ஒரு ஊரில் கைலாசநாதன் என்ற பெரும் பணக்காரன் இருந்தான். அவன் பார்ப்பவர்களுக்கெல்லாம் தாராள மனம் கொண்டவன் போல நடித்து வந்தான். ஆனால் உண்மையில் வடி கட்டின கஞ்சன் அவன். இதை ஊரார் அறியவில்லை.
அவன் தினமும் தெருவில் யாரும் தென்படாத நேரம் பார்த்து “யாராவது என்னுடன் சாப்பிட வரலாம்” என்று உரக்கக் கூவி விட்டுச் சட்டென உள்ளே போய் விடுவான். யாராவது சாப்பிட வந்து விடுவானே என்ற பயமே அதற்குக் காரணம். ஊராரோ தினமும் அப்பணக்காரன். அவ்வாறு கூவுவது கேட்டு ஆஹா! என்ன தாராளமனது” என்று பாராட்டி வந்தார்கள்.
ஒருநாள் பழனி என்ற ஏழை தன் மனைவியுடன் அந்த ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று அவன் அலைந்து திரியும் போது ஊரார் அவனிடம் "நீ போய் கைலாசநாதரைப் பார். அவர் தாராள மனம் கொண்டவர். கண்டிப்பாக உனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுப்பார்” என்றார்கள்.
பழனியும் கைலாசநாதனைக் காணச்சென்றான். அப்போது அந்தப் பணக்காரன் ஊர்ப் பிரமுகர்கள் பலரு டன் அமர்ந்து பேசிக் கொண்டிருந் தான். பழனி அவனை வணங்கி தனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கும்படி வேண்டவே கைலாசநாதனும் ஜம்பமாக “உனக்கு இன்று முதல் என் வீட்டில் வேலை” எனக் கூறி சுற்றிலுமுள்ளவர்களை ஒரு முறை பார்த்தான். அவர்களும் 'ஆஹா! என்ன தாராளமனது உங்களுக்கு” என்று அவனைப் பாராட்டினார்கள்.
ஒரு கைலாசநாதன் பழனியும் அவன் மனைவியும் வசிக்கத் தன் வீட்டின் பின்புறமுள்ள ஒரு குடிசையைக் கொடுத்தான். அவர்கள் இருவரையும் தன் வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி மிக மிகக் குறைவான சம்பளத்தைக் கொடுத்தான். அந்தப் பணத்தைக் கொண்டு போதிய உணவுப் பொருள்களை வாங்கி வயிறு நிறைய சாப்பிட பழனியால் முடியவில்லை. அதனால் கிடைக்கும் பணத் தில் அரிசிக் குருணை வாங்கி கஞ்சி காய்ச்சி அதில் உப்பைப் போட்டு இரண்டு பச்சை மிளகாய்களைக் கடித்து குடித்துக் கொண்டு பழனியும் அவன்மனைவியும் காலம் கழிக்கலாயினர்.
ஒருநாள் பழனியின் மனைவி தன் கணவனிடம் “இதென்ன வேலை! வேறு எங்காவது வேலை செய்தால் வயிறு நிறையவாவது சாப்பிடலாமே. இந்தக் கஞ்சனை தாராளப் பிரபு என எண்ணி ஏமாந்து விட் டோம்" என்றாள். பழனியும் "ஆமாம். இவனிடம் நான் முதலில் சம்பளம் பற்றிப் பேசிக் கொள்ளாதது என் தப்புதான். நாம் இங்கிருந்து போகு முன் இவனுக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டே போக வேண்டும். அதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்" என்றான்.
அன்று முதல் அவன் கஞ்சி குடிக்கு முன் தன் மனைவியிடம் “பாயசம் தயாராகி விட்டதா? கொஞ்சம் சர்க்கரையைக் கூடவே போடு. இரண்டு பச்சை வாழைப் பழங்களையும் வை” என உரக்கக் கூறலானான். அவன் மனைவியும் கஞ்சியையும் உப்பையையும், இரண்டு பச்சை மிளகாய்களையும் கொண்டு வந்து அவன் முன் வைத்து வரலானாள்.
பழனி இப்படிக் கூறி வந்தது கைலாசநாதனின் மனைவியின்காதில் விழுந்தது. அவள் அந்த வீட்டில் அடி எடுத்து வைத்த நாள் முதல் ஒருநாள் கூட பாயசம் வைத்துச் சாப்பிட்டதே இல்லை. மிகக் குறைந்த சம்பளம் பெறும் பழனி மட்டும் எப்படி தினமும் பாயசமும் பழமும் சாப்பிடுகிறான் என்று நினைத்து அவள் ஆச்சரியப்படலானாள். இதை அவள் ஒரு நாள் கைலாசநாதனிடமும் கூறினாள். அதைக் கேட்டு அவனும் ஆச்சரியப்பட்டான். தான் கொடுக்கும் சொற்ப சம்பளத்தில் பழனியால் எப்படிப் பாயசமும் பழங்களும் தினமும் சாப்பிட முடிகிறது என்று அவனிடமே கேட்பது என்று கைலாசநாதன் தீர் மானித்துக் கொண்டான்.
மறுநாள் பழனி வேலை செய்து கொண்டிருக்கையில் கைலாசநாதன் அவனருகே போய் நின்று அவனிடம் ''என்னப்பா! உனக்கு இங்கே எந்தக் குறையும் இல்லைதானே?” என்று கேட்டான். பழனியும் ''எங்கள் வாழ்வில் குறை என்பது இல்லாமலா இருக்கும்?” என்றான். கைலாசநாதனும் ''உனக்குக் குறையா? நீதான் தினமும் பாயசமும் பழங்களும் சாப்பிடுகிறாயே. இது எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்?" என்று சிரித்தவாறே கேட்டான்.
பழனியும் ஓ! அதுவா? எம் போன்றவர்களுக்கு அதுதானே சொர்க்கலோக சுகம் போல உள்ளது. என் மனைவி நான் குடிக்கும் பாயசத்தைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவள்” என்றான். கைலாசநாதனும் “அவள் மிகக் குறைந்த செலவில் பாயசம் தயாரிக்கிறாளா?” என்று எண்ணிக் கொண் டான்.
சில நாட்களுக்குப் பின் கைலாசநாதனின் மகளைப் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்க வெளியூரி லிருந்து ஒரு பணக்காரரும், அவரது மகனும் அவரது உறவினர்களுமாக இருபத்தைந்து பேர்கள் வந்தார்கள். இவ்வளவு பேர்களுக்கும் பாயசத்துடன் விருந்து சாப்பாடு போடுவதா என்று எண்ணி கைலாசநாதன் திகைத்துப் போனான். சரி, விருந்து செலவை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று யோசித்த போது பழனியின் மனைவியைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் பாயசத்தைத் தயாரித்து விடுவது என்று அவன் முடிவு செய்தான்.
அவன் பழனியை அழைத்துக் கொஞ்சம் பணம் கொடுத்து ''நீ கடைக்குப் போய் பாயசத்திற்கு வேண்டிய சாமான்களை வாங்கி வந்து உன் மனைவியிடம் கொடு. அவளும் நீ தினமும் சாப்பிடும் பாயசம் போலத் தயாரித்துக் கொடுக்கட்டும். அதை வந்த விருந்தாளிகளுக்கு நீ பரிமாறு. இன்று நீயும் உன் மனைவியும் என் வீட்டிலேயே பாயசத்தையும் சாப்பிடலாம்” என்றான்.
பழனி இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பணத்தை வாங்கிக்கொண்டு அவன் கடைக்குப் போய் அரிசிக் குருணையையும் உப்பையும் வாங்கி வந்தான். பழனியின் மனைவியும் கஞ்சி தயாரித்து எடுத்து வந்தாள்.
பெண் பார்க்கும் படலம் முடிந்தது. கைலாசநாதன் எல்லோரையும் விருந்துண்ண உட்கார வைத்தான். பழனியும் அவனது மனைவியும்தான் உணவு பரிமாறலானார்கள். கைலாசநாதனும் அவன் மனைவியும் ஒரு ஓரமாகக் கை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். கைலாசநாதன் பழனியிடம் "எல்லோருக்கும் முதலில் பாயசம் பரிமாறு" என்றான்.
பழனியின் மனைவி கஞ்சிப் பாத்திரத்தை எடுத்து வந்து ஒவ்வொருவர் இலையிலும் கஞ்சியைப் பரிமாற, பழனி உப்பையும் பச்சை மிளகாய் களையும் வைத்தான். அது கண்டு விருந்தாளிகள் முகத்தைச் சுளித்தார்கள். இதைக் கண்டு வெளியூர் பணக்காரரும் அவரது மகனும் கடுங் கோபம் கொண்டார்கள். அச் சமயத்தில் கைலாசநாதன் “உங்களுக்காக பாயசம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சாப்பிடுங்கள்" என்று இலைகளைப் பாராமலே கூறினான். பணக்காரரும் அவரது மகனும் 'இதுவா பாயசம்?” என்று இரைந்து எழுந்து விட மற்றவர்களும்தம் இலைகளிலிருந்து எழுந்தனர். பணக்காரரும் "ஏய் கைலாசம்! இப்படி அவமானப்படுத்தவா நினைத்தாய்? உன் சம்மந்தமே வேண்டாம்" என்று கூறித் தம் உறவினர்களோடு உடனே கிளம்பிப் போய் விட்டார். இந்த சமாசாரம் ஊர் முழுவதும் பரவி அங்கு கூட்டமும் கூடி விட்டது.
கைலாசநாதன் பழனி மீதும் அவன் மனைவி மீதும் கடுங் கோபம் கொண்டு “என்னடா இது? இந்தக் கஞ்சியா பாயசம்?” என்று கேட்டான், ஊராருக்கு விஷயம் புரிந்து விட்டது. பழனியோ நிதானமாக “நீங்கள் தானே நாங்கள் தினமும் சாப்பிடும் பாயசத்தைத் தயாரிக்கச் சொன்னீர் கள். நாங்கள் சாப்பிடும் கஞ்சிதான் எங்களுக்குப் பாயசம். நீங்கள் கொடுக்கும் சம்பளத்தில் இந்தக் கஞ்சி தயாரித்துத்தான் எங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்கிறோம். இந்தப் பணத்தில் பாயசமா வைத்துச் சாப்பிட முடி யும்?” என்றான்.
அங்கு கூடியிருந்த ஊரார் “ஓகோ! இதுதான் பணக்காரரின் உண்மையான தோற்றமா?” என்று கூறி பலமாகச் சிரித்தார்கள். கைலாசநாதன் அவமானத்தால் தலை குனிந்து நின்றான்.
Post a Comment