ஒரு கிராமத்தில் அன்னபூரணி என்ற கிழவி வசித்து வந்தாள். அவளுடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய வீட்டில் தனியாகக் காலம் கழித்து வந்தாள். திருமணமான அவளுடைய ஒரே மகள் நகரத்தில் வசித்து வந்தாள். வீட்டிற்குள் இருந்தால் தனிமை அதிகமாக தோன்றியதால், தோட்டத்தில் ஒரு மாமரத்தின் அடியில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதில் படுத்துக் கொண்டே காலத்தைக் கழித்தாள்.
ஒரு நாள் நண்பகல் நேரம் அவள் அவ்வாறு கட்டிலில் படுத்துக் கொண்டு கடந்த காலக் கனவுகளில் மூழ்கிருக்கையில், திடீரென மாமரத்தில் ஒரு மயில் வந்து அமர்ந்தது. அவள் எழுந்து உட்கார்ந்ததும், மயில் அவளைக் கண்டு பறந்து ஓடவில்லை. காரணமறிய உற்று நோக்கியபோது, மயிலின் காலில் அடிபட்டு காயம்பட்டிருந்தது தெரிந்தது. உடனே அவள் இரக்கப்பட்டு மயிலை அழைக்க, அதுவும் சாதுவாக அவளிடம் வந்தது. மயிலை வீட்டிற்குள்ளே எடுத்துச் சென்று, அதன் காயத்திற்கு மருந்து தடவிக் கட்டுப் போட்டாள். பிறகு அது தின்பதற்குச் சில பழங்களைக் கொடுத்தாள்.
அப்போது யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. வாயிலுக்குச் சென்று பார்க்க, ஒரு முரடன் நின்று கொண்டிருந்தான். “ஏய் கிழவி, ஒரு மயில் பறந்து உன் தோட்டத்திற்குள் வந்ததே! அது எங்கே? கேட்டான். அப்போதுதான் கிழவிக்கு அந்த முரடன் மயிலை வேட்டையாட முயற்சித்தவன் என்றும், அந்த முயற்சியில் மயிலுக்குக் என்று காலில் அடிபட்டு விட்டது என்றும் தெரிந்து கொண்டாள். “மயிலா? நான் அப்படி எதையும் பார்க்கவில்லையே!” என்று அவனை அனுப்பி விட்டாள். அன்று முதல், மயிலின் காயத்திற்கு தினமும் கட்டு போட்டு, அதற்கு உண்ண கொடுத்து, அன்புடன் அதைப் பராமரிக்கத் தொடங்கினாள். சில நாள்களில் மயில் கிழவியின் செல்ல பறவையாகி விட்டது. கிழவிக்கும் தனிமைத் துயரம் நீங்கி, பொழுது மகிழ்ச்சி யுடன் கழிந்தது.
கிழவி வீட்டில் மயில் வளர்க்கும் செய்தி அந்த ஊர் ஜமீன்தாரின் செவிகளை எட்டியது. உடனே அவர் அவள் வீட்டிற்கே வந்து விட்டார். ‘அன்னபூரணி! மயில் வளர்க்க வேண்டுமென்று எனக்கு மிகவும் ஆசை! ஆனால் இதுவரையில் எனக்கு மயில் கிடைக்கவேயில்லை. நீ என்ன விலை கேட்டாலும் நான் கொடுக்கத் தயார்! உன் மயிலை எனக்குக் கொடுத்து விடு!” என்றார் திடுக்கிட்ட அன்னபூரணி, “இதை நான் என்னுடைய குழந்தையாக பாவிக்கிறேன். தாயிடமிருந்து மகனைப் பிரிக்க நீங்கள் நினைக்கலாமா? என்றாள். ஜமீன்தார் பேசாமல் திரும்பிச் சென்று விட்டார்.
ஆனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் அவளைத் தேடி வந்த ஜமீன்தார். ''நீ எப்போதாவது இந்த கிராமத்தை விட்டுப் பிரிய நேர்ந்தால், உன் மயிலை என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“நல்ல கேள்வி கேட்டீர்கள்? நான் இதைப் பிரிந்து எங்கும் செல்லுவதாயில்லை!” என்றாள் கிழவி. ஆனால் ஜமீன்தார் விடுவதாயில்லை. “பேசாமல் நீ உன் மயிலுடன் என் வீட்டிற்கு வந்துவிடு. நீயும், மயிலும் என் வீட்டிலேயே தங்கலாம்!” என்று சொல்லிப் பார்த்தார்.
கிழவி அதைக் கேட்டதும் மிகுந்த உற்சாகமடைந்தாள். ஜமீன்தார் சொல்வது போல் செய்யத் தோன்றியது. ஆனால் சிறிது நேரம் யோசித்த பிறகு, அவளுக்கு தன்னுடைய வீட்டை விட்டுச் செல்வது சரியல்ல எனத் தோன்றியது.
“தயக்கம் வேண்டாம் அன்ன பூரணி! என்னுடைய வீட்டிற்கு வந்தால், வசதியாக வாழலாம்!” என்று மேலும் ஜமீன்தார் தூண்டினார்.
“இல்லை ஐயா! இது என் கணவர் குடியிருந்த கோயில். இதை விட்டு நான் எங்கும் வர விரும்பவில்லை!” என்றாள் கிழவி.
கிழவியின் வீட்டின் மீதுள்ள பற்றும், மயிலைத் தன் குழந்தையாக பாவிக்கும் அவளுடைய தாய்மை உள்ளத்தையும் கண்ட ஜமீன்தார் நெகிழ்ந்து போனார். அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாதவராக ''சரியம்மா! உன் வீட்டின் மீது நீ இவ்வளவு பற்றுதல் வைத்திருக் கிறாய்! இதை விட்டு நீ வர வேண்டாம். உன் வீட்டைச் சுற்றிலும் இன்னும் மலர்ச் செடிகளையும், பழ மரங்களையும் வளர்க்கச் செய்து, சோலையாக மாற்றுகிறேன். நீயும், மயிலும் உல்லாசமாகக் காலம் கழியுங்கள்!'' என்று சொல்லி விட்டுப் போனார். அவர் வாக்களித்தவாறே, அவருடைய தோட்டக்காரர்கள் கிழவியின் தோட்டத்தை சோலையாக மாற்றி விட்டார்கள்.
ஒருநாள் கிழவி தன் மயிலுடன் தோட்டத்தில் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், மயிலுக்கு உணவளிக்கும் நேரம் வந்து விட்டது. சமையல் அறையிலிருந்து தானியங்களை எடுத்துக் கொண்டு, தோட்டத் திற்குச் சென்ற கிழவி, அங்கே ஒரு சிறுவனைப் பார்த்தாள். அந்தச் சிறுவன், “பாட்டி, நான் இனிமேல் தானியம் சாப்பிட மாட்டேன். நீ சாப்பிடும் அதே உணவை எனக்குக் கொடு!” என்றாள். கிழவிக்குத் தூக்கி வாரிப்போட்டது. “டேய் பையா! யார் நீ? என் மயில் எங்கே?” என்று கலவரத்துடன் கேட்டாள்.
"பாட்டி! நான்தான் அந்த மயில்! மயில்தான் நான்!” என்று புதிர் போட்டான். கிழவி ஒன்றும் புரியாமல் விழித்தாள். சிறுவன் தொடர்ந்து, “பாட்டி ஒரு முனிவரின் சாபத்தினால், நான் மயிலாக மாறினேன். இப்போது சாப விமோசனம் பெற்று பையனாக மாறி விட்டேன். நீ நம்பவில்லையானால், மயிலாயிருந்தபோது என் காலில் பட்ட காயத்தின் தழும்பைப் பார்! இப்போதும் அதே காலில் தழும்பு இருக்கிறது!” என்று காட்டினான். அப்போதும் கிழவிக்கு மர்மமாக இருந்தது.
சிறுவன் மீண்டும் தொடர்ந்து, 'பாட்டி! எ ன் பூர்வீகக் கதையை கூறுகிறேன், கேள்! நான் ஒரு அனாதைச் சிறுவன். ஒரு விவசாயியின் வளர்ப்பு மகனாக வாழ்ந்தேன். சிறு வயதில் மாடு மேய்த்து வந்தேன். அப்போதிலிருந்தே, எனக்கு மயில்கள் மீது மிகவும் ஆசை. எப்படியேனும் ரு ஒரு மயிலைப் பிடித்து வளர்க்க வேண்டுமென்று, மயில்களைத் துரத்தி துரத்திப் பிடிக்கப் பார்த்துண்டு. ஆனால் ஒரு மயிலும் என் கைகளில் சிக்கவில்லை. ஒருநாள் ஒரு மயிலைத் துரத்திக் கொண்டே சென்று ஓடினேன். அப்படியும் அந்த மயில் என்கைகளில் சிக்கவில்லை. மோகம் கொண்ட நான் அதன் மீது ஒரு கல்லைத் தூக்கி எறிய, அது தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் மீது பட்டது. அவர் கோபமடைந்து என்னை மயிலாக மாறுமாறு சாபமிட்டார். நான் அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகு, உயிரினங்களின் மீது ஜீவகாருண்யமும் அன்பும் காட்டும் ஒருத்தி மூலமாக எனக்கு சாபவிமோனம் கிடைக்கும் என்றார்.
அந்த ஒருத்தியாக நீங்கள் எனக்குக் கிடைத்தீர்கள்” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த கிழவி அவனை அன்புடன் அணைத்துக் கொண்டாள். பிறகு, "குழந்தை! மயில் வளர்க்க வேண்டுமென்று ஜமீன்தார் மிகவும் ஆசைப்பட்டார். என்னிடம் நீ மயிலாக இருந்தபோது, உனக்காகவே என்னுடைய சாதாரணத் தோட்டத்தை நந்தவனமாக மாற்றினார். நீ மனிதனாக மாறியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அவர் ஏமாற்றமடைவார்!” என்றாள்.
“கவலைப்படாதே! நான் ஒருவன் இருந்த இடத்தில், இப்போது பல மயில்களை இங்கே வரவழைத்து வசிக்கச் செய்கிறேன். நான் மயிலாக இருந்தபோது, பல மயில்கள் எனக்குத் தோழர்களாக இருந்தனர். அவர்களை இங்கே வரவழைக் கிறேன்!” என்று கூறி மயிலைப் போல் அகவ, பல மயில்கள் அங்கே பறந்து வந்தன. தங்களது பழைய தோழனை அடையாளம் கண்டு கொண்டு, அவை மகிழ்ச்சியுடன் அவர்களுடைய தோட்டத்தில் வசிக்க ஆரம்பித்தன. அந்தக் காட்சியைக் கண்டால், ஜமீன்தார் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று கிழவியும் திருப்தி அடைந்தாள்.
Post a Comment