.

முன்னொரு காலத்தில் விருதூர் எனும் ஊரில் ஒரு  ஏழைத்தாய் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வாழ்க்கை மூன்று வேளை உணவுகூட உண்ண முடியாதளவுக்கு மிகவும் சிரமம் வாய்ந்ததாகவே இருந்தது. அந்த மகனின் பெயர் வெற்றிவேலன். அவன் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவனாக இருந்தான். வெற்றி வாலிப வயதை அடைந்ததும் அவனது தாய் அவனை அழைத்து வெற்றிவேலன் நாம் இப் போது வறுமையின் பிடியில் இருந்தாலும் நீ ஒரு செல்வந்தனின் மகன். உன் தந்தை மிகப் பெரிய வணிகர். அவர் மறைவிற்குப் பின்னரே இப்படி துன்பப்படுகிறோம். உன் தந்தையின் நண்பர் நெல்லை ஊரில் வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் சென்று உதவி கேள் என்று அவனிடம் சொல்லி அனுப்பினார். 

வெற்றிவேலனுக்கு அடுத்தவர்களிடம் உதவி கேட்பது அறவே பிடிக்காது. இருந்தும் தாயின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நெல்லை ஊருக்குச் சென்றான். நெல்லை ஊரில் தனதத்தர் என்ற வணிகரின் வீட்டிற்கு உதவிபெறச் சென்றபோது அவனது கெட்ட நேரமோ என்னவோ வணிகர் கடனை திருப்பித் தராமல் தொழில் நஷ்டம் என்று சாக்கு கூறிய ஒருவரை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வானத்தில்பருந்து ஒன்று பறக்க, அதன் வாயில் கவ்விக் கொண்டிருந்த செத்த எலி ஒன்று அவர்களுக்கு அருகே விழுந்தது. 

அந்த எலியை சுட்டிக்காட்டிய தனதத்தர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருப்பவர்கள் இந்த செத்த எலியைக் கொண்டு கூட சம்பாதித்து நல்ல நிலையை அடைவார்கள் என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றார்.

அவர் பேசியதைக் கேட்ட வெற்றிவேலனின் மனதில் உத்வேகம் பிறந்தது. ஒரு சிறிய காகிதத்தில் உங்களிடம் உதவி பெற வந்தேன். ஆனால் உங்களது வார்த்தையை வேதமாக எடுத்துக் கொள்கிறேன். உங்கள் வீட்டின் முன் இருந்த செத்த எலியை மூலதனமாகக் கொண்டு எனது வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன். விரைவில் உங்களது கடனை திரும்பச் செலுத்துவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தான். 


அந்த எலியை பூனை வைத்திருந்தவர்கள் ஒருத்தர் வீட்டில் தர, அவர்கள் பதிலுக்கு இரண்டு கைப்பிடி வறுத்த நிலக்கடலையை தந்தார்கள். அந்தக் நிலக்கடலையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று எண்ணியவாறே அவன் ஊருக்குச் செல்லும் பாதையில் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அது ஒரு காட்டுப் பகுதி. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஒரு கடையோ, உணவோ கிடைக்காது. அந்த மண்டபத்திற்கு தலையில் விறகினை சுமந்தபடி இரண்டு விறகு விற்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மிகுந்த பசி. வெற்றிவேலன் கையில் வைத்திருந்த வறுத்த நிலக்கடலையின் மணம் அவர்களின் பசியை இரட்டிப்பாக்கியது.கடலை விற்பனைக்கா என்று ஒருவன் கேட்க, இன்னொருவனோ எங்களிடம் பணம் இல்லை, அதற்குப் பதில் நாங்கள் ஆளுக்கு ஒரு விறகு தருகிறோம் என்றனர். 

அவர்களிடம் நிலக்கடலையைத் தந்து அதற்கு ஈடாக விறகினை பெற்ற வெற்றிவேலன்,அவற்றை விற்று மேலும் கடலையை வாங்கினான். 

தினமும் கடலை விற்பனையை தொழிலாக வைத்துக்கொண்டவன். அதற்கு ஈடாக விறகினை பெற்றுக்கொண்டான். விரைவில் அவனது செல்வம் பெருகி அவர்கள் விறகு அனைத்தையும் தானே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தான். அந்த விறகுகளை கிடங்கில் சேமித்தான்.

கார்க்காலம் வந்தது.மழை பெய்து எரிக்க விறகில்லாமல் மக்கள் வாடினர். அந்த சமயத்தில் வெற்றிவேலன் விறகுகளை விற்றான். அதில் நிறைய பணம் கிடைத்தது. அதை வைத்து ஒரு கடை ஒன்றினை ஆரம்பித்தான். அதில் கிடைத்த இலாபத்தை மற்ற தொழில்களில் முதலீடு செய்தான். அவனது புத்திக்கூர்மையால் சில வருடங்களில் அந்த ஊரில் சிறந்த வணிகனாகிவிட்டான். வெற்றிவேலனுக்கு தனதத்தரின் நினைவு தோன்றியது. உடனே தங்கத்தால் ஒரு எலி ஒன்றினை செய்து எடுத்துக் கொண்டவன் நெல்லை ஊருக்குச் சென்று அவரைச் சந்தித்து நடந்ததைக் கூறினான். தனதத்தருக்கு வெற்றிவேலனை நினைவே இல்லை. இருந்தாலும் அவன் எழுதித்தந்த கடிதத்தை பத்திரமாக வைத்திருந்தார். வெற்றிவேலனின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ந்த அவர், அவன் தனது நண்பனின் மகன் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post