.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.இன்று ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.உருகி உருகி காதலித்து கைபிடிக்கும் தம்பதியினராகட்டும் பேசி முடிக்கும் திரும ணங்களாகட்டும் பல இன்று விவாகரத்திலே முடிகிறது.

இலட்சங்களை செலவழித்து பல கனவுகளை சுமந்து இல்லற வாழ்வில் கை பிடிக்கும் தம்பதியினர் இடையில் உதறி செல்வது பல விமர்சனங்களையும் சமூகத்திற்கு கொடுக்கிறது.ஏன் அதிக விவாகரத்து இடம் பெறுகின்றன சற்று ஆராய்ந்தால்...

ஆயிரம் பேருக்கு போய் சொல்லி கல்யாணம் முடிக்கலாம் என்கிற பழமொழி மருவி இன்று ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செய்யலாம் என்கின்ற நிலைக்கு மாறி விட்டது.

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக அல்லது தங்களுக்கு பிடித்த நபரை வாழ்க்கை துணையாக மாற்றிக் கொள்ள வேண்டுமென சில பல பொய்களை அள்ளிவிடுகின்றனர்.திருமணமும் சுமூகமாக இடம் பெறுகிறது. வாழ்க்கை ஆரம்பிக்கும் போது அதன் தாக்கம் வீச சுகமான கனவு சுமையாகிறது.

ஒருவரின் எதிர்பார்ப்புகள் உடைக்கப்படும்போது இல்லையெனில் கூறிய விடயம் ஒன்று,நடைமுறையில் வேறொன்றும் நடக்க முரண்பாடு பிறக்கிறது. எனக்குத் தெரிந்தவரின் மகன் ஆறு வருடங்கள் காதலித்து அப் பெண்ணையே
திருமணம் முடித்தார்.

பெற்றோரும் தனிக்குடித்தனம் அனுப்பி விட இவர்களை போல தம்பதியினர் இல்லை என்று வாழ்ந்தவர்கள் ஆறு மாதத்தில் ஒருவரை ஒருவர் அடித்து ரணகளமாக அவரவர் பெற்றோருடன் வந்து விட்டனர்.எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்கள் சேர்ந்து வாழத் தயாரில்லை. காரணம் என்ன?

காதலிக்கும் போது தன்னை விட்டு அவளோ அவனோ போய் விடக் கூடாதென எல்லாவற்றையும் ஏற்று விட்டு கொடுக்கிறனர். மணவாழ்க்கையில் நுழையும் போது இவள் என்னவள் எங்கே போகப் போகிறாள் என்றும் இவன் எனக்கானவன் என்னை அனுசரிப்பான் என்கிற பிடிவாதமும் வாழ்க்கையை உருக்குழைத்து விடுகிறது.

அளவுக்கு அதிகமான உரிமை,கண்டிப்பு என்பன ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரிவு வருகிறது. அதே போலவே திருமண செலவுகளை கடன் பட்டு செய்தால், தங்களிடம் அதிகம் இருப்பதாக காட்டிக்கொள்ளல், பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கும் இடங்களில் புகழ்தல்,தன் பிள்ளை இன்னும் விபரம் புரியாதவள் என்று குழந்தையாக விவரித்தல் என்பன பல பிரச்சினைகளை உருவாக்கும்.உள்ளதை உள்ளபடி பேசி முடித்தல் சிறப்பு.

திருமணம் பேசும் போது கல்வித் தகைமை, வருமானம்,தொழில் துறை, குடும்பத்திற்கு ஏற்ற பழக்க வழக்கம் என்பவற்றில் கவனம் செலுத்தல் சிறப்பு. அத்துடன் பிள்ளைகள் பெற்றோருடன் எத்தனை செல்லமாக இருந்தாலும் பொறுப்பற்று இருந்தாலும் அவர்களுக்கு பொறுப்பை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.


காதல் திருமணமாகட்டும்,பெற்றோர் பார்க்கும் திருமணமாகட்டும் வாழ்க்கை
சீர்க்குலைந்து போகும் போது மனநிலை பாதிப்பு இரு குடும்பங்களுக்குமே ஏற்படும். இதனால் சாதாரண வாழ்க்கை நடைமுறை கூட மிகவும் பாரதூரமான விடயமாகவே தெரியும். இருப்பினும் அதிகமாக ஆண்களை பெற்றக் குடும்பங்கள் "எங்களுக்கென்ன பெண்கள் வீட்டிலேயே தைரியமாக இருக்கும் போது நாங்கள் ஏன் துக்கப்பட வேண்டும்" என்ற நினைப்பில் தங்களை இலகுவாக மீட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் பெண் பிள்ளைகளும் அவர்களின் குடும்பத்தினரும் அந்த காயத்திலிருந்து மீளுவது என்பது வெகு கடினம்.சம்பந்தப்பட்ட பெண் மீண் டாலும் அவள் நிகழ்வுகளுக்கு செல்லும் இடங்களிலும் தொழில் செய்யும் இடங்களிலும் உறவுகளின் விழாக்களிலும் அக்கம் பக்கம் உள்ளவர்களின் பார்வையிலும் அந்த விடயம் மறக்கப்படுவதில்லை.ஏதோ செய்யக் கூடாத காரியத்தை செய்தது போலவும் மறக்க வேண்டிய விடயத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவர்.எங்கு போகிறாள், யாரிடம் பேசுகிறாள், உடை, நடை,பாவனை என்று எப்போதும் கண்காணிக்கப்பட்டு சில இடங்களில் வார்த்தைகளால் நோகடிக்கப்படுவாள்.

என்னதான் தைரியமான பெண்ணாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர வெந்து தணிவதை அவள் தாய் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.துணிச்சலான பெண்ணாக இருந்தால்"அவளுக்குத் துளியும் கவலை இல்லை,வேறு தொடர்பு இருக்கும்" என்றும் அப்பாவியாக இருப்பின் "இப்படி அப்பாவியாக இருந்தால் ஏமாற்றத் தான் செய்வான் பாவம்!" என்றும் பாவப்பட்ட பெண்ணாகவும் இந்த சமூகம் மாற்றி விடும்.

அதிலும் பிள்ளைகள் இருப்பின் அவர்களின் நிலையோ வெகு பரிதாபம். சில பெண்களுக்கு சுற்றம் கதை சொல்லும் முன் வீட்டாரே "உனக்கு பிள்ளை இருக்கிறது" என்று சொல்லியே அவள் வாழவேண்டிய வாழ்க்கையை முடக்கி விடுகின்றனர். அவளுக்காக சிரித்து,இரசித்து, உடுத்தி வாழ்வது எப்போது? அப்படி அவளுக்கென வாழ ஆரம்பித்தால் பல வலிக்கும் வார்த்தைகளை செவியோடு போகட்டுமென விட்டுவிட பழகிக் கொள்ள வேண்டும். மன திற்குள் எடுக்க ஆரம்பித்தால் அவள் நிம்மதி நிர்மூலமே!

விவாகரத்து என்பது அந்த நாளில் இல்லை என்று நாம் நினைக்கக்கூடாது.எத்தனையோ பெண்கள் திருமண வாழ்வில் தோல்வி கண்டு பெற்றோருடனும், குடும்பத்தினருடனும் கழித்தவர்கள் உண்டு.என்ன சட்டரீதியான பிரிவுகளை மேற்கொள்ள நீதிமன்றங்களை நாடவில்லை அவ் வளவு தான்.

இன்றைய பெண்கள் நீதியை நாடி சட்டரீதியான பிரிவை பெற்றுக் கொள்கி றார்கள்.இது சரியா தவறாக என்று பார்ப்பதை விட சட்டரீதியான அணுகுமுறை எல்லோருக்கும் பாதுகாப்பான விடயமாகும்.

திருமணம் செய்த பாவத்திற்கு தம்பதிகளுக்குள் பிரச்சினை பட்டு அல்லுற பிள்ளைகள் பல வேதனைகளை இந்த சமூகத்தில் எதிர்கொள்வர். அவர்களின் நட்பு வட்டத்திலும் பாடசாலையிலும் அவர்களை அறியாமலே மனதாக்கம் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெறும். 

ஆணுக்கோ பெண்ணுக்கோ மிகப்பெரிய விவாகரத்து போராட்டம். பாதிப்புகள் பெருமளவு பெண்களுக்கே என்பது நிதர்சனமான உண்மை.பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கும் முன் பெற்றோர் பலமுறை யோசித்து அறிந்து பெண் கொடுத்தால் சிறப்பு. அதேபோல் திருமணத்திற்கு தயாராகும் பெண் பெற்றோர் பார்த்தார்கள் என்பதற்காக தலையாட்டாமலும் தான் காதலித்து விட்டேன் என்று கண் மூடித் தனமாக நம்பாமலும் தன் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை, முடிவுகளை தீவிரமாக யோசித்து வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது விவாகரத்தை தடுக்கும்.

பெண்கள் விவாகரத்து முடிவினை எடுக்கும் முன் பலமுறை யோசித்து வரவிருக்கும் பல நிராகரிப்பை, வலிகளை, உதாசீனங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

அன்பே வாழ்க்கையின் பரஸ்பரம். அந்த அன்பினை வெளிப்படுத்த தம்பதியர் தயங்கினாலும் அல்லது ஒருவரின் நேசிப்பை புரிந்துகொள்ள மறுத்தாலும் பிரிவு தானாகவே வரும்.

எது எப்படியிருப்பினும் திருமணம் விவாகரத்தில் முடியாமல் தம்பதிகள் வாழ ஆண்,பெண் இருதரப்பும் சிந்தித்தால், அழகான வாழ்க்கை வாழ வழி வகுக்கும்.விவாகரத்து இல்லா சமூகம் உருவாகும். அச்சமூகம் உருவாக நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே.


ஏனைய கட்டுரைகள்


Post a Comment

Previous Post Next Post