கிரேக்க நாட்டில் அங்கேயஸ் என்ற பிரமுகர் கப்பல் தலைவனாக பல ஆண்டுகள் பணி புரிந்து ஏராளமான செல்வம் திரட்டிய பின்னர், அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். எஞ்சிய தன் வாழ்நாட்களை மிகவும் சொகுசாகக் கழிக்க விரும்பிய அங்கேயஸ் ஒரு குன்றின் உச்சியில் தனக்காக ஒரு மாளிகையை உருவாக் கினார். தன்னுடைய திரண்ட செல்வத்தால் உருவாக்கிய அந்த மாளிகையைச் சுற்றி அழகான பெரிய தோட்டம் ஒன்று உருவாக்கி,பலவித பழ மரங்கள் நட்டு, வாழ்க்கையை தன் மாளிகையில் சுகமாகக் கழித்து வந்தார். செல்வந் தரான ஒருவரைச் சுற்றி ஏராளமான நண்பர்கள் வளைய வருவதுண்டு. அதுபோல் அங்கேயஸைச் சுற்றிலும் எப்போதும் அவர் நண்பர்கள் சூழ்ந்திருந்து, அவரைக் களியாட்டங்களில் ஈடுபடுத்தினர்.அங்கேயஸும் தன் நண்பர்களுடன் விருந்து, இசை, நடனம் என்று பொழுது போக்கி வந்தார்.ஒரு முறை அவருடைய ஆசிரியர் அவரிடம் “கடவுள் உனக்குக் கொடுத்த செல்வத்தை உலகில் மற்றவர்களுக்கு நல்ல வழியில் பயன்படுமாறு செலவழிப்பாய்” என்று சொன்ன அறிவுரை மட்டும் அவருடைய செவிகளில் ஏறவில்லை.
பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே அடிக்கடி போர் நிகழ்வது உண்டு. இரு மன்னர்களுக்கிடையே நடக்கும் போரில் வெற்றி பெற்ற மன்னர், தோல்வியுற்றவரின் நாட்டிலிருந்து குடிமக்களை கைதிகளாக்கி தமது நாட்டுக்குக் கொண்டு வந்து அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்தினர். இத்தகைய அடிமைகளை செல்வந்தர்கள் விலைக்கு வாங்கித் தங்களுடைய வேலைகளுக்குப் பயன்படுத்துவதுண்டு. அத்தகையோர் தங்களிடம் பணி புரியும் அடிமைகளை சக்கையாக பிழிந்து வேலை வாங்குவதுண்டு. அத்தகைய அடிமைகளின் வயதையோ, உடல் நலத்தையோ பொருட்படுத்தாமல் அவர்களை ஈவு இரக்கமின்றி வேலை செய்ய வைப்ப துண்டு.
அங்கேயஸூம் அதுபோல் ஏராளமான அடிமைகளை விலைக்கு வாங்கித் தன் பணியாட்களாக நியமித்திருந்தார். ஒருமுறை அவருக்குத் தன்னிட மிருந்த மலைப்பாங்கான நிலத்தை உழுது திராட்சைகள் பயிரிட்டு, அதிலிருந்து மது தயாரித்து அருந்த ஆசை உண்டாயிற்று. அந்தப் பணியில் ஏராளமான அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த அடிமைகள் இரவு பகலாக அரும்பாடுபட்டு நிலத்தை உழுது சீர் செய்ய வேண்டியிருந்தது. அவர்களுடைய வேலையை மேற் பார்வை செய்யும் அதிகாரி தயை தாட்சண்யமின்றி அவர்களை சாட்டையால் அடித்து வேலை செய்யச் செய்தான். ஒருமுறை அங்கேயஸ் அந்த இடத்திற்கு வந்திருந்தார். எஜமானர் வந்து நிற்கும் போது தன் மேற்பார்வை இடும் திறமையை காட்ட, அந்த அதிகாரி அவர்களை அடித்து “ஒழுங்காக வேலை செய்யுங்கள் முட்டாள்களே! இந்த இடத்தில் பயிராகும் திராட்சைகளில்இருந்து தயாரிக்கப்படும் மதுவை அருந்த நமது எஜமானர் மிக ஆவலாக இருக்கிறார்!” என்று விரட்டியடித்து வேலை வாங்கினான்.
“ஆமாம்!” என்று ஆமோதித்த அங்கேயஸ், “மிகச் சிறந்த சாதியைச் சேர்ந்த திராட்சைகளை இங்கே பயிரிடப் போகிறேன். என்னுடைய தோட்டத்தில் விளைந்த திராட்சைகளிலிருந்து தயாரித்த மதுவை ருசிக்க ஆவலாக இருக்கிறேன்!” என்றார்.
திடீரென அந்த அடிமைகளில் ஒருவன், "இங்கு விளையும் திராட்சைகளின் மதுவை அருந்தும் பாக்கியம் நம் எஜமானருக்குக் கிடைக்காது ’” என்றான். உடனே அவன் மீது பாய்ந் து, அதிகாரி அவனை கண்மண் தெரியாமல் அடித்தான். ஆனால் மீண்டும் அந்த அடிமை தைரியமாக, “தனது சொந்த நிலத்திலிருந்து உண்டாகும் திராட்சைகளின் மதுவை அருந்தும் பாக்கியம் அவருக்குக் கிட்டாது” என்றான். அங்கேயஸ் அவனைக் கொன்றே விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது, அவர் அவனை விட்டு விடச் சொல்லிவிட்டு, மௌனமாகத் திரும்பிச் சென்று விட்டார்.
சில மாதங்களில், திராட்சைக் கொடிகள் பிரமாதமாக வளர்ந்து, திராட்சைக் குலைகள் ஏராளமாகத் தோன்றின. அவற்றில்இருந்து கை தேர்ந்த நிபுணர்களால் மிகச் சுவை யான மதுவும் தயாரிக்கப்பட்டது. தன் தோட்டத்தில் விளைந்த திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுவை, அங்கேயஸ் அருந்தும் நாளும் வந்தது. உற்சாகமாக அமர்ந்திருந்த அங்கேயஸ் தன் முன் வைக்கப்பட்டிருந்த மதுக் கிண்ணத்தைப் பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்தான். அன்று தன்னைப் பார்த்து அபசகுணமாகப் பேசிய அடிமையை தன் முன்னே அழைத்து வரச் செய்தான். அவன் வந்தவுடன் அவனை நோக்கி மிகுந்த கர்வத்துடன், “இந்த மதுவை அருந்தும் பாக்கியம் எனக்குக் கிடைக்காது என்று சொன்னாயே! இதோ பார், உன் கண்ணெதிரிலேயே எனது தோட்டத்து திராட்சையில் தயாரித்த மதுவை அருந்தப் போகிறேன்!” என்று கர்வத்துடன் கூறினான்.
அந்த அடிமை நிதானமாக, கோப்பையில் "எஜமானரே! இருக்கும் மது தங்கள் வாயை அடைவதற்குள் கூட ஏதாவது தடங்கல் ஏற்படலாம்!” என்றான். அதைக் கேட்டு அட்ட காசமாகச் சிரித்த அங்கேயஸ், கோப்பையை தன் உதடுகள் வரை எடுத்துச் சென்று விட்டான்.
அப்போது திடீரென பரபரப்புடன் நுழைந்த ஒரு பணியாள், “எஜமானரே! நமது திராட்சைத் தோட்டத்தை ஒரு காட்டுப் பன்றி நாசம் செய்து கொண்டிருக்கிறது” என்று அறிவித்தான். உடனே அங்கேயஸ் உருவிய வாளுடன் திராட்சைத் தோட்டத்திற்கு விரைந்து ஓடினார். ஆனால் சென்றவர் திரும்பி வரவில்லை. ஆம், அவரை அந்த காட்டுப்பன்றி மூர்க்கமாகத் தாக்கிக் கொன்று விட்டது. மேஜையில் வைக்கப்பட்ட மது சுவைக்கப்படாமல் அப்படியே இருந்தது. இன்றும் ஆங்கிலத்தில், “There is many slips between cup and lips” என்ற பழமொழியை உபயோகப்படுத்துகிறோம். அதாவது எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும், ஒருவனுடைய திட்டங்கள் கடைசி நொடியில் எதிர்பாராமல் தடைப்படலாம் என்பதே அ ந்தப் பழமொழியின் பொருளாகும்.
Post a Comment