.
புத்தகத் தலைப்பு:- நானும் நீதிபதி ஆனேன்.
ஆசிரியர் :- கே. சந்துரு
நூல் வெளியீடு :- அருஞ்சொல் வெளியீடு.
பக்கங்கள் : - 480
விலை :- 500/-

நான் பதவியேற்ற தினத்தன்று கூறினேன்: "குதிரையில் அமர்ந்திருந்தாலும் லகான் கையில் இல்லை." அப்படிப்பட்ட லகானைக் கைப்பற்றி இறுகிப் பிடித்து சேணப்படியில் காலை அழுத்தியதில் குதிரை பஞ்சாகப் பறந்தது. பயணமும் விரைவில் முடிந்தது.

சம்பிரதாயமான வரவேற்புரைக்குப் பின், என்னுடைய ஏற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டேன்:“இந்த நீதிபதி பதவியானது, புதிய சேவைக்கான அழைப்பு. இந்தக் காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடித்து, அரசின் அதிகாரத்தை அதன் எல்லைக்குள் வைப்பதுடன் ஒவ்வொரு குடிநபரும் அடிப்படை.சம உரிமையுடன் உண்மையாக சுதந்திரமாகவும் நல்ல முறையிலும் வாழ்வதற்கு உதவ முயற்சிப்பேன்.

'பாவத்தின் சம்பளம் மரணம் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. நாங்கள், 'மரணத்திற்கு சம்பளம், ஊதியம், பிடித்தம்' என்றுதான் தீர்ப்பெழுத முடிந்தது. மாண்டவரை மீட்டு வர முடியாவிட்டாலும்,இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு என்ற களிம்பைத்தான் தர முடிந்தது. இழப்பீட்டுத் தொகைகள் வழக்குக்கு வழக்கு மாறுபடலாம்.ஆனால், இறப்புகளுக்குப் பொறுப்பான அரசும்,அரசு அதிகாரிகளும் இழப்பீடுகள் தருவதிலிருந்து இனி தப்ப முடியாது என்பதை நீதிமன்றம் நிரந்தரமாக உறுதிசெய்ததுதான் இந்த வரலாறு.

நான் சொல்லவில்லை முன்னால் நீதிபதி சந்துரு அவர்கள் இப்படியாகக் கூறுகிறார். இந்நூல் 22 சிறிய தலைப்புகளில் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து சம்பவங்களையும் மிகத் தெளிவாக காட்டுவதை அவதானிக்கலாம்.

1.இவன் என் மகன் இல்லை என்ற அப்பா.
2.இஸ்மாயில் ஆணையம் அறியவைத்தது.
3.விலங்குகளா மனிதர்கள்?
4.மனித உரிமைகளும் மதானியும்.
5.சர்வதேசிய தொண்டுக்கு ஒரு ராஜ அங்கீகாரம்.
6.சிறையில் கற்ற பாடங்கள்.
7.எப்படி வந்தது என்கவுண்ட்டர்/ லாக்கப் மரணங்களுக்கு இழப்பீடு?
8.மனித உரிமை ஆணையத்திற்கு மறுவாழ்வு.
9.ஊர்வலம் போக விடுவோமா?
10.பேச்சுரிமைக்கு இல்லை தடா.
11.அது ஒரு பொடா காலம்.
12. பெரியாரைப் போற்றி
13.மதம் எனும் அபின்.
14.பேற்று இல்லை எனினும் இருக்குது இன்பம்.
15.வழக்குரைஞர்களுக்கு அனுமதி இல்லை.
16.வேம்பெனக் காசந்துவிட்ட வழக்குரைஞர் தொழில்.
17. காங்கிரஸ் 'நடுநிலையால் தப்பிய நீதிபதி.
18.பட்டியல் மாஸ்டரிடமே மந்திரக்கோல்.
19.கற்சிலைகளும் கலை, காலாச்சாரமும்.
20.அரசியல் உரிமை அடிப்படை உரிமை இல்லையா?
21.சட்டமன்றங்களும் உரிமைப் பிரச்சினைகளும்.
22.நானும் நீதிபதி ஆனேன்.

இந்திய நீதித்துறையை அறியவேண்டுமா? அல்லது அதுபற்றி அத்துறையில் நடைபெற்ற (சந்துருவின் பதவிக்காலத்தில்) தில்லுமுல்லுகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? வாசியுங்கள் இந்தப் புத்தகத்தை

என்னைப் பொறுத்தவரை இந்நூல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாசிக்க வேண்டும், அத்துடன் சட்டத்துறை பயிலும் மாணவர்களுக்கு மிக மிக்கியமான நூல் எனக் கருதுகிறேன்.முன்னாள் நீதிபதி கே. சந்துரு அவர்களின் சுயசரிதை என்று அவர் தலைப்பிட்டு எழுதியிருந்தாலும், கூடுதலாக அவரது வாழ்க் கையில் தனது வழக்குரைஞர் தொழிலையும், நீதிபதி ஆனபின் நடந்த சம்பவ ங்களையும் உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது.

ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் பல இடங்களில் ஆசிரியர் சந்துரு தனது வலிமையைக் காட்டியுள்ளார். ஒரு பக்கம் கூட வீணடிக்காதபடி, அடுத்து என்ன? அடுத்த தடையுத்தரவை நீக்க எதனைக் கையாளலாம்,அடுத்து வருவது எப்படி இருக்கும், இது போன்ற கேள்விகள் அடுத்த பக்கத்தைத் திருப்பும் போது நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

அவர் தனது 79 மாதகால நீதிபதிப் பணியில் 96,000 வழக்குகளை விசாரித்து, இந்திய வரலாற்றிலேயே ஒரு மகாத்தான சாதனையைச் செய்திருப்பது வியப்பைத் தருகிறது. இந் நுலை எழுதுவதற்கு மிக முக்கியமான காரணமாக அவர் சொல்வது, இந்திய நீதித்துறையில் உயர்நீதிபதிகளைத் தெரிவு செய்யும் கொலிஜிய நியமன நடைமுறையை மக்கள் மத்தியில் வெளிக் கொண்டு வருவதே. இப்படியாகத் தனது பதவிக்காலம் வரை தொழிலாளர்களுக்காகவும், பாவப்பட்ட மக்களுக்காகவும் கடுமையாக உழைத்த கே.சந்துரு அவர்கள் இன்று பலராலும் அறியப்பட்டுள்ளார்.

இந்திய நீதித்துறையில் யார் யாரெல்லாம் புகுந்து விளையாடுகிறார்கள் என்பதனை வெளிப்படையாக விமர்சிக்கத் தவறவில்லை சந்துரு அவர்கள். இங்கும் அரசியல் கட்சிகளின் பங்கு மற்றும் அவர்களது உறவினர்கள், வேண்டப்பட்டவர்களின் அதிகாரம், தனக்குச் சார்பான நீதிபதிகளைப் பரிந்துரைப்பது, அதுமட்டுமல்லாது கொலிஜிய தலைமை நீதிபதிகளின் வேற்றுமை, அத்துடன் சாதி என்பதும் இங்கே தலைகாட்டத் தவறவில்லை.




தனது வழக்குரைஞர் பணியிலும் சரி, நீதிபதியானபின்பும் சரி, அதிகமாக மனிதநேயத்துடன் யாவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்ற கொள்கையை இறுதிவரை கையாண்டது, அவரது துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் காட்டுவதை அவதானிக்கலாம். இவரது பணியை விரோதியாகப் பார்த்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள்,ஒன்றிய அரசு, சங்கங்கள், மற்றும் தனிப்பட்ட மனிதர்கள் என்று பல இடங்களில் போர்க் கொடி தூக்கியபடியே இருந்தனர்.அதே வேளை இவர் மேற்கொண்ட வழக்குகள், மற்றும் தீர்ப்புகளைப் பாராட்டவும் செய்தனர். ஃப்ரண்ட்லைன் என்னும் ஆங்கில இதழ் இப்படியாகச் சொல்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு 400 ஆண்டுகள் ஆகலாம், ஆனால் சந்துருவின் வேகம், 4 ஆண்டுகளில் 53,000 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். சராசரி மாதம் 1,300 வழக்குகள் ஆகும்.சந்துரு அவர்கள் நீதிபதியாகப் பதவியேற்றபின் வழமையாக நீதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை (சம்பிரதாயங்கள்) மாற்றியமைத்தார். தனது 7 வருட பணியில் ஆக 3 வாரங்கள் மட்டுமே விடுப்பு எடுத்ததாகவும், அதுகூட ஒரு தீவிர அறுவைச் சிகிச்சைக்காகவே என்றும், தான் வீடு திரும்பியதும் தன்னை வந்து பார்த்த நீதிபதிகள் 11 பேர் மட்டுமே என ஆதங்கப்படுகிறார்.அப்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 47 என்பது குறிப்பிடதக்கது.

ஜெய் பீம்' திரைப்பட இயக்குநர் த. செ. ஞானவேல் 'ஆனந்த விகடன்' வார இதழுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறார். "விகடனில் நான் பணிபுரிந்தபோது 'தமிழ் மண்ணே வணக்கம்' தொடர் எழுதினேன். அப்போது வழக்கறிஞர் சந்துருவை சந்தித்துப் பேசினேன். 'உங்க கரியரில் உங்களுக்குப் பிடிச்ச வழக்கு என்ன'ன்னு கேட்டதற்கு இந்தப் பெண்ணின் வழக்கைச் சொன்னார். அவர்கிட்டே ஜட்ஜ்மென்ட் உட்பட அனைத்துத் தரவுகளும் இருந்தன. இதில் சந்துரு சார்தான் ரியல் ஹீரோ. ஒரு பெண்ணுக்கு போலீஸாரால் ஒரு பிரச்சினை வருது. அதை எங்கே போய்ச் சொல்றதுன்னு அந்தப் பெண்ணுக்குத் தெரியலை. ஒரு கூட்டத்திற்கு நெய்வேலிக்கு வந்த சந்துருவைச் சந்தித்துச் சொல்றாங்க. அந்த வழக்கை சந்துரு சார் ஒன்றரை வருடங்கள் ஹைகோர்ட்டில் நடத்துகிறார். அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும்தான் கதை.

1983 முதல் 1988 வரை ஐந்து வருட காலம் அவர் பதவி வகித்தபோது, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிலும் சட்ட சீர்திருத்தக் குழுவிலும் அங்கம் வகித்தார். பார் கவுன்சில் சார்பாக அவர் தயாரித்த வழக்குரைஞர் நல நிதிச் சட்ட வரைவை தானே அரசிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டதை இங்கே நினைவுகூர்கிறார்.இப்படியாக தனது பதவிக்காலம் வரை தொழிலாளர்க ளுக்காகவும்,பாவப்பட்ட மக்களுக்காகவும் கடுமையாக உழைத்த கே. சந்துரு அவர்கள் இந் நூல் மூலமாக இன்று பலராலும் அறியப்பட்டுள்ளார்.

அப்போது சட்டத்தில் சிறு மாற்றங்களைக்கூட நீதிபதிகளின் பரிந்துரைப்பில் மாற்றமடைவதைக் காணலாம். வாசித்ததில் இது ஓர் உதாரணம். இது போல் பல இடங்களில் தானாகவோ அல்லது 2 நீதிபதிகள் அல்லது 3 நீதிபதிகளின் அமர்வில், சட்டத்தின் விதிகளைக் கவனமெடுத்து அதில் மனிதநேய அடிப்படையில் தனது சொந்தச் சிந்தனையில் நியாயமான தீர்ப்புகள் வழங்கியிருப்பதை இந் நூல் காட்டுகிறது. இதனால் பலபேருடைய எதிர்ப்புகளையும் அவர் சம்பாதித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

20 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்து, தொழிலாள வர்க்கத்திற்காகப் பல வழக்குகளைக் சிக்கல்களுக்கு மத்தியில் வென்று கொடுத்த சந்துரு அவர்கள் எதனால் கட்சியிலிந்து நீக்கப்பட்டார் என்று பார்த்தால், ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்த்ததற்காக. (அன்றைய காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை ஆதரித்தது) இதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்ட சந்துரு அவர்கள் தனது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்.

வருமானவரித் துறை - CBI இரண்டுமே ஒன்றிய அரசின் வேட்டை நாய்கள் என்று கடுமையாகச் சாடுகிறார்.காரணம் அவர்களால் ஏற்பட்ட சிறப்புச் சிக்கல்களில் அவரை விழுத்தமுடியாமல் அவர்கள் திண்டாடியதை இங்கே விளக்குகிறார்.

தடா, பொடா சட்டங்கள் என்றால் என்ன? அதனால் அன்றைய அரசு நடத்திய அதிகாரதுஷ்பிரயோகம் என்ன? அதில் கைது செய்யப்பட்டவர்களின் நிலமை எப்படியாக அமைந்தது, அவர்களுக்காகத் தான் மேற்கொண்ட போராட்டங்கள்,எதிர்ப்புக் கூட்டங்கள்,அவர்களது விடுதலைக்காகச் சமர்ப்பித்த மனுக்கள் (மனுக்களுக்கு மேல் மனுக்கள்) போன்ற விபரங்களை அறிய வாசியுங்கள்.

தனது வளர்ச்சிக்கும் உத்வேகத்திற்கும் ஊக்கமளித்த அனைவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறார் ஆசிரியர் சந்துரு அவர்கள்.இங்கிலாந்தின் ஆட்சிக் கலத்தில் தங்களது பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட கொடூரமான சட்டங்கள் சிலவற்றை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசு தடைசெய்தது. ஆனால் அவை பெயரளவிலும் ஊடகச் செய்திகளுக்கு மட்டுமே பொருந்துபவையாக அமைந்தன. அதே சட்டங்கள் வேறு பெயருடன் இன்றும் சட்டமாக உலா வருவதைக் கிண்டலாகச் சொல்கிறார் ஆசிரியர். வழக்குகளை ஏன் இவ்வளவுக்குத் தாமதமாக்குகிறார்கள் என்றால், அது வழமையோல் வழக்குரைஞர்கள் வாழ்வதற்கே, அதாவது ஒவ்வொரு தடவையும் கட்சிக்காரரிடமிருந்து தொகையை வசூலிப்பதற்காகவே என்கிறார் ஆசிரியர்.

எந்தக் கட்சியும் சாராதவராகப் பின்னாளில் இருந்த சந்துரு அவர்கள், தமிழ் நாட்டை ஆண்டுவந்த ஆட்சியாளர்களின் கட்டுக்கடங்காத செயல்களை கண்டித்தும், விமர்சித்தும், தனிமனித சுதந்திரத்திற்காகப் பல முறை நீதியான தீர்ப்பினைத் தந்துள்ளமையை இந் நூல் விளக்குகிறது.

1990-களில் இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். அங்கு துப்பாக்கிச் சண்டையில் குண்டுபட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த 19 வயதான பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இந்தியாவுக்குச் சிகிச்சைக்காகத் தஞ்சம் வந்தடைந்திருந்தார். அவருடன் மருத்துவத்திற்கு உதவ வந்த பெண்ணைப் பயங்கரவாதி என்று பட்டியலிட்டு, தனிச் சிறையில் அடைத்தது தமிழ்நாடு அரசு. முடநீக்கவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பத்மாவை மருத்துவமனைக் கட்டிலுடன் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தனர். நுண்ணறிவுக் காவலர்கள் (க்யூ பிராஞ்ச்) கொடுத்த அழுத்தத்தில் பத்மாவை சிகிச்சையின்போதே மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தது.

பத்மாவிற்குத் துணை வேண்டும் என்றும், சிகிச்சை முடியும் வரை அவரை டிஸ்சார்ஜ் செய்யக் கூடாது என்றும், தான் விரும்பினாலும் தப்பி ஓட முடியாத, கால்கள் செயலிழந்த பெண்ணை மிருகங்களைவிடக் கேவலமாகச் சங்கிலியால்பிணைக்கக் கூடாது என்றும், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்தப் பெண்ணைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து, சொந்த செலவில் சிகிச்சை செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.

விடுதலைக்காகப் பாடுபடுபவர்கள்,அவர்களுக்கு எவ்வித மனித உரிமையும் வழங்கக் கூடாது என்ற மனப்பான்மையுள்ள பலர் நீதியுலகத்தில் இருக்கின்றனர்.பத்மாவின் உடல்நிலை என்னவென்று அறிந்து கொள்ளாமலேயே "அப்பெண் ஓடிவிட்டால் நீங்கள் ஜவாப் தருவீர்களா!" என்று ஒரு நீதிபதி என்னைக் கேட்டார்.அவருக்கு சர்வதேசப் பிரகடனங்களையும் அகதிகள் உரிமைகளையும் விளக்கிச் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.நீதிமன்றத் தலையீட்டால் குறுக்கீடின்றி எட்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்ற பத்மா, மறுபடியும் அவரது தாயகம் திரும்பியது, சட்டத்தால் கிடைத்த வெற்றிதானே என்கிறார் முன்னாள் நீதிபதி கே. சந்துரு அவர்கள்.

இவரது நூலை வாசிக்கும் போது, ஏதோ நாமும் நீதிமன்றத்திலுள்ள பார்வையாளர்கள் வாங்கில் (பெஞ்ச்) இருந்து, அவரது வாதங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் உணர்வுதான் ஏற்படுகிறது.

நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்குத் தெரியாத பல சட்டங்கள், மனுக்கள், குழுக்கள், சங்கங்கள், பதவிகள், போராட்ட முன்னெடுப்புகள், தடையுத்தரவுகள் இப்படி ஏகப்பட்ட தகவல்களை அறிய நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன எனக்கூறி, நிச்சயம் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மைதரும் என்பதில் சந்தேகம் இல்லை…


@பொன் விஜி - சுவிஸ்.

Post a Comment

Previous Post Next Post