.

ஒரு மலைப்பாம்பு. ஆழமான கிணற்றை எட்டி பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு சிறுவன் அந்த வழியே வந்தான்.மலைப்பாம்பு எதையோ பார்க்கிறது, நாமும் அதைப் பார்ப்போம் என்ற ஆவலில் அவனும் கிணற்றை எட்டிப் பார்த்தான். கிணற்றுக்குள்ளே ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

மலைப்பாம்பு பேசியது.

சிறுவனே நீ யார்? என்று கேட்டது.

பாம்பே அருகிலுள்ள ஒரு ஆசிரமத்தில் ஒரு சாது வசிக்கிறார். அவருடைய சீடன் நான். இந்த வழியே வந்தேன். நீ கிணற்றை எட்டி பார்த்துக் கொண்டிருந்தாய். அதனால் நானும் பார்த்தேன் என்றான் சீடன்.

‘சீடனே இந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற வேண்டும். நான் இங்கிருந்து குட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் என்னால் குட்டியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. என் நீளம் போதவில்லை. ஆகையால் நீ கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை கையில் தூக்கிக்கொள், உன்னை எளிதில் நான் தூக்கிவிடுவேன்' என்றது மலைப் பாம்பு.

ஒப்புக்கொண்ட சீடன் கிணற்றில் குதித்தான். ஆட்டுக்குட்டியைப் பிடித்தான். அங்கிருந்த பாறையின் மீது ஏறி நின்றான்.சட்டென்று பாம்பு கீழே இறங்கியது. சீடனைதன் உடலால் சுற்றி மேலே தூக்கியது. குட்டியை காப்பாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.கிணற்றின் உயரத்தில் பாதியை தாண்டியதும் மேலே தூக்குவதை நிறுத்தியது பாம்பு.

சீடனே உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஆட்டுக்குட்டியை நான் சாப்பிடுவதற்காக துரத்தி வந்தேன். என்னிடமிருந்து தப்பிப்பதற்காக அது கிணற்றில் குதித்துவிட்டது. கிணறு ஆழமாக இருந்ததால் என்னால் உள்ளே இறங்க முடியவில்லை. எப்படி குட்டியை சாப்பிடுவது என்று யோசித்துக்கொண்டிருந்த போது நீ வந்தாய். உன்னை உபயோகப்படுத்திக் கொண்டேன். ஆகவே கிணற்றை விட்டு வெளியே வந்தவுடன் குட்டியை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ சென்றுவிட வேண்டும்.இதை ஏற்றுக்கொண்டால் உன்னை விடுவிக்கிறேன். இல்லையென்றால், உன்னை இறுக்கிக்கொன்று உன்னை சாப்பிட்டு விடுவேன், ஒன்று ஆட்டுக்குட்டியை என்னிடம் கொடு. இல்லையென்றால் நீயே எனக்கு உணவாகி விடு என்றது பாம்பு.


பாம்பு பேசியதை கிணற்றின் மேலிருந்து சாது கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது சீடன் பேசினான். 

பாம்பே கிணற்றிலிருந்து ஆட்டுக்குட்டியை தூக்கிய போது அது என்னிடம்
பேசியது. நீ அதை துரத்தியது, அது கிணற்றுக்குள் குதித்தது ஆகிய எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியது. இருந்தாலும் பரவாயில்லை நான் காப்பாற்றுகிறேன் என்று உறுதியளித்திருக்கிறேன்.ஆகையால், ஆட்டுக்குட்டியை உன்னிடம் கொடுக்க முடியாது. நீ என்னை சாப்பிட்டு உன் பசியை தீர்த்துக்கொள். ஆட்டுக்குட்டியை விட்டு விடு' என்றான் சீடன்.

பாம்பு மேலே வந்தது. ஆட்டுக்குட்டியை கீழே இறக்கிவிட்டான் சீடன். ஆட்டுக்குட்டி ஓடிப்போனது.சீடனின் உடலைப் பற்றியிருந்த பாம்பு அதன்
பிடியை விடவில்லை. அப்போது சாது பேசினார்.

'பாம்பே என் சீடன் நல்லவன். அவனை நீ விடுவிக்கக்கூடாதா? அவனை நான் எப்படி பிரிந்திருப்பேன்? என்னை நம்பி அனுப்பிய அவனது பெற்றோர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?ஆட்டுக் குட்டிக்காக தன்னையே தர முன்வந்த அவன் மீது உனக்கு இரக்கம் ஏற்படவில்லையா?' என்று கேட்டார் சாது.

'சாதுவே இது உணவுச் சங்கிலியின் ஒரு பகுதி. என் இந்த உணவுக்குப் பதிலாக வேறு எதைக் கொடுத்தாலும் அதிலும் ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் அது இழப்பு. என்னை பொறுத்தவரை அது உணவு.உங்கள் சீடனை விட அவன் கொடுத்த வாக்குறுதி
மதிப்பு மிக்கது. ஆனாலும் அவன் கொடுத்த வாக்கை காப்பாத்தியதுக்காக சீடனை விட்டுவிடுகின்றேன் என்று கூறி பாம்பு அந்த இடத்தை விட்டுச்
சென்றது. சீடனும் சாதுவும் மகிழ்ச்சியாக குடிசையை அடைந்தார்கள்.


Post a Comment

Previous Post Next Post