.

உலகின் வல்லரசாகவும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாகவும் உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும் திகழும் அமெரிக்காவில் உலக நாடுகளைக் கையாளக் கூடிய, கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடை பெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரின் ஜனாதிபதி பதவிக்காலம் ஜனவரி 2025 முதல் தொடங்கும்.அவர் அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பார்.

உலகை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யப்போகும் தேர்தலில் தற்போது ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகிய இரு கட் சிகளின் ஆதிக்கமே உள்ளது.அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் இந்த இரு கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தாராளவாத அரசியல் கட்சியான ஜனநாயக கட்சியின் கொள்கை, சிவில் உரிமைகள்,பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் வரையறுக் கப்பட்டுள்ளன.தற்போது ஜனாதிபதியாகவுள்ள ஜோ பைடன் இந்த கட்சியைச் சேர்ந்தவர். அவர் இந்த முறை போட்டியில் இருந்து விலகி விட்டார். அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளிப் பெண்ணான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியி டுகின்றார். 

குடியரசு கட்சி, பழமைவாத அரசியல் கட்சி யாகும். பழம்பெரும் கட்சி எனவும் இது அறியப்படுகிறது. குறைந்த வரி,அரசின் அதிகாரத்தைக் குறைப்பது, துப்பாக்கி உரிமை, குடியேறிகள் மற்றும் கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக இக் கட்சி உள்ளது.முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்,குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவர்கள் இருவருக்கிடையிலான தேர்தல் பிரசாரங்கள் எமது நாட்டு தேர்தல் பிரசாரங்களை விடவும் மிகவும் கீழ்த்தரமான வகையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் பின் கமலா ஹரிஸுக்கு எதிரான பிரசாரம் அமெரிக்காவில் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம்,நிறவெறி எந்தளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாகியுள்ளது.

சுதந்திரம் மற்றும் பெண்ணுரிமை என மிகப் பெரிய ஜனநாயக நாடாக தன்னை பிரசாரம் செய்துகொள்ளும் உலக வல்லரசும் உலக நாக ரிகத்தின் உச்சமுமாகத் திகழும் அமெரிக்காவில்தான் அதன் வரலாற்றில் இன்றுவரை ஒரு பெண் ஜனாதிபதியாக முடியாத நிலை உள்ளது.1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற 248 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண் ஜனாதிபதி கூட தெரிவாகவில்லை. தெரிவாகவிடவில்லை. இதற்கு ஹிலாரி கிளின்டன் சிறந்த உதாரணமாகவுள்ளார். 

வளர்ச்சி அடையாத நாடுகள்கூட பெண் ஜனாதிபதி, பெண் பிரதமரை ஏற்று செயல்பட்டுள்ளன.1960 ஆம் ஆண்டு தனது கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, இலங்கையின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். உலகில் ஒரு நாட்டின் பிரதமராக பெண் பொறுப்பேற்றது அதுவே முதல்முறை.1966 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்திரா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 1969இல் இஸ்ரேல் பிரதமராக கோல்டா மேயர் பதவியேற்றார்.லண்டனில் 1979 முதல் 1990 வரை 11 ஆண்டுகளுக்கு மார்கரெட் தட்சர் பிரதமராக இருந்தார்.ஐரோப்பாவின் முதல் பெண் பிரதமரும் இவரே ஆவார்.1986 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக கோராசோன் அகீனோ தேர்வானார்.இது மட்டுமின்றி இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் கூட,பெனாஸீர் பூட்டோவை பிரதமராக தேர்வு செய்தது. 1988 இல் அவர் பொறுப்பு வகித்தார். இன்னொரு இஸ்லாமிய நாடான துருக்கியிலும் 1993 - 1996 வரை தன்சு சில்லர் பிரதமராக இருந்தார்.

பின்லாந்து,நியூஸிலாந்து நாடுகள் தலா 3 முறை பெண் ஜனாதிபதி, பிரதமர்கள் தலைமையில் செயல்பட்டது.போலந்து,லித்துவேனியா, அயர்லாந்து,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் பெண்கள் தலைமை வகித்துள்ளனர்.ஏஞ்சலா மெர்கல் 2005இல் ஜேர்மனியின் ஜனாதி பதியாக இருந்துள்ளார்.ஜேர்மனியில் நீண்ட காலம் பதவியில் இருந்த பெண் என்ற பெரு மையையும் ஏஞ்சலா பெற்றுள்ளார்.தெற்கு ஆபிரிக்காவின் லைபீரியா நாட்டில் 2006 முதல் 2018 வரை எலன் ஜான்சன் சர்லெஃப் ஜனாதிபதியாக இருந்துள்ளார். சமீபத்தில் கூட இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி தேர்வானார். அவர் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகவுள்ளார். 

உலகத்தில் 1960 முதல் பல்வேறு காலகட்டங்களாக 70 நாடுகளில் பெண்கள் தலைமையேற்றுள்ளனர்.ஜநாயகக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் பேசும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு பெண் கூட ஜனாதிபதி பதவி வகிக்கவில்லை.பதவி வகித்ததில்லை.அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகளே இதற்கான காரணத்தை பறைசாற்றுகின்றன.அந்த முடிவுகளில் பொய்கள் மூலம் பரப்பப்படும் பாலின பாகுபாடு,ஆணாதிக்கமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். அமெரிக்க வாக்காளர்களிடம் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில்,பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்கள் மிகவும் திறமையானவர்கள் வரிசைசைப்படுத்துகின்றனர்.அரசியலில் பெண்களை விடவும் ஆண் தலைவர் மேன்மையாவர் என  வாக்காளர்கள் கருதுகிறனர். மேலும்,பெண் வேட்பாளர்கள் தவறான தகவல்களால் குறிவைக்கப்படுகின்றனர்.



2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன்,தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும்,Electrol College வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினார்.அதாவது அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட ஒரு குழுவினரின் (தனிப்பட்ட வாக்காளர்கள் அல்ல) வாக்குகளைப் பெறுவதற்கு இரு வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். இதனை Electrol College வாக்குகள் என குறிப்பிடுகின்றனர்.மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள்(Electoral College) இருக்கும்.உதாரணத்துக்கு கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்ஸாஸுக்கு 40 வாக்குகளும் உண்டு. 50 மாநிலங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வோஷிங்டன் டி.சி.யை சேர்த்தால் மொத்தம் 538 வாக்குகள் உண்டு. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாவார் இதனால்தான் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும்,ஆணாதிக்க சிந்தனையினால் Electrol College வாக்குகள் குறைவாக கிடைத்ததால் ஹிலாரி கிளின்டன் தோல்வியடைந்தார். 

தனது தோல்விக்கு பிறகு பல்வேறு சவால்களை அவர் சந்தித்தார்.அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்ற முதல் பெண் இவரே. எனினும் பிரசாரத் தின்போது பாலினம் குறித்து பல்வேறு விமர்ச னங்களை சந்தித்தார்.அழிவுகரமான இரட்டை தரத்திலான கருத்துகளை தான் எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.சக போட்டியாளரான டொனால்ட் டிரம்புடன் மோதி அடைந்த தோல்விக்கு பிறகு டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதிகார ஏற்றத்தாழ்வுகளால் இயக்கப்படும் நவீன பெண் அடிமைத்தனம் அமெரிக்காவில் 63 வீதமாகவுள்ள நிலையில்தான் ஹிலாரி கிளின்டனை அந்தத் தேர்தலில் தோற்கடிக்க ஆணாதிக்க கருத்துக்களை பிரசார ஆயுதமாக்கி பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவித்து வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தற்போது தன்னை எதிர்த்து போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்ணான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை தோற்கடிக் கவும் அதே பிரசார ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதியும் ஜனாதி பதி வேட்பாளரு மான கமலா ஹாரிஸ், இந்தியாவின் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தவர்.அதன் தொடர்ச்சியாக சிவில் சேவை அதிகாரியாகவும் பணியாற்றினார்.அகதிகளை கணக்கெடுப் பதற்காக ஆங்கிலேய அரசு,பி.வி.கோபாலனை சாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத் துடன் சாம்பியா நாட்டுக்கு சென்றவர் பணி முடிந்ததும் அப்படியே அமெரிக்காவில் தங்கி விட்டார். பி.வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா, தந்தை டொனால்ட் ஹாரிஸ். இவர்களுடைய மகள் தான் கமலா ஹாரிஸ்.தன்னுடைய ஒரே சகோதரியும் தங்கையுமான மாயா ஹாரி  ஸிடம் மிக நெருக்கமானவராக அறியப்படுகிறார் கமலா ஹாரிஸ். பெற்றோரின் விவாகரத்திற்கு பின்,அவர்கள் இருவரும் கலிபோர்னியாவின் பெர்க்லி-யில் தங்கள் தாய் சியாமளா கோபாலனின் அரவணைப்பில் வளர்ந்தனர்.

கலிபோர்னியா சட்டமா அதிபராக கமலா ஹாரிஸ் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 2013 ஆம் ஆண்டில், பொழுதுபோக்கு துறை சம்பந்தமான வழக்கறிஞரான டக்ளஸ் எம்.ஹாஃப் -ஐ சந்தித்தார். அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.அப்போதிலிருந்து 59 வயதான டக்ளஸ் எம்ஹாஃப், அரசியலில் கமலா ஹாரிஸுக்கு பக்கதுணையாக உள்ளார் எம் ஹாஃப் உடனான திருமணம்,கமலா ஹாரிஸை கோல் மற்றும் எல்லா-வுக்கு மாற்றாந்தாயாக்கியது. இவர்கள் இருவரும் எம்ஹாஃப் மற்றும் அவருடைய முதல் மனைவியான கெர்ஸ்டின் எம்ஹாஃப்புக்கு பிறந்த குழந்தைகள்.தனக்கு இருக்கும் பல பெயர்களில் கோல் மற்றும் எல்லா இருவரும் வழங்கிய 'மொமாலா' (Momala) எனும் பாத்திரமே தனக்கு முக்கியமானது என கமலா ஹாரிஸ் அடிக்கடி கூறியுள்ளார். 30 வயதான கோல் மற்றும் 25 வயதான எல்லா ஆகிய இருவரும் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்களாக உள்ள நிலையில், இந்த அன்பு இருதரப்பிலும் உள்ளது.2020 இல் ஜனநாயக கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் குறித்த எல்லா-வின் அறிமுகம். நீங்கள் எங்களின் தந்தைக்கு மட்டுமல்ல,பெரிய,ஒன்றுபட்ட எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறை யினருக்கும் நீங்கள் ஒரு வலிமை தரும் சக்தியாக விளங்குகிறீர்கள் என்றார்.கோல் மற்றும் எல்லா-வின் தாயான கெர்ஸ்டினும் கூட கமலா ஹாரிஸ் குறித்து நல்ல விதமாக பேசியுள்ளார். சமீபத்தில் டிரம்பின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜே.டி.வான்ஸ், கமலா ஹாரிஸை குழந்தையில்லாத பூனை பெண்மணி என அழைத்த போது, ஹாரிஸுக்கு ஆதரவாக கெர்ஸ்டின் பேசினார்.கோல் மற்றும் எல்லா பதின் பருவத்தினராக இருந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக டக்ளஸ் மற்றும் என்னுடன் இணைந்து கமலா அவர்களுக்கு பெற்றோராக இருந்துள்ளார்,அவர் அன்பானவர்,அக்கறை யானவர், மிகவும் பாதுகாப்பானவர், எப்போதும் உடன் இருப்பவர்.என்னுடைய ஒன்றுபட்ட குடும்பத்தை நான் நேசிக்கிறேன்,கமலா இக் குடும்பத்தில் இருப்பதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.என சி.என்.என் ஊடகத்திடம் கெர்ஸ்டின் கூறியுள்ளார். 

இவ்வாறான நிலையில்தான்,கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதியாகி முதல் கறுப்பின மற்றும் தெற்காசிய பெண் என்று கமலா ஹாரிஸ் வரலாறு படைத்தார்.அமெரிக்கர்களிடமும் அவருக்கான ஆதரவுத்தளம் அதிகமாகவே உள்ளது.இருக்கும் ஆதரவுடன் கறுப்பின மக்களின் ஆதரவும் சேர எளிதில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று விடுவார் என்ற நிலைமை ஏற்பட கமலா ஹாரிஸை நோக்கி நேராகவே ஆணாதிக் கத்தையும் நிறவெறியையும் கக்கத் தொடங்கி விட்டார். மிகவும் கீழ்த்தரமான பிரசாரமாக டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸின் இனத்தைச் சுட்டிக் காட்டிப் பேச ஆரம்பித்து விட்டார். சிக்காகோவில் கறுப்பின பத்திரிகையாளர்கள் இடையே பேசிய டிரம்ப், 'நீண்ட காலமாக எனக்கு அவரைத் தெரியும். மறைமுகமாக,நேரடியாக என்று சொல்ல முடியாது. அவர் எப்போதுமே இந்திய பாரம்பரியத்துக்காரர்தான்.இந்திய பாரம்பரியத்தைத்தான் ஊக்குவிப்பார். அவர் கறுப்பராக மாற நேர்ந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் எனக்கு அவர் கறுப்பர் என்றே தெரியாது.ஆனால், இப்போது அவர் கறுப்பராக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறார்.எனக்குத் தெரியவில்லை, அவர் இந்தியரா அல்லது கறுப்பரா? என்று.இவர்களில் யாராக இருந்தாலும் மதிக்கிறேன்.ஆனால், அவர் அப்படியல்ல.ஏனெனில், அவர் எப்போதுமே இந்தியர்தான்.திடீரென்று ஒரு நாள் அவர் கறுப்பராக மாறிவிட்டார் என்று விஷமாகக் கக்கித் தள்ளிவிட்டார். 

எப்போதுமே பெண்கள் என்றால் தாழ்வாகவே கருதும் டிரம்ப். கமலா ஹாரிஸ் ஒரு விளையாட்டு பொம்மை,அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் உலகத் தலைவர்கள் எல்லாம் அவரைப் பார்ப்பார்கள்.அப்படியே கடந்து போய்விடுவார்கள்.அவர் அனைவருக்குமான ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போன்று தான் இருப்பார் என்றும் கிண்டலடித்துள்ளார். 

டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து குடியரசுக் கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜே.டி.வேன்ஸோ கமலா ஹாரிஸ் ரொம்ப போலியானவர்,கனடாவில் வளர்ந்தவர் என்றெல்லாம் தாக்கத் தொடங்கிவிட்டார்.அது மட்டுமல்ல, கமலா ஹாரிஸை குழந்தையில்லாத பூனை பெண்மணி (குழந்தையில்லாத பெண்களை குறிக்கும் இழிவான சொல்) என அழைத்து கேவலமாக நடந்து கொண்டுள்ளார்.என்ன கொடுமை என்றால்,அமெரிக்கரான இவருடைய மனைவி உஷா வேன்ஸும் கூட இந்தியாவை(ஆந்திரத்தை) பூர்வீகமாகக் கொண்டவர்தான்.சற்று உழைக்கிற வர்களுக்கு சார்பானவராக அறியப்படும் இவரை,சில மாகாணங்களில் முன்னிறுத்துவதன் மூலம் தனக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற முடியும் என்பதால் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகின்றது.

கமலா ஹாரிஸுக்கு தற்போது 59 வயது. இப்போது களத்தில் டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸை விட கிட்டத்தட்ட 20 வயது அதிகம். அதாவது 79 வயது. ஆனால், டிரம்ப்பை விட மிக நிதானமாக,பதற்றமடையாமல் தேர்தலை எதிர்கொள்கின்றார். டிரம்பினுடைய ஆணாதிக்க, நிற வெறிப் பேச்சுகளையே அவருக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார்.அட்லான்டாவில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, “உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் என் முகத்துக்கு முன் நின்று சொல்லுங்கள்''என்று ஒரு விவாதத்துக்கும் டிரம்புக்கு சவால் விடுத்திருக்கிறார்.கமலா ஹாரிஸினுடைய நிதானம் தான் இப்போது டிரம்ப்பை நிதானமிழக்க வைத்துள்ளது.டிரம்ப் கறுப்பினத்தவர்களுக்கு ஒருபோதும் உதவக் கூடியவர் அல்ல என்றாலும் கறுப்பினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக டிரம்ப்பும் டிரம்ப் ஆதரவாளர்களும்,எப்படியாவது கமலா ஹாரிஸ் கறுப்பர் அல்ல,இந்தியர் என்று மக்களை நம்ப வைத்துவிட வேண்டும் என்று படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றனர்.ஏனென்றால் கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவர் என்றால் கறுப்பினத்தவர்களின் வாக்குகள் அவருக்கு போய்விடுமாம்.இதனால்தான் டொனால்ட் டிரம்ப் தற்போதைய தனது பிரசாரத்தில் ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தியும் நிற வெறியை ஊக்குவித்தும் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து அவரை தோற்கடிப்பதில் தீவிரமாகவுள்ளார்.

கமலா ஹாரிஸ் தன்னுடைய பாட்டியின் ஊரான சென்னைக்கு வந்திருந்தபோது,சேலை கட்டி,தாத்தா, பாட்டி,குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரு பழைய படத்தை டிரம்ப் திடீரென்று சமூக ஊடகங்களில் வெளியிட்டு,“பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய இந்த நல்ல படத்துக்கு நன்றி கமலா.இந்திய பாரம்பரியத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கிற நட்பும் அன்பும் பாராட்டத்தக்கது' என்று குறிப்பிட்டு அவரை ஒரு இந்தியர் என துவேசம் காட்டியுள்ளார். உடனே, டிரம்பின் ஆதரவாளர்கள் “கமலா இஸ் இந்தியன், ஃபேக் பிளாக்"என்றெல்லாம் ஹேஷ்டே போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு நடுவே டிரம்பின் தீவிர ஆதரவாளரும் நன்கொடையாளருமான X தள அதிபர் எலான் மஸ்க்கோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலா ஹாரிஸின் குரலை மாற்றிப் பதிந்து பதிவேற்றி கமலா ஹாரிஸுக்கு எதிரான தொழில்நுட்ப பிரசாரத்தில் குதித்துள்ளார்.ஏற்கனவே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டனின் மனைவியும் பலமிக்க பெண்மணியுமான ஹிலாரி கிளின்டனையே அவர் ஒரு பெண் என்பதனை பலவீனமாகக் காட்டி ஆணாதிக்கத்தை தூண்டி 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் ஆணாதிக்க,நிற வெறிப்பிரசாரம் கமலா ஹாரிஸிடமும் வெற்றி பெறுமா அல்லது முதல் தடவையாக ஒரு பெண்ணை உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக்கிய வரலாறு படைக்கப்படுமா என்பது எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி தெரிந்து விடும்.

Post a Comment

Previous Post Next Post