வி.அபிவர்ணா எழுதிய வில்லோடு வா வெண்ணிலா என்ற புத்தகமானது இளம் கவிஞர் அபிவர்ணாவின் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இலங்கையின் இளம் கவிஞராகத் திகழும் அபிவர்ணாவின் வில்லோடு வா வெண்ணிலா என்பது இளம் பெண்களை சாதிக்க அழைக்கும் அழைப்பாகவே கருத வேண்டியுள்ளது.இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பது நிதர்சனம்.இலக்கியம் காலத்தால் அழிக்க முடியாதது.போரால் பாதிக்கப்பட்ட எம் சமூகத்திலிருந்து இளம் கவிஞர்கள் உருவாவது இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு நற்செய்தியே.எழுத்து மூலம் அடுத்த தலைமுறைக்கு சமூக விடயங்களை நாம் அனுபவித்த துயரத்தை கடத்த முடியும்.
புத்தக வெளியீடு என்பது தற்போதைய காலகட்டங்களில் மிகவும் சாவாலானது.இலாபம் என்பதை கருத்தில் கொள்ளாமல் நூலாசிரியர்கள் தங்களின் படைப்புக்களை வெளிக் கொண்டு வர படாதபாடு படுகிறனர்.அதுவும் முதன் முறையாக புத்தகத்தை வெளியிடும் போது எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.அவை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக தன்னுடைய இந்தப் படைப்பை அபிவர்ணா வெளிக் கொண்டு வந்துள்ளார்.அந்த வகையில் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
எல்லா துறைகளைப் போலவும் எழுத்து துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதாவது ஆணுக்கு இலகுவாக கிடைக்கும் விடயங்கள் பெண்ணுக்கு மறுக்கப்படுவதுதான் ஆண்டாண்டாகத் தொடரும் கொடுமை.எனக்குத் தெரிந்த அனுபவத்தின் அடிப்படையில் சில இளம் பெண் எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் வெளியிட முன்னர் அவர்களுடைய அம்மாவால் தணிக்கை செய்யப்படுகிறது.குறிப்பாக காதலைப் பற்றி எழுதிய கவிதைகள் தாயாரால் தணிக்கை செய்யப்பட்டு எது வெளியிடப்பட வேண்டும் என்று அந்த எழுத்தாளரின் அம்மா நினைக்கிறாரோ அந்தக் கவிதைகள்தான் வெளியிடப்படுகிறன.என்னதான் ஆயிரம் காரணம் சொல்லி இதனை நியாயப்படுத்தினாலும் இது சுதந்திரமான தான் விரும்பியதை சொல்ல நினைக்கும் பெண் எழுத்தாளர்களை தன்னுடைய கருத்தைச் சொல்ல விடாமல் தடுக்கும் ஒடுக்குமுறைதான்.அத்தோடு அந்த எழுத்தாளரை எழுதுவதை விட்டு விட வைக்கும் உளவியல் ஒடுக்குமுறை.இதனை அபிவர்ணாவும் சந்தித்திருக்கலாம்.இதனைக் கடந்து அபிவர்ணா தன்னுடைய புத்தகங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு தமிழிற்கான தனது சேவையைத் தொடர வேண்டும்.
தாய்மை என்னும் கவிதையானது அம்மாவின் சிறப்பைச் சொல்கிறது.''உயிர் பயிர் வளர்க்கும் தாய்மை, உலகமே உணர்ந்த உண்மை'' என்ற வரிகள் தாய்மையின் சிறப்பை எடுத்துச் சொல்கிறது.''ஒவ்வொரு தாயைப் பார்க்கத்தான் சூரியனே வருகிறது.அவளது அன்பால்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது.''என்கிற வரிகள் சிறப்பு.
பிரிவின் வலியை ஒற்றைக் குடிசையும் நீயே என்கிற கவிதை சொல்கிறது.குறிப்பாக ''ஒற்றைக் குடிசையையும் நீயே,அதில் உறங்கும் பாயும் நீயே, சட்டியும் பானையும் நீயே, மனம் விரும்பும் கஞ்சியும் சோறும் நீயே''என்கிற வரிகளில் பிரிவுகளின் தாகம் ஒளிந்திருக்கிறது.
சிறவர் தொழிலாளர்களின் வலிகளை பிஞ்சினில் சோதனை என்ற கவிதை சொல்லிச் செல்கிறது.''காற்றுக்கு என்ன வேலி, படைத்தாய்..?,பள்ளிப்பாடம் கற்க கூட கதவை, அடைத்தாய், பிறகேன் எம்மைப் படைத்தாய்''என்கிற வரிகள் சிறப்பானவை.
போர்க்களம் என்னும் கவிதையானது இன்றைய உலக நடப்பை கோடிட்டுக் காட்டுகிறது.''மதப் பிரிவாலே,நீ மாறுவதேனோ..?,இனம் என்று பிரித்தால், இனவாதம் தானோ..?,சாதிகள் ஏனோ..?,சமயப் பிரிவுகள் ஏனோ..?'' மோதுவதாலோ கடைசியில் காண்பதும் ஏனோ..?எதுவும் இல்லை என்பதை இந்த வரிகள் மூலம் அபிவர்ணா பதிலளிக்கிறார்.
வில்லோடு வா வெண்ணிலா என்னும் கவிதையானது பெண்களிற்கான சுயமுன்னேற்றக் கவிதையாகத் தெரிகிறது.'கோல்கள் யாவும்,உன் பின்னால், வலம் வர வேண்டும்,வில்லோடு வா வெண்ணிலா. என்கிற வரிகள் ஒவ்வொரு பெண்ணுக்குமானவை.
உன்னைச் சுற்றும் என் ஆவி என்ற கவிதையானது காதலின் பிரிவை, ஏக்கத்தை, வலியை உணர்த்துகிறது.'சில சங்கடங்கள்,சில சந்தோசங்கள்,சில கனவுகள்,சில நினைவுகள்,தூரத்தில்'' என்கிற வரிகள் நிச்சயமாக பெரும்பாலானோரின் வாழ்க்கையோடு ஒன்றிப் போகக் கூடியவை. பெரும்பாலானோர் அனுபவித்த துயரங்கள் இந்த வரிகள்.
மீனவ சமூகத்தின் வாழ்வை எடுத்தியம்பும் கவிதைக்கு மீனவர் வாழ்வு எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.'கொட்டில் வீடும்,கூரையின் கீழ் கொட்டும் மகிழ்வும், கஞ்சியோ சோறோ,கனவுகள் நூறோ..?,மிஞ்சாத போதும்,பகிர்ந்திடும் மனமும் என்கிற வரிகள் சிறப்பானவை.
சினம் கொள் பெண்ணே என்கிற கவிதையானது பெண்களை முன்னேறச் சொல்லி அறைகூவல் விடுக்கிறது.'கருகி உதிர்ந்து,காற்றிலே பறந்து,சருகாய் போகும்,பூக்களே மங்கை''என்கிற வரிகள் மங்கையரின் ஆண்டாண்டு கால நிலையைப் புடம் போட்டுக் காட்டுகிறது.''தன்னுயிர் ஈந்து,தரணியைக் காத்திடும்,என்னுயிர் கொண்டு,எதிரியை முடிப்பேனெனச்,சிதையா நெஞ்சுகொள்,பெண்ணே'' என்கிற வரிகள் நிச்சயமாக பெண்களிற்கான தன்னம்பிக்கை வரிகள்தான்.
புதைகுழியின் மரணங்கள் என்கிற கவிதையானது மனிதவாழ்க்கை பற்றி எடுத்துரைக்கும் ஒரு சிறப்பான கவிதையாகும்.''சேர்த்து வைத்த,மொத்த நாளை,செலவு செய்யும் ஒரு தருணம்,வரும் நாளில் வரும்,இந்த அழகான மரணம்''என்னும் வரிகள் மரணம் நிச்சயமான ஒன்று என்பதை வாசகர்களிற்கு ஞாபகமூட்டிச் செல்கிறது.
வெளிநாட்டு வாழ்க்கையின் துன்பங்களை ஏக்கத்தை குடும்பத்தின் பிரிவை தரமான முறையில் வெளிநாட்டு வாழ்வு என்னும் கவிதையின் மூலம் அபிவர்ணா விளக்கிச் சொல்கிறார்.''முப்பது நாள் சந்தோசம்,முத்துத்திவலை வழியோரம்,வாழ்வைத் தேடி வதங்கி வாடி,வசதி தேடித்தேடி வழிபல ஓடி''என்னும் வரிகள் எம்மில் பலரின் சொந்த வாழ்க்கையோடு பொருந்திப் போகிறது.
இலங்கைத் தமிழர்கள் போரினை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பார்கள். அப்படி மறையாத போரின் வடுக்கள் என்கிற கவிதையின் மூலம் போர் ஓய்ந்தாலும் காயங்கள் ஓயவில்லை என்பதை நினைவூட்டுகிறார்.'என்ன செய்வேன்..?,கோபம்..?,கொந்தளிப்பு...''எழுதுகிறேன் என்கிற வரிகள் இளைய தலைமுறையினரிடம் போரின் உளவியல் தாக்கம் எத்தகையது என்பதை வெளிக்காட்டுகிறது.
முதலிலிருந்து என்கிற கவிதையானது காதலின் பிரிவை நறுக்கென சொல்கிறது.'நான் வெட்டி விட்டுப் போனாலும்,துளிர்த்துக் கொள்ளவும், முடியுமெனில்,மலர்கிறது,அழகானப் பேரன்பு,நமக்கானதாய்''என்கிற வரிகள் சிறப்பானவை.
தீயோடு போனாலும் தீராது என் பாசம் என்கிற கவிதையானது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசப் போராட்டமாக வெளிப்படுகிறது.'தீயோடு போனாலும் தீராது என் பாசம்,நீ கொடுத்த என் சுவாசம்,காற்றோடு என் வாசம்,சுத்திச் சுத்தி உன்னை சுத்தி,வாழுமம்மா,கத்திக் கதறும் உன் குரலைக் கேக்குமம்மா..?என்கிற வரிகள் உண்மையான பாசமான வரிகள்.
அபிவர்ணாவின் கவிதைகளில் உள்ள பெரிய முரண் என்னவெனில் இந்து மதக் கடவுளை போற்றிக் கொண்டே சாதிகள் இல்லை என்கிற கருத்தையும் நிலை நிறுத்த முயல்வது.இந்து மதத்தின் அடிப்படையே சாதிதான் என்பதையும் அதனைக் அந்த மதக் கடவுளரே நிலை நிறுத்துகிறனர் என்பதையும் வரலாற்றையும் இந்து மதப் புராணங்களையும் தெரிந்து கொண்டாலே இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.எதற்கெடுத்தாலும் இறைவனிடம் சரணடைவது போல் சில கவிதைகளின் வரிகள் காணப்படுகிறன இது பக்தி இலக்கியம் எழுதத்தான் வழிவகுக்குமே தவிர சமூகப் பிரச்சனைகளைக் களைய ஒருபோதும் உதவப் போவதில்லை. விரதங்களிலோ நவராத்திரியிலோ எந்த மகிமையும் அற்புதங்களும் கிடையாது.பெரிய மக்கள் கூட்டத்தை ஏமாற்றவே பயன்படும்.
மொத்தத்தில் இந்தப் புத்தகமானது இலங்கையின் இளங்கவிஞரின் கவிதை குரலாக உணர்வுகளாக வெளிவந்துள்ளது. வாசிப்போம்.
Post a Comment