.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு என்பன தொற்றா நோய்களுக்கு அடிப்படைக் காரணிகளைக் கண்டறிய மேற் கொண்ட ஆய்விற்கு அமைய, 18 தொடக்கம் 69 வயதிற்கு உட்பட்டவர்களில் 15 வீதமானோர் புகைப்பழக்கம் உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டது. தினமும் புகைப்பவர்களின் அளவு 10.2 வீதம் என்பதோடு, மொத்த ஆண் சனத் தொகையில் அது 29.4 வீதம் என்பதுடன் புகைக்கும் பெண்களின் அளவு 0.1 வீதமும் என கண்டறியப்பட்டது. 

இந்த ஆய்விற்கு அமைய புகைப்பவர்களில் 91 வீதமானோர் புகைப்பது சிகரெட் எனவும் 8 வீதமானவர்கள் பாவிப்பது வீடுகளில் தயாரிக்கப்படும் பீடி எனவும் பட்டியலிடப்பட்டது.அத்துடன் புகைத்தல் மரணங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றிற்கமைய நாள் ஒன்றிற்கு 50 பேர் புகைத்தலினால் மரணமடைவதோடு,இலங்கையில் வயது வந்த 10 பேரில் ஒருவரின் மரணம் புகைத்தலினால் நிகழ்வதும் நாள் ஒன்றுக்கு சுமார் 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக மக்கள் செலவிடுவதும் 40,000 பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கு பழக்கப்பட் டுள்ளார்கள் என்பதும் தெரியவந்தது. 

உலகில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 110 கோடியாக இருக்கிறது. இது 2025 இல் 116 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.வழக்கமாக புகை பிடிப்பவர்களில் 50 சதவீத மக்கள் அகால மரணம் அடைகின்றனர்.மற்றும் அவர்கள் வாழ்வதற்கான எதிர்பார்ப்பில் பத்து வருடம் குறைகிறது. இலங்கையில் சிகரெட் பாவனையால் நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையமும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாகவும் அத்துடன் உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சட்டவிரோத சிகரெட் பாவனை தற்போது 33 வீதத்தால் அதிகரி த்துள்ளதாக சந்தை ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இலங்கையில் 13 முதல் 15 வரையான வயதுக் குட்பட்ட சிறுவர்கள் சிகரெட் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் சன்னடி சில்வா தெரிவித்துள்ளார். விசேடமாக பாடசாலைகளில் 9,10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3.7 சதவீதமானோர் புகைத்தல் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.பெரும்பாலான சிறுவர்கள் இ-சிகரெட் பயன்பாட்டிற்குப் பின்னரே சிகரெட் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.இந்த இ-சிகரெட்டுகளில் ஒருவித இரசாயனம் காணப்படுகின்றது. இதனால் இ-சிகரெட்டுகளை பயன்படுத்தும் சிறுவர்கள் வேகமாக சிகரெட் பாவனைக்கு அடிமையாகின்றனர். இதனால் பெற்றோர்கள் அனைவரும் அவர்களது பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.நாட்டில் அதிகரித்து வரும் சிகரெட் பாவனை தொடர்பில் இலங்கை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை கூறுகையில், இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில்,இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர், நான்கு இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர்.இதேவேளை, நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 40,000 பேர் வரையில் புதிதாக சிகரெட்,மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்கின்றது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, சிகரெட் பாவனையால் உலகளவில் வருடாந்தம் 80இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் இலங்கையில் 20000 பேர் வரையில உயிரிழப்பதாகவும் இலங்கையில் 15 இலட்சம் பேர் வரையில் சிகரெட் பாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் சிகரெட் பாவனை ஒரு நாட்டில் சுகாதார பிரச்சினைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றது.


உலக இறப்புகளில்,தொற்றாத நோய்களால் ஏற்படும் மரணங்கள் முன்னணியில் உள்ளதோடு இலங்கையில் 83 வீத இறப்புகள் தொற்று  அல் லாத நோய்களால் ஏற்படுகின்றன.அவ் வகையில் இலங்கையில் தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில்,உலக சுகாதார அமைப்பு புகைபிடித்தல் ஒரு முன்னணி காரணி என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் 93.6 சிகரெட்டுகள் ஒன்று அல்லது இரண்டு பொதிகளில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் சிகரெட் பாவனையை குறைக்கும் செயற்பாடு தடைப்படுவதாகவும், உலகில் பல நாடுகள் ஒற்றை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டின் அரசுக்கான வரி வருமானத்தை எடுத்துக் கொண்டால் சிகரெட் மற்றும் மது பாவனையாளர்களால் ஆண்டொன்றுக்கு 143 00 கோடி ரூபாவுக்கு மேல் வரி வருமானம் கிடைக்கிறது. அதேவேளை சிகரெட், மது பாவனையாளருக்கான சுகாதார செலவினமாக அரசு 21,200 கோடி ரூபாவை செலவிடுகின்றது.இதில் புகைப்போருக்கான சுகாதார செலவீனமாக மட்டும் 7100 கோடி ரூபா செலவிடப்படுகிறது.அதாவது சிகரெட் மற்றும் மது பாவனையாளர்களால் ஆண்டொன்றுக்கு 14300 கோடி ரூபா வரி வருமானம் பெறும் அரசு அவர்களுக்கான மருத்துவ செலவுகளுக்காக 21,200 கோடி ரூபாவை செலவிடுவதன் மூலம் 6, 900 கோடி ரூபா நஷ்டத்தை எதிர் கொள்கின்றது.

புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் 

நுரையீரல் புற்றுநோய்,நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி(சிஓபிடி), எம்ஃபிஸிமா, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்கள்,இதய செயலிழப்பு,மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம்,நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாமல், வாய்,தொண்டை,குரல்வளை,உணவுக் குழாய்,கணையம்,சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை வாய், கல்லீரல்,மார்பகம் போன்ற பிற புற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.எலும்புப்புரை, பல் நோய் கள், கண் நோய்கள், ருசியறிதல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு, கர்ப்பகால சிக்கல்கள், குழந்தை பிறப்பு குறைபாடுகள்.புகைபிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளுக்கு ஆளாகின்றனர்.புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக செலவு,புகைபிடிப்பதால் வேலை நேர இழப்பு மற்றும் உற்பத்தி திறன் குறைவு என்பன ஏற்படுகிறது.

பெற்றோர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த வகைப் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகிறார்கள். இதனால் மூளை வளர்ச்சி தாமதமாகி றது. நினைவுத்திறன்,கவனிப்புத் திறன்,சுய கட் டுப்பாடு மற்றும் படிக்கும் திறனையும் வெகுவாகப் பாதிக்கிறது. புகை பிடிக்கும் குழந்தைகள் பெரியவர் களானதும் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிறார்கள்.பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி புகைப்பதற்கான அணுகுமுறைகள்,நம்பிக்கைகள்,நடத்தைகள் இவை அனைத்தும் பெற்றோரிடமிருந்தே அவர்களை வெகுவாகக் கவர்கிறது.புகைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரிலாக்ஸாக இருப்பதாகவும் அவர்களிற்குத் தோன்றுகிறது.

சிகரெட்டுக்கு அடிமையாவது ஏன்? 

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 80 இலட்சம் பேர் புகை பிடித்தல் சுமார் 80 இலட்சம் நோய்களால் தங்கள் இழக்கின்றனர்.2030 ஆம் ஆண்டுக்குள் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 1 கோடி பேர் இறக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனா லும் மக்களால் புகை பிடிப்பதை நிறுத்த முடியவில்லை அது ஏன்? சிகரெட் பெட்டிகளில்  “உயிரைக் கொல்லும்” என எச்சரிக்கப்பட்டுள்ள போதும் மக்களினால் ஏன் அதனை பயன்படுத்துவதை நிறுத்த முடியவில்லை? இது தொடர்பில் உளவியல் நிபுணர் கூறுவது என்ன...?

" நான் புகை பிடிப்பதைக் கடுமையாக எதிர்த்தேன்.ஆனால் ஒரு நாள் நான் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்,என்கிறார் சுகாதார உளவியலாளர் பேராசிரியர் ரொபர்ட் வெஸ்ட்.இது தொடர்பில் அவர் கூறுகையில், புகையிலையில் உள்ள நிகோட்டினில் இதன் பதில் உள்ளது. சிகரெட்டை பற்ற வைத்தவுடன் இந்த இரசாயனம் வெளியே வருகிறது.நீங்கள் சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது, நிகோட்டின் நுரையீரலின் பக்கங்களில் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு சில நொடிகளில் அது நேரடியாக மூளையைச் சென்றடைகிறது.அங்கு அது நரம்பு செல்களுடன் தொடர்பு கொள்கிறது. மேலும் அதன் விளைவு காரணமாக ஒரு வேதிப்பொருள் டோபமைன் வெளியே வருகிறது.மேலும் ஒரு நல்ல காரியத்தைச் செய்ததற்காக நீங்கள் 'வெகுமதி' பெறப் போகிறீர்கள் என்று இது மூளைக்கு சமிக்ஞை செய்கிறது. நீங்கள் அதை உணராவிட்டாலும்,மூளை அதை மீண்டும் செய்யும்படி கேட்கிறது. அலுவலகத்திற்கு வெளியில், கடை, மதுக்கடை என முதன்முறையாக சிகரெட் பற்ற வைத்த இடத்திற்கு நீங்கள் மீண்டும் செல்லும்போது, அதே “சிறப்பான’ பொருள் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று மூளை நினைக்கும்.அந்த சூழ்நிலைகளுக்கும் புகைபிடிக்கும் அவசியத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது அது உங்களை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும்.சிகரெட்டில் உள்ள நிகோட்டினுக்கு அடிமையாவது ஹெரோயின்,கொக்கேயின் அல்லது ஓபியம் போன்ற போதைப் பொருளுக்கு அடிமையாவதைப் போன்றது.சிகரெட் ஆசையை சமாளிப்பது ஒரு போரைப் போன்றது என்கின்றார். 


ஒருவர் எந்த வயதில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைத் ஆரம்பிக்கின்றார் என நுரையீரல் சிகிச்சை நிபுணரான டொக்டர் எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, தான் பார்க்கும் பெரும்பாலான நோயாளிகள், வளரிளம் பருவமான 18 வயதள வில்,நண்பர்களோடு 'ஜாலியாகப்' புகைபிடிக்கத் தொடக்கி அதுவே கைவிடமுடியாத பழக்கமாகி விட்டதாகச் சொல்வதாகக் கூறுகின்றனர் என்கின்றார்.

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் என்ன நன்மை? என்று டொக்டர் சந்திரசேகரிடம் கேட்ட போது,

பொதுவாக 40 வயதுக்குள் ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டால், அவரது ஆயுள் 10 வருடங்கள் கூடும்,என்று மருத்துவர்களான நாம் சொல்வோம்.மேலும், அதுவே ஒருவர் 40 வயதுக்கு மேல் புகைப்பழக்கத்தைக் கைவிட்டால்,அவரது உடலில் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் 90 வீதம் குறையும்.ஆனால் அவரது ஆயுள் நீளும் என்று சொல்ல முடியாது, பொதுவாக, புகைபிடிப்பதால், புற்றுநோய்,மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்று தான் பலரும் பொதுவாக நினைப்பார்கள்.ஆனால், புகைபிடிக்கும் ஒருவரது சுவை உணரும் திறன்,உடல் நாற்றம்,பற்களின் நிறம் முதற்கொண்டு பல விஷயங்களையும் புகைப்பழக்கம் பாதிக்கிறது. தொடர்ந்து புகைபிடிப்பவர் அப்பழக்கத்தைக் கைவிடும்போது இந்தப் பிரச்சினைகள் உடனடியாகவும் படிப்படியாகவும் குறையும் என்கிறார்.

எனவே இலங்கையில் சிகரெட் பாவனையை குறைக்க வேண்டுமெனில் சில விடயங்களை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,அவை என்னவென பார்ப்போம். 

சட்டத்தில் திருத்தம்

நாட்டில் சிகரெட் பாவனையை குறைப்பதற்காக, மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான அதிகார சபை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சில திருத்தங்கள் தொடர்பில் பல வருடங்களாக முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு வருகிறன.அந்த முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளன.எனவே அவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும்.

தனி சிகரெட் விற்பனை தடை 

இலங்கையில் விற்கப்படும் சிகரெட்டுகளில் 93.6 வீதமான சிகரெட்டுக்கள் தனி சிகரெட்டுக்களாகவே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலைமையானது சிகரெட்டின் பாவனையைக் குறைக்கும் செயல்முறையைத் தடுக்கிறது. மேலும்,உலகில் 107 நாடுகள் ஒற்றை சிகரட் விற்பனையைத் தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.எனினும்,இலங்கையில் இன்னும் தனித் தனியாக சிகரெட் விற்பனை செய்யப்படுகின்றது.தனி சிகரெட் விற்பனையை தடை செய்வதன் மூலம் சிகரெட்டை கொள்வனவு செய்யும் சக்தி குறைந்து, அதன் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிகரெட் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.மேலும்,தனிப்பட்ட விற்பனையைத் தடை செய்வது,சிகரெட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கை தகவல்களின் பயன்பாட்டையும் அவற்றை பயன்படுத்துவோர் பார்க்கும் அளவையும் அதிகரிக்கிறது.இந்த எச்சரிக்கை தகவலின் மூலம் சிகரெட் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களை மீண்டும் மீண்டும் நினை வுபடுத்துவதன் மூலம் சிகரெட்டின் மீதுள்ள கவர்ச்சியைக் குறைக்கிறது.

சிகரெட்டிலுள்ள வடிகட்டிகளை தடை செய்தல்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (WHOFCTC) 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. கடந்த 10.02.2024 அன்று நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு (WHO FCTC) தொடர்பான கட்சிகளின் 10 ஆவது மாநாடு (COP) பனாமாவில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் புகையிலை கட்டுப்பாட்டு சாசனத்தின் பிரிவு 18 இனை (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) செயல்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முடிவு எட்டப்பட்டது. இது சிகரெட்டில் வடிகட்டிகள் (filter) மற்றும் ஆவியாக்கிகளை (vaporizers)தடைசெய்ய முன்மொழியப்பட்டது.சிகரெட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலில் 7,000க்கும் மேற்பட்ட இரசாயனங்களை வெளியிடுகின்றன. வடிகட்டிகள் சுற்றுச்சூழலுடன் இணைகின்றன.இந்த சிகரெட் வடிகட்டிகள் புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை குறைத்துக்கொள்ளலாம் என்று புகையிலை தொழில்துறையினர் ஒரு கருத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால், இக்கருத்து உண்மையல்ல என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும்,சிகரெட் வடிகட்டிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை மற்றும் புற்றுநோய்கள் மற்றும் கன உலோகங்கள் நிறைந்தவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்த அனைத்து காரணிகளையும் கவனத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் சிகரெட் வடிகட்டிகளை தடை செய்ய ஒப்புக்கொண்டது.பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே சிகரெட் வடிகட்டிகளை தடை செய்துள்ளன.இவ்வாறான பயனுள்ள முன்மொழிவுகளை இலங்கையில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

5 ஆண்டுத் திட்டம் அவசியம் 

இலங்கையில் புகைத்தல் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்கும் ஐந்தாண்டு வேலைத் திட்டமொன்று 2017 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.ஆய்வுகளின் படி ஆண்களில் இருவரில் ஒருவர் புகைத்தல் பழக்கமுடையவர்கள் என இலங்கையில் இனம் காணப்பட்ட நிலையில் 2030 ஆம் ஆண்டு அந்த விகிதத்தை 5 சதவீதமாக குறைப்பதே இதன் நோக்கம் என அப்போது சுகாதார அமைச்சு கூறியிருந்ததுடன் உலக சுகாதாரதாபனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவிருந்த இந்த வேலைத் திட்டத்திற்கு பிரிட்டன் 20 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கவும் முன் வந்தது ஆண்களை புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் வகையில் 15 நாடுகளில் ஐந்தாண்டு வேலைத் திட்டம் உலக சுகாதார தாபனத்தினால் முன்னெடுக்க ப்படவுள்ளதாகவும் இலங்கை அதில் முதலிடத்தில் உள்ளதாகவும் அப்போது உலக சுகாதார தாபனம் கூறியிருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு பின்னர் என்ன ஆனது என்பது தெரியாது.எனவே இவ்வாறான 5 ஆண் டுத்திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும்.

View Synonyms and Definitions

Post a Comment

Previous Post Next Post