.

 'வில்லில் அம்பைப் பொருத்து!’

         “அதோ, அந்தப் பழத்தை குறி பார்த்து அம்பை விடு!”

“நாணை இழு... விட்டு விடு...”

     “ச்ய்ங்ங்ங்....

இப்படிப்பட்ட சத்தங்கள் காட்டில் ஒலித்துக் கொண்டிருந்தன. வில்லில் இருந்து விடுபட்ட அம்புகள் சரமாரியாகப் பறந்தன. இது அந்தக் காட்டில் காலை முதல் மாலை வரை நடக்கும் வழக்கமான காட்சி.ஆனால் பயிற்சியாளர்களும், பயிற்சி பெறுபவர்களும் மனிதர்கள் அல்ல;குரங்குகள்.


அருணாசல பிரதேசத்தில்,டிபாங்க் பள்ளத்தாக்கில் இடு மிஷ்மி என்ற காட்டுவாசிகள் வசிக்கும் அடர்ந்த காட்டில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.

அந்தக் காட்டிலிருந்த குரங்குகள் அம்பு எய்வதில் தலை சிறந்த வல்லுநர்
களாக விளங்கின.குரங்குகள் தங்கள் அம்பு எய்யும் திறமையை பழங்களை
வீழ்த்துவதோடு நிறுத்திக் கொண்டதைத் தவிர மற்றவர்கள் மீது
எய்வதில்லை. இருப்பினும் அம்புப் பயிற்சி நடக்கும் இடத்தில், மற்றவர்கள் யாரும் நடமாடுவதில்லை.

காட்டில் வளர்ந்திருந்த மூங்கில்களைக் கொண்டு வில்லும், பிரம்புக் குச்சிகளால் அம்புகளையும் செய்து வந்து குரங்குகள் அவற்றைப் பயன்
படுத்தி வந்தன. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. அமைதியாக இருந்த காட்டில் திடீரென பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. அதற்கு மூல காரணமாக இருந்தது குரங்குகளின் தலைவனின் மகனான நட்டிதான்! ஒருநாள் நட்டி தன் நண்பர்களிடம், ''எத்தனை நாள்கள்தான் நாம் சும்மா பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருப்பது?மரத்திலுள்ள பழங்களைத் தவிர மற்ற எதையும் நாம் அடிப்பதில்லை. மற்ற மிருகங்கள் மீதும் அம்பு விட்டால்
எவ்வளவு நன்றாக இருக்கும்? நமது அம்பு எய்யும் திறமையை மற்ற
மிருகங்கள் மீது சோதனை செய்ய வேண்டாமா?” என்று பிரச்சினைக்கு
பிள்ளையார்சுழி போட்டது.

“ஆமாம்!” என்று தலையாட்டின நட்டியின் நண்பர்களான லல்லுவும்,
காலுவும். “அந்த திமிர் பிடித்த யானை, புலி ஆகியவற்றின் மீது
அம்பு விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்” என்றன.

அதை ஆமோதித்த மிட்டுவும்,ஜாபியும், “அதோ, பதுங்கிப் பதுங்கி
கோழியைப் பிடிக்கப் போகிற அந்த ஓநாயையும் ஒரு கை பார்க்க
வேண்டும்” என்றன.

இந்த யோசனை எல்லா இளங் குரங்குகளுக்கும் பிடித்திருந்தது.
மற்ற மிருகங்கள் மீது அம்பு விட்டு பயமுறுத்திப் பார்க்க வேண்டும்
என்ற விபரீத ஆசை அ னைத்துக் குரங்குகளுக்கும் ஏற்பட்டது.



அவ்வளவுதான்! சில நாள்களிலேயே,டிபாங் காடு அல்லோகல்லோலப்
பட்டது. குறும்புக்கார குரங்குகள் மற்ற மிருகங்கள் மீது குறி வைத்து
அம்பு எய்தி அவற்றை பயமுறுத்தின. அவை அம்பு பட்டு கத்திக்
கொண்டு ஓடுவதைப் பார்த்து அந்தக் குரங்குகள் விழுந்து விழுந்து
சிரித்தன. குரங்குகள் காட்டுவாசி மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுடைய தலைப்பாகைகளை ‘விர்’ரென்று பறந்து வந்த அம்புகள் தட்டிச் சென்றன.குரங்குகளின் இந்தத் தொல்லைகளைப் பொறுக்க முடியாத மற்ற
மிருகங்கள் ஒருநாள் அணி வகுத்து காட்டின் கடவுளான அனோவிடம் முறையிடச் சென்றன.

ஒரே சமயத்தில் எல்லா மிருகங்களும் சேர்ந்து தன்னுடன் வந்திருப்பதைக் கண்ட அனோ ஆச்சரியத்துடன், ''என்ன விஷயம்?எல்லாரும் இப்படி கும்பலாக
என்னைக் காண வந்திருக்கிறீர்கள்? '”என்றார்.

''என்னத்தைச் சொல்வோம்!இந்தக் குரங்குகள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை!” என்று அவை முறையிட்டன. முதலில் கஜன் என்ற யானை முன் வந்து புகார் செய்தது.“குரங்குகளின் குறும்புக்கு அளவேயில்லை. எங்கள் மீது ஓயாமல் அம்பு விட்டு, எங்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கின்றன. நேற்று என் குழந்தை ஆசையாக ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.திடீரென்று அதன் திறந்த வாய்க்குள் ஓர் அம்பு பாய்ந்தது. பார்த்தால் மரக்கிளை மீது அமர்ந்த சில குரங்குகள் அவ்வாறு விஷமம்
செய்திருந்தன. என் குழந்தைக்கு வாயில் காயம்பட்டு, இப்போது எதுவுமே சாப்பிட முடியாமல் தவிக்கிறது” என்றது.

''என்னுடைய காலைப் பாருங்கள்!” என்று ராபின் முயல் கட்டுப் போட்ட தன் காலைக் காட்டியது. “ஆண்டு விழா ஓட்டப் பந்தயத்திற்காக நான் பயிற்சி செய்து கொண்டிருந்த போது என் காலில் ஒரே சமயத்தில் நான்கு அம்புகள் ‘சர்’ரென்று பறந்து வந்து தைத்து விட்டன. நான் இனி பந்தயத்தில் கலந்து
கொள்ளவே முடியாது” என்று புகார் கூறியது.

"ஓகோ! அப்படியா சேதி! நீங்கள் கவலைப்படாதீர்கள்! அந்தக் குரங்கு
களின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்!” என்று அனோ ஆறுதல்
கூறியது.

பிறகு மறுநாள் அனோ குரங்குகளின் தலைவனை அழைத்து, “உன்
பிரஜைகள் அம்புகள் விட்டு காட்டையே கலக்கிக் கொண்டு இருக்கிறார்களாமே! உண்மையா?'”என்று கேட்டார். அனோவின் உள்
நோக்கத்தை அறியாத தலைவன் குரங்கு, “ஆமாம், என்னுடைய குரங்குகள் மிகப் பிரமாதமாக அம்பு விடுகின்றனர்!” என்றது. “அப்படியா? நான் அவர்களின் திறமையைப் பார்க்க விரும்புகிறேன் ஆகையால் உன்னுடைய குரங்குகளிலேயே மிக நன்றாக அம்பு செலுத்தும் குரங்கை நாளைக்கு என்னுடன் போட்டிக்கு அனுப்பு!'' என்றது.

மறுநாள் வில்வித்தைப் போட்டியைக் காண எல்லா மிருகங்களும் ஆவலுடன் கூடின. குரங்குகளின் சார்பாக ஓர்  இளம் குரங்கு வில் அம்புகளுடன் போட்டியிடத் தயாராக இருந்தது. அனோவும் வில் அம்புகளுடன் வந்தார்.

“போட்டிக்குத் தயாரா? அதோ பார்! நதியின் அக்கரையில், கரையோரமாக, நீரில் ஒரு பெரிய பாறை மூழ்கி உள்ளது. இங்கிருந்து அதைக் குறிபார்த்து அம்பு எய்ய வேண்டும்.நான்கு முறை அம்பு எய்யலாம்! ஒரு தரமாவது, அம்பு அந்தப் பாறையை அடிக்க வேண்டும். முதலில் நான் அம்பு விடுகிறேன்!” என்று கூறிய அனோ வில்லில் அம்பைப் பொருத்தி குறிபார்த்து எய்தார். அவர் விட்ட
அம்பு பாறையின் அருகே சென்று நீருக்குள் மூழ்கி பாறையின் மீது பட்டது. இதுபோல் மூன்று முறை மேலும் அம்புவிட, ஒவ்வொரு முறையும் அம்பு சரியாக பாறையின் மீது பட்டது. 

பிறகு குரங்கு குறிபார்த்து முதன் முறையாக பாறையின் மீது அம்பு எய்தது.ஆனால் குரங்கு செலுத்திய அம்பு பாறையின் அருகே சென்று நீருக்குள் மூழ்கி மறுபடியும் நீரின் மேல் மிதந்தது பாறையைத் தொடாமலே சென்று விட்டது. குரங்கு தொடர்ந்து மூன்று முறை முயற்சி செய்தது.ஆனால் ஒரு முறை கூட அம்பு பாறையின் மேல் படவில்லை.

“ஓ!” என்று மற்ற மிருகங்கள் கை தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தன. பாவம்! குரங்குகளின் முகங்களில் ஈயாட வில்லை. போட்டியில் தோற்றுப் போனதால் தலையைக் கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்று விட்டன.

வெற்றியின் ரகசியம் அனோ விற்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அனோவின் அ ம்புகள் இரும்பினால் ஆனவை. ஆனால் குரங்கு செலுத்திய அம்புகள் பிரம்புக் குச்சியினால் ஆனவை. அவை நீரில் ஒரு பொழுதும் மூழ்காது.

போட்டியில் தோற்றுப்போன குரங்குகள் அன்றுமுதல் அம்பு விடுவதையே நிறுத்தி விட்டன.அம்பு விடும் திறமையையும் இழந்து விட்டன.

Post a Comment

Previous Post Next Post