.

முகில் எழுதிய ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் என்ற புத்தகமானது ஹிட்லரின் முழுமையான வரலாற்றுத் தொகுப்பாகும்.ஹிட்லர் பற்றிய எத்தனையோ புத்தகங்கள் காணப்பட்டாலும் தமிழில் முகிலின் இந்தப் புத்தகமானது சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் ஹிட்லரின் கதையைச் சொல்கிறது.இந்தப் புத்தகம் வாசிக்க வாசிக்க அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது.அலுப்புத் தட்டவில்லை.முகிலின் எழுத்துக்களில் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய பக்குவம் தென்படுகிறது.

பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை.எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம்.எதிர்காலத் தலைமுறை யினரையும் நடுங்க வைக்கும் குருரம்.இத்தனைக் கொடுரங்க ளையும் தாண்டி நம்மையறியாமலேயே நமக்குள் பிம்பங்களை வளர்க்கும் பிறவி ஹிட்லர்.ஒரு சாமானியன் சர்வாதிகரியாக விஸ்வருப மெடுத்த சாகசத்தை சறுக்கி வீழ்ந்த வரலாற்றை மட்டும் சொல்வதல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம்.எந்தச் சூழ்நிலையில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி ஹிட்லரின் பொது தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

உண்மையில் சிறுவயதில் வரலாற்றுப் பாடம் படிக்கும் போது இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஹிட்லர் மீது அனுதாபம் ஏற்பட்டது.ஆனால் பின்னரான வரலாற்றுத் தேடலில் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.ஆனால் ஹிட்லரின் அனுதாபிகள் அனேகப் பேர் இருக்கிறனர் என்பது கவலைக்கு ரியதாகும் ஏனெனில் ஹிட்லர் யூதர்களை மட்டும் இனப்படுகொலை செய்யவில்லை ஏனைய இன மக்களையும் படுகொலை செய்திருக்கிறார்.

வளம்மிக்க குடும்பத்தில் பலமானவனாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர் தாயின் அன்புக்கு கட்டுபட்டு இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான்.படிப்பிலும் கெட்டிக்காரன் அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான இலட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே.ஆனால் ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கி எறிந்து விட்டு துப்பாக்கியை நம்பி இரத்தம் தொட்டு குருரங்களை காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை..?என்ன மாதிரியான மனநிலை..?


ஹிட்லரின் காதல்கள் பற்றிச் சொல்கிறார் முகில்.ஈவாவை மட்டும்தான் அனேகப் பேருக்குத் தெரிந்திருக்கும் ஆனால் ஈவாவிற்கு முன்பே பல பெண்களுடன் ஹிட்லர் காதல் வயப்பட்டிருந்தார் ஆனால் அதனை திருமணமாக மாற்றிக் கொள்ளவில்லை எல்லாமே ஒரு கட்டத்திலேயே முறிந்து போகிறது அல்லது முடிக்கப்படுகிறது.16 வயதிலிருந்து இறப்பு வரையிலான ஹிட்லரின் காதல்களை தேடி எடுத்துச் சொல்லியிருக்கிறார் முகில்.

முதல் உலகப்போர் புதிய சந்தைகள்,குடியேற்ற நாடுகள் ஆகியவற்றைத் தேடிக்கொண்டு இருந்த ஜேர்மனி,முதலிய நாடுகளுக்கும் பழைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையே ஆன போராக வெடித்தது.போரின் இறுதியில் ஜேர்மனி தோற்று தலைகுனிந்து நின்றது.தங்கள் பக்கத்தைச் சொல்லவோ,பலரை பலிகொடுத்த சூழலில் மீண்டிடவோ எந்த வாய்ப்பும் அந்நாட்டுக்கு தரப்படவில்லை.“நீ தான் எல்லாத்துக்கும் காரணம்!” என்று குற்றஞ்சாட்டி வளம் நிறைந்த பகுதிகளை அபகரித்துக்கொண்டார்கள்.பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதோடு நில்லாமல் ராணுவத்தை முடிந்த அளவுக்கு சுருக்கி அனுப்பி வைத்தார்கள். பிடித்திருந்த பகுதிகளையும் கேக் துண்டுகள் போல வெட்டிக்கொண்டார்கள்.இந்தப் போரின் பொழுது ஜேர்மனியில் தொழிலாளர் போராட்டம் நடக்கிறது வட்டி கொடுத்து செழித்துக் கொண்டிருந்த யூதர்கள் அதற்கு பெருத்த ஆதரவு தருகிறார்கள்.ஒட்டுமொத்த உலகமே ஒன்று சேர்ந்து ஜேர்மனியைக் குற்றவாளிக் கூண்டேற்றி மானபங்கப்படுத்தி அது மீண்டும் எழவே முடியாதபடி அழிந்தொழிக்க முயன்ற நிலையில்தான் அங்கே ஒரு சர்வாதிகரிக்கான தேவையும் உருவானது.இரண்டாம் உலகப் போரும் மூண்டது.

வேர்சையிலஸ் உடன்படிக்கை மூலம் ஜேர்மனியின் சிறகுகள் வெட்டப்பட்டது. அதாவது முதல் உலக்போரன் ஒரே குற்றவாளி நீதான் என்றும் ஜேர்மனியின் நாடு பிடிக்கும் ஆசையே இத்தனை துன்பங்களிற்கும் காரணம் என்று மற்ற நாட்டுப் பனிதர்கள் தம் குற்றத்தை மறைத்து வேர்சையில்ஸழல் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.அங்கேதான் இரண்டாம் உலகப் போருக்கான விதை விழுந்தது.அன்றைய காலகட்டத்தில் உலக அமைதிக்கு ஜேர்மனியினால் குண்டுமணியளவு குந்தகம் வரக் கூடாது என்ற காரணம் வேறு சொல்லப்பட்டது.ஒப்பந்தத்தின்படி ஜேர்மனி தனக்குரிய பிரதேசங்கள் தான் ஏலவே வெற்றி கொண்ட பிரதேசங்கள் பலவற்றை இழந்து எல்லைய ளவில் இளைத்துப் போனது.இராணுவ பலம் மற்ற வளம் எல்லாம் பறிக்க ப்பட்டது.ஏற்கனவே நசிந்து கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாதபடி அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன.சர்வதேச அரங்கின் முன் குற்றவாளியாகக் கூனிக் குறுகி நிற்கும் நிலை.இனி ஜேர்மனியின் எதிர்காலம் என்ன..?ஒவ்வொரு ஜேர்மனியர்களினதும் பழிவாங்கும் உணர்வின் வெளிப்பாடாக வெளிப்பட்டவரே ஹிட்லர்.

ஹிட்லர் ஒன்றும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவரல்ல.கொடுமைக்கார அப்பாவிடமும்,கனிவான அம்மாவிடமும் வளர்ந்தவர்.அவரது ஆரம்பகாலக் கனவு ஓவியப்பள்ளியில் சேர்ந்து ஓவியராவது அவரது ஆரம்ப இலட்சியமாக இருந்திருக்கிறது.பள்ளிப்படிப்பு சரிவரவில்லை.ஓவியப்பள்ளியில் சேர முயன்றும் அதிலும் தோல்வி.ஒருவேளை அன்று ஹிட்லருக்கு இடம் கிடைத்தி ருந்தால் வரலாறு வேறு மாதிரி ஆகியிருக்கும்.பின்னர் ஒரு கட்டத்தில் முதல் உலகப்போர் தொடங்குகிறது.அதில் ஹிட்லர் கலந்து கொள்கிறார்.அங்கு என்னவெல்லாம் செய்தார்..?போர்க்களத்தில் ஹிட்லரின் சாதனைகள் என்ன வென்பதை முகில் விலாவாரியாகக் கொடுத்துள்ளார்.அதனை புத்தகத்தில் வாசித்துக் கொள்ளுங்கள்.

ஹிட்லருக்கு நாய்களை வளர்ப்பதிலும் மிருகங்கள் மீதும் எல்லையற்ற அன்பு நிறைந்திருந்திருக்கிறது.முதல் உலகப்போரில் ஜேர்மனிக்காக போரிட்டு சாகசங்கள் சிலவற்றை அவர் செய்தார் என்பது பதிவு செய்யப்படுகிற அதே சமயம் பிரிட்டன் வரலாற்று ஆசிரியர்கள் அவர் டீ சர்வ் பண்ணுகிற வேலையைத் தான் உலகப்போரில் செய்தார் என்று சத்தியம் செய்கிறார்கள்.

ஹிட்லரின் யூத இன வெறுப்பிற்கு எந்தவொரு காரணமும் சரியாக அடையாளப்படுத்தப்படவில்லை.அவர் யூத இனத்தவரை மட்டும் கொலை செய்யவில்லை ஏனைய இனங்களான ஸ்லாவியர்கள்,சோவியத் போர்க் கைதிகள்,ஜிப்பஸிக்கள்,ஸ்லோவேனியர்கள்,ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோரையும் கொலை செய்து புதைத்திருக்கிறார்.ஹிட்லரின் யூதப்படு கொலைகளிற்கு துணை நின்ற அனைவரும் பின்னர் தப்பிக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.உதாரணமாக யூதப் படுகொலைகளிற்கு அடையாள அட்டை,இலக்கத்தகடு எல்லாம் வடிவமைத்துக் கொடுத்த IPM நிறுவனம் பின்னர் தப்பித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஹிட்லரின் நாசி என்ற பதத்தை முதலில் உபயோகித்தவர் ஜேர்மன் வாழ் யூதர் ஒருவரே.அதனை மட்டம் தட்டும் பதமாகவே பாவித்தார்.ஆனால் ஜேர்மனியிலிருந்து வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் புகுந்த பிற இனத்தவர்களால்தான் நாஜி என்ற சொல் பரவியது.பின்னர் அதனை ஹிட்லர் தன்னுடையதாக்கிக் கொண்டார்.

ஹிட்லர் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்பதை தன்னுடைய மெயின் காம்ப் நூலில் எற்கனவே சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட ஜேர்மனியின் அனைத்துக் குடிமக்களும் ஹிட்லரைக் கடவுளாகவே பார்த்தனர்.போரின் முடிவில்தான் உண்மை முகத்தில் அறைந்தது.மெயின் காம்ப் நூலில் ஹிட்லர் இப்படிச் சொல்கிறார்.''பிரசாரம் என்பது பாமர ஜனங்களை எளிதில் கவரக் கூடியதாக இருக்க வேண்டும். ஜனங்களின் பகுத்தறிவிற்கு வேலை கொடுப்பதைக் காட்டிலும் அவர்களது உணர்ச்சி வெள்ளத்தை தூண்டுவதே பிரசாரத்தின் நோக்கம். படிப்பறிவே இல்லாத பாமரரும் எளிதாகக் புரிந்து கொள்ளும் வகையில் பிரசார சுலோகங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் விறு விறுப்பாகவும் இருக்க வேண்டும்.''அதனையேதான் பின்னர் செய்து காட்டினர்.ஜேர்மனியின் அனைத்துக் குடிமக்களும் நாஜிக்களாகவே மாறியிருந்தனர்.எதிர்தவர்கள் பரலோகம் அனுப்பபபட்டார்கள்.ஹிட்லர் தோல்வியடைய மாட்டார் என்பதை ஒவ்வொருவரும் உறுதியாக நம்பினார்கள்.ஜேர்மனி சரணடைந்த பிறகும் அதனை நம்பாமல் இருந்த ஜேர்மனியக் குடிமக்கள் அனேகம்.ஏனெனில் ஹிட்லரின் பிரச்சாரத்தின் வலிமை அத்தகையது.இத்தகைய பிரச்சார உத்தியை ஹிட்லருக்கு திறம்படச் செய்து கொடுத்தவர் கோயபெல்ஸ். நாஜியை ஒரு மதமாகவே மாற்றி வைத்திருந்தார்.அதன் கடவுளாக ஹிட்லர்.

ஜேர்மனி போலந்தை ஆக்கிரமித்தவுடன் இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது.அதாவது போலந்திற்குள் ஜேர்மன் இராணுவம் நுழைந்தவுடன் ஜேர்மனி மீது போரை அறிவித்த பிரிட்டனும் பிரான்சும் போலந்தின் இன்னொரு பக்கத்தை பிடித்துக் கொண்ட சோவியத் யூனியன் மீது எந்தக் கண்டனமும் செய்யவில்லை என்பது முரண்.ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு கணக்கு அது என்னவென்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார் முகில்.

இரண்டாம் உலகப்போரில் முதல் ஆண்டுகளில் ஒஸ்ரியா, பிரான்ஸ், போலந்து, செக்கோஸ்லோவாக்கியா,நெதர்லாந்து,பெல்ஜியம்,டென்மார்க்,நோர்வோ,லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளை வெற்றிகரமாகப் பிடித்த ஹிட்லர் பின்னர் தனது வீழ்ச்சியை பதிவு செய்யத் தொடங்குகிறார்.ஹிட்லர் சறுக்கியது எங்கே..?எப்படி..?ஏன் என சொல்லியிருக்கிறார் முகில்.

வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வந்த ஹிட்லர் யாராலும் செய்யாத சாதனையைச் செய்யத் துணிந்தார்.அதாவது நெப்போலியன் தோற்ற அதே இடத்தில்,வரலாற்றை மாற்றியமைக்க,உலக வரலாற்றில் மிகப்பெரிய படையெடுப்பான Operation Barbarosaவை தொடங்கினார்.ஆனால் அது குளிர் என்ற ஒரே ஒரு மிகப்பெரிய காரணத்தினால் பிசுபிசுத்துப் போனது.அத்தோடு தொடங்கிய ஜேர்மனியின் வீழ்ச்சி பெர்லினை நேசநாட்டுப்படைகளிடமும் செம்படைகளிடமும் பறிகொடுப்பதிலும் ஹிட்லரின் தற்கொலையிலும் போய் முடிந்தது.எந்த ஜேர்மனி உலகளாவிய வல்லராச ஆக வேண்டும் என்று கனவு கண்டாரோ அந்த ஜேர்மனி ஹிட்லரின் கண்முன்னாலேயே பொல பொலவென உதிந்து கொண்டு போனது.ஹிட்லரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஹிட்லரின் படுகொலைகள் வெளித்தெரிந்த அளவிற்கு சோவியத் யூனியன் நிகழ்த்திய படுகொலைகள் எதுவுமே வெளியில் தெரியவில்லை அல்லது அவற்றின் மீது வெளிச்சம் பாயவில்லை.சோவியத் யூனியன் உக்ரேனிலும் போலந்திலும் நிகழ்த்திய படுகொலைகள் யாராலும் கவனிக்கப்படவி ல்லை.அதனையும் இந்தப் புத்தகம் தொட்டுச் செல்கிறது.

காதல் காட்சிகளை அருகிலிருந்தே பார்த்தது போன்ற துல்லியத்தோடு முகில் எழுதியிருக்கிறார்.ஹிட்லரின் கதை முழுமையாக ஆவணப்படுத்தப்பட் டிருக்கிறது.மொழி நடையில் அசுரப்பாய்ச்சல் பலம் என்றால்,நீளமான ஜேர்மனியின் முன்கதை மற்றும் உலகப்போர் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும். மற்றபடி ஹிட்லர் பிரமிக்கவே வைப்பார் !வாசிப்போம்.

முகிலின் ஏனைய புத்தகங்ளை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

1.பயண சரித்திரம்





Post a Comment

Previous Post Next Post