மருதன் எழுதிய தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள் என்ற புத்தகமானது ஐம்பது பொருட்களின் வாயிலாக பெண்களுடைய வரலாற்றைச் சொல்கிறது. வரலாறானது ஆணுக்கானது மட்டுமில்லை பெண்ணுக்கும் தனித்த வரலாறு உண்டு என்பதை எடுத்தியம்புகிறது இந்தப் புத்தகம்.ஏனைய அறிஞர்களைப் போலவே மனித வரலாறானது பெண்களுடனேயே தொடங்குகிறது என்பதை மருதனும் தன்னுடைய புத்தகத்தில் நிறுவுகிறார்.அதாவது தொலைந்து போன அல்லது வேண்டுமென்றே மறைக்கப்பட்ட பெண்களின் வரலாற்றை வெளியுலகிற்கு ஐம்பது தலைப்புக்களில் வெவ்வேறு பெண்களின் கதைகளினூடாக வாசகர்களிற்கு கொடுத்துள்ளார் மருதன்.
இந்தப் புத்தகமானது ஆணாதிக்க சமூகங்களுக்கு எதிரான பெண்களின் போராட்டங்களை வலியுறுத்தி, வரலாறு முழுவதும் பெண்களின் பாத்திரங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது.இது பெண் அதிகாரம் மற்றும் எதிர்ப்பு,பெண்களின் உரிமைகள் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து கதைகளை முன்வைக்கிறது.
பெண்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?வரலாற்றில் ஏன் அவர்கள் எந்தப் பங்களிப்பையும் நிகழ்த்தவில்லை?மனிதகுல வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றா?தன்னந்தனியாக ஓர் ஆண் இந்த உலகைப் படைத்து இருக்கிறானா?தன்னந்தனியாக உலக உருண்டையைத் தன் முதுகிலே கட்டி குகையில் இருந்து உருட்டி இங்கே இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறானா..?என்பதை ஆராய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
இந்தப் புத்தகத்தை மருதன் எழுதத் தொடங்கியபோது இவர் சந்தித்த அனுபவங்களை தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அதாவது கிரேக்க தொன்மத்தில் சிசிபஸ் என்றொருவர் வருவார்.அவர் யார்,அவர் செய்த குற்றமென்ன என்பதையெல்லாம் விட கடவுள்கள் அவருக்கு அளித்த தண்டைகள்தான் உலகம் நினைவில் வைத்திருக்கிறது.ஒரு பெரிய பாறாங்கல்லை கீழிலிருந்து உருட்டி,உருட்டி மலையுச்சிக் கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்பதுதான் அந்தத் தண்டனை.சிசிபஸ் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்துப் போராடினாலும் அவரால் கல்லை உச்சிக்கு கொண்டு போகவே முடியாது.நான்கு அங்குலம் தள்ளினால் சரசரவென்று நான்கடி அவரையும் சேர்த்து உருட்டிக் கொண்டு கீழே பாயும்.அவ்வாறுதான் மருதனுக்கும் பெண்களின் வரலாறு தொடர்பாக நூறு பொருட்களை கண்டறிவது சுலபமானதல்ல என்றாகிவிட்டது என்கிறார்.
ஓர் உலகமல்ல.நாம் வாழ்ந்து வருவது இரு வெவ்வேறு உலகங்களில்.இதுவரை நமக்கு கிடைத்திருப்பது ஓர் உலகத்தின் வரலாறு மட்டுமே அதாவது மிகுதி சரிபாதியானவனர்களின் வரலாறு மறைக்கப்படுகிறது அல்லது கண்டு கொள்ளப்படுவதில்லை.இதுவரை நாம் கண்டிருப்பது ஒரு கண்ணின் காட்சியை மட்டுமே.இன்னொரு உலகின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.மிக நீண்டகாலமாக இருளில் மூழ்கிப் போயிருந்த இந்த உலகை ரோஸாலின்ட் மைல்ஸ் போன்ற பலர் தீப்பந்தம் ஏந்திக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.அந்த உலகை தரிசிக்க எம்முடைய இன்னொரு கண்ணையும் நாம் திறந்தாக வேண்டும்.
உலகின் முதல் விவசாயிகள் பெண்களே ஆனால் விவசாயப் புரட்சியை ஏற்படுத்திய பெண்களின் பெயர் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது. புரட்சியாளர்கள் எல்லோரும் ஆண்களே என்ற ரீதியில் வரலாறு எழுதப்பட்டு விட்டது.எப்போதுமே வென்றவர்கள் எழுதுவதே வரலாறு என்பது நியதி அதன்படி பெண்களின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது.செடி கொடிகளை வளர்ப்பதில் பெண்களின் பங்கு தீர்க்ககரமானது என்கிறார் மிர்சியா எலியாத்.விவசாயம் ஒரு விபத்துப்போல தோன்றியிருக்க வேண்டும். குழந்தை பிறப்பின் போது பெண்கள் நகர முடியாத நிலையில் இருந்ததால் செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப் பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது.இதனை சோளக் கடவுள் என்கிற கதையின் மூலம் மருதன் விளக்குகிறார்.இதனை ஹராரியின் சேப்பியன்ஸ் நூலும் விளக்குகிறது என்பது உபரித் தகவல்.
உணரும் திறனும் சிந்திக்கும் திறனும் கொண்டிருக்கும் உயிரனங்களில் மிகவும் மோசமானது பெண் என்கிறது பண்டைய புராணங்கள். அத்தனைக்கும் பெண்கள் எந்தக் கொடூரத்தையும் நிகழ்த்தி விடவில்லை. ஆணாதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்கள் மோசமானவர்களாக உருவகப்படுத்தப்பட்டார்கள்.வரலாறு நெடுகிலும் இதுவே தொடர்கதை. அழிக்கும் மெடியா என்னும் கதை சமூகத்தில் உள்ள சராசரிப் பெண்களி லிருந்து மெடியா என்னும் பெண் எவ்வாறு வேறுபடுகிறாள் என்று விளங்கப்ப டுத்துகிறது.மெடியா தன்னைப் பற்றிச் சிந்தித்து நிதானமாகவும் தீர்க்கமாகவும் முடிகளை எடுக்கிறாள்.உண்மையில் அவள் செய்லகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அவளது சிந்தனைகளே சமூகத்திற்கு ஆபத்தான வையாக இருந்தன.
பெண்கள் தொடர்பான அரிஸ்டோட்டிலின் பார்வை தெளிவானது.ஆணைவிட எல்லா விதங்களிலும் தாழ்ந்தவள்.அவள் உடல் பலவீனமானது.அறிவுத் திறன் குறைவானது.பெண் என்பவள் ஆணின் சொத்து.அவன் வீட்டில் உள்ள ஒரு பொருள்.அவரின் இன்னொரு முக்கிய கண்டுபிடிப்பையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.ஆணாக மாற இயலாதவள் பெண்ணாக இருக்கிறாள்.ஓர் உயிர் ஆணாக இருக்கும்போது அது முழுமையானதாக இருக்கிறது.அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடையும் போது அது பெண்ணாகச் சுருங்கி வீடுகிறது.அதாவது வளர்ச்சிக் குறைபாடு கொண்ட உயிரினமே பெண். முதன்முதலில் உலகில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைக ளும்தான்.வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர்.இந்த ஏற்பாடு ஆண்களிற்கு மிகவும் வசதியானதாகவும் இலாபகரமானதாகவும் காணப்பட்டதால் அவ்வாறே தொடரப்பட்டது.
மெரிலின் பிரெஞ்ச் என்ற ஆய்வாளர் நாம் தொன்மக் கதைகளை நன்கு படிக்;க வேண்டும் என்கிறார்.ஏன் அதிகாரம் ஆண்களிடம் குவிந்து கிடக்கிறன என்னும் கேள்விக்கு ஆண்கள் விரும்பும் காரணங்களை தொன்மங்கள் அளிக்கிறன.அந்தக் காரணங்கள் இரண்டு என்கிறார் அவர்.முதலாவது காரணம் பாவம்.ஆதியிலே பெண்களிடம் அதிகாரம் இருந்தது உண்மை.அவை கைவிட்டுப் போனதற்கு காரணம் அவர்கள் இழைத்த பெரும் பாவங்கள் அல்லது குற்றங்கள்.இரண்டாவது காரணம் பலவீனம்,பெண்கள் இயல்பாகவே பலவீனமாக இருப்பதால் அதிகாரத்தை இழுத்துப் பிடித்து வசப்படுத்தி வைத்திருக்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை.தொன்மக் கதைகளில் பல இந்தக் காரணங்களையே நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னிறு த்துகிறன.இதனை அதிகாரம் என்னும் தலைப்பு விரிவாக அலசுகிறது.
யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் பௌத்தம் என்று அனைத்து பெரிய மதங்களிலும் ஆணே முதன்மையானவனாக இருப்பதை ரோசாலிண்ட் என்னும் ஆய்வாளர் சுட்டிக் காட்டுகிறார்.கடவுள் முதலில் ஆணையே படைக்கிறார்.அவனே முக்கியம் என்று கருதுவதால் கடவுள் முதலில் அவனைப் படைக்கிறார். பெண்ணை ஆணிடமிருந்து கடவுள் உருவாக்குகிறார். புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்தெடுப்பதைப்போல் ஆணிடமிருந்து பெண்ணைப் பிரித்தெடுக்கிறார் கடவுள். இவ்வாறு செய்வதன்மூலம் பெண் என்பவள் ஓர் ஆணிடமிருந்தே உருவாகிறாள் என்பதைக் கடவுள் வலியுறுத் துகிறார்.ஏவாள் இப்படித்தான் ஆதாமிடமிருந்து உருவாக்கப்பட்டாள். இது இயற்கைக்கு விரோதமானது என்கிறார் மைல்ஸ். ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் வாழ்க்கை என்னும் இயற்கை விதியைத் தலைகீழாக மாற்றியமைக்கின்றன மதங்கள்.இது அதிகாரத்தை ஆணுக்கு மாற்றியமைக்கும் செயல்பாடு. கடவுள் அதற்குத் துணைக்கு அழைக்கப்படுகிறார்.
இதில் இன்னோர் இயற்கைமீறலும் ஒளிந்திருக்கிறது. தான் உருவாக்கிய ஆணுக்குக் கடவுளே உயிரை ஊட்டுகிறார். ஆணுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை.தான் உருவாக்கிய அனைத்து உயிர்களுக்கும் மூச்சுக்காற்றை வழங்கியவர் கடவுள்தான் என்கின்றன மதநூல்கள்.இந்தக் கடவுள் ஓர் ஆணாகவே எங்கும் காட்சியளிக்கிறார். இதுவும் இயற்கைக்கு விரோதமானதுதான் என்கிறார் மைல்ஸ். ஓர் ஆணால் பெண்ணின் துணையின்றி உயிரை உருவாக்க முடியாது;அந்த ஆண் ஒரு கடவுளாகவே இருந்தாலும். ஒரே ஓர் ஆண் கடவுள் என்பதற்குப் பதிலாக ஏன் ஓர் ஆண் கடவுளும் பெண் கடவுளும் இருந்திருக்கக் கூடாது? இந்த இரு கடவுள்களும் சமமான சக்தியைப் பெற்றவர்களாக ஏன் திகழக் கூடாது?
ஏனென்றால் தொன்மக்கதைகளைப் போலவே மதங்களையும் ஆண்களே உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் ஆண்களே கடவுளாக இருக்கிறார்கள். ஆண்களாக இல்லாதவர்கள் கடவுளாக இல்லாதவர்கள். அல்லது, கடவுளின் அருள் கிட்டாதவர்கள் என்றாகிவிடுகிறது.
வரலாறு இதுவரை எழுதப்பட்ட வரலாறு ஆண்களின் வரலாறாக இருக்கிறது. எங்களுடைய வரலாற்றை நாங்களே உருவாக்கிக்கொள்கிறோம் என்று பெண்கள் அறிவித்தபோது, ஒரு பெருமாற்றம் ஆரம்பமானது.ஆண்களின் வரலாறு ஒரு சிறை. அதைத் திறப்பதற்கான சாவி,பெண்களின் வரலாறு என்பது கண்டறியப்பட்டது. ஆண்களின் வரலாறு கட்டுப்பாடுகளால் நிரம்பியது.பெண்களின் வரலாறு விடுதலையை லட்சியமாகக் கொண்டிருந்தது.ஆண்களின் வரலாறு பாகுபாடுகளை அடிநாதமாகக் கொண்டிருந்தது.பெண்களின் வரலாறு அந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆண்களின் வரலாறு ஒடுக்குமுறையை வீரம் என்று கொண்டாடியதென்றால், பெண்களின் வரலாறு சமத்துவமே அசலான வீரம் என்பதை உணர்த்தியது. ஆண்களின் வரலாறு என்பது ஒரு பாலினம் இன்னொன்றை அடிமைப்படுத்தி வென்றதைக் கொண்டாடும் பதிவு. அடிமைப்படுத்தப்பட்ட பாலினத்தின் விடுதலையே பெண்களின் வரலாறாகத் திரண்டது. எந்த வரலாறு சிறைப்படுத்தியதோ அந்த வரலாறே பெண்களை விடுதலையும் செய்யத் தொடங்கியிருக்கிறது.
சிறுவயதில் தோன்றும் கேள்விகள் மரணிப்பதில்லை.நாம் வளர வளர கேள்விகளும் குட்டி போட்டு நமக்குள் வளர்கிறன.தீராத பெரும் பசியை ஏற்படுத்துகிறன.இந்தக் குடைச்சல் தீர வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.கேள்விகளை நமக்குள் இருந்து வெளியில் இழுத்துப் போட்டு அவற்றுடன் புதிதாக உரையாடலைத் தொடங்க வேண்டும். ஒவ்பொரு கேள்விக்கும் தீனி போட்டு அடக்க வேண்டும்.அப்போதுதான் பசி ஆறும்.
மொத்தத்தில் தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள் புத்தகமானது மறைக்கப்பட்ட பெண்களின் வரலாற்றை தேடி ஆராய்கிறது.வாசிப்போம்.
Post a Comment