.

மரியா ரோஸா ஹென்ஸன் எழுதிய ஊழின் அடிமையாக என்ற புத்தகமானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானிய இராணுவத்தில் பாலியல் அடிமையாகப் பணியாற்றிய பெண்ணின் கதையைச் சொல்கிறது.பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இப்போது கூட எம் சமூகத்தில் பொதுவாக காணப்படுவதில்லை அப்படியிருக்கும் போது 20 ம் நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய 2ம் உலகப்போர் காலத்தில் பிலிப்பைன்ஸ் பெண்களின் நிலையை இந்தப் புத்தகம் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் ரோஸா.

பாலியல் வன்புணர்வு எல்லாக் காலங்களிலும் பெண்களின் மீதான வன்முறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அதனை எதுவும் மாற்றிவிடவில்லை.நாகரிகம் வளர்ந்தாலும் பெண்கள்,பெண் உடல் மீதான ஆண்களின் ஆதிக்கம் என்பன எப்போதும் குறையப் போவதில்லை.உலகின் எந்த மொழியை,இனத்தை,மதத்தை,கடவுளை எடுத்துக் கொண்டாலும் பெண்களை அடக்குவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை என்பதே வரலாறு எமக்குச் சொல்லித் தரும் பாடம்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கு நஸ்ட ஈடு வழங்கியதால் இந்த பெண்களிற்கும் சேர்த்தே அதில் வழங்கப்பட்டு விட்டதாக ஜப்பானிய அரசாங்கம் வலியுறுத்துகிறது. உண்மையில் அந்த இழப்பீடு கடைசிவரை ரோசாவிற்கு கிடைக்க வேயில்லை.அதற்கு ஈடான இழப்பீட்டைச் செலுத்துவது ஜப்பானிய அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆண்களின் பாலியல் வெறிக்காக அடிமைகளாக்கப்படும் பெண்களின் கதைகள் மன்னர் காலம் முதல் நவீன காலம் வரைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிலிப்பைன்ஸில் பாலியல் அடிமைகளாக ஜப்பானிய இராணுவத் தினரால் நடத்தப்பட்ட விடுதிகளில் காலத்தை கழித்தவர் மரியா ரோஸா.அவர் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியில் சொல்லி ஜப்பான் வரைச் சென்று போராடியவர்.ஆனால் உரிய நீதி கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.

ஜப்பானின் இந்த பாலியல் அடிமைகள் கட்டமைப்பானது செல்வாக்கு மிக்க ஐ.நா விசாரணை அறிக்கைகள் இராணுவ பாலியல் அடிமைத்தனமாக வகைப்படுத்த முன்பே போர்க்காலத்தில் அந்தப் பெண்கள் மீது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சகிக்க முடியாத துஸ்பிரயோகம் பற்றிய விபரங்கள் புலனாய்வு அறிக்கைகள் மூலம் உலகம் முழுவதும் வெளிப்படுத்த ப்பட்டதோடு அந்தத் தகவல்கள் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின.


இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது.கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பெண்கள் ஜப்பானிய இராணுவத்தினருக்கு பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.மரியா பாலியல் அடிமையானபோது அவரது வயது பதினாறு.இரண்டாம் உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை முதன்முதலாக வெளிக் கொண்டு வந்தவர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மரியா.

இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பாலியல் அடிமையாக்கப்பட்ட பாலியல் அடிமையாக்கப்பட்ட முதல்நாளே இருபத்து நான்கு படையினர்கள் மரியாவை வல்லுறவு செய்கிறார்கள்.அப்போது அவள் பருவமடைந்திருக்கவில்லை அதனால் ஜப்பானியருக்கு அனுகூலம் என்னவென்றால் மற்றப் பெண்களிற்கு வழங்கப்படும் நான்கைந்து நாள் மாதாந்திர விடுமுறையைக் கூட மரியாவிற்கு வழங்க வேண்டியதில்லை என்பதாகும்.

கடவுளை நம்பாதவர்களிற்கு விழிப்புணர்வு என்பது பெரிது.கடவுளை நம்புகிறவர்கள் கொலை கூடச் செய்து விட்டு மண்டியிட்டு கடவுளே என்னை மன்னித்து விடு என்று கதறி அழலாம்.ஆண்டவர் அவர்கள் பாவங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.அப்படித்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள விடயங்களும் மிகவும் கொடுமையானவை.எந்தவொரு பெண்ணும் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகும்போது எந்த மதக் கடவுளும் அதனை ஒருபோதும் தடுத்ததில்லை.சிவனிலிருந்து அல்லா வரை,பண்டைய கிரேக்க கடவுளர் வரை எந்தக் கடவுளும் பாலியல் வன்புணர்வை அனுமதிப்பவர்களாகவே உள்ளனர். இதிலிருந்தே மதங்களை உருவாக்கியது ஆண்கள்தான் என்பதையும் கடவுள் என்பது வெறும் கற்பனையே என்பதையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

போரின்போது தமது எதிரிகளைக் கொடூரமாக நடத்துவதும் கொல்வதும் சாதாரணமான ஒன்று என்பதுவும் அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே என்பதும் ஜப்பானியத் துருப்புக்களிடையே பரவலாகக் காணப்பட்ட ஒரு நம்பிக்கையாகும்.அந்த கருதுகோளிற்கேற்ப போரின் போது பிடிக்கப்பட்ட அல்லது சரணந்த பலரும் அதிலும் குறிப்பாக பெண்கள் பாலியல் துஸ்பிர யோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.பலரும் அப்போதே கொல்லப்பட்ட போதிலும் மேலும் பல பெண்கள் தீராக் காயங்களின் விளைவாக பின்னர் இறந்தார்கள்.இராணுவமானது தான் செய்த குற்றங்களின் ஆதாரங்களை அழிப்பது என்ற பெயரிலும் கூட போரின் இறுதிக் காலத்தில் பலரைக் கொன்ற ழித்திருக்கிறது.இவை அனைத்தும் தெளிவான போர்க் குற்றங்களாகும்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பானிய இராணுவமானது போர்க்குற்றங்களோடு சம்பந்தப்பட்ட ஆவணங்களை வேண்டுமென்றே அழித்தது.அத்தோடு ஜப்பான் ஆக்கிரமித்திருந்து விட்டுச் சென்ற நாடுகளில் உயிர் தப்பியிருந்த வேட்கை தணிக்கும் பெண்கள் குறித்து உடனடியாக உரிய நாடுகளின் அரசாங்கங்கள் முழுமையான விசாரணையை மேற்கொள் ளாததால் அவர்களிற்கு எவ்வித நீதியையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது.அவ்வாறே உயிர் பிழைத்த பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்த சமூக மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளும் கூட அந்தப் பெண்களை அவ்வளவு காலமும் மௌனமாகவே வைத்திருந்தது.

ஒருமுறை எதிர்பாராமல் பாலியல் வல்லுறவு நடந்தாலே அந்தக் கொடுங்கனவுகள் வாழ்க்கை முழுவதும் தொடந்து வருகிறன என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறனர்.இது போன்று நடந்தால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு எவ்வளவு மனத்திடம் வேண்டியிருக்கும்.

எம் சமூகம் பெண்ணின் உடலில் மானத்தையும் கௌரவத்தையும் தேடித் திரியும் நிலையில் மரியா போன்ற பெண்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறனர்.பாலியல் வன்புணர்வு என்பது எந்தப் பெண்ணுக்கும் முடிவல்ல என்பதை நிருபிக்கிறார் மரியா.

ஜப்பானிய இராணுவத்தினர் ஏன் இந்த பாலியல் விடுதியை நடத்தினார்கள் என்ற கேள்வி எம்முள் எழுகிறது இதற்குரிய காரணங்களாக போரின் போது சீனாவில் ஜப்பானிய ஆயுதப்படைகளின் உறுப்பினர்களால் பொதுமக்கள் பாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளாவதைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.இரண்டாவதாக இராணுவத் தலைவர்கள் தமது ஆண்களின் உடல் ரீதியான இச்சைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அவசியம் என்றே கருதினா ர்கள்.அமெரிக்க மற்றும் பிற நேச நாட்டு வீரர்களைப் போலல்லாமல் ஜப்பானிய ஏகாதிபத்திய படையினருக்கு குறிப்பிட்ட விடுப்புக் காலங்களோ கடமை அடிப்படையிலான சுற்றுப் பிரயாணங்களுக்கோ வழிகள் எதுவும் இல்லை.மூன்றாவதாக இராணுவக் கட்டுப்பாட்டுன் கூடிய விபச்சாரமானது பாலியல் நோய்களிற்கு எதிரான ஒரு சிறந்த தடுப்பு நடவடிக்கையாக கருதப்பட்டது.இராணுவத் துருப்புக்களிடையே காணப்பட்ட அதிகளவான பாலியல் நோய்கள் பிரச்சனையானது ஜப்பானிய ஏகாதிபத்தியப் படைகளிற்கு மாத்திரமல்லாமல் போர்க் காலத்திலும் போருக்கு பிந்தைய காலத்திலும் நேசநாட்டுப் படைகளிற்கும் கூட ஒரு பொதுவான பிரச்னையாக இருந்தது.கடைசியாகக பாதுகாப்புக் காரணங்களிற்காக விபச்சார விடுதிகள் இராணுவ அதிகாரிகளால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுவது அவசியம் என நம்பப்பட்டது.இராணுவத்தினர் அடிக்கடி வந்து செல்லும் தனியார் விபச்சார விடுதிகளிற்கள் உளவாளிகள் எளிதில் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் நிலவியது.அவற்றில் பணிபுரியும் விலைமாதுக்களையும் எதிரிகள் உளவாளிகளாக நியமிக்கலாம் என்றே கருதப்பட்டது  என்று காரணங்களை அடுக்கிறார் ரோசா.

ஜப்பானிய வேட்கை தணிக்கும் நிலையங்களில் பன்னிரெண்டு சிப்பாய்கள் என்னை அடுத்தடுத்து பலாத்காரம் செய்தார்கள்.அதன்பிறகு எனக்கு அரை மணித்தியாலம் ஓய்வு தரப்பட்டது.பின்னர் பன்னிரெண்டு படையினர் வரிசையாகப் பின்தொடர்ந்தனர்.அவர்கள் அனைவருமே தமது மறை வரும் வரை அறைக்கு வெளியே வரிசையில் காத்திருந்தவர்கள்.நான் எழுந்திருக்க முடியாத அளவிற்கு பலவீனமாக உணர்ந்தேன்.நான் உடல் வேதனையை உணர்ந்ததோடு அதிகளவு இரத்தமும் என்னிலிருந்து வெளியாகிக் கொண்டி ருந்தது.என்னால் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளக் கூட முடியவில்லை மறுநாள் காலைவேளையில் என்னால் எழும்பவே முடியவில்லை.என்னால் சாப்பிட முடியவில்லை.நான் மிகவும் வலியை உணர்ந்தேன் மற்றும் என் பிறப்புறுப்பு வீங்கியிருந்தது.அம்மாவைக் கூப்பிட்டு அழுதேன்.வீரர்கள் என்னைக் கொல்லக்கூடும் என்பதால் என்னால் அவர்களை எதிர்க்க முடியவில்லை.அதனால் நான் வேறு என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு நாளும், மதியம் இரண்டு மணி முதல் மாலை பத்து மணி வரை, வீரர்கள் என் அறைக்கு வெளியேயும்,அங்கிருந்த மற்ற ஆறு பெண்களின் அறைகளிலும் வரிசையாக நின்றார்கள்.ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் கழுவ எனக்கு நேரம் இல்லை. நாளின் முடிவில், நான் கண்களை மூடிக் கொண்டு அழுதேன் என்று தனக்கு நேர்ந்தவற்றை விவரிக்கிறார் ரோசா.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது ஜப்பானிய இராணுவத்தின் வேட்கை தணிக்கும் நிலையங்களின் கொடூரத்தை உங்களாலும் உணர்ந்து கொள்ள முடியும்.போருக்கு முன்னர் அவர்கள் பட்ட கஸ்ரங்களும் போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்த துயரங்களும் நீதிக்கான போராட்டமும் எமக்கு முக்கியமான படிப்பினைகளாகவே அமைந்திருக்கிறன. வாசிப்போம்.



View Synonyms and Definitions

Post a Comment

Previous Post Next Post