.

ஆசிரியர் :- ச. தமிழ்ச்செல்வன்.
நூல் வெளியீடு :- 64.
விலை :- 70/-
முதலாவது பதிப்பு:- டிசம்பர் 2011.
ஆறாவது பதிப்பு:- 2016.


நான் சின்ன வயசிலேலே கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன் பகுத்தறிவின் படி வாழத் தொடங்கி விட்டேன்.நீங்கள் எப்படி? என்னடா இது புதுக்கதையாக இருக்கிறதே என்று என்னை ஒரு மாதிரியாகப் பேசுவார்கள் என நினைக்கிறேன்.தயவு செய்து மன்னிக்கவும். ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள்தான் இதனைத் தெட்டத் தெளிவாகத் தெரிவிக்கிறார்.

அறிவியலும் மதமும் எக்காலத்திலும் கூட்டுச் சேராத பகைவர்களாகவே நாம் பார்க்கிறோம்.அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்பட்டார்கள்,இப்போதும் புதிய வடிவங்களில் வளர்ந்து வருவதை ஒரு இடத்தில் இருந்தபடியே தொழில் வளர்ச்சியின் அடுத்தகட்ட செய்தியூடகங்களினூடாகப் பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

இந் நூலில் ஆசிரியர் கடவுள் மறுப்புக் கொள்கையை பல கிராமங்களுக்குச் சென்று ஆராய்ந்து,மக்களிடம் பேட்டி எடுத்து விரிவாகத் தந்துள்ளார். உலகிலுள்ள எல்லா உயிர்களும் தோன்றுகின்றன (மூட்டைப்பூச்சியிலிருந்து டைனோசோரியர் வரை) பின்னர் இறக்கின்றன.அதே போல் கடவுளும் பிறக்கிறார் பின் இறக்கிறார்.இப்படிச் சொன்னால் கடவுள் கோவிப்பார், பின்னர் வாழ்வதற்கே ஒன்றும் தரமாட்டார்.இப்படியாகக் கடவுள் நம்பிக்கையு ள்ளவர்களும்,கடவுளையே தனது வசதிக்காக உருவாக்கியவன் மனிதன் தான் என்று இன்னொரு சாராரும் உறுதிபடச் சொல்வதைக் காணலாம்.இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் வாழும் மிருகங்கள்,பறவைகள்,மரங்கள் இவை போன்றன கடவுளை வணங்குவதில்லை.மனிதன் மட்டுமே கடவுளை வணங்குகிறான் என்கிறார் ஆசிரியர் தமிழ்ச்செல்வன்.

அறிவுபூர்வமான சிந்திக்கக் கூடிய பல கேள்விகளை ஆசிரியர் இங்கே எம் முன் வைக்கிறார்.அதாவது ஏழைகளுக்கான கஷ்டப்பட்ட சாமி, பணக்காரருக்கான பணக்காரச்சாமி. கடவுளை மனிதன் உருவாக்கினான், அது சரியாகில், ஏன் பல மதங்கள் தோன்றின.எல்லா மக்களுக்கும் ஒரே கடவுள் இல்லாமல் தன் இஷ்டப்படி நூற்றுக்கணக்கான சாமிகள் எப்படி வந்தன, என்ற விடயத்தை மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் சிந்திக்கும் வகையிலும் ஆசிரியர் கூறியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. பார்க்கப் போனால் தற்போது கோயில்களாகக் கும்பிடுகின்ற இடங்கள் எல்லாமே சுடலைகள் என்று தான் சொல்ல வேண்டும்.அதற்குரிய அடிப்படை வரலாறுகளை ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் மிக அற்புதமாகத் தந்துள்ளார்.


இந் நூலில் மிகவும் சுவாரஸ்யமான பல சம்பவங்களை ஆசிரியர் கோடுபோட்டுக் காட்டுகிறார். ஏழைச் சாமி, பணக்காரச்சாமி, ஏழைச் சாமிகளுக்குச் சரியான கட்டிடங்கள் இருக்காது, அதற்கும் ஒரு சில சாதி மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்,அங்கு ஆடு,கோழி வெட்டலாம், அவர்களே அந்தச் சாமியை உருவாக்கியிருப்பார்கள்.இப்படிப் பல அடிப்படைகள் உண்டு. ஆனால் பணக்காரச்சாமிக்கு பெரிய கோபுரம் கொண்ட கட்டடம், தலித்துக்கள் நுழைய முடியாது,சாமி ஊர்வலம் பல வர்ண விளக்குகள் இப்படிப் பல வித்தியாசங்களை வாசிக்கலாம்.இந்த சாமிகளுக்கு, சாதி பாகுபாடும் உண்டு.சில சாமிகளை,கீழ்சாதிகாரர்கள் மட்டுமே கும்பிடுவார்கள்.சில சாமிகள்,மேல்சாதிக்காரர்களுக்கு மட்டுமே உரியவை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கும்புடும் சாமி, கும்பிடாத சாமி என்றும் சாமிகள் உண்டாம். சாமிகள் அனைத்துமே இறந்தவர்களின் அடையா ளங்களையே காட்டுகிறது. அதன் விபரங்களை அறிய நூலைப் புரட்டுங்கள்.


ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் சாதி மதம் என்பது கிடையாது. ஆனால் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்திய போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மதத்தைக் கொண்டுவந்த வெள்ளைக்கார பாதிரியார் பட்ட அவலத்தை (கால்சட்டை தேவாலய விடையம். 37 வது பக்கத்தில்) வாசியுங்கள். மேல் சாதி, கீழ்சாதி, ஏழை, பணக்காரன், அப்பப்பா,வாசிக்க வாசிக்க சிந்தனையாத் தூண்டும் படி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நகைச்சுவை நயத்தோடு படைத்திருப்பது மிகவும் ரசிக்கக் கூடியதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்சத்தில்,யாருக்குமே தேவைப்படாத சாமி,மனிதனுக்கு மட்டும் தேவைப்பட்டதும்,அதுவும் அனைவருக்கும் பொதுவில் ஒரே சாமியாக இல்லாமல் பல சாமிகளாக இருப்பதும் ஏன் என்ற கேள்வி பிறக்கிறது. சாமிகளும்,கடவுள்களும் இரண்டு இடங்களில் இருந்தன. ஒன்று கோவில் மற்றது மக்கள் மனதில்.சில மரணித்த மக்களின் பெயர்களில் இருந்த கோயில்கள் காலப்போக்கில் நீர்த்துப் போயிருப்பதை கொற்றவை என்னும் பெண் தெய்வம் நினைவுபடுத்துவதை இங்கே காணலாம்.

மக்களை மேல் எழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆயுதங்களே மதமும் கடவுளும்”என்ற தோழர் லெனினின் வார்த்தை ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டு இருக்கிற நூல் என்கிறார் ஆசிரியர். இடிமின்னல் மேலே இருந்துதான் வருகிறது,மழையும் மேலேயிருந்துதான் வருகிறது, மழையை நிற்பாட்டி நோமலுக்குக் கொண்டுவருவது சூரியன் தானே. ஆனா படியால் அவர்களைச் சந்தோஷப் படுத்துவதற்கு மிருகங்களை நெருப்பில் போட்டு எரித்து,அதன் ஆவிகள் மேலே போய் அவற்றைச் சமாதானம் செய்யும் என்ற மூட நம்பிக்கைகளை,அறிவியலுடன் ஒப்பிடும் போது, பல கோடி மைல்களுக்கு அப்பால் இன்றும் மக்கள் நிற்பதை உணர்த்துகிறார்.மதம் தோன்றியதை இப்படியாக மக்கள் காட்டுகிறார்கள்.

வெறும் 64 பக்கங்களில் படைத்துள்ள இந் நூல், ஆழமாகச் சிந்திக்கக் கூடிய, இன்றைய யதார்த்த உலகில், மனிதனது விடா முயற்சியின் பலதரப்பட்ட வளர்ச்சிக்கு எது காரணம்?கடவுளா?அறிவியலா? மனிதனே தனது இலாபத்திற்காகக் கடவுளைப் படைத்து,இரக்கமில்லாத இவ்வுலகில் கருணையின் வடிவமாக அவர் இருக்கிறார். இதயமில்லாத இந்த உலகில் இதயமாகக் கடவுள் இருக்கிறார்.ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாகக் கடவுள் இருக்கிறார்.அரசும் ஏனைய மனித சமுதாயங்களும் கருணை வடிவமாகிவிட்டால்,கல்லாய் உருவெடுத்து நிற்கும் கடவுளை யாரும் தேடாமாட்டார்கள்.இவற்றை அடிப்படையாக வைத்து மக்களை என்றுமே திசை திருப்பி வண்ணம் கோயில்கள்,பூசாரிகள்,மத நிறுவனங்கள் இன்றும் வளர்ந்து வருவது மிகவும் பகுத்தறிவைக் காலில் போட்டு மிதிப்பது போன்றதாகும்.

நிச்சயமாக அறிவுசார்ந்து சிந்திக்கக் கூடிய வாசிப்பாளர்கள் மத்தியில் கொண்டுவரப்படவேண்டிய நூல்,கண்டிப்பா எல்லோரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல். வாசியுங்கள், சிந்தியுங்கள்.


@பொன் விஜி - சுவிஸ்.


Post a Comment

Previous Post Next Post