.

டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் என்ற புத்தகமாகனது ஆபிரிக்கா மேற்காசியா,கிழக்காசியா,மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிரந்து கடந்த 65000 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்து அந்த நிலப்பகுதியை தங்களுடையதாக ஆக்கிக் கொண்ட முதல் இந்தியர்களின் கதையைச் சொல்கிறது.ஆபிரிக்காவிலிருந்து வெளியேறிய ஒரு குழுவினர் எப்படி இந்தியாவிற்கு வந்து சேர்ந்து  ஹோமோ குடும்பத்தைச் சேர்ந்த தங்களுடைய பிற உறவினர்களை இலாவகமாகக் கையாண்டு பல்வேறு சுற்றுச் சூழல் சவால்களைச் சமாளித்து புதிய தொழில்நுட்பங்களில் கைதேர்ந்து இந்திய நிலத்தை தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு உலகத்திலேயே மிகப்பெரிய நவீன மக்கட் கூட்டமாக எப்படி உருவாயினர் என்பதை DNA ஆராய்ச்சி மூலம் சொல்கிறது இந்தப் புத்தகம்.

வெங்கி ராமகிருஸ்ணன் அவர்கள் இந்தப் புத்தகத்தை பல்வேறு இன மக்களின் தோற்றம் குறித்த சர்ச்சை உலகெங்கும் ஏராளமாக இருந்து வந்துள்ளது.இந்தியாவில் இது பெருமளவுக்கு மதம் தொடர்பான சித்தாந்த ங்களால் முடக்கி விடப்பட்டுள்ளது.எனவே தொன்மையான மனித எலும்புக் கூடுகள் மற்றும் பல்வேறுபட்ட இனக் குழுக்கள் தொடர்பாக மிகக் கிட்டிய ஆய்வுகள்,வரலாறு நெடுகிலும் நிகழ்ந்துள்ள மனித இனக் குழுக்களின் தோற்றம் இடப்பெயர்ச்சி இனக்கலப்பு போன்றவை தொடர்பான விடயங் களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன என்ற செய்தி ஆறுதலளிப்பதாக உள்ளது.சமீபத்தைய இந்த முடிவுகளை டோனி ஜோசப் இந் நூலில் எளிமையாக விபரித்துள்ளார்.இன்றைய இந்தியாவில் செறிவான இனக் கலவையாக முடிந்துள்ள மக்களின் பழங்கால இடப்பெயர்ச்சி மற்றும் இனக்கலப்பு குறித்து ஆர்வம் கொண்டுள்ளவர்களிற்கு இந்த நூல் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறார்.

அதே போல மைக்கல் விட்ஸெல் அவர்கள் இந்த புத்தகத்தினைப் பற்றிக் கூறும்போது ஆபிரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சியில் தொடங்கி வேதக் காலகட்டம்வரை,பண்டைய இந்திய வரலாற்றின் தொடக்க காலம் குறித்தத் தெளிவான பார்வையை டோனி ஜோசப்பின் இந்த நூல் கொடுக்கிறது.பல அறிவியல் தளங்களின் ஆய்வுகளை குறிப்பாகத் தொல்லியல் மொழியியல் புராதான ஏடுகள்,சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட  DNA ஆய்வுகள் ஆகியவற்றை அவர் சான்றாக காட்டுகிறார்.சமீபத்தைய ஆய்வுகள் இந்தியாவின் பண்டைய வரலாற்றை மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் ஆபிரிக்காவின் தென்னமெரிக்கா போன்ற இடங்களின் பண்டைய வரலாற்றையும் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிரு க்கிறன அதன் மூலம் டோனி ஜோசப் கடந்த நாற்பது ஆண்டுகளாக அரசியல் நோக்கங்களால் சூல் கொண்டிருந்த ஆரியர்களின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் பண்டைய இந்தியாவில் அவர்கள் காலூன்றிய இடங்கள் பற்றிய கேள்விக்கும் ஒருவழியாக விடையளித்துள்ளார் ஆய்வுகளின்போது வழக்கமாக நடைபெறுவதுபோலவே இப்போதும் எல்லாக் கேள்விகளையும் முடிவுகளையும் எல்லா ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும் எப்படியிருந்தாலும் பண்டைய இந்தியாவின் வரலாற்றை எழுதுவதற்கான ஓர் உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது என்பது உறுதி என்கிறார்.

தொல்லியல்,வரலாறு,மரபியல்,மொழியியல்,கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தழதய ஆய்வுகளின் அடிப்டையில் டோனி யோசப் கடந்தகாலத்தை படிப்படியாக திரைவிலக்கும்போது இந்திய வரலாற்றோடு தொடர்புடைய மிகவும் சர்சைக்குள்ளான அளெகரியமான பல கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்.அவையாவன 

  1. சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார்..?
  2. ஆரியர்கள் உண்மையிலேயே வெளியில் இருந்து வந்தவர்களா..?
  3. மரபியல்ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா..?
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல்,நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடன் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு இந்தியர்கள் யார் என்பது குறித்த மறுக்க முடியாத உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது.அந்த உண்மை இதுதான்.
இந்தியர்கள் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறிவர் கள்தான்.இந்தியர்கள் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவ ர்கள்தான்.

இந்தியாவிலேயே நாம் தனித்துவமானவர்கள்.கலப்பற்றவர்கள்.தூய இனம் என்றெல்லாம் சர்சைகள் நீடிப்பதுண்டு.யாரும் தூய இனம் கிடையாது என்பது ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்று.ஏற்கனவே எம் மரபணுக்களில் நியண்ட தால்களின்  மரபணுக்கள் 2 சதவீதம் மரபணுக்கள் கலந்துள்ளன.என்ற உண்மையை சேப்பியன்ஸ் நூலைப்போலவே இந்த நூலும் ஏற்றுக் கொள்கிறது.அதனை விட மெலனீசியர்கள்,பப்புவா நியூகினியைச் சேர்ந்த அவுஸ்ரேலியப் பழங்குடியினர் ஆகியோரைப் போல நாம் எல்லோரும் 6-10 சதவீதம் டெனிசோவன்ஸ் DNA சுவீகரித்திருக்கிறோம்.உயிரியல்ரீதியாகப் பார்க்கும்போது நாம் படிப்படியான தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கிறோம்.ஹோமோ சேப்பியன்ஸின் 96 சதவீதம் சிம்பன்சிகளிடமும் இருக்கிறது.அத்தோடு சேப்பியன்ஸ் திடீரென்று தனியொரு நிகழ்வின் மூலம் உருவாகவில்லை.அவர்களுடைய தோற்றம் பல தொடக்கங்களையும் ஹோமோ இனங்களின் பல்வேறு உறுப்பினர்களிற்கி டையேயான கலப்பையும் உள்ளடக்கிய ஒரு மெதுவான செயல்முறையாகும். அந்த இனங்கள் இப்போது பூண்டோடு அழிந்து விட்டன.நம்மிடையே காணப்படும் ஒரு சிலருக்கு வேண்டுமென்றால் இது கசப்பை ஏற்படுத்தலாம். அதுதான் உண்மை என்று ஏற்றுக் கொள்வதற்கான சான்றுகள் நம்மிடையே உள்ளன.

பிறரோடு ஒப்பிடுகையில் எந்தவொரு மனிதச் சமூகத்திற்கும் சிறப்புத் தகுதிகள் எதுவும் கிடையாது.யாருமே கடவுளின் குழந்தைகள் அல்லர்,யாருமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.நாம் உண்மையை அறிந்து கொள்ளும் போது எமக்கு வருத்தமளிக்ககூடும்.புதிய மரபியல் கண்டுபிடிப்புக்கள் நாஜிக்களின் நம்பிக்கைகளை பொய்யாக்கின.நாஜிக்கள் உண்மையில் ஆரியர்கள் என்று அழைத்தவர்கள் ஸ்டெப்பி மேய்ப்பர்கள் என்பதையும் அவர்கள் கலப்பின பரம்பரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையைச் சொல்கிறார் டோனி.ஆனால் உண்மை என்பதை அறிந்துதானே ஆக வேண்டும்.

டோனி ஜோசப் ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உரிய விபரங்களைத் திரட்டி பின்னர் அவற்றைச் சரிபார்த்து உறுதிப்படுத்தி தந்துள்ளார் என்றே கூற வேண்டும்.இதற்காக தெற்காசிய மக்கட்தொகை மரபியல் தொடர்பாக டஜன் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இன்று இந்தியாவிலிருக்கும் அனைத்து மக்கட் குழுக்களும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த பல மக்கட் குழுக்களிடமிருந்து தங்களுடைய மரபணுக்களை பெற்றுள்ளனர் என்பதும் உண்மைதான்.தொன்று தொட்டு எந்தவொரு இனக்குழுமமோ இனமோ அல்லது சாதியோ தூய்மையான ஒன்றாக இருந்து வரவில்லை.அதே நேரத்தில் பல்வேறுபட்ட மக்கட்குழுக்களிற்கு இடையே நடந்த இனக்கலப்புக்கள் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவில் நிகழவில்லை. எனவே இந்திய-ஐரோப்பியர்களின் இடப்பெயர்ச்சிகளைப் பற்றிய உண்மை, எனவே பல இடப்பெயர்ச்சிகள் நடந்தன என்ற உண்மையோடும் ஆயிரக்க ணக்கான ஆண்டுகளாக மக்களிடையே பெரும் எண்ணிக்கையில் இனக்கல ப்புக்கள் நடைபெற்று வந்தன என்ற தகவலோடும் சேர்த்துச் சொல்லப்பட வேண்டும். 

ஆரியர்கள் முதலில் வந்தார்களா? ஹரப்பா நாகரிகம் முதலில் வந்ததா? ஹரப்பர்களின் மொழி என்ன..? வேதங்கள் எல்லாவற்றிற்கும் தொடக்கப் புள்ளிகளா?சாதி அமைப்பின் முறையின் தொடக்கம் எது..?ஆரியர்களிற்கும் சாதி அமைப்பு முறைகளிற்கும் தொடர்பு இருக்கிறதா..? ஹரப்பா நாகரிகத்தை ஆரியர்கள் வெற்றி கொண்டார்களா..?டோனி ஜோசப் அந்த கேள்விகளுக்கும் பலவற்றிற்கும் பதில்களை வைத்திருக்கிறார்.அவரது ஒப்புமை வரலாற்றின் வரலாற்றில் ஒன்றாகும்.ஆரம்பகால இந்தியர்களை பீட்சா தளமாக கருதுங்கள் என்கிறார்.அந்த பீட்சாவின் அடித்தட்டுப் பகுதியாக இருப்பது முதல் இந்தியர்கள்.பீட்சாவின் சில பகுதிகள் மெல்லிய மேலோட்டைக் கொண்டிருக்கும் என்றாலும்,எல்லாவற்றிற்கும் அடித்தட்டு தேவை.இந்திய பீட்சாவில் தூவப்படும் Source,சீஸ்,ஏனைய பொருட்கள் போன்றவை தனித்துவமானவை இல்லை.

டோனி யோசப் ஹரப்பா நாகரீகம், அவர்களின் சமூகம்,அவர்களின் ஆட்சி தத்துவம், அவர்களின் மேம்பட்ட நீர் இணைப்பு மற்றும் பலவற்றை தெளிவாக விவரிக்கும் போது,​​எனது பள்ளியின் வரலாற்றுப் பாடப்புத்தகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.அந்த இடிபாடுகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகளைப் பார்த்து,அங்குள்ள மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கற்பனை செய்து கொண்டு தோலாவீராவைத் தவிர வேறு எங்கும் இருக்க விரும்பவில்லை.

டோனி மொழியியல் ஒப்பீடுகளுக்குத் திரும்பும்போது,​​தமிழ்ச் சங்கங்களின் பேச்சைக் கேட்டு நான் விருப்பமில்லாமல் சிரிக்கிறேன்,கல் தோன்றா மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி என்ற உவமானம் எவ்வளவு மிகைப்படுத்தப்பட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.எந்த வரலாற்றுக்கு முந்தைய வார்த்தை என் தாய்மொழியுடன் இணைகிறது என்று ஊகிக்கிறேன்.

இந்திய ஐரோப்பிய மொழி பேசியவர்களின் வருகை குறித்த கேள்வி மட்டும் என் உணர்ச்சிகளை கிளர்தெழச் செய்கிறது..?இதற்குப் பதிலளிப்பது எளிது இந்திய கலாச்சாரம் என்பது ஆரிய,சமஸ்கிருத அல்லது வேத கலாச்சாரத்தை ஒத்தது அல்லது அவற்றை ஒத்த பொருள் கொண்டது என்பது ஒரு அனுமானம்தான்.அதனால் இந்திய ஐரோப்பிய மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தனர் என்று கேட்பது எப்போது இந்திய கலாச்சாரம் இறக்குமதி செய்யப்பட்டது என்று கேட்பதற்குச் சமமானது.

ஆரியர்களின் இந்திய வருகையை சாதிய அமைப்போடு தொடர்புபடுத்த முடியாது.ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்குள்  நுழைந்து இரண்டா யிரம் ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய சமூகத்தில் சாதி என்ற விலங்கு பூட்டப்பட்டது என்கிறார் டோனி.இந்தியாவிலுள்ள ஏனைய சாதியினரோடு ஒப்பிடுகையில் சூத்திரர்கள் எந்த விதத்திலும் வேறுபட்டவர்கள் இல்லை ஏனெனில் சாதிய அமைப்பு தொடங்க முன்னரே இனக்கலப்பு ஏற்படுத்தப்பட்ட விட்டது.

இறுதியாக இப்படி முடிக்கிறார் டோனி"நாங்கள் அனைவரும் இந்தியர்கள், நாங்கள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள்."இது இந்திய மக்கள் அனைவரும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய வாசகமாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது இருநூற்றைம்பது பக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதன் பன்முகத்தன்மையையும் விஞ்ஞான சான்றுகளோடு ஆராய்ந்து ஒரு முடிவினைத் தருகிறது.வாசிப்போம்.


View Synonyms and Definitions

Post a Comment

Previous Post Next Post