காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உலக காடுகள் தினம் (International Day of Forests),ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. பருவகால நிலை பெரும்பாலும் சீராக இருப்பதற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனுஷ்டிக்கப்படும் இந்த நாளில் காடுகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.
நவீனமயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதால், வனப்பகுதிகளோடு அவ்வனத்தில் வசித்து வந்த உயிரின ங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் சங்கிலியில் மாறு பாடுகள் ஏற்பட்டு இயற்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு,பருவநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைகின்ற நிலையில் இந்த “உலக காடுகள் தினம்” இலங்கைக்கும் முக்கியத்துவமாகின்றது.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள்தான் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன், மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள் வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகின்றன.அதேபோல மனிதன் வாழ்வதற்கு தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம்.இந்தக் காடுகள்தான் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்து வருகின்றன.
பூமி சூட்டைத் தணித்தல், வாயுமண்டலத்தை சுத்தப்படுத்துதல், நாம் வெளியிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, சுவாசிக்க ஒக்ஸிஜன் நிறைந்த நல்ல காற்றைக் கொடுப்பவை மரங்களே. மரங்கள் ஒக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்.வளிமண்டலத்தில் வாயுக்களை சமநிலையில் வைக்க தூசி, புகை மற்றும் நச்சுப்பொருள்கள் நிரம்பிய காற்றை மரத்தின் இலைகள் வடி கட்டித் தூய்மைப்படுத்துகின்றன. உலக தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றன. மேலும் மண் அரிப்பைத் தடுத்து மண்ணில் உள்ள உயிர் ஊட்டச்சத்துக்களை சமநிலையில் வைத்து நிலத்தாயை காக்கிறது.உயிரினங்களுக்கு உணவு, மருந்து மற்றும் உறைவிடம் வழங்கி உயிரினப் பன்மைக்கு வழிவகுத்து காக்கிறது.இதன் அடிப்படையில் காடுகளை நாம் காற்றை சுத்திகரிக்கும் தொழிற்சாலை,மண்ணை வளப்ப டுத்தும் தாய். நிலத்தாயை காக்கும் மருத்துவர் என அழைக்கலாம்.
காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல அது ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பு.வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கிவிட்டன எனச் சொல்லும் முன்னர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனுடைய வனப்பகுதியை அழித்து, வாழ்வாதாரத்தை நிர்க்கதியாக்கி விட்டால் விலங்குகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும்? அதேபோல காடுகளை அழித்துவிட்டு கட்டிடங்களாக மாற்றிக்கொண்டால் விலங்குகள் எங்கே போகும்? ஆனால் இவற்றை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் இலங்கையில் காடழிப்பு மிக வேகமாகவே இடம்பெற்று வருகின்றது.
இலங்கை காடுகள்
காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக் காடுகள். வெப்ப மண்டலக் காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 வீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 வீதம் அளவு காடுகளில் 60 ஆயிரம் வகையான தாவரங்கள் உள்ளன.இலங்கையும் சிறப்பான காட்டுவளத்தினை கொண்டுள்ளது.இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 36.5 வீதமானவை (2375 மில்லியன் ஹெக்டேயர்) காடுகளாக காணப்படுகின்றன.இலங்கையின் இயற்கை தாவரத்தினை காடுகள் என்றும் புல்வெளிகள் என்றும் வகைப்படுத்தலாம்.மேலும் இலங்கையின் காடுகளினை ஈரப்பருவக்காற்று காடுகள், மலைக்காடுகள், உலர்பருவக் காற்றுக்காடுகள், முட்காடுகள் என 4 வகையாக வகைப்படுத்தலாம்.
காடுகளைப் பொறுத்தவரையில் இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன.நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் 1,888,607 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில்,வடமாகாணம் 889,007 ஹெக்டெயர் நிலப்பரப்பையும், கிழக்கு மாகாணம் 999,600 ஹெக்டெயர்நிலப்பரப்பையும் கொண்டிருக்கின்றது. நிலப்பாவனையின் அடிப்படையில் வட மாகாணத்தி லேயே அதிக காடுகள் காணப்படுகின்றன. 735,413.67 ஹெக்டெயர் அடர் காடுகள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. வட மாகாணத்தில் 459,129.67 ஹெக்டெயரிலும், கிழக்கில் 276,286 ஹெக்டெயரிலும் அடர்காடுகள் காணப்படுகின்றன.
இலங்கையில் காணாமல் போகும் காடுகள்
இலங்கையில் 1882 இல் 83 வீதமாக இருந்த காடுகளின் அடர்த்தி பாரிய சுற்றாடல் அழிவினால் தற்போது 16 வீதமாக சுருங்கியுள்ளது..இந்த நிலையில் உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது.2010 ஆம் ஆண்டளவில் இலங்கை, 28.8 வீதம் காடாக இருந்துள்ளது. இது 1995 இல் 32.2 வீதத்தையும் தற்போது 16.5 வீத்தையும் எட்டியமை இலங்கையில் அதிவேகமாக காடழிப்பு நிகழ்வதை எடுத்துக் காட்டுகிறது.ஆரம்பத்தில் இலங்கையின் 2021 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் பெரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது, ஒரு நாளைக்கு 65 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன.
இலங்கையில் அமைந்துள்ள
காடுகளில் ஆண்டொன்றுக்கு 8000 ஹெக்டேயர் வரை அழிக்கப்பட்டு வருவதாக இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் புதிய நீர்ப்பாசன திட்டங்களின் நிர்மாண பணிகள் காரணமாக பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.அதேபோன்று மீள்குடியேற்ற நடவடிக்கை காரணமாகவும் பெருமளவிலான
காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், அம்பாந்தோட்டை,புத்தளம்,அம்பாறை,மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள காடுகள் கூடுதலான அழிவுகளை சந்தித் துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோன்று சட்டவிரோத மரம் வெட்டுதல்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் இடம்பெறுவதனால் அங்கும் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
காடுகளை பாதுகாக்கும் பொறுப்பு வனபரிபாலன திணைக்களம் மற்றும் அரச மர கூட்டுத்தாபனம் ஆகிய இரு அரச அமைப்புக்களிடமே உள்ள போதும் சில இடங்களில் இவற்றின் ஆதரவுடனும் சில இடங்களில் செல்வாக்குகளுடனும் இன்னும் சில இடங்களில்
திருட்டுத்தனமாகவும் காடுகளில் மரம் வெட்டுதல்கள் இடம்பெறுகின்றன.
காடழிப்பு ஏன்?
மனிதர்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகள், குடியேற்றங்கள், தொழில்துறை மற்றும்
விவசாய நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக காடுகளை அழிக்கின்றனர். ஆண்டுதோறும், நிலப் பயன்பாடுகளை மாற்றவும் ஏராளமான பயன்பாடுகளுக்கு விறகு எடுக்கவும் மில்லியன் கணக்கான ஹெக்டேயர்
காடுகள் அழிக்கப்படுகின்றன .காகிதம் பெறுவதைத் தவிர, மரங்களை வெட்டுவதற்கான காரணங்கள் பல. இந்த காரணங்களில் பெரும் பாலானவை நிதி ஆதாயத்துடனோ அல்லது கட்டிட நிர்மாணங்கள், விவசாய நடவடிக்கைகள்,கால்நடை வளர்ப்புக்கள்,மேய்ச்சல் தரைகள், குடியேற் றங்கள்,வீதி அபிவிருத்திகள்,தளபாட உற்பத்திகள் மேற் கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு காடுகள் அழிக்கப்படுகின்றன அது மட்டுமன்றி காட்டுத்தீயினாலும் பெருமளவு காடுகள் அழிகின்றன.உலகளவில் இடம்பெறும் இந்த காட்டுத் தீ சம்பவங்களில் பெரும்பாலானவை மனிதனால் வேண்டுமென்றே உருவாக்க ப்பட்டவையாக வே உள்ளன.
காடழிப்பின் விளைவுகள்
இத்தகைய மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை அழிப்பதனால் நாம் சந்தித்து வரும் பின்விளைவுகள் அளவிட முடியாதவை. காற்று மாசுபாடு, சூழல் சீர்கேடு,
புவி வெப்பமயமாதல்,பருவநிலை மாற்றம், அதன் விளைவுகளான சுவாசக் கோளாறுகள், தொற்றுநோய்கள், உடல்நிலை சீர்கேடுகள் போன்றன அவற்றுள் அடங்கும்.சராசரி
மழை அளவும்,மழை நாட்களும் காடுகள் அழிப்பால் குறைந்து அதன் விளைவாக விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.மேலும் காடழிப்பால் மழைநீர் சேமிக்கப்படாமல் வீணாகி, மண்ணரிப்பும் ஏற்பட்டு அதன் விளை வாக நிலத்தடிநீர் குறைந்து நன்னீர் தட்டுப்பாடும் ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி, காடழிப்புகளினால் இலங்கையில் தினமும் ஒரு யானை இறக்கிறது.கடந்த 50 ஆண்டுகளில் யானைகளின் வாழ்விடங்கள் 15 வீதத்தினால் சுருங்கிவிட்டன, அத்துடன்
யானை வழித்தடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதால் மனித - யானை மோதல் அதிகரித்துள்ளது.2011 ஆம் ஆண்டு எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் இந்நாட்டின் யானைகளின் எண்ணிக்கை 5879 ஆகும்.2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எமது நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு இடம்பெறவில்லை.
2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரையான கணக்கெடுப்பில் நம் நாட்டில் மரணித்த யானைகளின் எண்ணிக்கை 3983 ஆகப் பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டுதான் அதிக யானைகள் பலியாகியுள்ளன. அவற்றின் எண் ணிக்கை 439 ஆகும்.
மண்ணரிப்பு தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்ணரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது.மண்ணரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்படையும்.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும்,எதுவும் விளையாமலும்
பாலை வனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு-மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஒக்சைடின் அளவு அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து
வறட்சி ஏற்படுகிறது.குறைந்து வரும் மரங்கள்-தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி,மேசை, கட்டில், அலுமாரி போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி-மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில்
வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல்-மலைகளில் இருந்து அரித்துக் கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும்,ஆற்றுப்படுகைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழை நீரைத் தடுப்பதற்கு
காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது.ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது.அதுமட்டும் இல்லாமல் மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது -
காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண் அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண் அரிமானம் ஏற்படுகிறது. இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும்.
வேலையில்லாத் திண்டாட்டம்-காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர் களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர்.இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
அனைத்து வீடுகளுக்கும் ஒரு செடி
இலங்கையில்
காடுகள் மிக வேகமாக அழிக்கப்பட்டுவரும் இவ்வாறான நிலையில் தான் நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32 வீதம் வரை அதிகரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய வன எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வன
ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலக
காடுகள் தினம் மார்ச் 21 அன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு செடியை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக வனத்துறை சட்டப்படி, ஒரு
மரம் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி. ஆனால், 1000 மரங்கள் வெட்டப்பட்டால் கூட ஒரு மரக்கன்று கூட நடப்படுவதில்லை என்பதுதான் காடுகளின் தலைவிதியாகவுள்ளது.
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன.காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும் என்பதனை மனிதன் உணர்ந்துகொள்ளாதவரை காடுகள் காணாமல் போவது தொடரவே செய்யும்.
ஏனைய கட்டுரைகள்
Post a Comment