பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் என்ற பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.தெருக்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, உள்நோக்கம் கொண்ட கொலை,துணை அல்லாத நபரால் பாலியல் வன்கொடுமை,உறவு கொண்ட நபரால் பாலியல் வன்கொடுமை,சட்டப் பாகுபாடு,உலகளாவிய பாலியல் இடைவெளி,பாலின சமநிலையின்மை, வன்முறை மீதான அணுகுமுறை என பலவிதங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் அடிப்படையில் இந்த புள்ளிப்பட்டியல் உருவாக்கப்ப ட்டிருக்கிறது.பெண்களுக்கு எந்த நாடுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை தீர்மானிக்கும் முயற்சியில், ஊடகத்துறை தம்பதிகளான ஆஷர் மற்றும் லிரிக் பெர்குசன் ஆகியோர் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி, மிகவும் ஆபத்தான 50 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.மேலும், இந்த வரிசைப்படுத்ததலில் பெண்களுக்கு ஆபத்தான முதல் 10 நாடுகளையும் அவர்கள் பட்டியலி ட்டுள்ளனர்.
பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் முதல் 10 இடங்களிலுள்ள பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 771.82 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திலும் பிரேசில் 624.28 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும் ரஷ்யா 592.714 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும்,மெக்ஸிகோ 576.05புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் ஈரான் 553.11புள்ளிகளு டன் 5 ஆவது இடத்திலும் டொமினிக்கன் குடியரசு 551.32 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும் எகிப்து 546.91 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திலும் மொரோக்கோ 542.75 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும் இந்தியா 541.25 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திலும் தாய்லாந்து 533.22 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திலும் உள்ளன.
பெண்களுக்கு உலகிலேயே மிகவும் ஆபத் தான நாடாக முதலிடத்தில் உள்ள தென்னாபிரிக்காவில் இரவில் தனியாக செல்வதை 25 சதவிகிதம் பேர் மட்டுமே பாதுகாப்பாக உணர்கின்றனர்.இங்கு 40 சத விகிதத்திற்கும் அதிகமான பெண்கள் அவர்களின் வாழ் நாளில் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக,பெண்களை வேண்டுமென்றே படுகொலை செய்வதிலும் தென்னாபிரிக்கா மோசமான தரவரிசையில் உள்ளது. குறியீட்டில் F பெற்ற ஒரே நாடாக தென்னாபிரிக்கா உள்ளது.பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 28 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனியாகச் செல்வதை பாதுகாப்பாக உணர்கின்றனர்.பெண்களுக்கு எதிரான வேண்டுமென்றே நடக்கும் கொலைகள் விகிதத்தில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது.மேலும், இங்குள்ள பெண்களில் 36.9 சத விகிதம் பேர்,தங்கள் நெருங்கிய கூட்டாளிக ளிடமிருந்து உடல் அல்லது பாலியல் வன்முறையை சந்திக்கின்றனர்.இதில், உலகளவில் பிரேசில் 6 ஆவது இடத்தை வகிக்கிறது.
பெண்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடத்தப்படும் கொலைகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் ரஷ்யா,பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.ரஷ்யாவுக்கு அடுத்த நான்காவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது.மெக்ஸிகோவில் சுமார் 33 சதவிகிதம் பெண் கள் மட்டுமே இரவில் தனியாக செல்வதனை பாதுகாப்பாக உணர்கின்றனர்.கூடுதலாக, கணவர் அல்லாதவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் மெக்ஸிகோ மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 16 சதவிகிதம் பெண்கள் பாலியல் வன்முறையை சந்திக் கின்றனர். உலகளவில் பாலின இடைவெளியில் முதல் இடத்தைப் பிடிக்கும் ஈரான்,பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார பங்கேற்பு,கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகள்,பெண்களுக்கு எதிரான சட்டரீதியான பாகுபாடுகளில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட கொலைகளிலும், இரவில் தனியாக செல் வதை பாதுகாப்பாக உணர்வதிலும் உல களவில் ஐந்தாவது இடத்தை வகிக்கும் டொமினிக்கன் குடியரசு, பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஏழாவது நாடாக எகிப்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 47 சதவி கிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனியாக செல்வதனை பாதுகாப்பாக உணர்கிறார்கள். எகிப்து நான்காவது உலக பாலின இடை வெளியையும், ஏழாவது மிக உயர்ந்த பாலின சமத்துவமின்மையையும் கொண்டுள்ளது. இதேபோல மொராக்கோ நாட்டுப் பெண்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தங்கள் நெருங்கிய துணையிடமிருந்து உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவிக்கின்றனர். மோசமான நாடுகளின் பட்டியலில் மொராக்கோ 8 ஆவது இடத்தை வகிக்கிறது.
இந்த வரிசையில்தான் பெண்களுக்கு பாது காப்பில்லாத நாடுகளில் இந்தியா 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கணவர் அல்லது நெருக்கமான நபர்கள் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 37.2 சதவிகிதம் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இது தவிர பாலின சமத்துவமின்மை குறியீட்டில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறையை சுமார் 45 சதவிகிதம் பேர் நியாயப்படுத்தும் நிலைமை உள்ளது.இந்தியாவுக்கு அடுத்து, பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் தாய்லாந்து உள்ளது.கணவர் அல்லது நெருக்கமான நபர் மூலமான வன்முறையில் தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 44 சதவிகிதம் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
இந்த பெண் ஆபத்தானகளுக்கு 50 நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள நாடுகளில் பெண்களுக்கு நடக் கும் அத்தனை கொடுமைகளும் பாரியளவில் இலங்கையிலும் நடக்கின்ற போதும் எமது நாடான இலங்கை அந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளுக்குள்ளும் இடம் பிடிக் காமை ஆச்சரியமாகவே உள்ளது.இதனால் ஊடகத்துறை தம்பதிகளான ஆஷர் மற்றும் லிரிக் பெர்குசன் ஆகியோர் தமது ஆய்வில் இலங்கையை உட்படுத்தவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.ஏனெனில் இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அந்தளவுக்கு அதிகரித்துள்ளன. அரசியலில், சட்டத்தில், அலுவலகங்களில், பொது போக் குவரத்தில், வீதிகளில், வீடுகளில் என பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தே வருகின்றன.
இலங்கையில் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் 27 வீதத்தால் அதிகரித் துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் சுட்டிக் காட்டப்ப ட்டுள்ளது.பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 182ல் இருந்து 226 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் பெண்களை காயங்களுக்கு உள்ளாக்கல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், இலங்கையில் 30 - 40 சதவீதமான பெண்கள், ஏதாவது ஒரு வகையில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவர்க ளுள் 60 சதவீதமான பெண்கள், வன்முறை களால் பாதிக்கப்பட்டு,தற்போதும் அதனால் மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பஸ்களிலும் ரயில்களிலும் நடைபாதையிலும்,பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுவது வாடிக்கையாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 102 பெண்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இது கடந்த வருடங்களை விட 20 வீதம் அதிகம். மேலும், பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்துள்ள ன.படுகொலை செய்யப்படும் பெண்கள் துணையினாலும் அல்லது முன்னாள் காதலராலும், நெருங்கிய உறவினர்களாலுமே கொல்லப்படுகின்றனர். இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின் றனர்.
இதேவேளை, இலங்கையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட 1502 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட் டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மேற்கண்ட வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளில் 167 சிறுமிகள் கர்ப்பமடை ந்துள்ளனர்.ஆனாலும் பல சம்பவங்களில் குறித்த சிறுமிகளின் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வ தில் அலட்சியமாக செயற்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத் தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங் கையில் பொதுப்போக்குவரத்து பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் 90 வீத பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் 4 வீதமானோர் மாத்திரமே பொலிஸாரிடம் உதவி கோரியுள்ளனர்.பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றமை குறித்து முறையிடும் அவசர தொடர்பு இலக்கம் குறித்து 74 சதவீத பெண்கள் அறிந்திரு க்கவில்லை.பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் பெண்களில் 17 சதவீதமானவர்கள் அந்தச் சம்பவங்கள் தங்களது வேலையை நேர்மறையாக பாதித்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன், 29 சதவீதமானோர் அந்தச் சம்பவங்கள் தங்களது கல்வியை நேர்மறையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாகவே உள்ளது.
அதேவேளை, என்னதான் இலங்கையில் பாலின சமத்துவம் குறித்து உரத்துப் பேசி வந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு நிமிடமும் த் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கின்றார்கள். முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபரின் நியமனத்திற்கு எதி ராக 32 சிரேஷ்ட ஆண் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் தொடரப்பட்ட வழக்கு, பாராளு மன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு போட் டியிட்ட பெண் எம்.பி. தோற்கடிக்கப்பட்ட வாக்களிப்பு,ஒரு ஆண்கள் பாடசாலைக்கு பெண் ஒருவர் அதிபராக இருக்கக்கூடாது என்ற போராட்டம் என பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சிந்தனை இலங்கையில் தொடரவே செய்கின்றது. இலங்கையில் சர்வஜன வாக்குரிமை 1931 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம காலத்திலேயே அது வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை.வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் நிறை வேற்றதிகாரம் கொண்ட முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமைகளைக் கொண்டநாடு. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக் குன்றிய நிலையிலேயே உள்ளது.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை தற்போது 179 ஆவது இடத்தில் உள்ளது.மிகவும் குறைவான சதவீதமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகள் என்ற பட்டியல் வழங்கப்பட்டால் இலங்கைக்கு 16 ஆவது இடம் கிடைக்கும். ஏனெனில் இப்போதும் பெண் அதிகாரத்தை அல்லது பெண்களால் நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாத ஓர் ஆணாதிக்க சமூகத்தின் பிடியில்தான் இலங்கைப் பெண்கள் உள்ளனர்.
இலங்கையில் காலாகாலமாக இருக்கும் பாலின பிரச்சினைகள் ஓரளவுக்கேனும் தீர்க்கப்பட்டதா?,பெண்களை பாலியல் பொருளாகப் பார்க்கும் பார்வை மாறிவிட் டதா?, இலங்கை முன்னரைவிட பெண்களுக்கு சிறந்த இடமாக மாறிவிட்டதா?பாதுகாப்பான ஒரு பயணம் பெண்களுக்கு முழுமையாக சாத்தியப்படுமா?,விளம்பரங்களில் பெண்களை இழிவுப டுத்துவதை தடுக்கமுடியுமா?,பெண்களுக்கு எங்கும் எதிலும் சம வாய்ப்பு,சம உரிமை வழங்கப்படுகின்றதா?,பெண்களுக்கு அடுப்படியில்தான் வேலை என்னும் சித்தாந்தம் தன்னும் மாறிவிட்டதா?,பெண் குழந்தைகள் பிறந்தால் சுமை எனக் கருதும் போக்கு ஒழிந்து விட்டதா?, ஒரே வீட்டில் வளரும் ஆண், பெண் பிள்ளைகளில், உணவில் இருந்து உணர்ச்சிகள் வரை இருவரும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெற்று வளர்கிறார்களா?, வேலைக்குப் போக வேண்டும் என்று ஒரு பெண் சொல்லும்போது,ஆண் மகன்களைப் வழியனுப்பிவைக்கும் அதே உவகையுடன் பெண் பிள்ளைகளையும் வழிய னுப்பி வைக்கும் குடும்பங்கள் எத்தனை?அலுவலகங்களில் ஆண்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அதே அங்கீகாரம் பெண்களின் உழைப்புக்கும் தரப்படுகிறதா?ஓர் ஆண் தான் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தானே தீர்மானிப்பவனாக இருப்பது போல பெண்களால் முடிவெடுக்க முடிகிறதா?
கரு உருவான நாளில் இருந்து குழந்தை பிறக்கும் வரை,எந்த வெளிக் காரணிகளின் பங்கும் இன்றி நூறு சதவீதம் தன் உயிரால் மட்டுமே இன்னொரு உயிரை வளர்க்கும் பெண்ணுக்கு அந்தக் குழந்தையை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவெடுக்கவோ ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளியைத் தீர்மானிக்கவோ உரிமை தரப்படுகிறதா?பத்து மாதங்கள் அளவற்ற அவஸ்தைகளுக்கு உட்பட்டு, தியாகங்களுக்கு தன் உடல் தந்து பெண் கருவில் வளர்த்தெடுத்த தன் குழந் தைக்கு,பெயர் வைக்கும் உரிமையாவது அவளுக்கு இருக்கிறதா? பெண்களுக்கான சம உரிமை என்பது, குடும்பம், கல்வி, அரசியல், கலை, நிர்வாகம், விளையாட்டு என்று ஏதாவது ஒரு தளத்திலாவது குறைந்தபட்சம் 50 வீதம் கிடைக்கப்பெற்றிருக்கிறதா?என்ற கேள்விகள் உள்ளிட்ட நிறைய கேள்விகள் உள்ளன.ஆனால் அவற்றுக்கான விடைகள் தான் இன்னும் கிடைக்கவில்லை.
தெருக்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, உள்நோக்கம் கொண்ட கொலை, துணை அல்லாத நபரால் பாலியல் வன்கொடுமை, உறவு கொண்ட நபரால் பாலியல் வன்கொடுமை, சட்டப் பாகுபாடு, உலகளாவிய பாலியல் இடைவெளி, பாலின சமநிலையின்மை, வன்முறை மீதான அணுகுமுறை என பலவி தங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் அடிப்படையில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் என்ற பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ள நிலையில்,இந்தப்படியலில் உள்ளடங்கி குறிப்பிடத்தக்கதொரு இடத்தை பிடிக்கக்கூடிய தகுதிகள் இலங்கைக்கு தாராளமாக இருந்தும் இந்தப்பட்டியலில் இலங்கை இடம்பிடிக்காமை அல்லது தெரிவு செய்யப்படாமை கூட இலங்கைப் பெண்களுக்கு செய்யப்பட்டதொரு அநீதியாகவே உள்ளது.
Post a Comment