.

நகைக் கடை நாராயணனுக்கு நான்கு புதல்வர்கள். அவர்களில் முதல் மூவரும் நல்ல புத்திசாலிகள். நான்காவது மகன் நஞ்சுண்டன் கொஞ்சம் மந்த புத்தி கொண்டவன். இதனால் நாராயணன் தன் முதல் மூன்று மகன்களையும் தன் வியாபாரத்தில் சேர்த்துக் கொண்டான். நஞ்சுண்டனுக்கு புத்தி மட்டு என்றதால் அவனை எந்த வேலையும் செய்ய விடாமல் நாராயணன் அவனை அருமை பெருமையாய் வளர்க்கலானான். நஞ்சுண்டன் தன் தாயைத் தன் இளம் வயதிலேயே இழத்து விட்டதும் இதற்குக் காரணம்.

வருடங்கள்உருண்டோடின. நாராயணன் தன் மூன்று மகன்களுக்கும் கல்யாணம் செய்து வைத்தான். ஆனால் நஞ்சுண்டனுக்கு விவாகம் செய்து வைக்க முயன்ற போது அவனுக்குப் போதிய அறிவு இல்லையெனக் கூறி எல்லோரும் தம் பெண்களை அவனுக்கு விவாகம் செய்து வைக்க மறுத்தனர்.இதனால் நாராயணனுக்கு நஞ்சுண்டனைப் பற்றிய கவலையே மனதில் இருந்து வந்தது.

 நஞ்சுண்டனுக்கு புத்தி மட்டு எனக் கண்டு அவனது மூன்று அண்ணிகளும் அவனிடம் வீட்டு வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி வாட்டி எடுத்தனர். அவன் ஒரு தொழிலும் செய்து பணம் சம்பாதிக்காததால் அவனை வீட்டிற்கு பாரமாக அவர்கள் எண்ணினார்கள். நாராயணன் திடீரென இறந்து போகவே நஞ்சுண்டன் நிலை அந்த வீட்டில் மேலும் மோசமாயிற்று. 

நஞ்சுண்டன் அந்த வீட்டில் வஞ்சக மில்லாமல் மாடு போலத்தான் உழைத்தான். ஆனாலும் அவனது அண்ணிகளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அவனை வீட்டை விட்டுத் துரத்தி அவன் திரும்பியே வராது போய் விட அவர்கள் திட்டம் போட்டார்கள். ஒருநாள் நஞ்சுண்டன் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு மதிய உணவு சாப்பிட வந்த போது மூன்று அண்ணிகளும் படுத்து முனகிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். 

முதலாவது அண்ணி “எனக்கு மண்டையே வெடித்து விடுவது போலத் தலை வலிக்கிறது. இதற்கு மருந்து கோதுமை நிற நல்ல பாம்பின் விஷப் பல்லைப் பிடுங்கி எடுத்து வந்து அதை நெருப்பில் போட்டு அதன் புகையை நெற்றியில் பட வைத்தாலே என் தலைவலி போகும்'' என்றாள். 


இரண்டாவது அண்ணியும் ''எனக்கு ஒரே வயிற்று வலி. புலிப் பாலுடன் சுக்குப் பொடியைக் கலந்து சாப்பிட்டால்தான் இந்த வலி போகும்" என்றாள். மூன்றாவது அண்ணியும். ''என் கண்கள் ஒரேயடியாக எரிச்சல் கண்டுள்ளன. இதைப் போக்க பிரம்ம ராட்சஸியின் தலைக் கொம்பை ஒடித்து எடுத்து வந்து அதை அரைத்து கண்களில் அக்குழம்பைத் தடவிக் கொண்டாலே எரிச்சல் போகும்" என்றாள். 

" நஞ்சுண்டனும் “நீங்கள்கவலைப் படாதீர்கள். நான் பாம்பின் பல்லையும், புலிப் பாலையும், ராட்சஸியின் கொம்பையும் கொண்டு வந்து கொடுக்கிறேன். ஆனால் இவை மூன்றும் எங்கே கிடைக்கும்?” என்று அவர்களிடம் கேட்டான். அவர்களும் இங்கிருந்து பத்து மைல் தூரத்திலுள்ள காட்டில் கிடைக்கும்" எனவே அவனும் உடனேயே காட்டை நோக்கிச் சென்றான். 

காட்டிற்குள் சென்றதும் நஞ்சுண்டன் ஒவ்வொரு நல்ல பாம்பையும் பிடித்துப் பார்த்தான். எந்தப் பாம்பும் கோதுமை நிறத்தில் இல்லாததால் அவற்றைத் தூக்கி எறிந்தவாறே முன்னே சென்றான். அவன் அடுத்து புலியாவது கிடைக்குமா என்று பார்த்தான். ஆனால் முயல்களும் நரிகளும் தான் தென்பட்டன. ஒரு புலியைக் கூட அவன் பார்க்கவில்லை. அவனுக்கோ ஒரே பசி. பாம்பும், புலியும் கிடைக்காததால் உரத்த குரலில் அவன் “ஏய் பிரம்ம ராட்சஸி! நீயாவது என் முன் வா. உன் தலைக் கொம்பை ஒடித்து எடுத்துக் கொள்கிறேன். பிறகு பாம்பையும் புலியையும் தேடிக் கொண்டு போகிறேன்" என்று கத் தினான்.

அதே பகுதியில் ஒரு குன்றில் மந் திரக்காரி மருதாயி என்பவள் தன் மகளுடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தாள். நஞ்சுண்டன் கூவியது அவளது காதில் விழுந்தது.அப்போது நன்கு இருட்டி விட்டது. அவள் விளக்கை ஏற்றி எடுத்துக் கொண்டு குன்றிலிருந்து இறங்கி வந்தவாறே 'யாரடா அவன் இங்கே வந்து என்னை பிரம்ம ராட்சஸி என்று கூவி அழைத்தது? இந்த இரவு வேளையில் இப்படி என்னைக் கூப்பிட உனக்கு என்ன துணிச்சல்?" என்று கடுங் குரலில் கேட்டாள். 

நஞ்சுண்டன் மருதாயி வருவதைக் கண்டு “அத்தையம்மா! இந்தப் பக்கத்தில் கோதுமை நிற நல்ல பாம்பும், புலியும், பிரம்ம ராட்சஸியும் எங்கே இருப்பதைக் காணலாம்?” என்று கேட்டான். மருதாயியும் "ஓ! இந்த மூன்றையும் ஏன் தேடிக் கொண்டு  வந்தாய்? இந்த ராத்திரி வேளையில் இவை பற்றிக் கவலைப்படாதே. அவை யாவும் என் மந்திரக் கோலில் உள்ளன. நீ இப்போது என் வீட்டிற்கு வா. அங்கே சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கு. நாளைக் காலையில் சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம்" என்று கூறி அவனைத் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றாள். 

மந்திரக்காரி மருதாயிக்கு மங்கம்மா என்ற மகள் இருந்தாள். மந்திரக் காரியின் மகள் என்ற காரணத்தால் அவளை யாரும் மணக்க விரும்பவில்லை. அவளென்னவோ பார்க்க அழகாகத்தான் இருந்தாள். மருதாயி நஞ்சுண்டன் பேச்சிலிருந்தே அவன் ஒன்றுமறியாத அப்பாவி என்று தெரிந்து கொண்டு விட்டாள். அதனால் எப்படியாவது பேசி நஞ்சுண்டனுக்கு தன் மகளை மணம் செய்து வைத்து விடுவது என்று அவள் தீர்மானித்து விட்டாள். மருதாயி ஒரு தட்டில் நான்கு சோள ரொட்டிகளையும், மசித்த கீரையும் வைத்து எடுத்து வந்து நஞ்சுண்டனை உட்கார வைத்து சாப்பிடக் கொடுத்தாள். நஞ்சுண்டனும் அதைச் சாப்பிட்டவாறே "ஆகா! மிகவும்ருசியாக இருக்கிறதே. இந்த மாதிரி ஒருநாள் கூட என் அண்ணிகள் செய்து கொடுத்ததே இல்லையே. இதை நீங்களா செய்தீர்கள், அத்தை?” என்று கேட்டான். மருதாயியும் "இல்லை மருமகனே! நான் செய்யவில்லை. என் மகள் மங்கம்மாதான் இவற்றைச் செய்தாள்" என்றாள். அப்போது ஒரு ஓரமாக நின்ற மங்கம்மாவை நஞ்சுண்டன் பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.

அப்போது மருதாயி "இவள்தான் என் மகள் மங்கம்மா. இவளை நீ கல்யாணம் செய்து கொண்டால் உனக்கு தினமும் இந்த மாதிரி ருசியான உணவு கிடைக்கும்” என்றாள். அவனும் ''ஓ! செய்து கொள்கிறேனே. ஆனால் அதற்கு முன் என் அண்ணிகளுக்கு கோதுமை நிற நல்ல பாம்பின் விஷப்பல்லும், புலிப்பாலும், பிரம்ம ராட்சஸியின் தலைக் கொம்பும் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது தலைவலியும், வயிற்றுவலியும், கண் வலியும் போகும்" என்றான். அதைக் கேட்ட மருதாயி நஞ்சுண்டனைக் கொல்லவே அவனது அண்ணிகள் திட்டமிட்டுக்காட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாள். அதனால் அவள் ''மருமகனே! கவலைப்படாதே நாளையே நீ என் மகளை மணந்து கொள்.உன் அண்ணிகள் கேட்ட பொருள்களோடு பத்தாயிரம் ரூபாய்களையும் வரதட்சணையாகக் கொடுக்கிறேன். நீ கவலைப்படாதே.எனக் கூறி ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து குடிசைக்கு வெளியே போட்டாள்.நஞ்சுண்டனும் அதில் படுத்துக் கவலை இல்லாமல் தூங்கினான்.மருதாயியும் தன் குடிசையை சுற்றி ஒரு கோடு போடவே நெருப்பு எரிந்து குடிசையையும் நஞ்சுண்டனையும் பாதுகாத்தது.

மறுநாள் மருதாயி தன் மகளையும் நஞ்சுண்டனையும் தான் வழிபடும் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள்.அங்கு காட்டு மலர்களைப் பறித்து இரு மாலைகளைக் கட்டி அவற்றை அவர்களிடம் கொடுத்து மாலை மாற்றி கொள்ளச் செய்து தெய்வ சன்னதியில் அவள் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தாள்.பிறகு அவள் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.அங்கு நஞ்சுண்டனிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து இதில் நீ கேட்ட மூன்று பொருள்களும், நான் கொடுப்பதாகச் சொன்ன பத்தாயிரம் ரூபாய்களும் உள்ளன. உன் ஊருக்கு இவளைஅழைத்துப் போக ஒரு வண்டிக்கும் ஏற்பாடு செய்கிறேன்.நீங்கள் இருவரும் வண்டியில் அமர்ந்து செல்லுங்கள்.உன் அண்ணிகள் தாம் கேட்ட பொருள்கள் பற்றிக் கேட்டால் அவை இந்தப் பெட்டியில் இருப்பதாகக் கூறி அவர்களையே அதைத் திறந்து பார்த்துக் கொள்ளச் சொல்'' என்றாள்.அவனும் அவ்வாறே செய்வதாகக் கூறி மங்கம்மாவுடன் வண்டியில் உட்கார்ந்தான். மருதாயியும் பெட்டியை வண்டி யில் வைத்து அவர்களை வழியனுப்பி வைத்தாள். வண்டியும் நஞ்சுண்டனின் ஊருக்குப் புறப்பட்டது. 

நஞ்சுண்டனை வீட்டை விட்டுத் துரத்திய பின் மறுநாள் அவனது மூன்று அண்ணிகளும் உட்கார்ந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். முதலாவது அண்ணி “நான் சாமர்த்தியமாக நஞ்சுண்டனிடம் விஷப் பாம்பின் பல்லைக் கொண்டு வரச் சொல்லி அனுப்பி விட்டேன். அவன் முதலில் எந்த நல்ல பாம்பைப் பிடித்தாலும் அது அவனைத் தீண்டி விடும். அதன் விஷத்தால் அவன் இறந்தே போய் விடுவான்.அவனைப் பற்றிய கவலை இனி நமக்கு இராது" என்றாள். 

இரண்டாவது அண்ணியும் “ஒரு வேளை அவன் பாம்பிடமிருந்து தப்பி விட்டாலும் நான் கேட்ட புலிப் பாலுக்காக புலியைத் தேடிக் கொண்டு அலைவான். அப்போது காட்டில் ஏதாவது ஒரு புலி அவனைக் கண்டு கொண்டு விடும். அவன் இனி உயிரோடு இருப்பது ஏது? நம்மைப் பிடித்த சனி ஒழிந்து போய் விட்டது'' என்று சிரித்துக் கொண்டே கூறினாள். 

மூன்றாவது அண்ணியும் “அவன் பாம்பிடமிருந்தும், புலியிடமிருந் தும்  தப்பி விட்டாலும் நான் கூறியபடி பிரம்ம ராட்சஸியே அவனைக் கண்டு கொன்று விழுங்கி இருப்பாள். அவன் எங்கே இனிமேல் உயிருடன் இருக்கப் போகிறான்?" என்று சிரித்துக் கொண்டே கூறினாள். இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களது வீட்டின் முன் நஞ்சுண்டனும் மங்கம்மாவும் ஏறி வந்த வண்டி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு அழகிய பெண்ணுடன் பெட்டியை எடுத்துக் கொண்டு நஞ்சுண்டன் இறங்கவே அவனது மூன்று அண்ணிகளும் அந்த இருவரைக் கண்டு திகைத்துப் போனார்கள். வண்டிக்காரனும் அவர்களை விட்டு விட்டுத் திரும்பிப் போய்விட்டான். 

அப்போது முதலாவது அண்ணி "நஞ்சுண்டா! நில் அங்கே. உள்ளே அடி எடுத்து வைத்தால் காலை முறித்து விடுவேன். யார் இவள்? வரதட்சணை இல்லாமல் இவளை மணந்து கொண்டா வந்தாய்?” என்று கோபத்தோடு கேட்டாள். 

நஞ்சுண்டனும் "நீங்கள் கேட்ட பொருளும் இவளுக்குக் கொடுத்த வரதட்சணையும் இப் பெட்டியில் உள்ளன. அது மட்டுமல்ல, இரண்டாவது அண்ணி கேட்ட புலிப்பாலும் மூன்றாவது அண்ணி கேட்ட பிரம்ம ராட்சஸியின் கொம்பும் இதே பெட்டி யில் உள்ளன. நீங்கள் ஒவ்வொருவராக திறந்து பாருங்கள். அப்போது நான் சொல்வது உண்மை என்று தெரி யும்" என்றான். 

முதலாவது அண்ணி அப்பெட்டியைத் திறந்து பார்க்கவே அதிலிருந்து கோதுமை நிறத்திலிருந்த நல்ல பாம்பு ‘புஸ்’ஸென்று சீறியது. அதைக்கண்டு முதலாவது அண்ணி பெட்டியைச் சட்டென மூடி “நஞ்சுண்டா! நீ சொன்னது போல் எல்லாம் இருக்கிறது. நீ உள்ளே வா" என்று கூறினாள். அப்போது நஞ்சுண்டன் தன் இரண்டாவது அண்ணியிடம் “நீங்கள் கேட்ட புலிப் பாலும் வரதட்சணையும் இருக்கிறதா என்று பாருங்கள்” என்றான். 

அவளும் பெட்டியைத் திறக்கவே அதில் ஒரு புலி இருப்பதைக் கண்டு பயந்து சட்டெனப் பெட்டியை மூடி விட்டு 'நஞ்சுண்டா! நீ சொன்னது போல எல்லாம் இருக்கிறது. நீ தாராள மாக உள்ளே போகலாம்" என்றாள். அடுத்து மூன்றாவது அண்ணியிடம் நஞ்சுண்டன் பெட்டியைத் திறந்து பார்க்கும் படி கூறினான். அவளும் அதைத் திறந்த போது அதில் பயங்கர மான பிரம்ம ராட்சஸி இருப்பதைக் கண்டு சட்டெனப் பெட்டியை மூடி மூடி" நஞ்சுண்டா! நீ சொன்னது போல எல்லாம் இருக்கிறது. நீங்கள் உள்ளே போங்கள்" என்றாள்.

நஞ்சுண்டனும் மங்கம்மாவை உள்ளே போகச் சொல்லி விட்டு அந்தப் பெட்டியை எடுத்து ஒரு அறைக் குள் வைத்தான். பிறகு அவன் தன் அண்ணிகளிடம் "நீங்கள் உங்கள் பொருள்களைப் பெட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் எடுத் துக் கொள்ளுங்கள்" என்றான். அவர்களோ அந்தப் பெட்டியை திறக்கவே இல்லை. நஞ்சுண்டன் மங்கம்மாவு டன் அந்த வீட்டில் சுகமாக இருக்கலானான். 



Post a Comment

Previous Post Next Post