.

பிரபஞ்சன் எழுதிய பெண் என்னும் புத்தகமானது பெண்ணைப் பற்றி வரலாற்று பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆவணம் ஆகும். இது பெண்களின் வரலாற்றைப் பேசுகிறது.காலங்கலமாக அடிமைப்படுத் தப்பட்டு ஒடுக்கப்பட்ட பெண்களின் கதைகளைச் சொல்கிறது.தமிழில் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த கட்டுரைத் தொகுப்பாக இந்தப் புத்தகம் அமைகி றது.இந்த மாதிரியான வரலாற்று ஆவணங்கள் தமிழில் மிகவும் குறைவாகும் அதனை நிவர்த்தி செய்திருக்கிறார் பிரபஞ்சன் ஆனாலும் இது போன்று மேலும் பல நூல்கள் எழுதப்பட வேண்டும் என்பதிலும் பேசாமல் விட்ட வரலாற்று உண்மைகளை பேச வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது.இது போன்ற வரலாற்று உண்மைகளைக் கூறும் சாலினி எழுதிய பெண்ணின் மறுபக்கம் என்னும் நூலே தமிழில் வந்துள்ள பெண்களின் வரலாற்றைக் கூறும் ஒரு சில படைப்புக்களாகும்.

எம்முடைய இதிகாசங்கள் புராணங்கள் இலக்கியங்கள் பெண்களை என்ன எப்படி நினைத்தன எந்த இடத்தில் வைத்தன என்பதை ஆராயும் புத்தகமே பிரபஞ்சனின் பெண் என்னும் இந்தப் புத்தகமாகும்.

சாலினியின் பெண்ணின் மறுபக்கம் புத்தகமானது விஞ்ஞான பூர்வமாக எழுதப்பட்டுள்ளது ஆனால் பிரபஞ்சனின் இந்தப் புத்தகமானது இலக்கிய ஆதாரத்துடன் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பெண்களையும் அவர்களின் கதைகளையும் அவர்களே சொல்வது போல எழுதப்பட்டுள்ளது. இலக்கிய உதாரணங்களை விட அண்மைக்கால இந்தியாவின் சில உதாரணப் பெண்களையும் பிரபஞ்சன் குறிப்பிட்டிருக்கிறார் அவை எமக்கு நன்கு தெரிந்த உதாரணங்களாகும்.


கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாகவே பெண்கள் தங்கள் நிலையை விட்டுக் கொடுத்துள்ளனர் அல்லது அவர்களது தலைமைத்துவம் முற்றிலும் அகற்றப்பட்டது அதாவது நாம் வேட்டையாடிச் சமூதாயத்திலிருந்து வேளாண் சமுதாயமாக மாறிய வேளையிலேயே பெண் தன் தலைமைத்துவத்தை இழக்க நேர்ந்தது இது மனித இனம் தோன்றிய ஒரு இலட்சம் ஆண்டுகளில் மிகக் குறைவான பகுதியேயாகும்.இந்த இடத்தில் பெண்ணின் தலைமை த்துவம் பறிபோனதோ அங்கேயே அதனை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் ஏனெனில் பெண் விடுதலை இல்லையேல் சமூக விடுதலை இல்லை.எம்மில் சரி பாதியானவர்களை நாம் அடிமைப்படுத்திக் கொண்டு ஒரு போதும் ஒரு சமூகமாக முன்னேற முடியாது.பாதிப்பேர் உற்பத்தியில் ஈடுபடாத சமூகம் எவ்வாறு விளங்கும்....?

அவள்,அவளுடையது என்றிருந்தது ஒரு உலகம்.அது அவன் அவனுடையது என்று எவ்வாறு மாறியது என்பதே சமூக வரலாற என்கிறார் மோர்கன் என்னும் வரலாற்றாய்வாளர்.அந்த வரலாற்றைத்தான் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்படுத்தப்பட்டிருக் கிறான்.சமூக அடிமைத்தனம்,பொருளாதார அடிமைத்தனம் என்பனவே அவைகள்.இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம்,பொருளாதார அடிமைத்தனம் கூடுதலாக ஆண் அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளிற்கு அடிமைப்பட்டுள்ளாள்.இதனை நாம் உடைத்தெறிவதற்கு சமூகப் புரட்சிகள் கட்டாயம் தேவையாகும்.அதற்கு ஒவ்வொருவரும் பெண் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் புரட்சிகள் சாத்தியமாகும்.

இன்று நிலத்தில் வாழும் எந்தவொரு ஆணும் ஒரு பழம் பெரும் குற்றவாளி யாகவே இருக்கிறான்.நேற்று இறந்தவர்களும் கூட.இவர்கள் அனைவரும் மனித உயிர்களில் பேதம் விளைவித்தவர்களாகும்.பெண்களின் உழைப்பைக் களவாடியவர்கள்.பெண்களிற்கான உரிமையை மறுத்தவர்கள். அவர்களைச் சிதைத்தவர்களாவர்.

ஒரு காலத்தில் ஆண்டு கொண்டிருந்த பெண்களின் சிந்திக்கும் உறுப்பையே ஆண் சமூகம் பெயர்த்து எறிந்து விட்டது.சிந்தித்தால் கேள்விகள் எழும். கேள்விகள் ஆண் உலகத்தை அவன் உருவாக்கிய சட்டங்களை புரட்டிப் போட்டு விடும்.ஆகவே சிந்தனைக்கு அடிப்படையாக கல்வி பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.அடுப்பூதும் பெண்களிற்கு படிப்பதெற்கு என்று தத்துவம் எழுதிய ஆண்கள் அஞ்சும் மூன்று அடுக்காக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் என்று பெண்ணின் இடம் வீட்டின் மூலையில் இருக்கிற சமையல் அறைதான் என்றார்கள்.பெண்ணின் சமூகப் பங்கேற்பைத் தடுத்து நிறுத்தவே அவள் கழுத்தில் அச்சம் மடம் நாணம் என்கிற சுமைகளைக் கூட்டி தடுத்தனர்.பெண்,நாகரிக உடையில் இன்று தோற்றம் தந்தாலும் சுய சிந்தனையும் சுயமாய் தன் பொருட்டு தீர்மானிக்கும் ஆற்றலையும் அவள் இழந்தே நிற்கிறாள்.அவள் பதுமை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் பதுமை,சாவி கொடுப்பதற்கு எனக் காத்திருக்கும் பொம்மை.

முத்துலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் எந்தக் காலத்திலும் பெண்களிற்கு ஏற்றதாகும்.''இந்த உலகமானது உங்களால் ஆனது என்று நம்புங்கள்.இது ஆண்களிற்கும் சமபாதி சொந்தம் என்று உணருங்கள்.இந்தப் பூமியை உங்களிற்கு சௌகர்யமான சுகமான வடிவத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கை உங்களிற்கு அளிக்கப்பட்ட ஒரு குவளைத் தேனீர்.அந்தத் தேனீரை நீங்கள் அமர்ந்தும் அருந்தலாம்.நின்றும் அருந்தலாம்.அந்தத் சுதந்திரம் உங்கள் கைகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்'' போன்ற வரிகளில் எழுத்தாளராக முத்திரை பதிக்கிறார் பிரபஞ்சன்.

காட்டுக்குள் தவம் செய்யும் ரிசிகள் எப்போதும் அநேகமான அயோக்கியர்கள்.பெண்களின் உழைப்பில் வாழ்ந்து சுகிக்கிற சோம்பேறிகள்.முனிவர்கள் எந்த வேலையும் செய்யாமல் அவர்கள் அட்டைகளைப் போல் பெண்களை வேலை வாங்கி அந்த உழைப்பில் காலம் கழிக்கும் சோம்பேறிகள் என்பதை நாளாயினியின் கதையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்களிடம் மிகவும் முக்கியமான கேள்வியொன்றைக் கேட்கிறது இந்தப் புத்தகம்.தனக்கு நிகராகப் பெண் படித்து இருப்பதை பெரும்பான்மையான ஆண்கள் விரும்புவதில்லை.ஏன்..? என்பதே அவ் வினா ஆகும்.ஆண்களின் மன நிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவதே இவ் வினா எழுப்பபட்டதன் அடிப்படை நோக்கமாகும்.

பிரபஞ்சன் தன்னுடைய பின்னுரையில் சில கேள்விகளை முன்வைக்கிறார் அவை அவருடைய எழுத்து திறமைக்குச் சான்றாக அமைகிறது.நாலு மனைவிகள்,பத்து மனைவிகள்,வைப்பாட்டிகள்,தாசிகள் என்றெல்லாம் நம் மன்னர்கள்,சிற்றரசர்கள் என்கிற மூடர்கள் தங்கள் அந்தப்புரத்தை ஜன சந்தடி மிகுந்த கிராமமாக மாற்றுகையில் அவன் மனைவி,மனைவிகள் பட்ட அவமானம்,அவலங்களை எந்த எழுத்தாளன் எழுதப் போகிறான்?,சாதி,மதம் என்று கண்ணுக்குத் தெரியாத காரணங்களிற்காக மோதிக் கொள்கிற மக்கள் தங்கள் முதல் இலக்காக பலாத்காரத்தையே வைத்திருப்பதை அறிவீர்களா..?அந்தப் பெண்களிற்கு எல்லாம் நியாயம் கிடைத்ததா..?கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா?நம்மில் எத்தனை பேர் நம் தாய்மார்களின் சம்மதத்தில் பிறந்தோம்..?எத்தனை தந்தையர்கள் தங்கள் மனைவியின் சம்மதத்தின் பேரில் அவர்களைத் தாய்மையடையச் செய்திருக்கிறார்கள்..?இந்தக் கேள்விகள் ஆணாதிக்கத்திற்கு விழும் பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

வரலாறு பதிவு செய்யப்பட்ட காலம் தொட்டு பெண்களின் போராட்டாம் இடையறாது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.மாதவி துறவு கொண்டதும் மணிமேகலையைத் துறவு கொள்ளப் பண்ணியதும் இவர்கள் மேற்கொண்ட ஆணாதிக்கத்திற்று எதிரான ஒருவகைப் போராட்ட வடிவமே.தமிழ் தொண்டு செய்யப் புறப்பட்ட ஒளவை கிழவிக் கோலத்தை வேண்டிப் பெற்றமை யாரை எதிர்த்து..?எதற்காக..?யாரைக் கண்டு அம்மை அஞ்சினாள்..?சைவத் தொண்டு செய்ய வீதிக்கு இறங்கிய காரைக்கால் அம்மையார் பேய் வடிவம் பூண்டது  எதன் மேல் கொண்ட கோபம்..?அது என்ன குடும்பம் என்ற கூண்டை விட்டு வெளியே வருகின்ற பெண்கள் எல்லாம் ஒன்று மூதாட்டியாகிறார்கள் அல்லது பேயாகிறார்கள்..?எங்கேயோ உதைப்பது போல் தெரிகிறது.குடும்பம் பெண்களிற்கு இடப்பபட்ட சமூகத் தடை.எப்படியாவது பெண்களை வீட்டுக்கு ள்ளேயே முடக்கி விட மூடர்கள் கூட்டம் திட்டம் போட்டுச் செய்த சதி.

தமிழ் மன்னர்கள் போர்க்காலங்களில் பெண்களுக்கு இழைத்த வன்முறைகள் என்னென்ன..?அடிமைப்பட்ட பெண்களிடம் ஆண்கள் நடந்து கொண்ட முறை என்ன கணவனும் மனைவியும் ஒரு கூரையின் கீழ் வாழ நேர்ந்தது காதலாலா கட்டாயத்தாலா..?என்கிற கேள்விகளிற்கு விடை தேடுகிறார் பிரபஞ்சன்.

யானைகள் பிச்சை எடுக்கும் தேசம் இது.பெண்கள் யானைகளைப் போல பலசாலிகள்.அவர்கள் தங்களைப் புரிந்து கொண்டால் நம்பிக்கையை ஏந்துவார்கள்.தம் கையை ஏந்தி நிற்கிற அவலம் ஒழியும்.கடந்த பத்தாயிரம் ஆண்டு காலமாக பேசப்பட்ட மொழிகள் எல்லாம் ஆணின் மொழிகள்.இனிப் பேசப் போவது பெண்கள்.பெண்கள்,பெண்கள் மொழியில் பேசப் போகிறார் கள்.ஒடுங்கிக் கிடந்த ஒரு எரிமலை வெடித்துச் சிதறும் போது அக்கினிக் குஞ்சுகளே வெளிப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது பெண்கள் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் ஆணாதிக்கத்pனால் அனுபவித்த துன்பங்களை பல பெண்களின் வாயிலாகச் சொல்கிறது.மாற்றங்களை விரும்புவோர் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.வாசிப்போம்.


பெண்ணின் மறுபக்கம் புத்தகத்தினை வாசிக்க

பெண்ணின் மறுபக்கம்





Post a Comment

Previous Post Next Post