக்கியமானதொன்று. எனவே, இதன் தாக்கங்கள் அதிகரிப்பதற்குப் பொறுப் பானவர்கள்,குற்றவாளிகள் யார் என்பது பற்றிய ஆழமான விவாதம் அவசியம். காலநிலை மாற்றத் தில் மனிதச் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துவதா கக் கருதப்படும் இந்தக் காலகட்டத்துக்கு நிலவியல் (Geological) அடிப்படையில் 'மனித ஆதிக்கயுகம்’ (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுமார் 12,000 ஆண்டு களாக நிலவி வந்த ஹோலசீன் (Holocene) என்ற வெப்பநிலை யுகத்தை கடந்து மனித குலம் அடுத்த யுகத்தில் அடியெடுத்து வைப்பதை இது குறிக்கின்றது. 

புவியின் சராசரி வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 1.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை அதிகரித்தால் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படும் என்பதால், வெப்பநிலை அந்த அளவுக்கு அதிகமாகிவி டாமல் தடுக்கவேண்டிய அவசரம்,அவசியம் மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் காலநிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெப்பநிலை அதிகரித்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகள், குறிப்பாக பெற்றோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் கரிம உமிழ்வுகளே காரணம் என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள் உறுதியாக தெரிந்துவிட்ட நிலையில், அதற்கான தீர்வுகள் இப்போது பரவலாக விவாதிக்கப்படுகின்றன.

முதலாளித்துவம் ஒரு பொருளாதார அமைப்பு என்ற வகையில், தொடர்ச்சியான நுகர்வுக்கு நம்மைப் பழக்கப்படுத்தியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால் பெரும்பாலும்,லாபத்தை பெருக்கும் நோக்கி சுற்றுச்சூழல் அக்கறை இல்லாமல் இயற்கை வளங்களைத் தொழில் துறைகள் சுரண்டி கொள்ள பல நாடுகள் அனுமதிக்கின்றன. உலக நாடுகளில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகள் தொடரும் பட்சத் தில், 2100 ஆம் ஆண் டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை சுமார் 2.7 டிகிரி செல்ஸியஸாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் தீவிரமான காலநிலை நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். 

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, காலனிய ஆட்சி முறையும் அதன் பின் ஏற்பட்ட தொழில்ம யமாதலும்தான் தற்போதைய காலநிலை நெருக் கடிகளுக்கான வேர்கள் என்பதை அறிய முடியும்.முதலாளித்துவம் அதாவது பெரு நிறுவனங்கள் எப்போதும் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளவே முனைப்புக் காட்டும். முத லாளித்துவ கோட்பாட்டில் மலிவானது என வரை யறுக்கப்பட்ட இயற்கை வளங்களையும் மனித காலநி குற்றவ உழைப்பையும் கட்டற்ற வகையில் பயன்படுத்தி தன் மூலதனத்தை பன்மடங்காக அது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

அதுமட்டுமன்றி, நகர மயமாக்கல்களும் காலநிலை மாற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.அபிவிருத்தியடைகின்றோம்,நகர மயமாகின்றோம் என்ற பெயரில் இடம்பெறும் காடழிப்புக்கள், கட்டிடக்காடுகள் உருவாக்கம், சுற்று சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், உற்பத்திகள் வாகனங்களுக்கு அனுமதியளித்தல் போன்றவை இயற்கை யையும் சுற்றுச் சூழல் பாது காப்பையும் சீர்குலைத்து காலநிலையில் மாற்றங் களை ஏற்படுத்துகின்றன.நமது நாடு சுற்று சூழலை பாதுகாக்க முயன்றாலும் அயல் நாடுகள் செய்யும் தவறுகள் கூட எமது நாட்டை பாதிக்கும் பூகோள அமைவிலேயே நாம் உள்ளோம்.

தொழில்மயமாக்கல்,மனித மைய விளைவுகளால் உலக வெப்பமயமாதல் மிகத் தீவிரமான நிலைக்குச் சென்றுள்ளதையே இத்தகைய அதீத காலநிலை மாற்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகமானால், உணவு உற்பத்தி, அரசியல் நெருக்கடி என மானுட சமூகம் பல மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என, காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் ஐபிசிசி குழு வெளியிட்ட ஆய்வறிக்கையும் நம்மை எச்சரிக்கிறது.உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் கூடியதற்கே இத்தனை விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதைத் தாண்டி விட்டால், எதனையும் சரிசெய்ய முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இப்போது 'டெர்மாஃப்ரோஸ்ட்' விளைவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.அதாவது, ஆர்க்டிக்கில் உள்ள பனிகள் அதிகப்படியான மீத்தேனை அழுத்தி வைத்திருந்தன. இப்போது, பனி உருக உருக அந்த மீத்தேன் வெளியேறுகிறது.மீத்தேன் இன்னும் காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தும் என்கின்றனர்.இவ்வாறான நிலையில்தான் காலநிலை மாற் றத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக இரு தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது, புதை படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து வளங்குன்றா ஆற்றலுக்காகச் சூரிய ஒளி,காற்றாலை போன்றவற்றைப் பயன்படுத்துவது. இரண்டாவது, காற்றில் கரிமம் சேராமல் உறிஞ்சும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது. ஆனால் இதனை நடை முறைப்படுத்தத்தான் எந்த அரசும், நிறுவனங்களும் தயாரில்லை. 


காற்றாலை,சூரிய ஒளி போன்ற வளங்குன்றா ஆற்றல்களின் பயன்பாடு நிலக்கரி ஆற்றலை விட அதிகமாக வேண்டும். இது 2026 ஆம் ஆண்டின் இலக்கு. வளங்குன்றா ஆற்றல்களின் பயன்பாடு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டை விட அதிகமாக வேண்டும். இது 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கு.சுருக்கமாகச் சொல்லப்போனால் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கும், மொத்த மின்சாரத்தில் 90 சத விகிதமும் வளங்குன்றா ஆற்றலில் இருந்து கிடைக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை உலக நாடுகளினால் அடைய முடியும். 

புதைபடிவ எரிபொருள்கள் மீதான நம் பிடிமானத்தை குறைத்துக் கொள்வதற்கான பல வழிகளைச் சர்வதேச கூட்டமைப்புகள் சொல்லியுள்ளன. அறிவியல்,பொருளாதாரம்,சமூகவியல்,அரசியல் போன்ற பல துறை நிபுணர்கள் இணைந்து இதில் செயல்பட வேண்டியது அவசியம். ஐ.நா சபை கூட உலக நாடுகளின் அரசுகள் வளங்குன்றா ஆற்றலுக்கான ஆராய்ச்சிகள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான நிதியை ஒதுக்கவேண்டும். எல்லா மக்களுக்கும் புதை படிவ எரிபொருள்களின் விலையிலேயே இது சென்று சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கரிமம் இல்லாத தொழில்நுட்பங்கள் மீது முதலீடு செய்ய அரசுகள் முன் வரவேண்டும்.

அடுத்தடுத்த வேலைவாய்ப்புத் திட்டங்களில் இது போன்ற பசுமைப் பணிகளுக்கான பணியிடங்கள் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட வேண்டும். புதை படிவ எரிபொருள் துறையில் பணியில் இருப்பவர்களுக்கான மாற்று வாழ்வாதாரமாக இது உயரும்.கரிமத்துக்கு அடுத்து பெரிய ஆபத்தாக விளங்கக்கூடிய மீத்தேனை உமிழும் செயல்பாடுகளைக் கண்டறிந்து, அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்படவேண்டும். அதற்கான ஆராய்ச்சிக்கு அரசுகள் நிதி ஒதுக்கவேண் டும்.பசுமைப் பொருளாதாரம் பற்றிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதிகமாகக் கரிமத்தை உமிழும் நிறுவனங்கள் மீது கடுமையான வரியும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.புதைபடிவ எரிபொருள் துறைகளுக்கு தரப்படும் மானியம் குறைக்கப்பட வேண்டும், மானியம் முற்றிலும் நிறுத்தப்பட்டால் இன்னும் நல்லது என்ற சில முக்கியத் தீர்வுகளை முன் வைத்துள்ளது. காலநிலை மாற்றம் குறித்து, பல ஆண்டுகளாகப் பேசப்படுகிறது. ஆனால், உலகில் உள்ள எந்தவொரு அரசுகளும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை களை எடுப்பதில்லை. வருடா வருடம் சுற்று சூழல்மாநாடுகள் கூட்டப்படுகின்றன; பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன ஆனால், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் செயற்பாடுகள் நடைமுறையில் எடுக்கப்படுவதில்லை.

காலநிலை மாற்றம்,அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ளவர்களையே அதிகமாகத் தாக்குகின்றது.இதன் விளைவாக நோய்கள், வாழ்வாதாரம்,சுகாதாரம்,தொழில்,விவசாயம்.உணவின்மை பொருளாதார இழப்பு,இடம் பெயர்வு எனப் பாதிக்கப்படுகிறார்கள்.காலநிலை மாற்றத் திற்கான கொள்கைகள், திட்டங்கள் இலங்கையில் இருக்கின்றன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.எனவே விளைவுகளை கட்டுப்படுத் துவதற்கான நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள்

காலநிலை மாற்றத்திற்கான முதன்மை காரணமாக பச்சை வீட்டு வாயு வெளியேற்றம் இருக்கிறது. குறிப்பாக கார்பன் டை ஒக்சைட், மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஒக்சைட் ஆகிய வற்றின் வெளியேற்றத்தால் பூமியின் வளிமண்டல வெப்பம் அதிகரித்து காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. 

Co2-ஐ உறிஞ்சி ஒக்ஸிஜனை வெளியிடுவதன் மூலம் பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.விரைவான நகரமயமாக்கல்,வளி, நீர், நிலமாசடைவு,தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அவை சார்ந்த கழிவகற்றல்களும்,காடழிப்பு,மண்ணகழ்வு,இரசாயன ஆயுதங்கள் சார் பரிசோதனைகள்,யுத்தம் மற்றும் ஆயுத பாவனை,அசேதன உரப்பாவனை, இயற்கைக்கு இசைவற்ற பொருட்களின் பாவனைகள் போன்றனவும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன 

ஆற்றல் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் தொழில் துறை செயல்முறைகளுக்கு ற்றம் யார்? புதைப்படிவ எரிபொருட்களை எரிப்பதால், வளிமண்டலத்தில் அதிக அளவு co2 வெளியிடப்படுகிறது.சமீப காலங்களில் தொழில்மயமாக் களின் அதீத வளர்ச்சியால், கார்பன் டை ஒக்சைட் உமிழ்வு கணிசமாக அதிகரித்துள்ளது. இது காலநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்குகிறது.

கால்நடை உற்பத்தி மற்றும் செயற்கை உரங்களின் அதீத பயன்பாடு போன்ற விவசாய நடவடிக் கைகளின் காரணமாக மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஒக்சைட் அதிக அளவு வெளியிடப்படுகின்றன.குறிப்பாக கால்நடைகளின் செரிமான த்தின் போது மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.அதே நேரத்தில் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நைட்ரஸ் ஒக்சைட் அதிகமாக வெளியாகிறது.இத்தகைய விவசாய உமிழ்வுகள் வளிமண்டலத்தில் ஒட்டுமொத்த பச்சை வீட்டு வாயுக்களின் அடர்த்தியை அதிகரிக்கின்றன.

 காலநிலை மாற்றத்தின் விளைவுகள்

புவி வெப்பமடைதல் என்பது காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாகும். இது உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கு வழி வகுத்து, வானிலை முறைகளை சீர்குலைத்து, அடிக்கடி வெப்ப அலைகளை தூண்டி மழைப்பொழிவை கடுமையாக பாதிக்கிறது. காலநிலை மாற்றம் சூறாவளி, வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுத் தீ உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. இது உலகில் பேரழிவை ஏற்படுத்தி உயிரிழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. 

உலக வெப்பநிலை உயர்வதால் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும். இது கடலோர சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சு றுத்தலாக மாறி, கடலோர அரிப்பு, தாழ்வான பகுதிக ளில் வெள்ளம் மற்றும் நன்னீர் ஆதாரங்களில் உப்பு நீர் ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது.

காலநிலை மாற்றம், பறவைகள் மற்றும் தாவரங்களின் இயல்பை மாற்றி அமைப்பதால்,சுற்றுச்சூழல் அமைப்புகள் சீர்குலைகிறது. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதித்து, சில இனங்கள் வேகமாக அழியும் நிலைக்கு செல்ல வழிவகுக்கும்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த.... 

பச்சை வீட்டு வாயுவைக் கட்டுப்படுத்துவதால் கால நிலை மாற்றத்தை பெருமளவில் குறைக்க முடியும். சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மூலமாக பச்சை வீட்டு வாயு வெளியே றுவதை நாம் குறைக்க முடியும். இதற்கு பொதுமக்களும், அரசாங்கமும், வணிக நிறுவனங்களும் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு மாறி கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் காடுகளை அழிக்காமல் பல்லுயிர் பெருகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி நாம் மாற வேண்டும். அதாவது பெற்றோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் இயந்திரங்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் இயந்திரங்களை உருவாக்க வேண்டும். எனவே இத்தகைய விஷயங்களுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும்.

பொதுமக்களிடையே காலநிலை மாற்றம் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். காலநிலை மாற்றம் குறித்த விஷயங்களை பாடத்திட்டத்தில் இணைத்து அதன் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்க வேண் டும். அரசாங்கங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு போதிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடத்தைகளில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதை விட முக்கியமானது அதை ஏற்றுக் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது. இதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு, பேரிடர் பாதுகாப்பு நிலை மற்றும் தகவமைப்பு போன்ற விஷயங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.குறைந்தபட்சம் பொதுமக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதையாவது அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.

தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல், நிலையான விவசாய நடைமுறைகளை ஏற்றுக் கொள்வது, வனப்பகுதி களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளால் கால நிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். ஆகவே இவ்விடயங்களை அலசி ஆராய்ந் தால் கால நிலை மாற்றத்திற்கான காரணிகளாக, குற்றவாளிகளாக மனிதர்களான நமே உள்ளோம் எனவே.காலநிலை மாற்றத்திற்கு காரணமாகும் இயற்கைக்கும் சுற்று சூழலுக்கும் எதிரான எமது செயற்பாடுகளை, சுயநல இலக்குகளை கைவிட்டு இயற்கையை பாதுகாத்து பாதுகாப்பான நிலையான ஒரு எதிர்காலத்தை உருவாக்கி, எதிர்கால தலைமுறையினரை நமது பூமியில் மகிழ்ச்சியாக வாழ வைக்க நாம் தயாராக வேண்டும். இல்லையேல் எம்மைத் தாங்கும் பூமியினதும் எமது எதிர்கால சந்த தியினதும் அழிவுக்கு நாமே காரணமாக இருப்போம்.


இவற்றையும் வாசிக்க

1.வளி மாசடைதல்

2.பருவநிலை மாற்றமும் மனித செயற்பாடும்

3.காலநிலை மாற்றத்தின் பிடியில் உலகம்

4.அமிலமழையின் தாக்கம்

5.உலகை அச்சுறுத்தும் சூழலியல் மாற்றங்கள்

6.காடுகளை வாழ விடுங்கள்

7.காலநிலை மாற்றம் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்

8.தகிக்கும் வெப்பம்

9.காணாமல் போகும் காடுகள்

10.காலநிலை மாற்றமும் மனித குலமும்

Post a Comment

Previous Post Next Post