.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர்,தோன்றிய அனைத்து சிங்கள-தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் பிளவடைந்துள்ளன. அல்லது நீதிமன்றங்களைச் சந்தித்துள்ளன.ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ், சிங்கள இயக்கங்களும் அரசியல் ரீதியாக தமது இனத்திற்கு விடிவைத் தேடித் தருவதற்காகவே அவ்வாறு ஆயுதம் ஏந்தியதாகச் சொன்னாலும்,ஆளும் அதிகாரவர்க்கத்தினால் தான் அடக்குறைக்கு ஆளாகின.ஆனால்,இவ் வியக்கங்கள் தமது இயக்க உறுப்பினர்களினால்,நீதிமன்றத்தை நாடவில்லை. தம்மிடமிருந்த ஆயுதங்களினாலேயே தீர்வுகளை கண்டடைய முற்பட்டனர்.இவர்களுக்கு நீதிச்சட்டங்களில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆயுதங்களை மட்டுமே நம்பினர்.சமகாலத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், தமிழரசுக்கட்சியும்,தமிழர் விடுதலைக்கூட்டணியும் தங்கள் உட்கட்சி விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன.

இந்தப் பின்னணிகளுடன்தான்,தமிழ்த் தேசிய விடுதலைக்கு ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டிருந்த ஈ.பி. டி. பி, ஈ.பி. ஆர். எல். எஃப், புளட்,டெலோ, ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி, தேர்தல்களிலும் போட்டியிடத் தொடங்கின. 1971 இல் நடந்த ஏப்ரல் கிளர்ச்சியை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே. வி. பி. இயக்கமும் அக்காலப் பகுதியில் தடைசெய்யப்பட்டு,பொது மன்னிப்பின் பேரில் அதன் முக் கிய தலைவர்கள் 1977 இல் சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போன்று எழுந்து,ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தல்களிலும் ஈடுபட்டு,1983 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐ.தே.க. அரசின் பதவிக் காலத்தில் மீண்டும் தடை செய்யப்பட்டது.1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து கிளர்ச்சிகளை நடத்தியதையடுத்து,இவ்வியக்கத்தினர் கொடூரமாக அழிக்கப்பட்டனர்.அதன் தலைவர்கள் ரோகண விஜேவீரா,உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார,மாரசிங்க உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

சகோதர தமிழ் விடுதலை இயக்கங்களை ஆயுத ரீதியில் தடை செய்து விட்டு, ஈழத்தமிழ் மக்களின் ஓரே ஒரு பேரியக்கம் தமது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்தான் என்று பல ஆண்டுகளாக வடக்கினையும் கிழக்கினையும் தங்கள் கட்டுப்பாட்டிலும்-தென்னிலங்கையை பதட்டத்திலும் வைத்திருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனது போராட்டமும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. கடந்த பதினைந்து ஆண்டு காலமாக தங்கள் தமிழ்த் தேசியத் தலைவர் மீண்டும் வருவார் என்று அவரது விசுவாசிகள் பலர் இந்தியாவிலும்,இலங்கையிலும்,புலம்பெயர் தேசங்களிலும் நம்பிக்கொண்டிருந்த பின்னணியில், அந்தத் தலைவரின் மூத்த சகோதரர் மனோகரன்,இறுதிக்கட்டப் போரில் தனது தம்பி பிரபாகரனும், அவரது குடும்பத்தினரும் இறந்துவிட்டனர் எனவும்,அதற்காக வீரவணக்கம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முப்பது ஆண்டு கால போருக்குப் பின்னர்,பதினைந்து ஆண்டு காலம் மற்றும் ஒரு போரினை தமிழின பற்றாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்தும் நடத்தி வருகிறார்கள்.இறுதிப் போரில் காணாமலாக்கப்பட் டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக நடத்திவரும் அறப் போராட்டங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கையில், நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற ஒரு இயக்கமும் காலத்துக்குக் காலம் அறிக்கைப் போர்களை நடத்திக் கொண்டிருக்கிறது.அகிம்சைப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்ட த்தையும் கண்ட நாம், தற்போது இராஜ தந்திரப் போராட்டத்தை நடத்தி வருவதாக எம்.ஏ.சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் சொல்லி வருகின்றனர். 

விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட் டியிட்டு நாடாளுமன்றம் சென்ற தமிழ்ப் பிரதிநி திகளும் நாடாளுமன்றத்துள்ளும் வெளியிலும் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இறுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையையும் காண் பித்து குரல் எழுப்பியிருக்கின்றனர்.விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மற்றும் ஒரு கருத்துப் போராட்டத்தையும் தற்போது நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணிகளுடன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இன்னுயிர்களை நினைவுகூர்ந்து அவர்களின் உறவுகள் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளை தடை செய்கிறது தற்போதைய அரசு. சில வருடங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான எழுச்சி மிக்க போராட்டம் காலிமுகத்திடலில் பல மாதங்கள் நடந்த போதும் ஒரு மே மாதம் வந்தது.அவ்வேளையிலும் அந்தத் திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. இதனை பெரும்பான்மை இன மக்களே முன்னின்று செய்தனர். 



இந்தச் செய்திகளுக்கு பின்னணியில்தான்,தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தி.லஜபதிராய் எழுதி வெளியாகியிருக்கும் 'வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்' என்ற இலங்கை அரசியல் ஆய்வு நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பரில்தான் இந்த நூல் வெளியாகியிருக்கிறது.தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம்,அகஸ்தீஸ்வரம் என்ற ஊரில் 1965 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் லஜபதிராய் சட்டம் பயின்றவர்.வழக்கறிஞராக பணிபுரியும் இவர்,2023 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிரேஷ்ட வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டவர்.343 பக்கங்களைக் கொண்ட வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் நூலை நீண்ட கால தேடுதலில் இவர் எழுதியிருக்கிறார். இதற்காக இவர் இலங்கைக்கும் சென்றிருக்கிறார். பலரை சந்தித்திருக்கிறார். தமது ஆய்வுக்கு தேவைப்பட்ட ஏராளமான நூல்களை படித்திருக்கிறார். இவருக்கு அரசியல் மட்டுமல்ல, இலக்கியமும் தெரிந்திருக்கி றது என்பதை இந்த நூலின் பக்கங்களை வாசித்து கடந்து செல்லும்போது அறியமுடிகிறது.

கொஞ்சம் புவியியலும் கொஞ்சம் வரலாறும், வேடர்கள், அனகாரிக தர்மபால, மலையகம், அல்ஃபிரட் துரையப்பா,வல்லிபுரம் வசந்தனின் நெல்லியடித் தாக்குதல்,ராஜீவ் ஓட்டிய இறுதி விமானம்,ராஜீவ் காந்தியை கொலை செய்தது யார்?, உயிரைக்கொடுத்து உலகப்புகழ் பெற்ற ஒளிப்படமெடுத்த ஹரி பாபு, புலிகளின் இனியவை நாற்பது,புலிகளின் இன்னா நாற்பது,புலிகளும் முஸ்லிம்களும்,பிரபாகரனின் இறுதிப்போர்,பிரபாகரனின் சாதியைத் திருடிய தமிழகம்,இலங்கையில் முஸ்லிம்கள்,தமிழரும் சிங்களவரும்,தமிழும் சிங்களமும் : ஓர் அறிமுகம், மகாவம்சத்தின் எல்லாளனும், சிலப்பதிகாரத்தின் மனுநீதிச் சோழனும்,மெட்ராஸ் உயர்நீதிமன்ற சமநீதிச் சோழனும், சோழர்கள், நூலக உலாவும் நேர்காணல்களும் முதலான இருபது தலைப்புகளில் இந்த விரிவான அரசியல் ஆய்வு நூலை லஜபதிராய் எழுதியுள்ளார்.சில அத்தியாயங்களை படிக்கும்போது,நாம் அதிர்ந்து விடுகின்றோம். தீர்க்கதரிசனமற்ற அரசியல் முடிவுகள் எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சான்றாதாரங்களுடன் நூலாசிரியர் விபரிக்கிறார்.

இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியிலேயே முறிந்த பனை, மற்றும் சி. புஷ்பராஜா அடேல் பால சிங்கம், அன்டன் பாலசிங்கம்,அனிதா பிரதாப்,உட்பட பலர் எழுதிய நூல்களை பார்த்திருக்கின்றோம். போர் முடிவுக்கு வந்த பின்னர் ஆங்கி லத்திலும், சிங்களத்திலும், தமிழிலும் பல நூல்கள் வெளியாகிவிட்டன. இலங்கை - இந்திய இராணுவத் தளபதிகள் மட்டுமன்றி, போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராகவும், காலம் செய்த கோலத்தினால், பின்னர் நாட்டின் அதிபராகவும் பதவி ஏற்று, காலிமுக போராட்டத்தையடுத்து பதவியைத் துறந்து சென்றிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவும் நூல்கள் எழுதியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் போர்க்களம் பற்றி நன்கு அறிந்து எழுதியவர்கள்.

ஆனால், வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் நூலை எழுதியிருக்கும் லஜபதிராய்இலங்கை தொடர்பாக வெளியாகியிருக்கும் நூல்களையும் ஈழப்போரில் இயக்கங்கள்-முக்கியமாக விடுதலைப்புலிகளினதும்,இலங்கை-இந்திய அரசுகளின் வகிபாகம் பற்றியும் ஏற்க னவே எழுதப்பட்டிருக்கும் நூல்கள் பலவற்றையும் ஆதாரமாக்கொண்டு,காய்தல்,உவத்தல் இன்றி அரசுகளுக்கோ,ஈழ விடுதலை இயக்கங்களுக்கோ சார்பான நிலைப் பாட்டினை எடுக்காமல்,பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று எழுதியிரு க்கிறார்.ஈழ அரசியலை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் மற்றும், செய்தி ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த நூல், ஏராளமான தரவுகளைத் தருகின் றது. நேற்றைய செய்திதான் நாளை வரலாறு.கடந்து சென்ற செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இருப்பின் அச்செய்திகள் பொதிந்த வரலாறும் மகிழ்ச்சியையே தரும். ஆனால், இலங்கை அரசியல் தலைவர்களும், ஆயுதம் ஏந்திய தலைவர்களும் எடுத்த தீர்க்கதரிசனமற்ற தவறான முடிவுகளினால் தாங்களும் ஆயுதங்களுக்கு பலியாகியிருக்கின்றனர்.அத்துடன் மக்களையும் பலிக்கடாவாக்கியிருக்கி ன்றனர் என்பதை இந்த நூல் பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. அங்கதச் சுவையுள்ள குட்டிக்கதைகளையும் இந்நூலில் ஆங்காங்கே பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். 

"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியர்,வரலாறு என் வழிகாட்டி"எனச் சொல்லிக்கொண்டிருந்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் களமுனையில் உயிர் நீத்ததாக நம்பப்படும் 2009 மே 18 ஆம் திகதியை நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறார்களே என்பதுதான் இலங்கை அரசின் ஆதங்கம்.அதனால்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொல்லப்பட்ட மக்களுக்கு மாத்திரம் அல்ல,தமிழ்த் தேசியத்தலை வருக்காகவும்தான் என்று அரசு நம்புகிறது போலும்.அந்தப் போரின் வெற்றியை கொண்டாடிய இலங்கை அரசுத்தலைவர்களும் இராணுவத் தளபதிகளும் பாற்சோறு உண்டு களித்ததையும் வரலாறு எமக்கு சொல்கிறது. வரலாற்றை வழிகாட்டியாகக்கொள்ள விரும்புபவர்களுக்கு லஜபதிராய் எழுதியிருக்கும் வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் நூல், சிங்கள-ஆங்கில மொழிகளிலும் வெளியாகவேண்டும்.லஜபதிராய் ஏற்கனவே, பல அரசியல், ஆய்வு, ஆவண நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.அருந்ததி ராய் எழுதிய குஜராத் முஸ்லிம்கள் படுகொலைகள் தொடர்பான கட்டுரைகளையும் தமிழ் மொழியில் பெயர்த்திருப்பவர்.


@முருகபூபதி

Post a Comment

Previous Post Next Post