.

சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலானது பாரியின் கதையை மையப்படுத்திய ஒரு புனைவாகும்.வேள்பாரி ஆகச் சிறந்த படைப்பு  வேள்பாரியை வாசித்த பொழுது மூவேந்தர் எனும் மாயபிம்பம் உண்மையில் ஆட்டம் கண்டு தான் விட்டது. முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி என்பது மட்டுமே நமக்குத் தெரிந்த தகவலாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முந்தைய பாரியின் கதையை ஆவணப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.தமிழ் இருக்கும் வரை பாரியின் கதை வாழும்.தமிழ் மன்னர்களில் மூவேந்தர்களைத் தவிர்த்து ஏனையோரை பேசுவது குறைவாகும்.ஆனால் அவ் மூவேந்தர்களுமே பாரியின் பெயரையும் புகழையும் கண்டு பெரும் பொறாமை கொண்டிருந்தனர்.அதனை அழிக்கத் துடித்தனர். அவன் உழைப்பினால் பாரி உருவாக்கிய பெயரைக் அபகரிக்கத் துடித்தனர் என்பது வரலாறு.

டான் பிரவுனின் டாவின்சி கோட் நூல் எப்படி அவருக்கு ஒரு என்று Masterpiece படைப்பு என்று அழைக்கப்படுகிறதோ அதே போல தமிழில் ஒரு Masterpiece படைப்புத்தான் வெங்கடேசனின் வேள்பாரி.

வேள்பாரி நாவலானது மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்பாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதே எழுத்தாளர் வெங்கடேசனின் காவல் கோட்டம் நூலும் இதே விருதைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள ஆகச் சிறந்த போர் பற்றிய நாவல் வேள்பாரிதான்.வீரம் செறிந்த கதை மாந்தர்களின் செயற்பாடுகள்,போர் பற்றி படிக்க விரும்பும் நபர்களை இந்த நாவலை நோக்கி கட்டாயம் ஈர்க்கப்ப டுவார்கள்.வீரம் மட்டுமல்ல காதலும் சரிபாதி கலந்ததூன் வேள்பாரி. வேள்பாரி தன்னகத்தே பல குடிமக்களின் கதைகளை கொண்டுள்ளது.அது வேல்முருகனின் வீர பயணத்தின் கதையை தன்னகத்தே கொண்டுள்ளது.தமிழ் சமூகம் வெங்கடேசனிடமிருந்து வேல்முருகனின் வரலாற்றை எதிர்பார்க்கிறது.உண்மையில் பாரியின் கதை ஓர் சோகக் கதைதான்.ஆனால் சு.வெங்கடேசன் பாரியின் வரலாற்றை ஓர் சிறந்த நாவலாக மாற்றித் தந்துள்ளார்.பாரி என்னும் வெற்றி வீரனின் பிம்பம் இயற்கையின் பேராற்றல் மீது கட்டமைக்கப்படுகிறது.நாடற்றவர்களின் நாடாக பாரியின் பறம்பு மலை உள்ளது.அவர்களிற்கு பறம்பே தாய்நாடாய் மாறுகிறது.

வேள்பாரி ஆனந்த விகடனில் வெளியானபோது அதனை வாசித்த வாசகரின் கூற்று BBC இல் வெளியாகியிருந்தது.அது பின்வருமாறு ."ஒவ்வொரு வாரமும் விகடன் இதழை வாங்கியதும் வேள்பாரி தொடரைத்தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தத் தொடர் எனக்கு ஈழப்போரை நினைவூட்டியது. தற்போது சூழலுக்கான போராட்டங்களை இந்தத் தொடர் எனக்கு நினைவுபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், எத்தனை தமிழ்ப் பெயர்களை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. தவிர, சங்க காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களையும் இந்தத் தொடர் மிகச் சுவையான முறையில் சொல்லிவருகிறது. யார் வீட்டில் ஆனந்த விகடன் இதழைப் பார்த்தாலும் அவர்கள் வேள்பாரி படிக்கிறார்களா என்றுதான் முதலில் கேட்பேன்"

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது.அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதி செய்து, வஞ்சினம் நிகழ்த்தி,பாரியின் உயிர் பறித்தனர்.வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை.ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி,வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்.வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான்.முல்லைக் கொடிக்கு தேரைத் தந்தவன் மட்டுமல்ல .தனது வீரத்தால் என்றும் ஒளி வீசும் வெற்றிக் கொடியை நாட்டிச் சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை.முதல் பாகத்தில் காம இச்சையை காதலாக மிகைப்படுத்தி இருப்பதாக தோன்றியது. அதனாலே பெரிதாக பிடிப்பு இல்லை. அதனால் முதல் பாகத்தின் அரைவாசிப் பகுதி மீது பெரிதாகப் பிடிப்பு வரவலில்லை.இருந்தும் தொடர்ந்தேன்.அதன் பிறகு கதை சூடு பிடித்தது.அதாவது போர்களக் காட்சிகள் இணையற்றவை.மிகவும் சுவாரஸ்யமானவை.பாகுபலி படத்தைப் போல முதல் பாகத்தை விட இரண்டாம்பாகம் சுவாரஸ்யமிக்கது..புத்தகத்தை கீழே வைக்க மனம் இல்லாதது.

இயற்கைத் தாயே அரண் அமைத்து கொடுத்த பச்சைமலை தொடர்களில் வாழ்ந்து வந்த பதினான்கு வேளிர் குடிகள் உட்பட, குரல்வளை நசுக்கப்பட்ட பல குடிகளின் தலைவன் தான் வீரயுக நாயகன் வேள்பாரி.மாட மாளிகைகளையும்,அழகிய மாடங்களையுடைய நகரங்கள் தான் பிற நாவல்களின் கதை களம்.அதனின்று முற்றிலும் வேறுப்பட்டு மலையை கதைக்களமாக கொண்டுள்ளது வேள்பாரி.

பெரும்பாலான நாவல்கள்,கதைகள் மற்றும் திரைப்படங்கள் கதாநாயகனை சுற்றியே வடிவமைக்க பட்டிருக்கும். கதாநாயகன் என்றாலே அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கதாநாயகன் எப்பொழுதுமே வலிமை வாய்ந்தவனாக சித்தரிக்கப்பட்டருப்பான்.மிகைப்படுத்தப்பட்ட Heroism தான் பெரும்பாலும் காட்டப்படுவது.வேள்பாரியில் அதெல்லாம் இல்லை. வேள்பாரிக்கு என ஒரு சில தனித்திறமைகள் இருக்கும். அதே போல அங்குள்ள அனைத்து வீரனுக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகள் இருக்கும். அதை கையாள தெரிந்து பறம்பை வழிநடத்தும் தலைவனே வேள்பாரி.

பாரியை விட‌ வலிமை வாய்ந்த மூவேந்தர்கள்,அவனுடைய செல்வத்திற்காகவும் அவனுடைய புகழுக்காகவும் பறம்பை முற்றுகையிடும் போதும் அசராமல் இருக்கும் அவனுடைய துணிவு,பாரி வீழப்போகிறானோ என ஐயமுற செய்யும்.அடுத்த நிமிடம் ஒளித்து‌ வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். மூவேந்தர்களுடைய தாக்குதல் திறனும்,யுக்திகளும் இதயத்துடிப்பை கேட்க செய்யும் மறுநொடியில் எதிரிகளுடைய பலத்தையே அவர்களை அழிக்கும் ஆயுதமாய் பயன்படுத்தி ஓட வைப்பான் பாரி.அவன் Hero அப்படித்தான் காட்சிப்படுத்தபட்டிருப்பான் என்று நினைத்தால் அதுதான் இல்லை.பாரி ஒரு பக்கம் தாக்க மறுபக்கம் பரம்பின் வீரர்களும் இதே யுக்தியை கையாண்டு எதிரிகளை வீழ்த்துவர்.

ஓர் சிறந்த தலைவன் அவனுக்கு கீழுளுள்ள அனைவரையும் தலைவனாக பார்ப்பான். ஆங்கிலத்தில்,Decision making power என்போம்.தான் இல்லாத போதும் தனது மக்கள் சரியான திசையை தேர்ந்தெடுத்து செல்லும் திறனை ஏற்படுத்துபவனையே தலைவன் என்கிறோம். தன்னிகரற்ற தலைவன் தான் வேள்பாரி.சமவெளியில் போரிட்டு பழக்கபடாத தனது சின்னஞ்சிறு படையை, பன்மடங்கு பலம் வாய்ந்த மூவேந்தர்களின் படையை எதிர்த்து சமவெளியில் இறக்கி,எண்ணிக்கையால் மட்டுமே வலிமையான படையாகி விடமுடியாது என்பதை போர்க்களம் புகாமலே நிகழ்த்தி காட்டுவான்‌ வேள்பாரி.

போருக்கு வகுக்கப்படும் வீயூகங்களும் அதை வீழ்த்த கையாளப்படும் யுக்திகளும் அபாரம்.சாதாரணமாக கதாநாயகன் உட்பட இரண்டு அல்லது மூன்று கதாப்பாத்திரங்கள் தான் மனதில் பதியும். வேள்பாரியில் ஒவ்வொரு வீரனும் தன் திறமையால் அதை வீழ்த்தி உட்புகுவான்.

மகாபாரதத்தில் அபிமன்யுவை கொல்வதை போன்றே இதிலும் மனதை உறைய வைக்கும் கொலைகள் இடம்பெற்றுள்ளது.காட்டை பற்றி, அதன் விலங்கினங்களை பற்றிய பெரிய தகவல் களஞ்சியத்தை பாரியின் வீரத்தோடும் பறம்பு மக்களின் வாழ்க்கையோடும் தூவி அலங்கரி த்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

தமிழரின் நாகரிகம்,சிந்தனைமரபு,இயற்கை அழிவு,விஞ்ஞானம்,கலை இலக்கிய நுண்திறன்,வீரம்,காதல்,வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றைப் புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.வேள்பாரியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மிசச்சிறந்தவை.கதையின் நகர்விற்கேற்ப வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இரசிக்க கூடியவையாகவும் சங்க கால வாழ்வை கண்ணெதிராக கொண்டு வருபவையாகவும் காணப்படுகிறன.

வேள்பாரியின் கதை இதுதான்: மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான்.

அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். பாரியை மலையைவிட்டு கீழே வரச் செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கிறான். பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.இதில் எந்த இரகசியங்களையும் விமர்சனத்தில் நான் உடைக்க விரும்பவில்லை நீங்களே புத்தகத்தில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


பாரிக்கு அடுத்து இந்த நாவலில் என்னைக் கவர்ந்த கதாப்பாத்திரம் இரவாதன். இரவாதன் போர்க்களத்தில் வெளிப்படுத்திய வீரமும் வேகமும் அளவிட முடியாதது.கற்பனை என்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கற்பனைதான் எழுத்தாளரின் வெற்றி.அதனை வெங்கடேசன் நன்றாகவே செய்துள்ளார். இரவாதன் வேந்தர்களின் படையைத் துளைத்து எந்த துணையுமின்றி பின்பக்கம் சென்ற பின்பு கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் தான். என்னையறியாமலேயே அவன் மரணித்து விடக் கூடாது என்று எம்மை அந்தக் கதாப்பாத்திரம் ஏங்க வைக்கிறது.மகாபாரதக் கதையின் அபிமன்யுவை இரவாதன் ஞாபகப்படுத்தினாலும் அவன் முடிவு இங்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்று மனம் ஏங்கவே செய்தது.ஆனால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு மனம் ஏமாற்றமடைகிறது.


வேள்பாரியில் பெண்கள் அறம் சார்ந்து, ஆளுமையோடு,கற்றதும் பெற்றதுமாய் சேகாரம் ஆன அறிவினைக் கொண்டு சுதந்திரமாய் தங்களின் செயல்பாடுகளால் தங்கள் குலம் செழிக்க துணை நிற்கிறார்கள். வேள்பாரி நாவலில் கூறப்பட்ட பெண்களின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் இந்த புதினம் முழுவதும் சுதந்திரமாகவே உலாவுகின்றனர்.

கொற்றவையே முதன்மை தெய்வமாக வணங்கப்படுகிறது,பறம்புக்குடிகள் தாய் வழிச் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் பெண்மையைப் போற்றுப வர்களாகவும் இருக்கிறார்கள்.போர் சார்ந்த முடிவுகள் தவிர பறம்பின் மற்ற எந்த முடிவுகளும் பறம்பு பெண்களின் தலையீடு இல்லாமல் எடுக்கப்ப டுவதில்லை.அவர்களுக்கு பறம்பில் சம உரிமை அளிக்கப்படுகிறது. குலநாகினிகளே அதற்கு பெரிய சாட்சிகளாய் உள்ளார்கள்.

இணையைத் தேர்வு செய்வதில் அவர்களுக்கு தரப்படும் சுதந்திரம் வேறெங்கும் காணமுடியாதது.கல்வி கற்றலிலும் அவர்களுக்கான இடம் தரப்பட்டிருக்கிறது. கொடிக்குலத்தின் குல மகளான வள்ளி அழகில் சிறந்த ஆண்மகன் முருகன் தன்னை கண்டு காதல் கொண்டு திரிகிறான் என்பது அறிந்தும் மன உறுதி நிலைப்பாடால் தன் வேலை எதுவோ அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாள்.

ஆதினி தன் அறிவினால் பறம்பின் தலைவன் பாரிக்கே புத்தி கூறுகிறாள். பல்வேறு சூழ்நிலையிலும் அவனுக்கு உறுதுணையாக துணை நிற்கிறாள். அங்கவையோ போர்ச்சூழலில் தன் சமயோசித புத்தியால் உதிரனைக் காத்து பறம்பின் பெரு அழிவைத் தடுக்க பாரிக்கு தகவல் தருகிறாள்.


மயிலா தன் காதலன் நீலன் மீது கொண்ட காதலால் அவன் மீளும் நாள் வரை மன உறுதி கொண்டிருக்கிறாள்‌. பறம்பின் பெண்ணொருத்தி தனக்கிருக்கும் காடு பற்றிய பேரறிவு கொண்டு மதம் கொண்ட யானையை சிறிய செடி கொண்டு அமைதி படுத்துகிறாள். பொற்சுவையோ தன் அறிவுத்திறன் கொண்டு வேள்பாரியின் உயிரைக் காக்க தன் உயிரையே தியாகம் செய்கிறாள்.


செம்பா தன் குலம் அழித்தவனை கொல்லும் துணிவை பெற்றிருக்கிறாள். இப்படி வேள்பாரியில் இடம்பெற்ற பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், சமயோசித புத்தி உடையவர்களாகவும், ஆளுமைத்திறன் கொண்டவர் களாகவும்,காடு பற்றிய பேரறிவு உடையவர்களாகவும், வலிமையான வர்களாகவும் இருக்கிறார்கள்.

என்னே! மலை மக்களின் மருத்துவ அறிவு. மனிதனின் தற்காப்பு உத்திகள் எல்லாம் உண்மையில் வியக்க வைக்கின்றனவாக இருக்கின்றன.

இணைசேருதல் உயிரினப் பொதுமை

"காதல் தேடலில் தொடங்கி தொலைவதில் முடியும்"அட! வாசிக்கும் நம்மையுமா தொலையச்செய்யும்?

*முருகன்-வள்ளி

*பாரி- ஆதினி

*மயிலா- நீலன்

*அங்கவை-உதிரன்

*சூலிவேள்- தூதுவை

*கோவன்-செம்பா

*பொற்சுவை- பெயர் சொல்லப்படாத காதலன்

இவர்கள் அனைவருமே நம்மால் கடக்க முடியா காதலர்கள்.

ஏழிலைப் பாலை, காக்கா விரிச்சி, பால் கொறண்டி,தனைமயக்கி மூலிகை, இராவெரி மரம்,பறக்கும் சிறகு நாவற்பழம், தேவவாக்கு விலங்கு,சுண்டாப் பூனை,ஆட்கொல்ளி மரம் போன்ற இதுவரை தமிழ்மக்கள் அறிந்திராத பல விஷயங்களை நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை ஆச்சர்யம் பொங்கும் வகையில் தமது வார்த்தைகளிலே வடித்து தந்திருப்பார் ஆசிரியர்.
 நாவலின் வரிகள் எந்தச் சூழலை விளக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்தில் -அந்தக்கணம் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்குக் கதைக்குள்ளே முற்றிலும் மூழ்கிப்போயிருப்போம் நாம்.


திரு.சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்துக்கள் நம்மை பறம்பு மலையிலேயே 
இருக்கச் செய்து விடுகிறது. இந்த நாவலின் வாசகர் ஒவ்வொருவரும் பறம்பு மலையில் நாம் பிறந்திருக்க கூடாதா? ஒருமுறையேனும் பறம்பு மலையைப் பாரத்து விடமாட்டோமோ? என்று ஏங்கச் செய்துவிடுகிறது.


தமிழ் மன்னர்கள் ஆட்சியில் அடிமை முறை என்பது பொதுவான ஒன்று என்பது இந்த நாவலின் ஈங்கையன்,காலம்பன் கதாப்பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது.ஒரு குலம் ஏனைய குலங்களை அழித்து அடிமைக ளாக்குவது,அடிமைகளாக ஏனையோருக்கு விற்பனை செய்வது,பரிசாக வழங்குவது என்பன மூவேந்தர் ஆட்சியில் பொதுவான நடைமுறையாகும். அடிமை முறை அண்மைக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது ஆனாலும் தமிழ்ச் சூழலில் அடிமை முறை என்பதும் இருந்தே வந்திருக்கிறது.இதனை வோல்காவிலிருந்து கங்கை வரை நூலிலும் இந்த அடிமை முறை பற்றி விளக்கி கூறுகிறார் சாங்கிருத்யாயன்.நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ வரலாற்றை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது.அதனை விடுத்து தமிழ் மன்னர்கள் அடிமைகளைப் பயன்படுத்தவில்லை என்று வாதிடுவது முரணாகும்.

பல இடங்களில் கடந்து செல்ல இயலாமல் நிறுத்தி உள்வாங்கிப் பின்னரே நகர முடிந்தது.முதலிலிருந்து இறுதிவரை பாரியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எப்படி ஓடினேன் என்று அறியேன்,அவன் நிதானத்திற்கும் தான்.ஆனால் அவனுடனேயே,அவன் அருகிருந்தே பார்த்து,ரசித்து,வியந்து கொண்டிருந்தேன்.இறுதியில், பெரும் போர்க்களத்தில் பாரியின் பக்கம், பறம்பின் பக்கம் வீரமும் அறமும் நிலை கொண்டு போரிட மூவேந்தரின் பக்கம் சதியும் பயமும் பொறாமையும் போரிடக் கண்டு கபிலரைப் போன்று, திசைவேழரைப் போன்று கலங்கினேன்.பாரியை விட்டகல முடியாமல் உறக்கத்தைத் தள்ளி வைத்தேன்.பறம்பின் தளபதிகளுடன் போர்க்களம் எங்கும் இருந்தேன்.அவர்களின் வீரம்,காத்தலின் பொருட்டு அழித்தலின் பொருட்டல்ல!

இதோ, 'பனையன் மகனே' பாடலைக் கேட்டு அங்கேயே அமர்ந்து இருக்கிறேன், எழுந்து செல்லவோ எண்ணம் கலைக்கவோ மனமில்லை.பாரி,தேக்கன், பழையன்,கூழையன்,வாரிக்கையன்,உதிரன்,நீலன்,முடியன்,இரவாதன்,பொற்சுவை என்று அவர்கள் அனைவரும் எண்ண அலைகளில்.மனமும் இயங்குகிறதா சிலையாகி விட்டதா என்று இனம் காண முடியாமல் தவிக்கிறேன்.கபிலரைப் போன்றே பறம்பைப் பிரிய மனமில்லை. மூவேந்தர்கள் கீழே இறங்கி விட்டனர். பாரி முகட்டில் அமர்ந்துவிட்டான், இறங்க மாட்டான்.

வேள்பாரியில் கலப்படத்தில் தானே புதுமை பிறக்கும் என்று பாரி கபிலரிடம் சொல்லும் காட்சி ஒன்று ஒன்று வரும்.இந்த சாதி,மதம் எல்லாம் அப்போது இல்லை.விரும்பியவர்களுடன் கைகோர்த்து காதலுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் எம் முன்னோர்கள்.நாகரிகம் வளர்ந்ததால் இவ்வளவு பாகுபாடு,வேறுபாடு,வெறி உள்ளது போலும் என்று எண்ண வைத்தது அக் காட்சி.

நானும் பொற்சுவை போல ஏன் 111 வது அத்தியாயத்தில் கதையை முடித்தார் எதாவது மறைபொருள் இருக்குமோ என்று யோசித்த போது ஒன்று விளங்கியது இதன் மூலம் சதி செய்து பாரியைக் கொன்ற மூவேந்தர்களிற்கு ஆசிரியர் ஒன்று சொல்வது போல உணர்ந்தேன்.இந்த அத்தியாயத்தில் என் நினைவுக்கு வருவது உண்மையில் பாரியை எதிர்கொள்ள முடியாமல் கோழைகள் போல சதி செய்து அழித்த மூவேந்தர்களிற்கு வீரயுகநாயகன் வேள்பாரி மூலம் ஒரு பட்டை நாமம் தான் கிடைத்தது.வகுத்த திட்டம்,சூழ்ச்சி திரட்டிய படை கைகோர்த்த சதிகாரக் கூட்டணி எல்லாம் சர்வநாசமாகி.... ஒன்றும் இல்லாமல் உயிரை காத்துக் கொள்ள தப்பித்து ஓடியவர்களிற்கு ஆசிரியர் போட்ட பட்டை நாமம் தான் அத்தியாயம் 111.வீழ்த்த என்ன நான் மரமா வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழும் பனம்பழம் என்று மூவேந்தர்களிற்கு பாரி சொன்னது போல இருந்தது.

இறுதியில் நடந்த கொற்றவை கூத்திற்குப்பின் நடந்த நிகழ்வுகளை எல்லாம் கூறியிருந்தால் நிச்சயம் அவ் வள்ளலின் முடிவை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயிருந்திருக்கும்.மூவேந்தர்களின் சூழ்ச்சி தெரிந்தும் பறம்பு மலையைவிட்டுக் கொடுத்த வள்ளல் வேள்பாரியின் மரணம், தன் மகள்களின் கண்முன்னே நடந்தேறிய கொடூர நிகழ்வைப் பதியாமல் முடித்து விட்டார் ஆசிரியர்.ஒரு வரலாற்றுக் கதாப்பாத்திரத்தின் தொடக்கத்தைக் கூறியவர் முடிவையும் கூறியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

வேள்பாரி முழுக்க முழுக்க நமக்கு சொல்வது, "மனங்களை வெல்லத் தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான்" என்பதைத்தான்.
வாசிப்போம்.

வேள்பாரி புத்தகத்தை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.


You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post