.

கீதா இளங்கோவன் எழுதிய துப்பட்டா போடுங்க தோழி என்ற கட்டுரைத் தொகுப்பானது பெண்கள் பற்றிய சமூக கண்ணோட்டத்தை கேள்வி எழுப்புவதோடு அதற்கான தீர்வுகளையும் ஒருங்கே முன் வைக்கிறது.கற்பு, பெண் உடலின் மீதான குற்ற உணர்ச்சி,குடும்பப் பெண், நகையலங்காரம், சுயபரிவு,உடற்பயிற்சி,நட்பு,பயணம்,வேலை,உழைப்பு,வாகனம் ஓடுதல், உடற் பயிற்சி எனப் பல்வேறு தலைப்புக்களில் கேள்விகளை எழுப்புவதோடு பெண்களின் குரலினை ஓங்கி ஒலிக்கச் செய்கிறார் கீதா இளங்கோவன்.

முப்பது கட்டுரைகளும் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஆங்கிலத்தை தமிழில் அப்படியே எழுதுவது என்பது இந்தப் புத்தகத்திற்கு வலுச் சேர்க்கவில்லை.அது தமிழிற்கும் அழகல்ல.உதாரணமாக பெண் என்பதை உமன் என்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவது ஒரு நல்ல எழுத்தாளருக்கு அழகல்ல.மொழி புத்தகம் என்பது அடுத்த தலைமுறைகளிற்கும் கடத்தப்படக் கூடியதுஇஅதனை ஆக்கபூர்வமாகக் கொடுக்க வேண்டியது நூலாசிரியரின் கடமையாகும் அந்த வகையில் கீதா இந்தப் புத்தகத்தில் இந்தக் தவறை விட்டுள்ளார்.அவரின் அடுத்தடுத்த புத்தகங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்ப்போம்.

Multi Tasking என்பது ஆண்களால் முடியாது பெண்களால் முடியும் அது பெண்களின் மேன்மை என்கிற சிந்தனை பல பெண்களிடமும் ஆண்களிடமும் நிலவுகிறது.உண்மையில் Multi Tasking என்பது ஆணாதிக்கச் சுரண்டல்,அது பெண்களின் உடல் மன நலத்திற்கு எதிரானது என்பதை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது.ஜோன் கிரே தன்னுடைய ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன் என்ற நூலில் Multi Tasking பற்றிச் சொன்னாலும் கீதா அதனை மறுத்தே எழுதுகிறார்.அது ஒரு சுரண்டலாகவே பார்க்கிறார்.ஜோன் கிரே தன்னுடைய ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன் என்ற நூலில் பற்றிச் சொன்னாலும் கீதா அதனை மறுத்தே எழுதுகிறார்.அது ஒரு சுரண்டலாகவே பார்க்கிறார்.

நாம் எப்போதாவது ஆண்களின் உடையில் இருக்கும் Pocket பெண்களின் உடையில் ஏன் இல்லை என்று யோசித்திருக்கிறோமா..?தற்போது Pocket வைத்த புடைவைகளும் சுடிதாரும் வந்து விட்டாலும் இன்னமும் 98 சதவீதமான பெண்களின் உடைகள் இல்லாமல் தானே தைக்கப்படுகிறன என்கிறார். ஆணின் உடையைப் பெண் தீர்மானிக்காத போது பெண் உடையை ஆண் ஏன் தீர்மானிக்க வேண்டும் என்ற கேள்விகள் சிந்திக்த் தூண்டுகிறன.இப்படியான தூண்டுதல்களே இப் புத்தகத்தின் வெற்றி என்று கூறலாம்.

ஆணாதிக்கத் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற பல ஆளுமைகளை அவர்களின் அனுபவங்களோடு எமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.பெண்ணுரிமைக்காக பேசியவர்களையும் அப்படிப் பேசிய புதினங்களையும் இந்த விவாதம் சுற்றி வருகிறது.

குடும்பப் பெண் குடும்பத்திற்கு ஏற்ற பெண் என்பது எம் சமூகத்தில் பொதுவனான ஒரு சொல்.அதே போல குடும்ப ஆண் என்ற சொல் கேள்விப்படாத ஒன்று.குடும்பப் பெண்ணுக்கான வரைவிலக்கணத்தை அழகாக விவரிக்கிறார் கீதா.அதாவது எதிர்த்துப் பேசாத தன் விருப்பத்தை விட குடும்பத்தின் விருப்பத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் அவர்கள் சொல்லும் உடைகளை அணியும்,வீட்டில் பார்க்கும் மாப்பிள்னையை திருமணம் செய்து கொள்ளும் அடக்க ஒடுக்கமாக குடும்ப வேலைகளைச் செய்யும் குடும்பம் சொன்னவாறு குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்ணே குடும்பப் பெண் என்று அழைக்கப்படுவார்.அதாவது மதங்களும் ஆணாதிக்க சாதிய சமுதாயமும் உருவாக்கியிருக்கும் கட்டமைப்புக்கு எந்த வகையிலும் சவால் விடாத பெண்கள் அனைவரும் குடும்பப் பெண்கள் என அழைக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்.

எல்லாப் பெண்களிற்கும் திருமணம் செய்வது அவள் தெரிவாக இருக்கிறதா..?அதாவது தன் இணைணை தானே தேர்ந்தெடுத்து திருமணம் செய்யும் உரிமை மூன்றாம் உலக நாடுகளில் பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. கட்டாயக் கல்யாணம்,விருப்பமற்ற தேர்வு என்பன பொதுவானவை. அப்படியிருக்கும் போது ஒரு பெண் குழந்தை பெறுவதா வேண்டாமா என்பது அவள் தெரிவாக இல்லை என்பதை இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது.இது காதல் மறறும் நிச்சயித்த திருமணம் இரண்டுடிற்கும் பொதுவானது.திருமணம் செய்தாலே குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பொது உளவியல்.குழந்தை பெறுதல் என்னமோ உலக சாதனை என்பது போல கதை வேறு.பெண்ணுக்கு கருப்பை இருப்பதாலேயெ எல்லாப் பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை.குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணை எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவளைத் தீர்மானிக்க விட வேண்டுமென்று சொல்கிறார் கீதா.பெண்ணின் கருப்பை மீதான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இங்கு பேசப்படுகிறது.

பெண் குழந்தைகள் மீதான குடும்பத்தினரின் அன்பு என்பது நிபந்தனைக் குட்பட்டது.குறிப்பாக அப்பா,இல்லாவிட்டால் அப்பாவின் விருப்பத்தை அல்லது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தும் அம்மா.விரும்பும் நடை உடை பாவனை வேலை மாப்பிள்ளை,இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால் மகளிற்கு பாசம் கிடைக்கும்..இல்லாவிட்டால் அவ்வளவு தான்.ஒப்புக்கு மகள் விருப்பத்தைக் கேட்போரும் தம் விருப்பத்தை அவள் வாயிலிருந்து வர வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் உன் நல்லதிற்குத்தான் சொல்கிறேன் என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவார்கள்.இது பெரும்பாலான குடும்பங்களில் பொதுவானது.நம் சமூகப் பெண்கள் அனைவரும் இதனை அனுபவித்திருக்கக் கூடும்.தான் விரும்பிய படிப்பையே படிக்க விடாத சமூகம்தான் இது. பெண்ணுக்கென வரையறுக்கப்பட்ட படிப்புக்களையே வேலைகளையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் மட்டமான சமூகம். இன்னமும் பெற்றோரின் விருப்பத்திற்காக தான் விரும்பிய படிப்பை விட்டுத் தொலைத்தவர்கள் அனேகப் பேர்.இன்னமும் அது குறைந்தபாடில்லை.

முக்கியமான விடயமாக இந்தப் புத்தகத்தில் கற்பு பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.கற்பு என்பது பெண்களிற்குத்தான் என்று மதங்களும் சமூகமும் சொல்கிறது அதனால் பெண் எப்போதும் தன் கற்பை நிருபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.ஆண்களாகப் பிறந்ததால் அவர்களின் கற்பைப் பற்றி உலகத்திற்கு கவலையில்லை.அவர்களைக் கேள்வி கேட்பதி ல்லை.பெண்கள் நொடிக்கு நொடி கற்புள்ளவள் என்று நிருபிக்க வேண்டியிருக்கிறது.சமூகத்தின் பொதுப்புத்தயில் பெண் உடல் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது அது அவனின் கணவனுக்கு உரியது என்ற சிந்தனை புதைந்து போயுள்ளது.இது பெண்களிற்கு மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.இந்த ஆணாதிக்க சிந்தனை ஆணிடமும் இருக்கிறது.பெண்ணிடமும் இருக்கிறது.இருவருமே காலங்காலமாக இந்தச் சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்தாம்.கற்பு என்பது பெண்ணின் உடல் சார்ந்த தூய்மை என்றும்,அதை இழந்து விட்டால் அவள் உயிர் வாழக் கூடாது என்றும் மிகத் தவறாக மூளைச்சலவை செய்யும் மதங்களும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களும் இன்றைக்கும் பெண்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கிறன.கற்பு என்பது எதுவுமே இல்லாத ஒன்று.செயற்கையானது.பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் மோசமான உத்தி.தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற அறிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது.எந்த உறவிலும் நம்பிக்கைதான் முக்கியம்.கற்பு என்ற செயற்கைத்தனம் அல்ல.

சில பெண்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர் வேலைக்குச் செல்வதை நிறுத்தி விடுவர்.இதற்கு சப்பைக் காரணங்கள் அடுக்கப்படும்.இதனால் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பெண்ணின் பங்களிப்பு காணாமல் போகிறது.சமூகத்தில் சரிபாதியானவர்களை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு எந்த சமூகமும் முன்னேற முடியாது. அதனால் பெண்கள் வேலைக்குச் செல்வது அத்தியாவசியம்.போயேதான் ஆக வேண்டும்.

மொத்தத்தில இந்தப் புத்தகமானது ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஆண்களிற்கும் பெண்களிற்கும் மிகவும் முக்கியமா புத்தகமாகும். பெண்ணியப் புத்தகம் என்று பாராமல் விழிப்புணர்வுப் புத்தகம் என்று பார்த்தால் அனைவரும் வாசித்து விழிப்புணர்வு அடையக் கூடிய புத்தகமாகும். வாசிப்போம்.


Post a Comment

Previous Post Next Post