.

ராமநாதபுரத்தில் வசித்து வந்த ஒரு பணக்கார வியாபாரிக்கு பாக்கியநாதன் என்று ஒரு மகன் இருந்தான்.சிறுவயது முதலே அவனுக்கு சாமர்த்தியம் என்பது சிறிதுமில்லை.

'இவனை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவன் எதிர்காலத்தில் எப்படி காலந்தள்ளுவான்?”என்று வியாபாரி தன் மனைவியிடம் குறைப்பட்டுக் கொண்டார்.

அவருடைய மனைவி, “நீங்கள் ஆரம்பத்திலிருந்தே உங்களுடைய வியாபாரத்தில் அவனை ஈடுபடுத்தி இருந்தால், இப்படி ஆகியிருக்குமா?எல்லாம் உங்கள் தவறு என்று அவரையே குறை கூறினாள். உடனே அவரும் பாக்கியநாதனை அழைத்து,''மகனே நாளை முதல் நீ என்னுடன் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனி” என்று உத்தரவிட்டார்.

மறுநாள் பாக்கியா தன் தந்தையுடன் கடைக்குச் சென்றான். ஆனால் அங்கு வியாபாரத்தை கவனிக்காமல் மற்ற பணியாளர்களுடன் வீ ணாக அரட்டை அடிப்பதில் ஈடுபட்டான்.ஒரு நாள் கடையை விட்டு வெளியே ஊர் சுற்றப் போனவன் மீண்டும் கடைக்கே வரவில்லை.

மீண்டும் கவலையில் ஆழ்ந்த வியாபாரியைப் பார்த்து, பாக்கியாவின் தாய், ''பேசாமல் அவனுக்கு ஒரு கால்கட்டு போடுங்கள். பொறுப்பு தானாக வந்து விடும்” என்றாள்.


“அதுவும் நல்ல யோசனைதான்" என்ற வியாபாரி, “ஆனால் அவனுடைய திருமணத்தைப் பற்றி யோசிக்குமுன், அவனுடைய புத்திசாலித்தனத்தை இன்னொரு முறை சோதிக்க விரும்புகிறேன்' என்றார்.பிறகு தன்னிடமிருந்து மூன்று ரூபாய் நாணயங்களை எடுத்து அவளிடம் கொடுத்து “இந்தா இந்த நாணயங்களை பாக்கியாவுக்குக் கொடு. ஒரு ரூபாய்க்கு அவன் விரும்பியதை வாங்கி சாப்பிடட்டும். ஒரு ரூபாயை ஆற்று நீரில் எறியச் சொல். மீதி ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு அதில் தான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ஏதாவது குடித்து விட்டு,மிஞ்சியதை தோட்டத்தில் நட்டு வைக்கவும், பசு மாட்டுக்குக் கொடுக்கவும் சொல். அதிலிருந்து அவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரிந்து கொள்வோம்” என்றார்.

மறுநாள் தன் தாய் கொடுத்த மூன்று ரூபாய்களை வாங்கிக் கொண்டு பாக்கியா வீட்டை விட்டுக் கிளம்பினான். கடைக்குச் சென்று ஒரு ரூபாய்க்கு பக்கோடா வாங்கி சாப்பிட்டான். அடுத்து ஆற்றங் கரைக்குப் போனான். தன் தந்தை சொல்லியபடி ஒரு ரூபாய் நாணயத்தை ஆற்று நீரில் எறிய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய அவனுக்கு மனம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோயில் அர்ச்சகரின் பெண்ணான பகீரதி அருகில் வந்து “அப்படி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?”
என்று கேட்டாள். அதற்கு அவன் “ஒன்றுமில்லை பகீரதி! இந்த ஒரு
ரூபாய் நாணயத்தை ஆற்றில் எறியும் படியாக என் தந்தை சொல்லி
இருக்கிறார். அப்படி அவர் ஏன் சொன்னார் என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்” என்றான்.

“அட அசடே!" என்று சிரித்த பகீரதி ஒரு ரூபாயை நீ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள்” என்றாள்.

“சரிதான்! அப்படியோர் உள்ளர்த்தமா? மீதி ஒரு ரூபாய்க்குள் நான் நான்கு அல்லது ஐந்து பொருட்களை வாங்க வேண்டும். அ து எ ப்படி முடியும்? அதற்கும் நீயே ஏதாவது யோசனை சொல்லேன்” என்றான்.

பிறகு அவன் தாய் மூலமாக தந்தையிட்ட கட்டளையை விளக்கிக் கூறினான். “அது ஒன்றும் சிரமமில்லையே! நீ பேசாமல் ஒரு முலாம் பழத்தை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கு. அதில் உனக்கு சாப்பிடவும் குடிக்க சாறும் கிடைக்கும். அதன் விதைகளை தோட்டத்தில் நட்டுவை.தோலை பசு மாட்டுக்குக் கொடுத்து
விடு” என்றாள்.




“ஆகா! என்ன அற்புதமான யோசனை!’ என்று மகிழ்ந்த பாக்கியா அவள் சொன்னபடியே செய்து விட்டு, தன் தாயிடம் சென்றான்.

மிக சாமர்த்தியமாக ஒரு ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு, தான்
வாங்கி வந்து முலாம் பழத்தையும் காட்டியவுடன், அவனுடைய புத்தி சாலித்தனத்தைக் கண்டு வியந்த அவன் தாய் பாக்கியாவின் தந்தையிடம் நடந்ததைக் கூறினாள்.

ஆனால் பாக்கியாவின் தந்தை 'இது நமது பிள்ளை சுயமாக செய்ததில்லை” என்று அறிந்து அவனைக் கூப்பிட்டு “பாக்கியா! உனக்கு இந்த யோசனை யார் சொல்லிக் கொடுத்தது?” என்று கேட்டார்.

பாக்கியாவும் உண்மையை மறைக்காமல் “அர்ச்சகர் மகள் பகீரதி”
என்றான். “ஆகா! அந்த பாகீரதி மிக புத்திசாலிப் பெண் என்று தோன்றுகிறது” என்று கூறிய அவர்,தன் மனைவியிடம் “நமக்குத் தகுந்த மருமகள் பகீரதி
தான்” என்றார்.

இருவரும் அர்ச்சகரைக் கலந்து ஆலோசித்து அவரின் மகளுடன் பாக்கியாவின்
திருமணம் செய்வதற்கு முடிவு செய்தனர்.

திருமணம் முடிந்து சில நாட்கள் ஆயின. ஒருநாள் பகீரதி தன் தாய் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பாக்கியா அவளை பிறந்த வீட்டுக்கு அழைத்துச்
சென்று விட்டு விட்டு, வீடு திரும்பினான். மறுநாள் அவன் தந்தை, அவனையும் வேலைக்காரனையும் பக்கத்திலுள்ள நகரத்திற்கு விற்பனைப் பொருட்கள் வாங்கி வர அனுப்பினார். பொருட்கள் வாங்கத் தேவையான பணம் எடுத்துக்
கொண்டு நகரத்தை அடையும் போது இரவு ஆகிவிட்டதால், பாக்கியாவும்
வேலைக்காரனும் ஒரு விடுதியில் தங்கினர். அந்த விடுதியின் சொந்தக் காரியான ஓர் இளவயதுப் பெண்மணி, பாக்கியாவிடம் நிறையப் பணம் இருப்பதை அறிந்து கொண்டு,அவனை ஏமாற்றிப் பணம் பறிக்க திட்டமிட்டாள். இரவு உணவருந்திய பிறகு, அவள் பொழுது போக்க பாக்கியாவை சீட்டாட அழைத்தாள்.அவள் சொல்லை மறுக்க முடியாத பாக்கியா சீட்டாட அமர்ந்தான். ஒரே ஒரு காடா விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்த அறையில் இருவரும் சீட்டாட அமர்ந்தனர். “உங்களைப்
போன்ற பணக்கார வியாபாரிகள் சும்மா சீட்டாடினால் எப்படி? பணம் வைத்து ஆடினால்தான் உங்களுக்கு கௌரவம்” என்று பணம் வைத்து சீட்டாட வற்புறுத்தினாள். பாக்கியாவும் அதற்கு சம்மதித்தான்.

தான் வெற்றி பெறுவோம் என்று பாக்கியா நினைக்கும் சமயம் பார்த்து,
பூனை திடீரென அவளுடைய குறுக்கே பாய்ந்து விளக்கின் மீது விழ,எங்கும் இருள் சூழ்ந்தது. மீண்டும் விளக்கை ஏற்றியவுடன், சீட்டுகள் முழுதும் நிலை மாறியிருந்தன. அந்த இளம் பெண் வெற்றி பெற்று பாக்கியாவிடமிருந்து கணிசமான பணத்தைப் பெற்றாள். இதுபோல் பலமுறை நடக்க, தான் கொண்டு வந்த பணம் அனைத்தையும் இழந்த பாக்கியா மேலும் ஏராளமான பணம் அவளுக்குக் கொடுக்க வேண்டி வந்தது.

இவ்வாறு அவனை நாடகமாடி ஏமாற்றி விட்டாள். மறுநாள் பொழுது விடிந்ததும் அவள் பாக்கியாவிடம்,“நீ பணம் தர வேண்டி இருப்பதால், உன்னை
வெளியே செல்ல விடமாட்டேன். உன் வேலைக்காரனை ஊருக்கு அனுப்பி பணம் எடுத்து வரச் சொல். அதுவரை நீ இங்கேயே இரு” என்று கூறி விட்டாள்.

பாக்கியா திரும்பி வராததால் அவன் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதற்குள் பாக்கியா தன்னை அழைக்க வராமல் போகவே,பகீரதி தானாகவே புருஷன் வீட்டுக்கு வந்தாள். உண்மையை அறிந்து அவளும் பதற்றம் அடைந்தாள்.

இதற்குள் பாக்கியாவின் வேலைக்காரன் அங்கு வந்து அனைத்தையும் கூறினான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பகீரதி மட்டும் சமாளித்துக் கொண்டு தான் சென்று பாக்கியாவை மீட்டு வரக் கிளம்பினாள். பாக்கியா எவ்வாறு சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டான் என்பதை அந்த வேலைக்காரன் மூலம் தெரிந்து கொண்டாள். பகீரதி தன்னுடன் ஒரு சுண்டெலியையும் ரகசியமாக எடுத்துச் சென்றாள்.வேலையாளை விடுதிக்கு வெளியிலே நிறுத்தி விட்டு, தானும் ஒரு ஆண் போல் வேடம் தரித்து பகீரதி பாக்கியா தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்தாள். பாக்கியாவிற்கு தன் மனைவியை சிறிதும் அடையாளம் தெரியவில்லை. விடுதி சொந்தக்காரியை சந்தித்து தனக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறி அங்கே தங்க ஏற்பாடு செய்த பிறகு, அவளிடம் தனக்கு சூதாட்டத்தில் விருப்பம் உண்டு என்பதைத் தெரிவித்தாள்.அவளும் அன்றிரவு மகிழ்ச்சியுடன் சூதாட அமர்ந்து கொண்டாள்.

பகீரதி வெற்றி பெறும் தருணத்தில், வழக்கப்படி விடுதி சொந்தக்காரி தன் பூனைக்கு சைகை செய்ய, அது விளக்கை அணைக்க ஓடி வந்தது. அதை எதிர்பார்த்திருந்த பகீரதி தான் மறைத்து வைத்த சுண்டெலியை வெளியே விட்டாள்.சுண்டெலியைத் துரத்திக் கொண்டே பூனை வெளியே ஓடி விட்டது.
மீண்டும் அது திரும்பவில்லை.

தொடர்ந்து சூதாட்டத்தில் பகீரதி வெற்றி பெற,பாக்கியா இழந்த அத்தனை
பணத்தையும் அதற்கு மேல் பல மடங்குகளும் அவளுக்குக் கிடைத்தது. அடுத்த நாள் காலை பகீரதி அந்தப் பணத்தை வெளியே இருந்த வேலைக்காரனிடம் கொடுத்து அதை சொந்தக்காரிக்கு அளித்துத் தன் கணவனை மீட்டு வரச் சொன்னாள். அதன்படியே பணம் கிடைத்ததும் அந்தப் பெண்மணி பாக்கியாவை விட்டு விட்டாள். வெளியே நின்றிருந்த வண்டியில் தன் மனைவியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினான்.

பிறகு மூவரும் நகரத்துக் கடைகளில் தேவையான விற்பனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்.நடந்த விஷயங்களை பகீரதி விளக்கியதும் பாக்கியாவின் தந்தை தனது கருத்தை வெளியிட்டார்.
"பாக்கியா மாற மாட்டான். அவன் ஏமாளியாகவே இருப்பான். ஆனால் அவனை கவனித்துக் கொள்ள மகா சாமர்த்தியசாலியான நம் மருமகள் அவன்கூடவே இருக்கும் வரையில்,நாம் அவனைப் பற்றி ஒருபொழுதும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.''





Post a Comment

Previous Post Next Post