அன்பு,பாசம்,நேசம்,காதல் என்பன உள்ளத்தின் மென்மையான மனித பக்கத்தை பிரதிபலிக்கும் உன்னத உணர்வுகளாகும்.மனிதனுடன் இரண்டறக் கலந்த இந்த உணர்வுகள் தான், தனக்கு என்ற சுயநல நோக்கிற்கு அப்பால் தான் நேசிக்கும், அன்பு செலுத்தும் ஒருவருக்காக எந்தவொரு மகத்தான தியாகத்தையும் செய்யத் தயாராகும் உயரிய சிந்தனைக்கு அடிப்படையாக இருப்பதை மறுக்க முடியாது.
எதிர்வரும் 14 ஆம் திகதி அன்பின் மகத்துவத்தை போற்றும் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினமானது பருவ வயதிலுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான காதல் உணர்வை பிரதிபலிக்கும் தினமாகவும் அவர்கள் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் நாளாகவும் பொதுவாக நோக்கப்படுகின்றது.
ஆங்கிலத்தில் இந்தத் தினமானது ஆண்,பெண் காதலை மட்டும் குறிக்காது பொதுவான அன்பு எனப் பொருள்படும் வகையில் அழைக்கப்படுகின்ற போதும்,தமிழ் உள்ளடங்கலான பல மொழிகளில் அந்தத் தினத்தின் பெயர் ஆண்,பெண் நேசத்தை மட்டுமே குறிக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டு காதலர் தினம் என அழைக்கப்படுவது மத,கலாசார மற்றும் பழைமைப் பண்புகளைப் பேணுவதில் நாட்டம் கொண்டவர்களை முகம் சுளிக்க வைத்து வருவது வழமையாகவுள்ளது.
பண்டைய காலந்தொட்டு அன்பையும் காதலையும் போற்றும் தினமொன்றை கொண்டாடும் வழக்கம் பல்வேறு சமூகங்களிலும் ஒரு கலைநயத்துடன் அனுஷ்டிக்கப்பட்டு வந்தமைக்கு வரலாறுகளும் இலக்கியங்களும் சான்று பகர்கின்ற போதும்,மேற்படி தினத்தை மக்கள் மத்தியில் காதலர்களுக்கு மட்டுமேயான ஒரு தினமாக பிரபலப்படுத்தி வர்த்தகரீதியில் ஆதாயம் தேடும் முயற்சிகள் இந்தத் தினம் தொடர்பில் எதிர்மறையான கருத்துகள் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது .
காதலர் தினத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது நேசத்திற்காகவும் அன்புக்காகவும் உயிர் நீத்த வலன்டைன் துறவிகளின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.கிறிஸ்தவ வரலாற்றில் உலகின் பல்வேறு நாடுகளிலும் வலன்டைன் என்ற பெயரில் மேற்பட்ட துறவிகள் வாழ்ந்துள்ளனர்.
அன்றைய காலகட்டத்தில் உலகில் குறிப்பிட்ட மதத்திற்கு வரையறுக்கப்படாத கடவுள் கொள்கைகள் உலகமெங்கும் பின்பற்றப்பட்டு வந்த நிலையில் புதிதாக பரவ ஆரம்பித்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு சாம்ராஜ்ஜியங்களின் பேரரசர்கள் தயாராக இருக்கவில்லை. தமது சொந்த மத நம்பிக்கைக்கு கிறிஸ்தவ மதத்தால் ஊறு ஏற்படலாம் என அஞ்சிய அவர்கள், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதை ஒரு குற்றமாக பிரகடனம் செய்தனர். இதன் காரணமாக கிறிஸ்தவ துறவிகள் பலரும் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றத்திற்குள்ளாகினர்.
அவர்களில் இத்தாலியில் வாழ்ந்த இரு வலன்டைன் துறவிகள் மற்றும் ஆபிரிக்காவில் வாழ்ந்த ஒரு வலன்டைன் துறவி ஆகியோரின் வரலாற்றுடன் தொடர்புபட்டதாக காதலர் தினம் விமர்சிக்கப்படுகிறது. மேற்படி துறவிகள் மூவருக்கும் பெப்ரவரி 14 ஆம் திகதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்பட்ட வலன்டைன் தினமே பின்னர் காதலர் தினமாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இத்தாலியில் கிறிஸ்துவுக்கு முன்னர் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து ஒவ்வொரு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த லூப்பர்காலியா என்ற பண்டைய வசந்த காலக் கொண்டாட்டங்களையொட்டி இந்த வாழ்க்கை மரணதண்டனைகள் அதற்கு முதல் நாளான பெப்ரவரி 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.
குருதி சிந்துவது, வன்முறை, பாலியல் என்பவற்றுடன் இணைந்ததாக கொண் டாடப்பட்ட லூப்பர்காலியா திருவிழாவில் பிசாசுகளை வெளியேற்றவும்,இன விருத்தியாற்றலை மேம்படுத்தவும் ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற கொடூரமான முறையில் பலி கொடுத்தல்,எழுந்தமானமான முறையில் ஜோடிகளை இணைத்து வைத்தல் என்பன இடம் பெற்றன.
மேற்படி விழாவில் மிருகங்களைப் மிருகங்களை பலிகொடுத்த பின்னர் நிர்வாணமாக ஓடும் ஆண்கள் பின்னர் தமக்கு எட்டும் தூரத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களை சவுக்கால் அடிப்பார்கள்,தொடர்ந்து அவர்கள் ஒவ்வொ ருவரும் எழுதப்பட்டு ஜாடியொன்றில் போடப்பட்டுள்ள பெண்களின் பெயர் களிலிருந்து பெயரை எழுந்தமானமாக தேர்ந்தெடுத்து அந்தப் பெண்ணுடன் அடுத்த வருட விழா வரும் வரை வாழ்வார்கள்.இதன் போது இணைந்து வாழும் அந்த ஜோடிகளில் பலர் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வது வழமையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மூன்றாம் நூற்றாண்டில் இத்தாலிய ரோம் நகரை ஆட்சி செய்து வந்த பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் காலத்தில் வேறுபட்ட ஆண்டுகளில் வலன்டைன் என்ற பெயரால் அழைக்கப்படும் இரு துறவிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக் கின்றன.அன்றைய கால கட்டத்தில் இத்தாலிய ரோம் நகரில் அமுலிலிருந்த ரோம சட்டமானது திருமணமான ஆண்களை கட்டாயப்படுத்தி படையணியில் சேர்ப்பதற்கு தடை விதிக்கிறது. அதையும் மீறி தாமாக முன்வந்து படையணியில் சேரும் திருமணமான ஆண்கள் தமது மனைவி மற்றும் குடும்பம் மீதான பற்றுக் காரணமாக போரில் போதிய அர்ப்பணிப்பைக் காண்பிக்க மாட்டார்கள் என பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் நம்பியதால் ஆண்கள் திருமணம் செய்துகொள்வதற்குத் தடை விதித்தார்.
பேரரசரது இந்த நடவடிக்கை நீதியற்றது எனக் கருதிய வலன்டைன் துறவி, கிறிஸ்தவ மதத்தை தழுவிய ஆண்களுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.அவரது நடவடிக்கை ஒரு கட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இத்தாலிய ரோம் நகரிலுள்ள மோசமான சிறைச்சாலைகளில் கைதிகளாக சிறைவைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ கைதிகளுக்கு தப்பிச் செல்ல உதவிய வலன்டைன் துறவி ஒருவர் தொடர்பிலும் வரலாற்று சான்றுகள் எடுத்தியம்புகின்றன.
அடித்து உதைக்கப்பட்ட நிலையிலும் மனம் கலங்காது உறுதியுடனிருந்த அந்த வலன்டைன் துறவியின் திடசித்தத்தால் கவரப்பட்ட பேரரசர்,அவரை தண்ட னையிலிருந்து விடுவிக்க அவரை மதம் மாற்ற முயற்சித்துள்ளார்.ஆனால் வலன்டைன் துறவியோ அதற்கு மறுத்து பேரரசரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் சினமடைந்த பேரரசர் அந்த வலன்டைன் துறவிக்கு மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.
சிறையிலிருந்த காலத்தில் மேற்படி வலன்டைன் துறவி சிறைச்சாலை அதிகாரியான ஸ்டெரியஸின் பார்வை இழந்த மகளான ஜூலியாவுக்கு பார்வையைப் பெற்றுத் தந்துள்ளார்.இதன் காரணமாக அந்த சிறைச்சாலை அதிகாரி, அவரது மகள்,அவரது 46 குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சிறையிலிருந்த கைதிகள் எனப்பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். இந்நிலையில் மதம் மாறிய கைதிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் வலன்டைன் துறவி ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் அந்த வலன்டைன் துறவிக்கும் அவரால் கண்பார்வை பெற்ற சிறைச்சாலை அதிகாரியின் மகளான ஜூலியாவுக்குமிடையில் காதல் ஏற்பட்டதாகவும் இந்நிலையில் அவர் தனது மரணதண்டனை நிறைவேற்றத் திற்கு முதல் நாள் மாலை 'உன் வலன்டைன்' என கையொப்பமிட்டு ஜூலியாவின் முகவரிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்ததாகவும் தெரிவி க்கப்படுகிறது.இதுவே காதலர் தினம் தொடர்பான முதலாவது கடிதமாக நோக்கப்படுகிறது.
இந்நிலையில் வலன்டைனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதன் பிற்பாடு ஜூலியா அவரது கல்லறைக்கு அருகில் இளம் சிவப்பு வர்ணப் பூக்கள்
பூக்கும் பாதாம் மரக்கன்று ஒன்றை நாட்டியதாக 16 ஆம் நூற்றாண்டு கால ஆங்கில வரலாற்று அறிஞரான ஜோன் பொக்ஸ் தெரிவிக்கிறார்.இதன் காரணமாக பாதாம் மரம்
காதல் மற்றும் நட்புறவின் அடையாளமாக கருதப்படுகிறது.
அதே சமயம் மேற்படி வலன்டைன்களில் ஒருவர் ரோம் நகரில் வாழ்ந்தவர் எனவும் அவருக்கு மட்டுமே பேரரசர் இரண்டாம் கிளாடியஸால் கிறிஸ் துவுக்குப் பின்னர் 269 ஆம் ஆண்டளவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட் டதாகவும் இத்தாலியின் டெர்னி நகரில் வாழ்ந்த பேராயரான மற்றைய வலன்டைனுக்கு கிறிஸ்துவுக்குப் பின்னர் 273 ஆம் ஆண்டில் பேரரசர் அவுரேலியன் ஆட்சியின் போது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இத்தாலியில் பெப்ரவரி 14 ஆம் திகதி
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட துறவிகளாக குறிப்பிடப்படுபவர்கள் இருவர் அல்லர் எனவும் ஒரு துறவியே சம்பவங்கள் அடிப்படையில் இருவராக ஊகிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு சில ஆய்வுகள் கூறுகின்றன.
அத்துடன் வலன்டைன் துறவிக்கும் சிறைச்சாலை அதிகாரியின் மகளுக்கும் காதல் தொடர்புள்ளதாக கூறப்படுவது பிற்காலத்தில் வேண்டுமென்றே புனை யப்பட்ட கற்பனைக் கதை என சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று ஆபிரிக்காவில் தனது சகாக்கள் பலருடன் படுகொலை செய்யப்பட்ட வலன்டைன் துறவியொருவர் தொடர்பில் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள போதும் அவர் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் இல்லாதுள்ளது. எது எப்படியிருந்த போதும் காதலர் தினத்தின் தோற்றம் தொடர்பான வரலாற்றுக் கதைகள் அனுதாபம், அன்பு,நேசம், வீரம் மற்றும் காதல் என்பவற்றை பிரதிபலிப்பனவாக உள்ளன.
கிறிஸ்துவுக்குப் பின்னர் 496 ஆம் ஆண்டில் பாப்பரசர் முதலாம் ஜெலாஸியஸ் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றியமைக்காக கொல்லப்பட்டவர்களை கௌரவப் படுத்துவதற்காக வலன்டைன் துறவிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்ட தினத்தை வலன்டைன் தினமாக அனுஷ்டிக்க அழைப்பு விடுத்திருந்தார்.
14 ஆம் மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வசந்த காலத்தில் காதல் பறவைகள் வருவதை கருத்திற் கொண்டு இந்தத் தினம் காதலுடன் தொடர்பு படுத்தப்பட்டது.தொடர்ந்து 1382 ஆம் ஆண்டில் ஜெப்ரி சோஸர் என்ற ஆங்கிலக் கவிஞர் தனது கவிதையில் வலன்டைன் தினத்தை காதலர்களுக்கான தினமாக
குறிப்பிட்டு உலகளாவிய கவனத்தை ஈர்த்தார். 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் பிரித்தானியா,பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் வாழ்த்து அட்டைகள்,கலைப் பொருட்கள்,பரிசுப்பொருட்கள் மற்றும் இனிப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் காதலர்கள் மத்தியில் உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை விரிவாக்கம் செய்வதற்கு காதலர் தினத்தை ஒரு களமாகப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.
இதன்போது அச்சிடப்பட்ட, கையால் தயாரிக்கப்பட்ட மற்றும் மரப்பலகையில்
அலங்காரமாக செதுக்கப்பட்ட வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு விடப்பட்டன.இந்த அட்டைகள் மலர்கள், சிறகுகளுள்ள தேவதைகள், இருதயம், புறாக்கள் உள்ளடங்கலான பாரம்பரிய காதல் சின்னங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருந்தன.உலகில் அச்சிடப்பட்ட முதலாவது காதலர் தின வாழ்த்து அட்டை பிரித்தானியாவில் 1797 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து 19 ஆவது நூற்றாண்டில் உலக நாடுகள் பலவற்றிலும் காதலர் தின வாழ்த்து அட்டைகள் பிரபலம் பெற்றன.
வலன்டைன் துறவியொருவர் வலிப்பு நோயைக் குணப்படுத்த சாவிகளைப் பயன்படுத்தியதைக் கருத்திற் கொண்டு அந்த சாவிகளும் தற்போது காதல் சின்னங்களாக மாறியுள்ளன. ஜேர்மனி,கிழக்கு சுவிட்ஸர்லாந்தில் வலிப்பு நோயை குணப்படுத்துவதற்கு சாவிகளைப் பயன்படுத்தும் கலாசாரம் இதையடுத்து பரவியது.
அத்துடன் இத்தாலியில் சிறுவர்களுக்கு வலிப்பு நோய் வராது தடுக்க வலன்டைன் தினத்தன்று தங்கச் சாவிகளை வழங்கும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.அந்த சாவி
காதல் மற்றும் பாதுகாப்பின் அடையா ளமாகக் கருதப்படுகிறது.அந்த சாவி காதலருக்கு தனது காதல் ஜோடியின் இதயம் என்ற பூட்டைத் திறப்பதற்கு அழைப்பு விடுக்கும் ஒன்றாகவும் நோக்கப்படுகிறது.அத்துடன் சாவிகளை திருமணப் பரிசாக வழங்கும் வழக்கமும் காணப்படுகிறது.
சில நாடுகளில்
காதலர் தினமானது 7 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அதன் பிரகாரம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ரோஜா தினத்துடன் ஆரம்பிக்கும் கொண்டாட்டங்கள், திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் தினம்,சொக்லேட் தினம்,கரடி பொம்மை தினம்,வாக்குறுதி தினம்,கட்டியணைத்தல் தினம் எனத் தொடர்ந்து இறுதி ஏழாவது நாளில் காதலர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாழ்த்து அட்டைகள்மற்றும் பரிசுப் பொருட்களை சந்தைப்படுத்தும் சில வர்த்தக நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் யுக்தியாக இந்த தினத்தை காதல் ஜோடிகளுக்கு அப்பால் திருமண பந்தத்தில் இணைந்த கணவன்,மனைவி,தாய்,தந்தை,பிள்ளைகள், சகோதரர்கள் உள்ளடங்கலாக குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நாளாக
விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை மேற்படி தினம் தொடர்பான ஆரோக்கியமான கண்ணோட்டத்திற்கு
வழிவகை செய்துள்ளதை மறுப்பதற்கில்லை.
இந்தத் தினத்தை காதல் என்ற வரையறைக்குள் மட்டுப்படுத்தாது எமது அன்புக்குரிய உறவுகளுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பதற்கான ஒரு உன்னத தருணமாக பயன்படுத்தும் பட்சத்தில் மேற்படி தினம் தனிச்சிறப்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பல்கிப் பெருகியுள்ள இன்றைய கால கட்டத்தில் காதல் தொடர்பில் உணர்வுகளைத் தூண்டும் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை பரப்பப்படுவது உருவகப்படுத்தல்கள் இளம் சமுதாயத்தினர் தவறானவர்களின் காதல் வலையில் சிக்கி தமது வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொள்ள வழி வகை செய்வதாக உள்ளமை குறித்து பெற்றோர்கள் பலரும் அச்சமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
காதல் என்பது பண்டைய காலம் தொட்டு எமது வாழ்வியலினதும் இலக்கியங்களினதும் ஆதார அம்சமாக இருந்து இருந்து வருகின்ற நிலையில் மேற்குலக கலாசாரத்துடன் இணைந்ததாக முன்வைக்கப்படும் காதலர் தின விளம்பர யுக்திகள் மற்றும் பிரசாரங்கள் காதலுடன் இணைந்த கலாசார சீர்கேடுகளுக்கு வித்திடுவனவாக உள்ளன.
உலகெங்கும் பரந்துள்ள புதுமைகள் அனைத்தையும் அனுபவிக்கத் துடிக்கும் வயதிலுள்ள இளவயதினர் ஒருசிலர் தமது வாழ்வின் கல்வி மற்றும் ஏனைய திறமைகளை வளர்ப்பது தொடர்பான சாதனைப் பயணத்தை மறந்து காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரிகமாக நடத்தல்,களியாட்ட விடுதிகளில் பொழுதைக் கழித்தல் என காதலர் தினத்தை மேற்கத்தேய கலாசாரத்துடன் இணைந்ததாக கொண்டாட முற்படும் போது அது கவலைக்குரிய ஒன்றாக மாறுகிறது.
இன்றைய இலத்திரனியல் உலகில் பலருக்கும் தமதுகுடும்பத்தினர், உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்கோ காலத்தைச் செலவிடுவதற்கோ நேரம் இல்லாத நிலை காணப்படுகிறது.கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் கணினித் திரைகள் முன்பாக வரையறையின்றி நேரத்தைச் செலவிடுபவர்கள் மத்தியில் உறவுகளைப் வலுப்படுத்துவதுற்கு நேரத்தை ஒதுக்கும் ஒரு தினமாக இந்தத் தினத்தைப் பயன்படுத்தினால் பயன் தருவதாக அமையும்.
தன்னை நேசிக்கும் ஒருவனாலேயே பிறரை மனப்பூர்வமாக நேசிக்க முடியும் என உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இன்றைய இயந்திர உலகில் சமூக மட்டத்தில் நிலவும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகுபவர்கள் தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னைத் தானே வெறுக்கும் உணர்வுக்குள்ளாவது சர்வசாதாரணமாகவு ள்ளது.தன்னை நேசிக்க மறுக்கும் இந்த உணர்வானது உலகை வெறுத்து தற்கொலை செய்வதற்கும் தாம் பாரபட்சத்திற்குள்ளாகி வருவதாக கற்பனையான சுய பச்சாதாபத்துக்குள்ளாகி பிறரை வெறுப்பதற்கும் காரணமாகிறது.
இத்தகைய சூழ்நிலையில்
ஒருவர் தன்னைத் தானே நேசிக்கும் தினமாக இந்தத் தினத்தை பயன்படுத்தி மனதுக்கு பிடித்த ஏகாந்த நிலையில் இயற்கை காட்சிகளை கண்டுகளித்து, விரும்பிய இசையை செவிமடுத்து பொழுதை இனிமையாக்கிக் கொள்ள முடியும்.தன்னை நேசிப்பது வேறு.சுயநலம் என்பது வேறாகும்.தன் மீதான நேசம் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் போது அது பிறரது குறைகளை சகிப்புத்தன்மையுடன் ஏற்று அவர்களிடம் பூரண அன்பை செலுத்த வழிவகை செய்கிறது. தன் மீதான நேசம் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவர் மீதுமான அன்பாக விரிவாக்கம் பெறுகையில் அங்கு நல்லிணக்க, சமாதான சூழல் மலர்கிறது.
அந்த வகையில் மனப்பூர்வமான தூய அன்பின் மகத்துவத்தைப் போற்றும் தினமாக இந்தத் தினத்தை அனுஷ்டிக்கும் பட்சத்தில் அங்கு முகச்சுளிப்புகளு க்கு இடம் இருக்காது என்பது திண்ணம்.
இவற்றையும் பார்வையிடவும்
Post a Comment