.

அருணன் எழுதிய கடவுளின் கதை ஐந்து பாகங்களும் கடவுளின் மதத்தின் தொடக்கப்புள்ளியை அறிந்து கொள்ள உதவுகிறது.நாம் நினைப்பது போல் இந்து மதமோ கிறிஸ்தவமோ இஸ்லாமோ உலகின் முதல் மதமும் அல்ல அதே போல சிவனோ இயேசுவோ அல்லாவோ உலகின் முதல் கடவுளுமல்ல.உலகின் முதல் கடவுள் யார்,மதத்தின் தோற்றுவாய் என்ன எந்த சந்தர்ப்பத்தில் முதல் கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்டார்,ஏன் கடவுள் என்ற ஒன்று மனிதனுக்குத் தேவைப்பட்டது இன்னமும் தேவைப்படுகிறது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளிற்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஆங்கிலத்தில் இது போன்ற கடவுளின் வரலாற்றை அலசுகிற நூல்கள் நிறைய வந்திருந்தாலும் தமிழில் மிகவும் குறைவே.அந்தக் குறையைப் போக்க அருணனின் இந்த நூல் உதவுகிறது.கரேன் ஆர்ம்ஸ்டிராங் எழுதிய கடவுளின் வரலாறு என்னும் ஆங்கில நூலில் ஆபிரகாம் முதல் இன்றுவரை.கடவுளுக்கான நாலாயிரம் ஆண்டு தாகத்தைச் ஆத்திக நோக்கில் சொல்கிறது.அருணின் இந்தப் புத்தகமானது கடவுளின் கதையை யுகவாரியாகச் சொல்லிச் செல்கிறது.கடவுளை நம்பிக்கை என்னும் நோக்கில் மட்டுமல்ல பகுத்தறிவு நோக்கிலும் தன்னுடைய பாணியில் சலிப்பூட்டாமல் சொல்லியிருக்கிறார் அருணன்.

கடவுளின் கதையானது நம்பிக்கை நம்பிக்கையின்மை என்னும் இரண்டும் சேர்ந்தது.நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களிற்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலான மோதல் அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள் அவற்றில் எழுந்த முரண்கள் ஏகக் கடவுளைக் கொண்டு வரத் துடித்த தீவிரம் ஆனால் அதற்கு பல கடவுள்காரர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு அப்படிக் கொண்டு வரப் பார்த்த போது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தை கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும் பன்முகப் படுத்தப்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது.

மதம் எனப்பட்டது கடவுளை மையமாகக் கொண்டு உருவான நம்பிக்கைகள் வழிபாடுகள் சடங்குகள் நிறுவனங்கள் கடவுள் இல்லாத மதங்களாக பௌத்தம்,சமணம் போன்றவை இருந்தாலும் பிற்காலத்தில் அவற்றைத் தோற்றுவித்த புத்தரும் மகாவீரரும் கிட்டத்தட்ட கடவுளாக்கப்பட்டு விட்டனர். அதாவது மனிதர்கள் கடவுளாக மாறி விட்டனர்.ஆக மதம் என்றாலே கடவுள் அல்லது கடவுளைப் போன்ற ஒன்று உண்டு என்பது நிச்சயம்.

கடவுள் ஆதி அந்தமும் இல்லாதவர் தொடக்கம் முடிவு இல்லாதவர், நித்தியமானவர் என்று கதை சொல்லப்படுகிறது.அவருக்கு எப்படி தொடக்கம் இருக்கும் என்று பக்திமான்கள் அல்லது மதவாதிகள் நினைக்கலாம் சிக்கல் என்னவென்றால் கடவுளைப் பற்றி பேசுகிற மனிதனுக்கு தொடக்கத் என்பது இருக்கிறது.எந்த மிருகமாவது கடவுளைப் பற்றி பேசுகிறதா..?எந்த மிருகமாவது கடவுள் வழிபாடு செய்கிறதா..?அதுவெல்லாம் மனிதர்களின் வேலையே. 

கடவள்-அமானுஸ்ய சக்தி-சடங்கு என்பனவற்றை மனிதன் கடைப்பிடித்தான் என்பதற்கு முதல் ஆதாரம் என்ன..?எப்போது இவை அல்லது இவற்றில் ஒன்று தொடங்கியது என்பதற்கு வரலாற்று சாட்சி என்ன..? சேப்பியன்ஸ்ஸை விட ஏனைய மனித இனங்கள் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டார்களா..?அவர்களின் நம்பிக்கைகள் என்ன என்பதை விரிவாக அலசியுள்ளார் அருணன்.அதனை புத்தகத்தில் வாசித்துக் கொள்ளுங்கள்.

ஆரம்ப கால மனிதர்களிற்கு மதவுணர்வு எவ்வாறு எழுந்தது..?இதற்கான காரணங்களாக மூளையின் அளவு பெரிதானது,கருவி தயாரிப்பு மற்றும் பயன்படுத்துதல்,மொழி வளர்ச்சி ஆகியனவற்றை பட்டியலிட்டுள்ளார் அருணன்.அதனை விஞ்ஞான ரீதியாக விளக்கியிருப்பது சிறப்பு.

சுமார் பத்து இலட்சம் ஆண்டுகள் மனிதன் வேட்டைக்காரனாகத்தான் அலைந்து கொண்டிருந்தான்.மிக நீண்ட யுகம் இதுதான்.இதில் கடைசி நாற்பதாயிம் ஆண்டுகளில்தான் அவனது அறிவுத் திறன்,கற்பனைத்திறன் இதர திறன்கள் வளர்ந்து முழு மனிதக் கட்டத்தை நெருங்கினான்.உணவுத் தேடலே அவனது நித்திய வாழ்க்கையாக இருந்தது நிரந்தர வசிப்பிடமும் சேமிக்கும் பொருளியலும் இல்லாத அந்த ஆதி நாளில் உடைமைகள் இல்லை, ஏன் பிள்ளைகள் கூட சுமைகளாகவே தெரிந்தன அவர்களை வைத்துக் கொண்டு மிருகங்களையும் துரத்த முடியவில்லை,இயற்கை சீற்றங்களி லிருந்தும் தப்பித்து ஓட முடியவில்லை.இந்த நிலையில் கடவுள் என்ற கதையே அங்கு இல்லை.

தனக்கு வீடுகள் இருப்பது போலத் தனது கடவுளுக்கும் வீடுகள் ஒதுக்கத் தொடங்கினான் மனிதன்.அதில் தனது பிரதான கடவுளுக்கு ஒரு வீடு கட்டினான்.சுமேரிய மெழியில் வீடு,கோயில் இரண்டுக்குமே ஒரே சொல்தான் இருக்கிறது.கடவுள்கள் பூமிக்கு வரும்போது தங்கும் வசதியோடு வரவில்லை.அவற்றின் மீது மரியாதை கொண்டு வீடு பார்த்து தந்தவன் மனிதனே.அதாவது தனது கற்பனையில் உருவான கடவுள்களிற்கு நடைமுறையில் தெய்வீக அந்தஸ்து தருவதற்காக பௌதீக ரீதியான ஏற்பாடுகளை விரிவாக செய்தவன் மனிதனே.

இயற்கை எப்போதும் மனிதனை வென்று கொண்டே இருந்தது.அதனிடம் தோற்றுக் கொண்டே இருந்தான் மனிதன்.இயற்கையை உண்மையில் வெல்ல முடியாத மனிதன் தனது கற்பனையில் வெல்லப் பார்த்ததன் விளைவே கடவுள்கள்.ஏகக் கடவுள் என்று தொடக்கத்தில் கற்பிதம் செய்யாமல் ஒவ்வொரு இயற்கை சக்திக்கும் ஒரு கடவுள்,அந்தக் கடவுள்களின் கூட்டணி என்று கற்பிதம் செய்ததிலிருந்தே அந்த மகத்தான உண்மையை சட்டென்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பௌத்தம் என அத்தனை பெரிய மதங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை தன்னுடைய பாணியில் எடுத்துரைக்கிறார் அருணன்.அவ் மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத விடயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.இதன் மூலம் நூலாசிரியர் எந்த மதத்தையும் சார்ந்து இருக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார்.இவ்வளவு முற்போக்கான சிந்தனைகள் கொண்ட அருணன் ஒரு கட்டத்தில் ஓரினச் சேர்க்கையை மட்டும் விமர்சிக்கிறார் இயற்கைக்கு ஒவ்வாதது என்கிறார் ஆனால் அதுவும் இயல்பான மனித உணர்வு என்பதை நூலாசிரியர் புரிந்து கொள்வில்லை என்றே தோன்றுகிறது.

உலக வரலாற்றிலேயே ஒரு மதத்தின் ஸ்தாகர் எனப்பட்டவர் வலுவான கடவுள் எதிர்ப்பு வாதங்களை முதன்முதலாக முன் வைத்தார் என்றால் அவர் புத்தர்தான்.கடவுள் எதிர்போடு ஒரு புதிய சமூக ஒழுங்கு முறையை சிந்தனைக் கட்டமைப்பை மேம்படுத்த முயன்ற மகா புதுமையான முயற்சி அவருடையது.அவருக்கு பின்னர் இத்தகையை முயற்சியில் ஈடுபட்ட வேறு மத ஸ்தாபகர்கள் உலகில் தோன்றவும் இல்லை இது விடயத்தில் முதலும் முடிவும் ஆனார் அவர்.

மதங்களின் தோற்றத்திற்கு இப்படியாக விளக்கம் ஒன்று தந்துள்ளார் அருணன்.மரணத்தைக் கண்டு பயந்த மனிதன் அதற்கான காரணத்தை தேடினான்.பிறப்பு இருந்தால் இறப்பு உண்டு என்னும் இயற்கை விதியை அவனால் சுலபமாக ஏற்க முடியவில்லை.மாறாக ஏவாளின் தூண்டுதலால் ஆதாம் என்பவன் பாவம் ஒன்றைச் செய்தான் அந்தப் பாவத்தின் பலனாகவே சம்பளமாகவே மரணம் நேரிட்டது எனச் சொல்லத் தொடங்கினான். இப்படியாக மனிதர்கள் மத்தியில் காலப்போக்கில் உருவான பாவங்களிற்கான பொறுப்பிலிருந்து கடவுள் விடுவிக்கப்பட்டு ஒரு மனித ஜோடியின் தலையில் அதுவம் ஏவாள் என்னும் பெண்ணின் தலையில் அவை சுமத்தப்பட்டன என்கிறார் அருணன்.

மதத்தின் பெயரால் நடைபெறும் போர்கள் ஆக்கிரமிப்புக்கள் என்பன வரலாறு நெடுக தொடர்ந்தே வந்துள்ளது.ஒரு கடவுளின் இருப்பிடத்தை அழிக்கும் வேலையை கடவுள் மறுப்பாளர்கள் அல்ல இன்னொரு கடவுளின் ஆதரவாளர்களே செய்வார்கள் என்பது எமக்கு வரலாற்றில் நன்கு தெரியும் உதாரணமாகும்.அதாவது அடுத்தவர் புனிதமாக கருதுகிற வழிபாட்டுத்தலம் அழிக்கப்படும்போது அதில் மகிழ்ச்சி காட்டுகிற மனப்பான்மை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே மதவாதிகளிடம் வந்து விட்டது என்கிறார் அருணன்.சகல மதங்களும் அன்பையே போதிக்கிறன எனப்ப டுகிறது ஆனால் வரலாற்றின் சாரம் வித்தியாசமாகவே உள்ளது.அங்கே வியாபாரப் போட்டியைப் போல மதப் போட்டியும் நிறைந்துள்ளது.போட்டி கடுமையாகும்போது சகல அக்கிரமங்களும் வியாபாரிகள் உலகில் மட்டுமல்ல கடவுள்கள் உலகிலும் நடந்தே வந்துள்ளன.

நிலப்பிரபுத்துவ யுகம் என்பது கி.பி 600-1600 வரையிலான ஆயிரம் ஆண்டு காலம்.இந்தக் காலப்பகுதியில்தான் கடவுளின் ருத்திர தாண்டவம் நடைபெற்ற காலப்பகுதியாகும்.மத நிறுவனத்திற்கும் அரசு அமைப்புக்கும் வித்தியாசம் தெரியாத காலம்.கடவுளின் பிரதிநிதியாக ராஜாவே அரியணையில் அமர்ந்திருப்பதாகக் கருதப்பட்ட காலம்.ராஜாவின் அதிகாரம் மக்கள் கூட்டத்திடமிருந்து அல்ல கடவுள் சக்தியிடமிருந்து பெறப்பட்டது என்னும் மத அரசியல் சித்தாந்தம் கோலோச்சிய காலம்.இதனால் மத மோதல்களுக்கும் ராஜாக்களின் மோதல்களிற்கும் வேறுபாடு தெரியாத காலம்.இத்தகைய சூழலில் கடவுளைசட சுற்றிக் கட்டமைக்கப்பட்ட சில கருத்தியல்களும் சடங்குமுறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.பகுத்தறிவானது பிற மதங்களை விமர்சிக்கவும் சொந்த மதத்தை நியாயப்படுத்தவும் மட்டுமல்ல சொந்த மதத்தை சீண்டவும் பயன்பட்டது.அது தனது இயல்பான குணத்தைக் காட்டியது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுடன் என்கிறார் அருணன்.

எந்தக் கடவுளாலும் மக்களைக் காப்பாற்ற முடிவதில்லை.தன்னுடைய பெயரால் நடைபெறும் போர்களையும் தடுக்க முடிவதில்லை தன்னை நம்பியிருக்கும் மக்கள் கூட்டத்தையும் காப்பாற்ற முடிவதில்லை.போர் அல்லது அனர்த்தம் ஒன்று நடந்தால் முதலில் காணாமல் போவது கடவுள் என்ற ஒருவரே.அந்த சந்தர்ப்பத்தில் ஓடி ஒளிந்து விடுவார் கடவுள் என்ற காலாவதியான நபர்.ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்ப டும்போது எந்தக் கடவுளும் தடுப்பது இல்லையே...?எந்த தவறும் செய்யாத பெண் பாதிக்கப்படும்போது கடவுள் எங்கே காலமாகி விட்டார் என்று சொல்லலாமா...? என்னும் கேள்விகள் இயல்பாகவே எம்முள் எழுகிறது.

மதவாதிகள் கூறுகிற எல்லாம் கடவுளின் சித்தத்தில் இயங்குகிறது என்றால் ஏன் பாவங்கள் நடைபெற வேண்டும்..?அவற்றை ஏன் அந்தக் கடவுள் தவிர்த்திருக்க கூடாது..?மனிதனின் சுதந்திரத் தேர்வும் ஒரு காரணம் என்றால் அதனை மனிதனுக்கு கொடுக்காமல் தவிர்த்திருக்ககூடாதா..?பிசாசுகளின் வேலையும் உண்டு என்றால் அவற்றை சங்காரம் செய்திருக்க வேண்டாமா..?இவையெல்லாம் கடவுளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்றால் கடவுள் மிகவும் பலவீனமானவரா..?அப்படிப்பட்ட கடவுள் உண்மையில் எதற்கு என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.இதனை தனது மொழியில் கேலியும் கிண்டலுமாகச் சொல்லியிருக்கிறார் அருணன்.

நாத்திகர்கள் வந்தால் ஒழுக்கம் கெட்டுவிடும் கடவுளும் மதங்களும் இருப்பதால் மனிதர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான பொய்.மனிதர்கள் ஒழுக்கமாக இருக்க கடவுள் தேவையில்லை எம்முடைய சட்டங்களே காணும்.எமது பொதுச் சட்டங்களை எடுத்து விட்டால் மதத்தையும் கடவுளையும் கொண்டு மனிதர்கள் ஒழுக்கமாக இருந்து விடுவார்களா என்ன..,?குற்றவாளிகளில் 90 வீதத்திற்கு மேல் ஆத்திகர்கள்தான் அவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்டு குற்றம் செய்யாமலா இருக்கிறார்கள்..?அல்லது அவர்கள் குற்றம் செய்யும்போது கடவுளும் தடுப்பதில்லையே.. இதிலிருந்து புரிகிறதல்லவா மனிதர்கள் ஒழுக்கமாக இருக்க கடவுள் என்னும் கற்பிதம் தேவையில்லை என்பது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தில் புராட்டஸ்டன்டியம் என்று தோன்றி முதலாளி யுகம் என்னும் புதுயுகம் பிறக்க நடக்க வேண்டிய மதச் சீர்திருத்தங்கள் நடந்ததே அந்த மதத்தின் உள்ளும் வெளியிலும் பகுத்தறிவு ஞானிகள் பலர் தோன்றினார்களே அப்படி இந்த 19ம் நூற்றாண்டிலும் இஸ்லாம் பௌத்தம் இந்து மதம் ஆகியவற்றில் நடைபெறவில்லை.இவை இருந்த ஆசியா ஆபிரிக்கா என்பவை மதப் பழைமைவாதம் மண்டிக் கிடக்கும் பூமியாகவே இன்னமும் இருக்கிறன.இவை ஐரோப்பாவின் குடியேற்ற நாடுகளாக ஆகிப்போக பங்களித்த காரணிகளில் இந்த மத அம்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அருணன்.

கிறிஸ்தவ மதச் சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்க 19-20 அத்தியாயங்கள் ஒதுக்கியிருக்கும் அருணன் ஏனைய மதச் சீர்திருத்தங்கள் பற்றி ஆராய குறைந்தளவிலான பகுதிகளையே ஒதுக்கியிருக்கிறார் அதற்குரிய காரணம் ஏனைய மதங்களில் சீர்திருத்தங்கள் விமர்சனங்கள் மிகக் குறைந்த அளவே இருந்தன.சுய விமர்சனம் என்பதே இல்லை என்பதாகும்.சுய விமர்சனங்கள் இல்லாத ஏனைய மதங்கள் இன்னமும் தேங்கிய குட்டையாகவே நின்று கொண்டிருக்கிறன என்பதை நடப்பில் நாம் பார்க்கலாம்.

மனிதனின் கண்டுபிடிப்பு கடவுள் என்பதால் அது மனிதனைப் போலவே இருக்கிறது.அது அடையாளப்படுத்தப்படும் விதம் முழுக்க முழக்க மனித விளைவுகளாகவே உள்ளது.சரியாகச் சொன்னால் எதை உச்ச பட்சமாக யோசிக்க முடியுமோ அதன் கூட்டு மொத்தமாகக் கடவுள் உள்ளது.பறவையின் பாடுபொருளாகக் கடவுள் இருந்தால் அது இறக்கை உள்ளதாக இருக்கும் இறக்கையைத் தவிர வேறு எதுவும் பறவைக்கு உயர்ந்ததோ பிரமாதமானதோ இல்லை.தனது கண்டு பிடிப்பாகிய கடவுளை தன்னைப் போலவே படைத்தான் மனிதன்.இதனை அறிய ஒவ்வொரு சமுதாயங்களாக எடுத்தியம்பகிறது இந்தப் புத்தகம்.சமுதாய மாற்றங்கள் எந்தவகையில் மதத்தையும் கடவுளையும் பாதிக்கிறன என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் அருணன்.

மரணத்திற்குப் பிறகும் வாழ்வு உண்டென்றால் அது எப்படி மரணமாகும் என்று யோசிக்க வைக்காத மதம் மனிதர்களை பொய்ப் பெருமிதத்தோடு அநியாய யுத்தங்களிலும் அதர்ம காரியங்களிலும் சர்வ சாதாரணமாக உயிரை விட வைத்தது.மரணத்திற்கு பிறகும் வாழ்வு உண்டு என்று மதம் கட்டமைத்த பொய் நம்பிக்கை இருபக்கமும் கூர்மையான வாள்.அது மனிதர்களை நியாயத்திற்காகவும் சாக வைத்தது.அநியாயத்திற்காகவும் சாக வைத்தது மனிதனுக்கு ஒரு பிறப்புத்தான்-ஒரு இறப்புத்தான் என்று இதே மதங்கள் உண்மையைச் சொல்லியிருந்தால் வரலாறு எப்படி மாறியிருக்கும் என்பதே வினோதமானது.மனித முயற்சிகள் தளர்ந்து போயிருக்கும் என்று அச்சம் பிறந்தாலும் அநியாய யுத்தங்களிற்கு ஆட்கள் கிடைத்திருக்காதே என்று நிம்மதியடையலாம்.எப்படியோ வரலாறு இனி மாறப் போவதில்லை. மனித முயற்சிகளைத் தூண்டி விட இனியும் பொய் நம்பிக்கைகள் தேவையில்லை யதார்த்த உண்மைகளே போதும் என்ற காலம் பிறக்கட்டும்.

தற்போதைக்கு உலகளாவிய ரீதியில் மதச்சார்பற்றவர்கள் 36 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறனர்.அதாவது கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்திற்கு எந்த மதத்தையும் சாராதவர்கள் வந்து விட்டார்கள்.இதன் மூலம் மத நம்பிக்கை யானது தொடர்ந்து குறைந்து வருகிறது என நாம் கோடிட்டுக் காட்டலாம் இதிலிருந்து முக்கியமான உண்மை வெளிப்படுகிறது.தங்கள் மதமே உயர்ந்தது அதுவே உலகம் முழுவதிற்கும் ஏற்றது எனச் சொல்லி அதைப் பரப்புவதில் திட்டமிட்டு முனைப்புக் காட்டியது கிறிஸ்தவம்,அடுத்து அந்த வரிசையில் வந்தது இஸ்லாம்.ஆனால் இன்றைய நிலையில் அந்த இரு மதங்களோ அவற்றில் ஒன்றோ உலகம் முழுவதிற்கும் பரவுவதாகத் தெரியவில்லை.மாறாக அவை இரண்டும் தேங்கியோ அல்லது மங்கியோ போயுள்ளன.உலக மதங்களிற்கு மாற்றாக எந்த மதத்தையும் சாராதவர்கள் கணிசமாக வந்து விட்டனர்.உள்ள பல மதங்களிற்கு ஒரோயொரு மாற்று அல்ல சகல மதங்களிற்குமே ஒரு மதமற்ற மாற்று புறப்பட்டுக் கொண்டிருக்கிறது அதுவே இன்றைய வாழ்வின் உண்மை.முதலில் மதங்கள் மீது நம்பிக்கை இழக்கிறவர்கள் முடிவில் கடவுள் மீதும் நம்பிக்கையை இழக்கிற வாழ்வியல் உண்மைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கடவுள் தனது அதிகாரங்களை மனிதனிடம் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சக மனிதர்களை நம்ப முடியாததால் மனிதன் கடவுளை நம்பினான் அவர்களை நம்பக் கூடியதான ஒரு சமூதாய அமைப்பு உருவாகுமேயானால் மனிதர்கள் கடவுளை நம்ப மாட்டார்கள்.தனக்குரியது கிடைக்கும்  சமுதாயமே அதனைக் கொடுக்கும் என்பதை நடைமுறையில் கண்டால் கடவுளை மனிதர்கள் தேட மாட்டார்கள்.கடவுளின் இடத்தில் மனிதர்கள் வருவார்கள். கடவுளிடம் தனது மனிதத்தை இழந்த மனித குலம் மீண்டும் அதனைக் கைப்பற்றும்.கடவுளை மற மனிதனை நினை என்ற முழக்கம் கூட இருக்காது.அப்படியொரு சிறந்த யுகம் உருவாகும்போது அதனைக் காண மனிதர்கள் இருப்பார்கள்,ஆனால் கடவுள் இருக்கமாட்டார்,அவர் கதை முடிந்திருக்கும் என்று எதிர்காலத்தை முன்னறிவிக்கிறார் அருணன்

மொத்தத்தில் கடவுளின் கதை புத்தகமானது கடவுளைப் பற்றிய ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் அலசுகிறது.அதனை வாசித்த பிறகு கடவுளின் வரலாற்றை ஒவ்வொருவரும் கண்டு கொள்ளலாம் மூட நம்பிக்கைகளை ஒழித்து புது யுகத்தில் பயணிக்க கடவுள் என்னும் கற்பனாவாதத்தை முறியடிக்க இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும்.வாசிப்போம்..

2 Comments

  1. மிக அருமையான,விமர்சனம் கண்டிப்பாக வாசித்து அறிய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக அறிகிறேன். நன்றிகள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நிறைய இருக்கிறது.கட்டாயம் வாசியுங்கள்.

      Delete

Post a Comment

Previous Post Next Post