.

முகில் எழுதிய பய சரித்திரம் என்னும் புத்தகமானது ஆதி முதல் கி.பி 1435 வரை பயம் செய்தவர்களினது வரலாற்றை அந்தக் காலகட்டங்களில் நடைபெற்ற பயணிகளின் பயக் குறிப்பை அடியொட்டியதாக அமைகிறது.

தமிழில் இது போன்ற நூல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.மிகவும் குறைவே.தமிழ் எழுத்தாளர்களில் பா.இராகவன், தருமி, அருணன்,பிரபஞ்சன், லதா ஆகியோருக்குப் பிறகு பயண சரித்திரம் நூல் மூலம் என்னைக் கவர்கிறார் முகில்.முகிலுடைய எழுத்துக்கள் சுவாரஸ்யமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.எந்தவொரு கட்டத்திலும் அலுப்பு தட்டவில்லை என்பது பயண சரித்திரத்தின் பலம் என்றே சொல்ல வேண்டும்.பயண சரித்திரம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கிறன.அது இந்தப் புத்தகத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக காணப்படுகிறது. ஓவியங்களை மிகவும் நேர்த்தியாக வரைந்தி ருக்கிறார் புத்தக வடிவமைப்பாளர்.மிகவும் இரசிக்கும்படியாக அமைந்த ஓவியங்கள் அவை.

ஆனாலும் ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவது பெரும் குறைபாடாக இந்தப் புத்தகத்தில் எனக்குத் தெரிகிறது.அது இந்தப் புத்தகத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. பொருத்தமான தமிழ்ச் சொற்கள் இருக்க ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவது எப்போதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.அது தமிழின் அழகை வெகுவாகக் குறைத்து விடும்.புத்தகம் என்பது அடுத்த தலைமுறைக்கு நாம் கையளிக்கும் சொத்தென்றே சொல்ல வேண்டும் அப்படியிருக்கும்போது தங்கிலிஸ் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

பயண சரித்திரம் சுவையானதாக அரிய தகவல்கள் நிரம்பியதாக படிப்பவர்கள் தாங்களே பயண அனுபவத்தைப் பெற்றதைப் போன்ற உணர்வைத் தருவதாக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட வரலாற்று அனுபவத்தை தருகிறது பயண சரித்திரம்.ஒரு சிறந்த பயண சரித்திர நாவலுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த நூல் நிறைவு செய்கிறது.

உலகின் முதல் கடல் பயணி யார் என்று எம்மில் யாராவது அறிந்திருக்கிறோமா எனக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியவில்லை.யார் அந்த முதல் கடல் பயணி என்பதை வரலாற்று ஆராய்ச்சியின் படி சொல்லியி ருக்கிறார் முகில்.பாலிநேசியர்கள் உலகின் கடல் பயணத்தில் சிறந்தவர்கள். முன்பு துப்பாக்கிகள் கிருமிகள் எகு நூலில் அறிந்திருப்பதால் பாலிநேசியர்கள் பற்றிய முகிலின் விளக்கம் எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.உலகின் கடல் கடந்த குடியேற்றம் பிலிப்பைன்ஸ்ஸில் நடந்திருக்கலாம்.கி.மு 50000 சமயத்தில் இந்தோனேசியாவின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் குட்டித் தீவுகளிற்கு மனிதர்கள் இடம்பெயர்ந்திருக்கலாம்.

உலகம் தட்டையானதா உருண்டையானதா அது செவ்வக வடிவானதா சதுரத் தோற்றம் கொண்டதா என்றெல்லாம் குழம்பிப் போனான் அக்கால மனிதன். ஆளுக்கொரு முடிவுடன் வலம் வந்தார்கள்.அதற்கெல்லாம் தெளிவான விடைகள் ஒரு சிலர் துணிவாக மேற்கொண்ட பயணங்களின் முடிவில்தான் கிடைத்தன.இந்தப் பூமிப் பந்து தன்னுள்ளே மறைத்து வைத்திருந்த ஆயிரமாயிரம் இரகசியங்களை,எண்ணிலடங்கா ஆச்சரியங்களை அதிசயங் களின் முடிச்சுக்களை அவிழ்க்க எத்தனையோ பேர் தங்கள் உயிர் மூச்சைத் துறந்தார்கள்.அதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசை, இன்னல்கள், செய்த சாகசங்கள்,சந்தித்த சவால்கள் ஏராளம்.அன்று அவர்கள் விதைத்ததன் பலனை நாம் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்துதான் கடல் பயணங்களில் ஐரோப்பாவின் எழுச்சியை நாம் காண முடியும்.தாங்களே உலகின் ஆகச் சிறந்த கடற்பயணிகள் என்பதை நிரூபிப்பதற்காக ஐரோப்பியர்கள் வரலாற்றை மறைக்கிறார்கள் மாற்றி எழுதியிருக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டை நாம் நிராகரிக்க முடியாது ஏனென்றால் வரலாறு வென்றவர் களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.அதேசமயம் ஐரோப்பாவின் எழுச்சிக்குப் பிறகு ஏனைய தேசங்கள் கடற்பயண்களில் முடங்கிக் கொண்டதும் உண்மை.

பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகான ஐரோப்பிய கடல் பயணிகள் புதிய வழித்தடங்கள் எதையும் கண்டறியவில்லை என்றாலும் அதற்குப் பிறகான உலகின் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் அவர்களே.பல தேசங்களின் தலைவிதியை மாற்றி எழுதியவர்களும் அவர்களே.ஐரோப்பிய கடற் பயணிகளிற்குப் பின் அவர்களுடைய தேசத்தவர் குடியேற்றங்களை உருவாக்கியது போல் முன்னைய பயணிகளின் தேசத்தவர்கள் எந்தக் குடியேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வரலாறு சொல்லும் பாடம். அவர்கள் வெறும் பயணிகளே நாட்டைப் பிடிக்கவரவில்லை என்பதை அவர்களுடைய பயணங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

வரலாறு உருவானதென்னவோ பயணங்களால்தான்.இந்த திசையில் போனால் என்ன ஆகும்..?அங்கே ஆபத்தில்லாத மனிதர்கள் இருப்பார்களா..?கொடிய விலங்குகளிற்கு பலியாக வேண்டுமா..?இந்தக் கப்பல் நம்மைக் கரை சேர்க்குமா..?இந்தக் கடலைக் கடந்தால் ஏதாவது புதிய தேசத்தைக் கண்டடைவோமா..?இந்த பெரிய மலையைக் கடந்தால் அந்தப் பக்கம் என்ன தேசம் இருக்கும்..?மீண்டும் நான் உயிரோடு திரும்புவேனா..? இந்தக் கேள்விகளிற்கெல்லாம் பதில் தெரியாமல் பதில்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் எத்தனையோ பயணிகள் காலம் காலமாக கடும் வெயிலிலும் கொடும் பனியிலும் கொடூர புயலிலும் பயணம் செய்திருக்கிறார்கள். பேராபத்துக்கள் நிறைந்த அந்தப் பயணங்களே கண்டம் விட்டு கண்டம் பாயும் கலாச்சாரங்களைப் பரப்பியிருக்கிறன.மனித நாகரிகத்தை செழுமைப்படுத்தியிருக்கிறன.புதிய பேரரசுகளைத் தோற்றுவித்திருக்கிறன மதங்களைப் பரப்பியிருக்கிறன.உலக வரைபடத்தையே மாற்றியமைத் திருக்கிறன.பல பயணங்கள் பதியப்படாமலேயே அழிந்திருக்கிறன முறையாக எழுதப்பட்ட பயணிகள் பல பயணிகளின் பதிவுகளே அந்தந்த நூற்றாண்டுகளின் உலகின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இன்றும் நிலைத்திருக்கிறன.

இபின் பதூதா என்ற கடற்பயணியைப் பற்றி நாம் எல்லோரும் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்போம்.அவரைப் பற்றி விரிவாகச் சொல்கிறது இந்த நூல்.அதிலும் குறிப்பாக இபின் பதூதாவின் இந்தியப் பயணங்கள் முக்கியமானவை.ஏற்கனவே இந்தியாவிற்கு வந்து போனவர்கள் சொல்லாத முக்கிய தகவல்களை இபின் பதூதாவின் பயணக் குறிப்புக்கள் எமக்குச் சொல்கிறன.இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் ஏனைய மதத்தவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து இந்த புத்தகம் விபரிக்கிறது. அந்நாளில் தான் கண்டவற்றை குறிப்பெடுத்துச் சொல்லியிருக்கிறார் இபின் பதூதா.அதைப் போலவே சதிக்கான சடங்குகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் விபரமாக விபரித்துள்ளார்.

இபினின் காலத்தில் மதுரையை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் கியாத் உத் தின் முகம்மது என்பவரின் காலத்தில் ஏனைய மத நம்பிக்கையாளர்களிற்கு அவர் வழங்கிய தண்டனைகள் கொடூரமானவையான இருந்தன.கடவுள் நம்பிக்கையற்றவன் என குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை இபின் கீழ்வருமாறு விபரிக்கிறார்.''ஒருநாள் சுல்தானுக்கு இடப்புறம் நாhனும் வலப்புறம் ஓர் அறிஞனும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.ஒருவன்,அவன் மனைவி,மகன் அங்கே இழுத்து வரப்பட்டனர்.கடவுள் நம்பிக்கையற்றவன் என்பது அவன் மீதுள்ள குற்றம். சுல்தான் சாப்பிட்டபடியே ஆகட்டும் என்றார்.சில நொடிகளில் அவனது தலை தரையில் உருண்டது.சுல்தான் அரபியில் மகன் மனைவி என்றார்.அடுத்த நிமிடம் அவர்களது தலைகளும் தரையில் உருண்டன.''இப்படி இன்னும் ஏராளாமான விபரிப்புக்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.இதிலிருந்து மன்னராட்சியின் கொடூரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.அதனைவிட இந்தியாவில் இஸ்லாமிய அரசர்களது ஆரம்பகால ஆட்சி பற்றியம் தெளிவான குறிப்புக்கள் காணப்படுகிறன.அவை நிச்சயம் அந்நாளைய கொடூரங்களை நினைவுபடுத்துகிறன.மதம் என்னும் காரணியைக் கொண்டு அரசர்கள் புரிந்த கொடூரங்களை வெளிப்படுத்துகிறன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள காலகட்டங்களை யோசித்துப் பாருங்கள். அன்றைய மனிதனுக்கு உலகம் உருண்டை என்பது கூடத் தெரியாது.அது தட்டையானது என்றோ,சூரியன் கடலுக்கு அடியில் போய் மறைவதாகவே நினைத்துக் கொண்டிருந்தான்.எங்கே எந்தெந்த நாடுகள் இருக்கிறன,உலகில் எத்தனை கண்டங்கள் இருக்கிறன.கடல்கள் எங்கே தொடங்கி எங்கே முடிகிறன போன்ற எதுவுமே தெரியாது.இந்தியாவிற்கு கிழக்கில்தான் சூரியன் உதிக்கிறது.அது கடலுக்குள் இருந்து உதிக்கிறதா என்பதை கண்டு பிடித்து விட வேண்டும் என்று மேற்குலகத்தினர் சிந்தித்துக் கொண்டிருந்த கால கட்டமும் இருந்தது.

இப்படி தேசங்கள் கடல்கள் திசைகள் குறித்த எந்தத் தெளிவான புரிதலும் இல்லாத காலத்திலேயே மனிதனின் பயணங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஆதிகாலப் பயணங்களின் தேவை,புதிய வளமான வசதியான,வாழ்வதற்குரிய நிலப்பரப்புக்களைக் கண்டடைவதாகத்தான் இருந்தது.அதற்குப் பின் புதிய தேசங்களிற்குச் சென்று பொருளீட்ட அதாவது தங்கள் பொருட்களை விற்க அல்லது புதிய பொருட்களை வாங்க என்று செல்வம் ஈட்டும் நோக்குடன் வணிகப் பயணங்கள் தொடர்ந்தன.அடுத்தடுத்த தேசங்களை ஆக்கிரமித்து தங்கள் ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவடையச் செய்வதற்கான பேரரசர் களின் படையெடுப்பு பயணங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.

அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்கள் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்போம் ஒரு வகையில் பார்த்தால் அதுவும் ஒரு பயணமே. வாழும்போதே கிழக்கில் சூரியன் உதிக்கும் இடத்தைக் காண நினைத்த அலெக்ஸாண்டர் தன் பயணத்தில் தோற்றுப் போனதாகச் சொல்வார்கள்.அது தவறு என்றே சொல்ல வேண்டும்.கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ஒரு தனி மனிதனின் படையெடுப்பாக வரலாறு கண்ட நீண்ட பயணம் அலெக்ஸாண்டருடையதே அதுவும் இத்தனை பெரிய படையை காடு,மலை,பாலைவனம் என்று சுமார் இருபதாயிரம் மைல்கள் வழிநடத்திச் சென்றவர் அவர் மட்டுமே. அலெக்ஸாண்டருடைய பயணக் கதையை முழுமையாக விவரிக்கிறார் முகில் அதில் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிராத தகவல்களும் உள்ளடக்கம் அதனை வாசகர்கள் புத்தகத்தில் வாசித்து தெரிந்து கொள்வது நல்லது.

உறுதியாகச் சொல்லலாம்.உலகின் வரலாறு என்பது பயணங்களால் நிறைந்தது என்று.அந்த வரலாற்றை இந்தப் புத்தகம் சொல்கிறது.வாசிப்போம்.





Post a Comment

Previous Post Next Post