அஜந்தன் எழுதிய மையுதிர்க்கும் மறுஜென்மம் கவிதைத் தொகுப்பானது இலங்கையின் இளம் கலைஞரின் முதலாவது கவிதைப் படைப்பாகும். அவருடைய எழுத்துக்களில் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளும் ஏனைய கவிதைகளையும் சேர்த்து புத்தகமாகத் தொகுத்துள்ளார் அஜந்தன்.நூலாசிரியரை தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவதுடன் அவருடைய கவிதைத் திறமைகள் அபரிமிதமானது.புத்தக வெளியீடு என்பது தற்போதைய காலகட்டங்களில் மிகவும் சாவாலானது.இலாபம் என்பதை கருத்தில் கொள்ளாமல் நூலாசிரியர்கள் தங்களின் படைப்புக்களை வெளிக் கொண்டு வர படாதபாடு படுகிறனர்.அதுவும் முதன் முறையாக புத்தகத்தை வெளியிடும் போது எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.அவை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக தன்னுடைய முதல் படைப்பை அஜந்தன் வெளிக் கொண்டு வந்துள்ளார்.அந்த வகையில் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
காதலை, வீரத்தை சங்க இலக்கியப் புலவர்கள் பாடினர்.திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூலாசிரியர்கள் அறத்தைப் பாடினர். இளங்கோவடிகள்,திருத்தக்கத்தேவர் போன்றோர் காப்பியங்கள் பாடினர். ஆழ்வார்களும்,நாயன்மார்களும் பக்தியைப் பாடினர்.இலங்கைத் தமிழர் களிற்குப் பொருத்தமான கவிதையை மையுதிர்க்கும் மறுஜென்மம் பாடுகிறது.வலிகளை,சோகங்களை,துயரங்களை,துன்பங்களை,மகிழ்ச்சியைவெற்றியை,சந்தோசத்தை தன்னுடைய இந்த நூலில் அஜந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.அவருடைய எழுத்துக்கள் இதனை உறுதி செய்கிறன.
பயணம் ஒன்றின் உதிர்விலிருந்து என்னும் கவிதையானது அஜந்தன் பயணப்படும் பாதையை சுட்டிக் காட்டி நிற்கிறது.''என் பயணம் முடிவிலிகள் இல்லாத தூரம் வரை நீட்சி பெற்றது என்று சொல்வதன் மூலம் அவர் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது'' என்பதை ஒப்புக் கொள்கிறார்.
பிணவறைப் பிரசவங்கள் என்கிற கவிதை குப்பைத் தொட்டியில் கைவிடப்படும் குழந்தையினுடையது.ஆணும் பெண்ணும் அவசரத்தில் செய்யும் பாதுகாப்பற்ற உடலுறவினால் அந்தப் பிஞ்சுகள் படும் கஸ்ரத்தை சொல்கிறது.உண்மையில் கைவிடப்படும் குழந்தைகளின் நிலைமை வலிகள் எழுத்துக்களிற்கு அப்பாற்பட்டது.அதனை அஜந்தன் தன்னுடைய எழுத்துக்களின் மூலமாக எம்முடைய எண்ணங்களில் புகுத்துகிறார்.''அடிமடியில் சுமந்தவள்,அந்தரத்தில் விட்டதன்,பின் ஒடிந்த என் உயிருக்குள்,ஓசைகள் ஊனமாகி,இதயக்கிடங்கில் இருளடைந்து கிடக்கிறது'' என்கிற வரிகள் அந்தப் பிள்ளைகளின் தாயின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறன.தவறேதும் செய்யாமல் தண்டிக்கப்படும் பிஞ்சுகளைப் பற்றிய கவிதை இது.
ஈழத் தமிழர்களின் இன்றைய கையறு நிலையினை சுதந்திரக் கனவுகள் என்னும் கவிதை எடுத்துரைக்கிறது.உச்சத்திலிருந்த இனம் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாகி கிடக்கிறது அதனை இந்தக் கவிதை நன்றாக எடுத்துக் கூறுகிறது.''கண்கள் கட்டப்பட்ட,பின் எம் சுதந்திரக்கனவுகளும் களவாடப்பட்டு விட்டன'' என்ற வசனம் எம் உறைந்து போயுள்ள சோகத்தினை வெளிக் கொண்டு வருகிறது.
புன்னகை ஒன்றே போதும் என்ற கவிதையானது மனிதர்களின் சிரிப்பை பற்றியது.இந்தப் புத்தகத்தின் நீண்ட கவிதைகளில் ஒன்று.''மனமெனும் பூட்டுக்குள்,மறைந்திருக்கும்,மாயக்கவலைகளை,மாற்றி விடும், மந்திரச் சாவியும்-இந்த,புன்னகையே'' என்ற வரிகள் சிரிப்பின் முக்கியத்துவத்தை சொல்கிறன.
இளமையில் வறுமை கொடிது என்றார் ஒளவையார்.அப்படியான வறுமையைப் பற்றிய கவிதையொன்றினை வடித்துள்ளார் அஜந்தன்.''வறுமை என்ற,அந்தப் பொல்லாத கொடுமை,என் வாசற்கதவு திறந்து. என்னை, மோசமாய்க் கொல்கிறதே'' என்ற வரிகள் அவருடைய சொந்த அனுபவத்தி லிருந்து எழுந்தது என்றே கூறலாம்.
பிறந்த அனைவரும் இறந்தே ஆக வேண்டும்.மரணம் நிச்சயமான ஒன்று. அதனை தனது மரணம் என்னும் நான் என்ற கவிதையின் மூலம் எடுத்துரைக்கிறார் அஜந்தன்.குறிப்பாக ''சொர்க்கம் நரகம் என்றும் மறுபிறப் பென்றும், ஒற்றைக் கோட்பாட்டுக்குள்,ஒதுங்கிக் கொள்ளும்,உங்களை பற்றிக் கொள்ள,நான் வந்து கொண்டேயிருக்கிறேன்'' என்ற வரிகள் மரணத்தின் உண்மையை உணர்த்துகிறன.
ஒரு அகதியின் கதறல் என்ற கவிதை இலங்கைத் தமிழர்களின் நிலையையும் நாடிழந்து நிலமிழந்து அகதிகளாய்த் உலகெங்கும் அலையும் ஏனைய மக்களின் நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.குறிப்பாக''இன்னமும் எங்கள் வரவை,எதிர்பார்த்து ஊர் சுற்றும், ஊமைக்கிளி,சோககீதத்தையோ அல்லது சுதந்திர கீதத்தையோ,இசைத்துக் கொண்டிருக்கலாம்'' என்ற வரிகள் அகதியின் வலிகளை தனிமையை நாடிழந்த மக்களின் துயத்தை வடித்து நிற்கிறன.
அஜந்தனின் கவிதைத் தொகுப்பின் என்னைக் கவர்ந்த இன்னொரு சிறந்த கவிதையாக தேடல் எனும் பெருநதி என்ற கவிதை அமைந்துள்ளது. ''தொலைந்து போன,ஒன்றை மட்டும்,தொடர்ந்து,தேடிக் கொண்டிருப்பதில், காலப் பெருந்துளிகள்,கரைந்து போகிறன'' என்ற வரிகள் சிறந்தவையாக அமைந்திருக்கிறன.
நட்பின் பெருமையைச் சொல்லும் நினைவுகளின் ஓரம் என்னும் கவிதை பிரிந்து போன நட்பின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது.''நாட்கள் பல கடந்த பின்,என் நாட்குறிப்பேட்டை,நகர்த்தும்போது,முச்சிழந்து நான்,முக்குழித்து நிற்கிறேன்'' என்ற வரிகள் நட்பின் தாகத்தை எடுத்துரைக்கிறது.
விழியோரத் துளிகள் என்னும் கவிதையானது பிரிந்து போன காதல் ஒன்றை ஞாபகப்படுத்துகிறது.பிரிந்த காதலுக்கும் அஜந்தன் கிவிதை எழுதியுள்ளார்.ஆணின் பார்வையிலிருந்து காதலியின் நினைவில் இருப்பது போல கவிதை அமைந்துள்ளது.நூலாசிரியரின் சொந்த அனுபவமாக கூட இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
கடவுளைக் காணோம் என்ற கவிதையானது கவிஞரின் நாத்திக சிந்தனையிலிருந்து உதித்த கவிதையென்றே சொல்ல வேண்டும்.உலகில் இத்தனை அநியாயங்கள் நடக்கும் போது எங்கே போய்விட்டார் அந்தக் கடவுள் என்று அனைத்து கடவுள்களையும் பார்த்து கேட்கிறார் அஜந்தன்.இல்லாத கடவுள்களிடம் கேட்டால் எந்த பதிலும் வரப் போவதில்லை.''நாம் செய்த,அத்தனையும் மொத்தமாய் அறிந்தும் கூட,.இன்னமும்,ஒவ்வொரு தெருக்களிலும்,ஒய்யாரம் கொள்கிறதே அந்த,அரோகராவும்,அல்லேலூயாவும்'' என்ற கவிதைகள் கடவுள் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறன.
இந்தப் புத்தகத்தில் அமைந்த அத்தனை கவிதைகளும் இரசிக்கத்தக்கவை என்னைக் கவர்ந்தவை என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல இரசிக்க கூடிய காலப் பொருத்தமான கவிதைத் தொகுப்பே மையுதிர்க்கும் மறுஜென்மம் என்ற கவிதைத் தொகுப்பாகும்.தரமான கவிதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.வாசிப்போம்.
அருமையான அறிமுகம், வாசிக்க வேண்டிய நூல்.. வாழ்த்துகள்.. நன்றிகள் 📒📖🙏📚🇨🇭📗
ReplyDeleteநன்றி
ReplyDeletePost a Comment