.

அஹ்வா என்ற கிராமத்தில் நந்தன் என்ற ஏழைக் குடியானவன் வசித்து வந்தான். கல்வியறிவு இல்லாத அவனுக்கு, வேலை எதுவும் கிடைக்காததால் பிச்சையெடுக்க ஆரம்பித் தான். கிராமத்துத் தெருக்களில் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து, அதில் கிடைக்கும் அரிசியை வீட்டிற்குக் கொண்டு வருவான். பணமாகக் கிடைத்தால், அதில் காய்கறிகள் வாங்கி வருவான். அவன் மனைவி லட்சுமி பிச்சையில் கிடைத்த அரிசியை சமைத்து தன் நான்கு குழந்தைகளுக்கு அளிப்பாள். குழந்தைகள் உண்டபின், மிஞ்சியதை நந்தனும் லட்சுமியும் சாப்பிடுவார்கள். எதுவும் மிஞ்சவில்லையெனில், தண்ணீரைக் குடித்து வயிறை நிரப்பிக் கொள்வார்கள். 

இப்படியாக அரை வயிறு, கால் வயிறு உண்டு மிகவும் சிரமத்துடன் நாள்களைக் கழிக்கையில் லட்சுமி ஒருநாள், “இன்னும் எத்தனை நாள் தான் நாம் இவ்வாறு காலம் தள்ளுவோம். பணம், காசு கிடைக்க நீ வேறு ஏதாவது வழி செய்யக் கூடாதா?” என்றாள். 


“என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை லட்சுமி. உனக்கு ஏதேனும் தெரிந்தால் சொல்லேன்” என்றான் நந்தன். “நீ ஏன் நம் மன்னரைச் சென்று சந்திக்கக் கூடாது? அவர் உனக்கு ஏதாவது கொடுப்பார்” என்றாள்.

 “அதிருக்கட்டும்! மன்னர் ஏதாவது தானம் செய்தால், நான் பதிலுக்கு எவ்வாறு ஆசீர்வாதம் செய்வது? ’” என்று நந்தன் கேட்டான். அதற்கு லட்சுமி, “அப்போதைக்கு உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் சொல்” என்றாள்.

 அடுத்த நாள் காலை, நந்தன் அரண்மனைக்குச் சென்றான். மன்னர் முன் சென்றவுடன் நந்தன் தன்னுடைய சோகக் கதையை அவருக்கு எடுத்து உரைத்தான். “உனக்கு என்ன வேண்டும், கேள்!” என்றார் மன்னர். 

'‘ஏதாவது தானம் செய்யுங்கள், அரசே! நீங்கள் எது தந்தாலும் சரி!” என்றவன் பிறகு தன் வலது கையை உயர்த்தி, “நல்லவை நல்லவையாகவே இருக்கும். மோசமானது மோசமாகவே இருக்கும்!” என்று ஆசீர்வாதம் செய்தான். மன்னர் சிரித்து விட்டு, ஒரு துண்டு காகிதத்தில் ஏதோ எழுதி, “இதை கணக்குப் பிள்ளையிடம் கொடு!” என்றார். 

நந்தன் மகிழ்ச்சியுடன் அந்த சீட்டை எடுத்துச் சென்று கணக்குப் பிள்ளையிடம் தர அவர் அதில் உள்ளதைப் படித்து விட்டு ஒரு வெள்ளிக்காசு தந்தார். நந்தன் அதைப் பெற்றுக் கொண்டு, கடைக்குச் சென்று நிறைய பொருட்கள் வாங்கி வீடு சென்றான். பல நாள்களுக்குப் பிறகு, அன்று நந்தனின் குடும்பத்தினர் வயிராற உண்டனர். 

மறுநாளும் நந்தன் மன்னரிடம் சென்று, முந்தைய தினம் போல் ஆசீர்வாதம் செய்ய அவரும் ஒரு சீட்டு எழுதிக் கொடுக்க, அன்றும் அவனுக்கு வெள்ளிக்காசு கிடைத்து. இவ்வாறு மூன்று நான்கு தினங்களாக நடைபெற்றது. இதைக் கண்ட அரண்மனைக் காவலன் ஒருவனுக்கு நந்தனின் நடவடிக்கைகளில் ஆர்வம் ஏற்பட்டு அந்தப் பணத்தில் தானும் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 

மறுநாள் வழக்கம்போல் நந்தன் கணக்குப்பிள்ளையிடம் ஒரு வெள்ளிக்காசு பெற்றுக் கொண்டதும், வழியிலேயே அவனைக் காவலன் மடக்கினான். ‘'என்னப்பா, தினமும் தானம் வாங்கிக் கொண்டு போகிறாய். ஆனால் உன்னை அரண்மனைக்குள் இலவசமாக விடும் எனக்கு ஏதேனும்...!” என்று முடிப்பதற்குள் நந்தன் அங்கிருந்து ஓடி விட்டான். தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிய நந்தனின் மேல் காவலனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. 'என்னையா ஏமாற்றுகிறாய்! உனக்கு வைக்கிறேன் வேட்டு!” என்று எண்ணிக் கொண்டான். 

மறுநாள் நந்தனின் வருகைக்காக அவன் காத்திருந்தான். வழக்கப்படி நந்தன் கணக்குப்பிள்ளையிடம் பணம் வாங்கிக் கொண்டு வரும் போது, காவலன் அவனை மீண்டும் வழியிலே மடக்கினான்.

 ''சற்று நில்லப்பா! நேற்று மன்னருக்கு உன் மேல் கோபம் ஏற்பட்டு விட்டது. அதைத்தான் உனக்கு சொல்ல வந்தேன்!” என்றான் காவலன். மன்னர் கோபம் அடையும் படி தவறுதலாகத் தான் எதுவும் செய்யவில்லையே என்று நந்தன் குழம்பினான். பிறகு காவலனை நோக்கி, ' 'மன்னர் ஏன் என் மீது கோபம் அடைய வேண்டும்?” என்று கேட்டான். “அதுவா! நீ மன்னருக்கு தினமும் வாழ்த்து தெரிவிக்கும்போது, உன் வாயிலிருந்து ஒரு துர்நாற்றம் வீசுகிறதாம்! இதை நேற்று மன்னர் என்னிடம் சொன்னார்” என்றான். 

நந்தனுக்கு பயத்தினால் உடல் வெலவெலத்தது. சிறிது நேரத்திற்குப் பின் '“சரி நீ சொன்னது நல்லதாயிற்று. நான் நாளை முதல் என் வாயை ஒருதுணியால் மூடிக் கொண்டு வருகிறேன். அப்போது என் வாயில் இருந்து வரும் நாற்றம் அவர் மீது அடிக்காது” என்று நந்தன்கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

மறுநாள் நந்தன் துணியினால் வாயைக் கட்டிக் கொண்டு மன்னரிடம் தானம் கேட்டு, பிறகு வாழ்த்தவும் செய்தான். ஆனால் அன்று காவலன் நந்தனை தேடி வரவில்லை. அன்றிரவு அதே காவலன் மன்னரிடம் சென்று, “உங்களிடம் தினமும் நந்தன் எனும் அந்தணன் தானம் கேட்டுச் செல்கிறானே, அவன் திமிர் பிடித்தவன் மகாராஜா!” என்றான். 

அதன் பிறகு “மகாராஜா இன்று அவன் துணியினால் வாயையும், மூக்கையும் கட்டிக் கொண்டு வந்தானே, பார்த்தீர்களா? என்று கேட்டான். “ஆமாம். அவனுக்கு பல்வலியாக இருக்கலாம்” என்றார் மன்னர். “இல்லை மகாராஜா, ” என்ற காவலன் தொடர்ந்து “நான்அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டேன். அதற்கு அவன் என்ன கூறினான் தெரியுமா? அவன் உங்கள் காதருகே வந்து ஆசீர்வதிக்கும் போது, தினமும் உங்கள் காதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறதாம்,” என்றான். இதைக் கேட்டதும் “ஆகா! இப்போது புரிகிறது. ‘நல்லவை நல்லவையாக இருக்கும், மோசமானவை மோசமாகவே இருக்கும்' என்று கூறுகிறானே, அதன் பொருள் இது தானா? என்றார் வெகுண்டு போன மன்னர்.

 மறுநாள் நந்தன் மன்னரிடம் வழக்கப்படிதானம் கேட்க, மன்னரும் சீட்டு கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வந்த நந்தனை காவலன் வழி மறித்து, ''அட! இன்றைக்கும் உனக்கு தானம் கிடைக்குமா? ஆச்சரியமாக இருக்கிறதே!” என்றான். நந்தன் உடனே அவனிடம், "தக்க சமயத்தில் அறிவுரை தந்து காப்பாற்றிய நண்பன் நீ! அதனால் இந்த சீட்டை நீ இன்று எடுத்துப்போய், பணத்தை வாங்கிக் கொள்” என்று சொல்லி விட்டு சீட்டை காவலனிடம் கொடுத்து விட்டான்.

 'பலே! அதிருஷ்டம் தான் நமக்கு' என்று எண்ணிய காவலன் மகிழ்ச்சியுடன் அந்த சீட்டை கணக்குப் பிள்ளையிடம் காட்டினான். அவனை ஆச்சரியத்துடன் பார்த்த கணக்குப் பிள்ளை, உள்ளே கை தட்டி ஆட்களுக்கு சைகை செய்தார். உடனே சில ஆட்கள் வந்து, காவலனை அமுக்கிப் பிடித்து, அவன் காதுகளையும், மூக்கையும் வெட்டி விட்டனர் அலறித்துடித்த காவலன் நேராக மன்னரிடம் சென்று புகார் செய்தான்.

‘அட! அந்தச் சீட்டு உன் கைக்கு எப்படி வந்தது? நந்தனின் மூக்கையும், காதுகளையும் அல்லவா வெட்டச் சொல்லி எழுதியிருந்தேன்!'' என்றார் மன்னர்.

 “நான் அவனுடைய தானத்தில் லஞ்சம் கேட்டேன்! அவன் நீங்கள் எழுதிக் கொடுத்த சீட்டைக் கொடுத்தான்” என்ற காவலன் நடந்த உண்மையை ஒப்புக் கொண்டான். “உத்தமனான நந்தனின் மீது உன்னுடைய பேராசையாலும், தீய எண்ணத்தாலும் வீண் பழி சுமத்தினாய் அல்லவா! அதற்கு கிடைத்த தண்டனைதான் இது!" என்று மன்னர் காவலனைக் கடிந்து கொண்டார்.



Post a Comment

Previous Post Next Post