சோமன், ராமன் என்ற இரண்டு ஆட்கள் ராஜாவிடம் பணி புரிந்து வந்தனர். ராமனைக் கண்டால் மிகவும் பிடித்த ராஜாவுக்கு, என்ன காரணத்தினாலோ சோமனைக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஒருநாள் ராஜா இருவரையும் அழைத்து “நீங்கள் இருவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். மூன்று நாள்கள் கழித்து நமது அரண்மனையில் நடக்கவிருக்கும் விழாவிற்குக் கட்டாயம் வந்து விடுங்கள். உங்களுக்காக சிறு பரிசுகள் எடுத்து வைத்திருக்கிறேன். அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சோமனுக்கு ஒரு சேனைக் கிழங்கும், ராமனுக்கு ஒரு கருங்கல்லும் பரிசாக அளித்தார்.
இருவரும் ராஜாவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தங்கள் வீடுகளை நோக்கிச் சென்றனர். இருவரும் திரும்பிச் செல்லுகையில் ராமன், “ராஜா எனக்கு எதற்காக ஒரு கல்லைப் பரிசாகக் கொடுத்தார் என்று தெரியவில்லை” என்று முணுமுணுத்தான். உடனே சோமன், “அப்படிச் செய்யாதே! உனக்குப் பிடிக்கவில்லையானால், அதை என்னிடம் கொடுத்து விடு. இந்த சேனைக் கிழங்கை நீ எடுத்துக் கொள்” என்றான். ராமனும் கல்லைக் கொடுத்து விட்டு, மகிழ்ச்சியுடன் சேனைக் கிழங்கை எடுத்துக் கொண்டான்.
ராமன் தான் எடுத்துச் சென்ற சேனைக் கிழங்கை தன் வீட்டில் சமைத்து சாப்பிட்டான். சோமன்தான் எடுத்துச் சென்ற கல்லை அன்றிரவு நிலா வெளிச்சத்தில் உற்று நோக்கினான். கல்லில் ஏதோ விரிசல் தென்பட, அதனுள் ஏதோ பளிச்சென்று தெரிந்தது. உடனே சோமன் கல்லை உடைக்க, அதனுள் ஒரு தங்க நகை தென்பட்டது. “ஆகா! ராமனுடன் பரிசுப் பொருட்களை மாற்றிக் கொண்டதால் ராமனுக்கு கிடைக்க இருந்த தங்க நகை எனக்குக் கிடைத்து விட்டது!” என்று சோமன் மனதுள் நினைத்துக் கொண்டான்.
மூன்று நாள்கள் கழித்து, இருவரும் அரண்மனை திரும்பி, அங்கு நடந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்டனர். சோமன் தைரியமாக தங்க நகையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தான். அவன் சூடியிருந்த நகை ராஜாவின் கண்களில்பட அவர் சோமனைப் பார்த்து, “உனக்கு தங்க நகை எங்கிருந்து கிடைத்தது? என்றார். உடனே சோமன் தாங்கள் பரிசுப் பொருட்களை மாற்றிக் கொண்டதை ஒப்புக் கொண்டு விட்டான். ராஜா உடனே ராமனையும் வரவழைத்து விசாரிக்க, ராமனும் உண்மையை ஒப்புக் கொண்டான்.
ராஜா ராமனை மன்னித்து விட்டார். ஆனால் சோமன் மீது அவருக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. சோமனை நோக்கி, “உன்னையும் நான் மன்னித்து விடுகிறேன். நீ உண்மையை தயங்காமல் ஒப்புக் கொண்டாய்! மிக்க மகிழ்ச்சி! நான் இப்போது உனக்கு ஒரு மோதிரம் தருகிறேன். ஒரு வாரம் இதை பத்திரமாக வைத்திரு. நான் கேட்கும் போது திருப்பிக் கொடு! ஆனால் மோதிரத்தைத் தொலைத் தால் உனக்கு மரண தண்டனை கிடைக்கும்” என்றார்.
தன்னைப் பழிவாங்கவே ராஜா இப்படி ஒரு நாடகம் போடுகிறார் என்று சோமனுக்குத் தெரிந்து விட்டது. இருந்தும் பதில் பேசாமல் மோதிரத்தை வாங்கிக் கொண்டான். வீட்டுக்குச் சென்றதும் யாருக்கும் தெரியாமல் குடிசையின் மண் சுவரில் பள்ளம் தோண்டி, அதற்குள் மோதிரத்தை ஒளித்து வைத்து, அதை மூடி விட்டான். இரண்டு நாள் கழித்து, சோமன் வீட்டில் இல்லாத போது ராஜா சோமனின் மனைவியை அழைத்து, “உன் கணவன் உன் வீட்டில் ஒரு மோதிரத்தை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறான். அதை நீ எப்படியாவது எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தால், உனக்கு நிறைய பொற்காசுகள் தருவேன்” என்று உத்தரவிட்டார்.
வீடு திரும்பிய சோமனிடம் அவன் மனைவி, “உங்களிடம் ஒரு மோதிரம் இருந்ததே, அதை எங்கே வைத்திருக்கிறாய்?” என்று கேட்டாள். 'அடடா! நாம் மோதிரம் கொண்டு வந்ததை இவள் பார்த்து விட்டாள் போலிருக்கிறது' என்று நினைத்த சோமன், “ஓ! அதுவா! அதை இங்கே ஒளித்து வைத்திருக்கிறேன்!” என்று அது ஒளிக்கப்பட்டிருக்கும் இடத்தை மனைவிக்குக் கூறிவிட்டான். சோமன் வீட்டில் இல்லாத சமயம் அவள் மோதிரத்தை எடுத்து ராஜாவிடம் கொடுத்து விட்டாள். ராஜாவும் வாக்களித்தபடி அவளுக்குப் பொற்காசுகளைப் பரிசாக அளித்தார்.
ஒரு வாரம் கழிந்தது. ஒருநாள் அரண்மனையிலிருந்து சோமனை மோதிரத்தைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவு வந்தது. சோமன் தான் ஒளித்து வைத்த இடத்தில் அதைத் தேடி அது காணவில்லை. பயத்தாலும், அதிர்ச்சியினாலும் பரபரப்படைந்த சோமன் தன் மனைவியைக் கூப்பிட்டு அந்த மோதிரம் எங்கே போயிற்று?” என்று கத்தினான். கணவனின் கோப வேசத்தைக் கண்டு பயந்து போன அவன் மனைவி “எனக்கு ஒன்றுமே தெரியாது!” என்று பொய் சொல்லி விட்டாள். சோமனுக்குத் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
குனிந்த தலையுடன் ராஜாவின் முன் சென்று, “ராஜா, அந்த மோதிரம் காணாமற் போய் விட்டது” என்றான் சோமன். அந்தப் பதிலை எதிர்பார்த்த ராஜா, “அப்படியானால் இப்போதே உனக்கு மரண தண்டனை!” என்று அறிவித்தான்.
“ராஜா, எனக்கு ஒருநாள் அவகாசம் கொடுங்கள். நாளைக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள்!” என்று சோமன் வேண்ட, ராஜாவும் சம்மதித்தான்.
மிகவும் விரக்தி அடைந்த சோமன்,ஆற்றங்கரைக்குச் சென்றதும் 'இன்றே என் வாழ்க்கையின் கடைசி நாள். இன்று வயிறார சாப்பிடுவோம்' என்று தோன்ற, ஆற்றில் தூண்டிலிட்டு ஒரு பெரிய மீனைப் பிடித் தான். அந்த மீனை வீட்டுக்கு எடுத்துச் சென்று, இரவு அதை சமைப்பதற்காக கத்தியால் அதை வெட்டியதும் வயிற்றிலிருந்து, தொலைந்து போன அதே மோதிரம் அகப்பட்டது.
உடனே வெறி பிடித்தவன் போல் “நான் மரண தண்டனையிலிருந்து தப்பி விட்டேன்!” என்று மகிழ்ச்சியுடன் கூவிக் கொண்டே அரண்மனையை நோக்கி ஓடினான். அவனுடைய செய்கையைக் கண்டு வியந்த பலரும் அவன் பின்னாலேயே தொடர்ந்து சென்று அரண்மனைக்குள் நுழைந்தனர். தன்னைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் திரள, ராஜாவை அணுகிய சோமன், “ராஜா, ராஜா! இதோ பாருங்கள் நீங்கள் கொடுத்த அதே மோதிரம்! என்னுடைய தண்டனையை ரத்து செய்யுங்கள்” என்று கூவினான். பலரது முன்னிலையில் சோமன் அந்த மோதிரத்தைக் காட்டியதும் ராஜா திகைத்துப் போனார். 'என்ன மந்திர ஜாலம் செய்து மோதிரத்தைக் கொண்டு வந்தான்? ' என்று ராஜா ஆச்சரிய மடைந்தார். வேறு வழியின்றி அவன் தண்டனையை ரத்து செய்தார் ராஜா.
உண்மையில் அந்த மோதிரம் மீனின் வயிற்றுக்குள் எப்படிச் சென்றது தெரியுமா? சோமனின் மனைவி தனக்குக் கொடுத்த மோதிரத்தை அரண்மனையில் ஓரிடத்தில் பதுக்கி வைக்க, அன்றிரவு அதை ஒரு எலி எடுத்துக் கொண்டு போய் சாக்கடையில் போட்டு விட்டது. பிறகு சாக்கடை நீர் மோதிரத்தை அடித்துக் கொண்டு சென்று ஆற்றில் சேர்த்துவிட, ஆற்றிலுள்ள ஒரு பெரிய மீன் அதை விழுங்கி விட, அதிருஷ்டவசமாக அதே மீனை அன்று சோமன் பிடித்தான். ராஜாவுக்கு இந்த நிகழ்ச்சிகள் தெரியாது என்பதால், ஏதோ மந்திரம் செய்து சோமன் தன்னிடம் இருந்த மோதிரத்தைத் திரும்பப் பெற்று விட்டான் என்றே நம்பினார்.
Post a Comment