.

மருதன் எழுதிய ஹிட்லரின் வதைமுகாம்கள் என்ற புத்தகமானது இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜிக்களினால் நடாத்தப்பட்ட யூத வதை முகாம்களில் இருந்தவர்களின் கதையையும் அவர்கள் நடாத்தப்பட்ட விதத்தையும் ஒவ்வொரு கதைகளாக எமக்குச் சொல்கிறது.

ஹிட்லர் என்ற தனிமனிதர் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் யூத மக்களை பூண்டோடு அழிக்கும் செயற்றிட்டமானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் தொடங்கப்பட்டு ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அறம்,சட்டம்,உரிமை,மனிதநேயம்,சுதந்திரம் ஆகிய இலட்சியங்கள் அனைத் தையும் உடைத்து நொறுக்கிவிட்டு அந்தச் சிதிலங்களைக் கொண்டு வதைமுகாம்கள் கட்டியெழுப்பப்பட்டன.பலவீனமான தரமற்ற இனத்தை வலுவுள்ள உயர்வான ஓரினம் வெற்றி கொள்வது தான் இயற்கை என்னும் அச்சுறுத்தும் சித்தாந்தத்தைக் கொண்டு இந்தப் பேரழிவு நிகழ்தப்பட்டது.

கிட்டத்தட்ட அறுபது இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டபோதும் யூதர்களின் கடவுளான யாவே எட்டியும் பார்க்கவில்லை.இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவுமில்லை அதே போல கிறிஸ்தவக் கடவுளான இயேசுவும் கூட தன்னுடைய பக்தர்களை இந்த அநியாயாங்களை செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தவுமில்லை எதையும் தடுக்கவுமில்லை.மனித வரலாற்றின் மிகப்பெரிய அழிவாகக் கொள்ளப்படும் இதனை ஒட்டுமொத்த இறை நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்த நிகழ்வாக கொள்ள முடியும். அதாவது கடவுள் என்னும் கட்டமைக்கப்பட்ட பொய்யின் உண்மை முகம் வெளிப்படுத்தப்பட்ட தருணம் இதுவாகும்.

படுகொலைகள் அனைவருமே அனைத்து சர்வாதிகாரிகளுமே நடாத்தியி ருக்கிறார்கள்.1939 இல் போலந்தில் சோவியத்தின் ஸ்டாலினும் கம்யூனிஸ் டுக்ளும் 22000 பேர் படுகொலை செய்திருந்தார்கள்.நாஜிக்களின் படுகொலைகள் மீது பாய்ந்த வெளிச்சம் பாய்ந்த அளவுக்கு,சோவியத் படையினரின் படுகொலைகள் மீது எந்த வெளிச்சமும் பாயவில்லை.

சிறைகளில் தங்களுக்கு எதிரான இனவெறியாட்டத்தை யூதர்கள் எங்ஙனம் எதிர்த்தார்கள்?முகாம்களில் சில நூறு நாஜி வீரர்களை சில ஆயிரம் யூதர்கள் எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியவில்லையா..?இவை போன்ற கேள்விகள் நிச்சயம் எழும்.எதிர்ப்புக்கள் வராமலிருக்க நாஜிக்கள் முதலில் யூதக் கைதிகளைப் பலவீனப்படுத்தும் நுட்பத்தைக் கையாண்டார்கள். முதலில் மனத்தளவில்,பின்பு உடலளவில்.ஆண்களை பெண்களை குழந்தைகளை தனித்தனியே அடைத்து வைத்தார்கள்.தனது கணவனை மனைவியை தனது பெற்றோரை உறவினர்களை அன்புக்குரியவர்களை மீண்டும் ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே யூதர்கள் மனதளவில் வதங்கிப் போனார்கள்.கடினமான பணி.கொஞ்சம்தான் உணவு அல்லது அதுவும் கிடையாது.தண்ணீர் கூட எப்போதாவதுதான் கிடைக்கும். தூக்கமெல்லாம் கிடையாது.இயற்கை உபாதை கழிப்பதெல்லாம் அவலம். இப்படியாக உடலளவிலும் மனதளவிலும் பலவீனப்படுத்தப்ப ட்டார்கள்.

இப்படியாக இந்த அடக்குமுறைகளை அராஜகத்தை எதிர்த்தவர்கள் முகாம்களிலிருந்து தப்பித்துப் போக நினைத்தவர்கள் சுடப்பட்டார்கள். மின்வேலிகளைத் தாண்ட முடியாமல் சிக்கி கருகிச் செத்தார்கள்.சக கைதிகளின் நிலையைக் கண்டு பயந்து மிரண்டு குறுகி அடங்கி ஒடுங்கிப் போனர்கள் யூதர்கள்.இதற்கு செத்தே போய்விடலாம் என்ற மனநிலைக்கு பலரும் வந்திருந்தனர்.பெரும்பான்மை யூதர்களின் நிலை இதுவாகத்தான் இருந்தது.ஆனாலும் சில கலகங்களும் வெடித்தன.

இந்தப் பேரழிவு குறித்து காற்றில் உலவுவது போல பொதுவெளியில் நெடுங்காலமாகவே பல கேள்விகள் இருக்கின்றன.

ஏன் ஹிட்லர் இந்த இன அழித்தொழிப்பை மனச்சாட்சியின் துளியும் இன்றி செய்தார்?அதற்கான பின்னணியும் காரணமும் என்ன?என்னதான் ஒரு சர்வாதிகாரி குரூர மனோபாவத்துடனும் முட்டாள்தனமாகவும் ஆணையிட்டு விட்டாலும் நாஜிகள் லட்சக்கணக்கான யூதர்களை ஈவு இரக்கமேயின்றி கண்மூடித்தனமாக கொன்று குவிப்பார்களா என்ன?அவர்களுக்கு மனச்சாட்சி வேலையே செய்திருக்காதா?நாஜிப் படையில் இருந்த அத்தனை பேரையும் வசியப்படுத்தியா இந்தப் படுகொலைகளை ஹிட்லர் செய்திருக்க முடியும்?

தமக்கு முன் பின் தெரியாத ஓர் அப்பாவியை,பெண்ணை,குழந்தையை, முதியவரை அவர்கள் யூதராகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே சுட்டுக் கொல்வதும் பல்வேறு குரூரமான வழிகளில் சித்திரவதைக்குள்ளாக்கி சாகடிப்பதும் என்பது எத்தனை பெரிய கண்மூடித்தனம்?அப்பட்டமான இனவெறுப்பு உள்ளே ஊறிப் போயிருந்தால்தான் இந்த அரக்கத்தனத்தை செய்ய முடியும்.

இதையொட்டி எழும் பல கேள்விகளைப் போலவே நிறைய பதில்களும் உலவுகின்றன.

இயேசுவின் மரணத்திற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள்,எனவே யூதர்களின் மீதான பகை தோன்றியது என்பது ஒரு பதில்.ஹிட்லருடைய தாயின் மரணத்திற்கு ஒரு யூத மருத்துவர் காரணமாக இருந்தார் என்கிறது இன்னொரு தகவல்.ஆரிய இனமே உயர்ந்தது என்கிற உயர்வு மனப்பான்மையுடன் இன சுத்திகரிப்பிற்காக ஹிட்லர் செய்தது என்பது சொல்லப்பட்ட காரணங்களில் மற்றொன்று. எது உண்மை,எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத பதில்கள் அவை. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி வீழ்ந்து ஹிட்லரின் தற்கொலை நிகழ்வதற்கு முன்னால் பல்வேறு அரசு ஆவணங்கள் அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன என்பதால் எஞ்சியிருக்கும் பதிவுகளையும் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் வைத்து மட்டுமே இந்தப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் யூத வெறுப்பிற்கு இதுதான் காரணம் என்று எதையும் திட்டவட்டமாக சொல்லி விட முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றில் ஏராளமாக இறைந்திருக்கும் தரவுகளை ஆய்ந்து அவற்றின் தொடர்ச் சியோடும் சிக்கலான கண்ணிகளை இணைத்தும் தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.ஏனெனில் ஹிட்லருக்கு முன்னாலும் யூத வெறுப்பு இருந்தது; பின்னாலும் இருக்கிறது.வித்தியாசம் என்னவென்றால் ஹிட்லரின் காலகட்டத்தில் இந்த இனவெறுப்பு ஒரு கச்சிதமான திட்டமிட்ட பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டு கொலைகளும் சித்திரவதைகளும் வெளிப்படையாகவே நடந்தேறின.



இந்த இனஅழிப்பைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல்கள்,ஆய்வுகள்,திரைப்படங்கள் போன்றவை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் ஏராளமாக உள்ளன.ஹிட்லரின் உளவியல்,அவரது தனிப்பட்ட ஆளுமையை ஆராய்வது முதற்கொண்டு யூதர்கள் செய்யப்பட்ட வதைகளைப் பற்றி துல்லியமாக ஆராய்வது வரை பல்வேறு பதிவுகள் உள்ளன.ஆனால் தமிழில் இரண்டாம் உலகப் போரின் பின்னணியோடு ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாக விவரிக்கும் நூல்கள் உள்ளனவே தவிர யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருதன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஹிட்லரின் வதைமுகாம்கள்' எனும் நூல், தமிழ் சூழலில் அந்த இருண்ட பக்கத்தின் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல்கிறது.அந்த வகையில் இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதன்மையான நூல் எனலாம். யுத்தம் முடிந்த பிறகு ரஷ்ய படையால் வதை முகாம்களில் இருந்து தப்பிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள்,இதைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு நூல்களின் தரவுகளைக் கொண்டு கச்சிதமான கோர்வையாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் மருதன்.

'கொடுமையானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, மிருகத்தனமானது போன்ற பதங்களையெல்லாம் பயன்படுத்தாமல் வதைமுகாம் குறித்து எழுதுவது சாத்தியமில்லை என்றபோதும் அவையெல்லாம் பலனற்ற சொற்களாகவே எஞ்சி நிற்கின்றன என்கிறார் கோனிலின் ஜி.ஃபீக். 'நாஜிகளின் இனவொழிப்பை நினைவில் வைத்திருப்பது கடினம்;மறப்பதும் கடினம்.அதைப் பற்றி உரையாடுவது கடினம்;உரையாடாமல் இருப்பதும் கடினம்.அதை மன்னிப்பது கடினம். போகட்டும் என்று முன்னால் நகர்வதும் கடினம்.முன் நகராமல் இருப்பது அதைவிடவும் கடினம்.இருந்தாலும் அதைப் பற்றி நாம் பேசியாகவேண்டும். குறைந்தது,முயற்சியாவது எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்தப் புத்தகம் அத்தகைய ஒரு முயற்சி.எந்தவகையிலும் இதை ஒரு முழுமையான புத்தகமாகச் சொல்லமுடியாது.வதைமுகாம் குறித்த மிக எளிமையான,மிகவும் அடிப்படையான ஒரு சித்திரத்தை வழங்குவது கூட மிகப் பெரிய சவால்தான்.நடக்க நடக்க விரிவடைந்து கொண்டே போகும் முடிவற்ற வெளி அது.'முகாம் என்பது பேசித் தீர்க்க முடியாத ஒரு விஷயம்.பேசித் தீர்ப்பதை விடுங்கள்,அதைப் பற்றிப் பேசத் தொடங்குவதுகூடச் சாத்தியமில்லை என்றே சொல்வேன்!' என்கிறார் முகாமிலிருந்து விடுவிக்கப் பட்ட ஒரு யூதர்.இன்னொருவர் சொல்கிறார்.'அங்கு நடந்ததை நான் சொன்னால் அது கடற்கரை மணலில் ஒரு துளியாக மட்டுமே எஞ்சும். அனைத்தையும் விவரிப்பது சாத்தியமல்ல.நாங்கள் அங்கு சந்தித்தவற்றை, எங்களுக்கு நடந்தனவற்றைச் சொல்வது கடினம். அதையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.எங்களுக்குள் அந்த அனுபவங்கள் புதைந்துபோயிருக்கின்றன.'

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகு ஒருநாள் ஆஷ்விட்ஸ் வதைமுகாம் சென்று பார்வையிட்டார் தோமஸ் புயூர்கெந்தல். பல வண்ண காட்டுப் பூக்கள் முகாமைச் சுற்றிலும் பூத்துக்கிடந்தன.தலையை உயர்த்தி மேலே பார்த்தார்.பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன.தன்னை மறந்து சில நிமிடங்கள் அப்படியே நின்று கொண்டிருந்த தோமஸுக்குத் திடீரென்று தோன்றியது.ஒரு கைதியாக அடைபட்டுக் கிடந்தபோது ஏன் ஒரு பறவையைக்கூட வானில் பார்த்ததில்லை? பிறகுதான் பதில் கிடைத்தது. 'இரவு நேரங்களில் இங்கிருக்கும் கிரிமடோரியம் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும். எரிக்கப்பட்ட மனித உடல்களில் இருந்து கிளம்பும் புகை,புகைப்போக்கி வழியாக கசிந்துகொண்டிருக்கும். வானம் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்துக்கு மாறிவிடும்.புகை அதிகம் இருந்ததால் பறவைகள் அந்த இடத்தைத் தவிர்த்துவிட்டன போலும்.

'விடுவிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகு முகாமில் கழித்த தன் குழந்தை பருவத்தைப் பதிவு செய்தார் தோமஸ் புயூர்கெந்தல்.தன் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் அதை வாசிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.'வதைமுகாமில் ஒரு குழந்தையாக வாழ்வது என்றால் என்ன வென்று அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.'தோமஸின் குடும்பத்தினர் மட்டுமல்ல,நாமும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு கதை அது.மானுடம் சரிந்து வீழ்ந்த நிகழ்வைத்தான் அவர் தன் நூலில் விவரிக்கிறார் என்பதால்,அது ஒரு வகையில் நம் அனைவரின் கதையும் கூட.

தோமஸ் எழுதுகிறார்.'யூத இனவொழிப்பை எண்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது.பலரும் சொல்வதைப் போல் ஆறு மில்லியன் பேர் இறந்து போனார்கள் என்று ஓர் எண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லி விடுவதாலேயே எல்லாம் புரிந்துவிடாது. வதை முகாமைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதை நேரடியாக உணர்ந்தவர்களின் கண்கள் வழியாக நாம் காட்சிகளைக் காண வேண்டும்.ஆறு மில்லியன் என்று சொல்லும்போது பெயரற்ற, அடையாளமற்ற ஒரு கூட்டமே நம் மனக் கண் முன்னால் தோன்றும். உண்மையில் அவர்கள் எல்லோரும் தனி மனிதர்கள்.

'வதைமுகாமிலிருந்து மீண்ட ஒவ்வொருவரின் வாக்கு மூலமும் இனவொழிப்பின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள பேருதவி புரிகிறது என்கிறார் தோமஸ்.'அவர்களுடைய கதைகளைப் படிக்கும்போது இனவொழிப்புக்கு ஒரு மனித முகம் கிடைக்கிறது.எல்லாத் துயரங்களையும் போல் இனவொழிப்பும் கதாநாயகர்களையும் வில்லன்களையும் உருவாக்கியிருக்கிறது.தங்களுடைய மனிதத் தன்மையை இறுதிவரை இழக்காத சாமானியர்கள் இருந்திருக்கிறார்கள்.ஒரு துண்டு ரொட்டிக்காக மற்றவர்களை காஸ் சாம்பருக்கு அனுப்பி வைத்தவர்களும் இருந்திரு க்கிறார்கள்.'தோமஸின் குழந்தைப் பருவம் முகாமில் தொடங்கியது. நாள்,வாரம்,மாதம்,ஆண்டு என்று நமக்கெல்லாம் தெரிந்த காலக்கணக்கு அங்கு அவருக்குப் பயன்படவில்லை. காலமும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தன.'உயிர் வாழ நேரமும் அங்கே வேண்டும் என்பதே என் ஒரே இலக்காக இருந்தது. ஒரு மணி நேரம் வாழ்ந்து விட வேண்டும். பிறகு அந்த ஒரு தினத்தை முழுக்க வாழ்ந்து விட வேண்டும்.இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.இப்படித்தான் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒவ்வொரு தினத்தையும் அங்கே வாழ்ந்தேன்.'

'1944ம் ஆண்டு ஆஷ்விட்ஸ் முகாமுக்கு வந்தேன்.எந்தத் தினம் என்பது மறந்துவிட்டது' என்கிறார் தோமஸ்.தான் வந்த தேதியை அறிந்து கொள்ள, அவர் ஆவணங்களின் உதவியை நாட வேண்டியிருந்தது. தன்னுடைய முகாம் எப்போது கலைக்கப்பட்டது,எப்போது அங்கிருந்து விடுதலை கிடைத்தது என்பதையும்கூட அவர் இணையத் தளத்தில் தேடித்தான் கண்டடைந்தார்.

வதைமுகாம் அவருக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது? 'நான் ஒரு மனிதனாக வளர்வதற்கு என்னுடைய வதைமுகாம் அனுபவம் உதவியது. சர்வதேச சட்டத் துறையில் பேராசிரியராக,மனித உரிமை வழக்கறிஞராக, சர்வதேச நீதிபதியாக நான் உயர்ந்ததற்கு இந்த அனுபவத்தின் பங்கு முக்கியமானது. மனித உரிமைக்குப் பலியாவது என்றால் என்னவென்று அறிவுபூர்வமாக மட்டுமல்ல,உணர்வுபூர்வமாகவும் எனக்குத் தெரியும். அதை என் எலும்புகளாலும் உணரமுடியும்.'

வதைமுகாமின் வரலாறு என்பது விபரிக்க முடியாத வெறுப்பு அரசியலின் வரலாறு.கொல்லப்பட்டவர்கள் குறித்து மட்டுமல்ல கொன்றவர்கள் குறித்தும் கூட எமக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை.வரலாற்றில் வேறெந்த நிகழ்வைக் காட்டிலும் வதைமுகாம் குறித்து விரிவாகவும் அடர்த்தியாகவும் எழுதப்பட்டுவிட்டது என்றாலும் இன்றைய திகதி வரை புரிந்து கொள்ள முடியாத புதிராக வதைமுகாம்கள் நீடிக்கிறது.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது வதைமுகாம்களில் கொல்லப்பட்டவர்களின் எஞ்சியிருந்தவர்களின் விவரிப்பிற்கு அப்பாற்பட்ட வலியை ரணத்தை இதயத்தைக் கிழிக்கும் மரண ஓலத்தை எமக்குச் சொல்கிறது.வாசிப்போம்.

ஹிட்லரின் வதைமுகாம்கள் புத்தகத்தை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.


You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post