.

460 கோடி ஆண்டுகள் கொண்ட புவியின் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர். இந்த ஐம்பது இலட்சம் ஆண்டுகளின் கடைசி சில இலட்சம் ஆண்டுகளில்தான் நவீன மனிதனான ஹோமோ சேப்பியன்ஸ் மேலெழத் தொடங்கினான்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கு பெரும் பாய்ச்சல் கண்டது கடந்த பதினோராயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலகட்டத்தில்தான்.அது என்ன பதினோராயிரம் ஆண்டுகள்? பல இலட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் எது அந்தத் திடீர் மாற்றங்களுக்கான திருப்புமுனையை உருவாக்கியது ? பலரும் நினைப்பது போல வெறுமனே அது மனிதனின் சிந்தனைத் திறன் அல்ல. மாறாக அந்த மாற்றத்தை உருவாக்கியது மனித வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட 'சாதகமான காலநிலையே

இறுதிப் பனியுகம் முடிந்து அப்போதுதான் இன்று நாம் காணும் காலநிலையும் சீரான பருவங்களும் நிலைகொண்டன.இந்தக் காலகட்டத் தில்தான் மனிதன் விவசாயத்தைக் கண்டறிந்தான்.விவசாயம் கொடுத்த உபரி விளைச்சலே முதன் முறையாக ஓய்வையும் சிந்திக்க நேரத்தையும் கொடுத்தது.அந்த சிந்தனைகளே தொடர்ந்து நாகரிகங்களையும் கலாசாரங்களையும் தோற்றுவித்து பேரரசுகளையும் தேசங்களையும் இன்று நாம் காணும் அத்தனை தொழில்நுட்ப வளர்ச்சியையும் கட்டமைத்திருக்கின்றன. இன்று நாம் பெறும் எல்லா நலன்களும் புவியில் நிலை கொண்ட சீரான காலநிலை நமக்குக் கொடுத்த கொடை என்றால் மிகையாகாது.

கெடுவாய்ப்பாக,நம் பெருமிதமான வரலாற்றை எழுத வாய்ப்பளித்த சாதகமான காலநிலையானது தன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.'மீளாநிலை' (Tip- ping point) எனப்படும் படுகுழியை நோக்கி நாம் வேகவேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். நமது அத்தனை வளர்ச்சிக்கும் காரணமான விவசாயத்தின் ஆதாரமான சீரான பருவங்கள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆம்! காலநிலை(யின்) மாற்றம் தொடங்கி விட்டிருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் வேகவேகமாய் உருகி வருகின்றன.வரலாறு காணாத வெள்ளம், வறட்சி, புயல்கள், நிலச்சரிவுகள், காட்டுத்தீ என ஒவ்வொரு நாளும் காலநிலை மாற்ற தீவிர நிகழ்வுகளால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.காலநிலை அகதிகளாய் ஆயிரமாயிரமாய் மக்கள் புலம்பெயர்கின்றனர். வரலாற்றில் இதுவரையிலும் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச சராசரி வெப்பநிலை 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருக்கிறது. அந்த வரலாற்று சாதனை நடப்பு ஆண்டில் இரண்டு முறை (ஜூலை 21 ஆம் நாள் மற்றும் ஜூலை 22 ஆம் நாளில் முறையே 17.15 மற்றும் 17.6 டிகிரி செல்சியஸ்)முறியாடிக்கப்பட்டிருக்கிறது.காலநிலை மாற்றத்தில் ஆசிய நாடுகள் மிக அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் எனும் கணிப்புக்கள் மெய்யாகி வருகிறன.

புதைபடிம எரிபொருட்களை எரித்தல் உட்பட்ட செயல்பாடுகளால் தொழிற்புரட்சிக்குப் பின்னர் மிக அதிக அளவில் கார்பன் டை ஒக்சைட் உள்ளிட்ட புவி வெப்பநிலையை அதிகரிக்கும் பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியாகியிருக்கின்றன.தொழிற்புரட்சிக்கு முன் வளிமண்டலத்தில் 280 அலகுகளாக இருந்த கார்பன் டை ஒக்சைட் இப்போது 420 அலகுகளாக அதிகரித்திருக்கிறது. இது புவியின் சராசரி வெப்பநிலையை 13.9 இல் இருந்து 15.1 டிகிரியாக அதிகரித்திருக்கிறது.இவ்வாறு அதிகரிக்கும் வெப்ப நிலையானது பெருங்கடல்களை வெப்பமாக்கி ஆவியாதலை அதிகரிக்கிறது இவை வரலாறு காணாத மழை வெள்ளத்தையும் புயல்களையும் இன்னொரு புறம் வறட்சியையும் உருவாக்குகின்றன.

உலகின் ஒவ்வொரு மூலையும்காலநிலை மாற்றத்தால் தீவிர பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது.ஒரு நாட்டின் ஒருபகுதியில் வெப்ப அலை வீசும் அதே நேரத்தில் இன்னொரு புறம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது.வரும் காலங்களில் காலநிலை தீவிர நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் இன்னும் தொடர்ந்து அதிகரிக்குமென்று ஐ.நா.வின் ஐ.பி.சி.சி முதலிய பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

பொதுவாகவே மழையைக் கொண்டாடும் விவசாய பூமியில் வாழும் நமக்கு, காலநிலை மாற்றம் கொண்டு வரும் மழையோ கொண்டாட்டத்திற்கானது அல்ல.அதிகரிக்கும் ஆவியாதலால் அடர்த்தி அதிகரித்த மேகங்கள் பலநாட்கள் தொடர்ந்து பெய்ய வேண்டிய பருவமழையை ஓரிரு மணிநேரங்களில் கொட்டித் தீர்க்கின்றன.இது விளைச்சலை அதிகரிப்பதாக அன்றி அழிப்பதாகவே அமைகிறது.இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளில் நீராதாரங்களும் நிலத்தடி நீரும் பெருகுவதற்கான அவகாசத்தைக் கொடுப்பதில்லை.ஆகவே பெரு மழையைத் தொடர்ந்து வறட்சியும் இயல்பாகிப் போகிறது. மேலும், குறித்த பருவத்தில் பெய்ய வேண்டிய பருவமழை தள்ளிப்போகும் போது அது விவசாயத்திற்கு பாதகமாகிறது. கூடுதலாக, அதிகரிக்கும் வெப்பமானது பூச்சித் தாக்குதல்களையும் புதிய நோய்களையும் உருவாக்கும் என்கின்றன ஆய்வுகள். நெல், தேங் காய் போன்ற பயிர்கள் விளைச்சல் படுவீழ்ச்சியடையுமென்றும் அவை தெரிவிக்கின்றன. 

காலநிலை மாற்றப் பேரிடர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்களையும் வாழ்வாதாரங் களையும் சிதைத்து வருகின்றன.வெப்ப உயர்வு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைக் கடுமையாகக் குறைக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பால் தூக்கமின்மையோடு இதய நோய்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட் டுகின்றது. வெப்பம் மனிதர்களின் மனநிலையையும் ஆகவே உறவுகளையும்கூட பாதிக்கிறது.

தீவிரப் பேரிடர்கள் வெறுமனே தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் மட்டுமன்றி அரசாங்கங்களுக்குமே பேரிடராக மாறியிருக்கின்றன. பேரிடர்கள் ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள உல கெங்கும் அரசாங்கங்கள் திணறி வருகின்றன.ஒரு பெருமழை வெள்ளமே பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியில் தள்ள போதுமானதாக இருந்தது. மீண்டும் மீண்டும் பேரிடர்களில் மோதி விழும்போது ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீள்வதற்கான பொருளாதார வலிமையை நாம் ஒட்டுமொத்த மாய் இழந்திருப்போம்.வசதியாகவே இருப்பவரும் கூட ஓரிரவில் தம் உற வுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து நிவாரண முகாமுக்குச் சென்று அடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் நிலையைக் காலநிலைமாற்றத் தீவிர நிகழ்வுகள் உருவாக்கியிருக்கின்றன.


காலநிலை மாற்றம் மனிதகுலத்துக்கான சிவப்பு எச்சரிக்கை என்கிறார் ஐ.நா.வின் பொதுச்செயலாளர். 2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் பேரழிவுகளை எதிர்கொள்வோம் என்கிறது ஐ.பி.சி.சி.இந்த எச்சரிக்கை வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட பின்பும் நம் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் நடந்துவிடவில்லை.2030 ஆம் ஆண்டுக்குள் நாம் பாதுகாப்பான இலக்கை அடைய வேண்டுமென்றால் கார்பன் டை ஒக்சைட் உமிழ்வை பாதியாகக் குறைக்க வேண்டும்.ஆனால் அது பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி பயணிக்கிறோம்.

இந்த ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் பின்னணியில் நமது பொருளாதார அமைப்பின் இலாப வெறியே இருக்கிறது.இச்சூழலில் அதனால் இலாபமடைபவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக் கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். கூடுதலாக, காலநிலைப் பேரிடர்களில் மரித்துப்போகும் மக்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குரலற்றவர்களாய் இருப்பது இந்த பிரச்சினையை அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.காலநிலை மாற்றம் வெறுமனே அறிவியல் தொழில் நுட்ப பிரச்னை அல்ல; ஆகவே இது வெறுமனே தொழில்நுட்பங்களால் தீர்க்கக்கூடிய பிரச்சினையும் அல்ல.இதன் பின்னிருக்கும் அரசியல்,வணிகம்,அநீதி போன்றவற்றை மறைக்க முயல்பவர்களே இதனை ஒரு தொழில்நுட்பப் பிரச்னையாகச் சுருக்கி பாசாங்கு செய்கின்றனர். 

பேரிடர்கள் இயல்பாகிப்போனால் இங்கு எஞ்சப்போவது எதுவுமில் லை.350 கோடி ஆண்டுகள் நீண்ட பரிணாமத்தின் நீட்சியான மனித குலமானது அறிவியலாளர்களால் கணிக்கப்படும் ஆறாம் முற்றொழிப்பைக் (mass extinction) கடந்து அடுத்த நூற்றாண்டில் அடியெடுத்து வைக்குமா என்பது, அடுத்த நான்கு ஐந்து ஆண்டுகளில் இந்த உலகம் இப் பிரச்னையை எப்படிக் கையாளப் போகிறது என்பதிலேயே இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post