மன்னரின் அரண்மனைக்குப் பின்னால் ஒரு குன்று இருந்தது.அந்தக் குன்றின் மேல் ஒரு கோயில் இருந்தது. கோயில் கருவறையில் இருந்த தெய்வம் தனக்குப் படைக்கப்படும் உணவையெல்லாம் உண்மையாகவே உண்டு விடும். அதைப்பற்றி கோயிலின் பூசாரி பிரசாரம் செய்ததால், அந்த தெய்வத்தின் புகழ் சுற்று வட்டாரங்களுக்கெல்லாம் பரவியது.
ஒவ்வொரு நாள் மாலையும் கருவறையில் பல நிவேதனப் பொருட்கள் படைக்கப்பட்டு கோயிலின் கதவுகள் மூடப்பட்டு விடும். மறுநாள் காலை அங்கு சென்றால் நிவேதனம் படைத்த தட்டுகள் காலியாக இருக்கும்.இந்த அதிசயத்தைக் காண அரச குடும்பத்தினர் உட்பட ஏராளமான பக்தர்கள் தினமும் காலை நேரத்தில் கோயில் கருவறைக் கதவுகள் திறக்கப்படும் நேரத்தில் அங்கே கூடுவது உண்டு. தெய்வத்தின் படையலுக்காக அரண்மனையில் ஒரு தனி சமையல் அறையே இருந்தது.அங்கு சமைத்த பதார்த்தங்களைத் தவிர பொது மக்களும் தங்கள் வீடுகளில் சமைத்த உணவுப் பொருட்களை நிவேதனமாக கோயிலில் தெய்வத்தின் முன் வைப்பதுண்டு. சில நாட்கள் தனக்குப் பிடித்த சில விசேஷ பண்டங்டையல் செய்யுமாறு தெய்வம் கட்டளையிடுவதுண்டு.பூசாரி தெய்வத்தின் கட்டளையை அரண்மனையில் வந்து தெரிவித்ததும் அதற்கேற்ப விசேஷ பண்டங்கள் அன்று தயாரிக்கப்பட்டு படையலுக்கு அனுப்பப்படும்.
ஒருநாள் டேனியல் என்ற அறிஞர் மன்னருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது மன்னரை அவசரமாகக் காண வந்த பூசாரி டேனியலைக் கண்டதும் தயங்கி நின்றான்.
பூசாரியிடம்,
மன்னர் ''சொல்லவேண்டியதை இங்கேயே சொல்! என்றார்.
ஆனால் டேனியல் முன்னிலையில் பேச விரும்பாத பூசாரி அரசருடன் தனிமையில் பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.அரை மனதுடன் எழுந்து தனியே சென்று பூசாரி சொல்வதைக் கேட்ட பிறகு,
மன்னர் திரும்பி வந்தார்.
''அரசே! நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் பூசாரி தங்களிடம் என்ன கூறினான் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்று டேனியல் வினவினார்.
''தாராளமாக! வேறொன்றுமில்லை! இன்று வழக்கமாகப் படைக்கப்படும் உணவைப் போல் இரு மடங்கு அதிக உணவும்,
ஏராளமான விசேஷ இனிப்புப் பண்டங்களும் வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருக்கிறார்.
அவ்வளவுதான்!” என்றார் மன்னர்.
''அப்படியா! நான் எதிர்பார்த்ததுதான்!” என்று கூறிய டேனியல் பலமாக சிரித்தார்.
''நீ எதிர்பார்த்தாயா? உனக்கு எப்படித் தெரியும்? ’ என்று ஆச்சரியத்துடன் மன்னர் கேட்டார்.
''அரசே! உங்களிடம் அதை இப்போது விளக்கிக் கூற இயலாத நிலையில் நான் இருக்கிறேன். நான் சந்தேகப்படுவதைக் கூறினால் நீங்கள் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்!!”என்று டேனியல் புதிர் போடுவது போல் கூறினார்.
மன்னர் டேனியல் கூறுவதில் உட்பொருள் என்ன என்று அறிய ஆவல் கொண்டு, அவரை சொல்லுமாறு தூண்டினார். தன் சந்தேகம் தெளிந்த பிறகு மறுநாள் காலை பதில் கூறுவதாகவும் அன்றிரவு கோயில் கதவுகள் மூடப்படு முன் கருவறையைச் சுற்றி வலம் வர அனுமதி வழங்க வேண்டுமென்றும் டேனியல்
கோரினார். மன்னரும் அதற்கு உடன்பட்டார்.
அன்றிரவு அதிகப்படியான உணவும், விசேஷத் தின்பண்டங்களும் படைக்கப்பட்ட போது டேனியலும் மன்னரும் கருவறையில் இருந்தனர். கதவுகள் மூடப்படு முன் கருவறையில் தெய்வத்தைச் சுற்றி மூன்று முறை டேனியல் வலம் வந்தார். பூசாரிக்கு அது கொஞ்சங்கூட பிடிக்கவில்லை.
கோயிலை விட்டு வெளியே வந்ததும், மன்னர் டேனியலிடம் 'இறைவனுடைய படையலுக்காக என்னுடைய சமையல்காரனையே முழுப்பொறுப்பில் அமர்த்தியதால் எனக்கு வேண்டிய எதுவும் உண்ணக் கிடைக்கவில்லை. நான் அரைப் பட்டினி!” என்றார்.
''ஐயோ பாவம்! பூசாரிக்காகவும் அவன் விருந்தினர்களுக்காகவும் நீங்கள் இன்று அரைப் பட்டினியாயிருக்கிறீர்கள்’’ என்று டேனியல் விமர்சனம் செய்தார்.
“தவறாகச் சொல்கிறாய்டேனியல்! இறைவனுக்காக இருந்தேன், '' என்று
மன்னர் டேனியலைத் திருத்த முயற்சிக்க ''இறைவனுக்காகவா!'' என்று
கூறி டேனியல் விழுந்து விழுந்து சிரித்தார். மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
மறுநாள் காலை மன்னர் முன்னிலையில் கருவறைக் கதவுகள் திறக்கப்பட்டன. அரண்மனையிலிருந்து படையலுக்கு அனுப்பப்
பட்டிருந்த உணவு வகைகள் நிரம்பிய தட்டுகள் காலியாக இருக்க பொது
மக்கள் படைத்த உணவுகள் அப்படியே இருந்தன. அதைக்கண்ட மக்கள்
‘நமது படையல் இறைவனுக்குப் பிடிக்கவில்லை போலும்!” என்று
வருந்தினர். அதைக் கேட்ட டேனியல் மீண்டும் பலமாகச் சிரித்து, 'அரசே!
தெய்வம் எங்காவது உண்மையாகவே நாம் படைப்பதை உ ண்ணுமா?
அப்படியே உண்டாலும், அன்பே உருவான இறைவன் நாம் படைப்பதை மகிழ்ச்சியோடு ஏற்பாரே தவிர தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று
கட்டளையிடுவாரா? நீங்கள் எ ப்படி இதையெல்லாம் நம்புகிறீர்கள்?'' என்று
கேட்டான்.
மன்னருக்கு மீண்டும்
கோபம் உண்டாக, டேனியலை நோக்கி, “இறைவன் நம் படையலை உண்ணவில்லை என்றால் வேறு யார் உண்ணுகிறார்கள்?’’ என்று கேட்டார்.
“இறைவனின் பெயரைச் சொல்லி உங்களையும் மக்களையும் ஏமாற்றி
வரும் பூசாரிதான்!” என்றார் டேனியல். "டேனியல் நீ வீணாக பழி சுமத்துகிறாய்!” என்றார்
மன்னர்.
''அரசே! நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையெனில், என்னுடன்
வாருங்கள். தெய்வத்தின் பின்புறம் செல்வோம்” என்று கூறி மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டு டேனியல் மன்னரை அழைத்துச் சென்றார்.
அங்கே கருவறையின் ஒரு
மூலையில் ஒரு ரகசிய சுரங்கப்பாதை தென்பட்டது. அதன் அருகிலிருந்து கருவறை எங்கும் தரையில் சாம்பல் பொடி காணப்பட சாம்பலில் பதிந்த கால் தடங்கள் தென்பட்டன.
"இப்போது புரிகிறதா மன்னரே! ஒவ்வொரு இரவும் பூசாரி இந்த சுரங்கப்பாதையின் வழியே வந்து கருவறைக்குள் நுழைந்து படைத்த உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விடுகிறான். பூசாரியின் சம்பந்திரமார்கள் விருந்தாளிகளாக நேற்று வந்திருந்ததை நான் அறிந்தேன். அவர்களுக்காக இறைவனின் பெயரால் அதிக உணவு பூசாரி கேட்பான் என்று நான் எதிர்
பார்த்தேன். அதனால் நேற்றிரவுகதவுகள் மூடப்படும் முன், கருவறையைச் சுற்றி வந்து சாம்பல் பொடியைத் தூவினேன். இரவு நேரத்தில் படையலைத் திருட வரும் பூசாரியின் கால் தடங்கள் சாம்பலில் படியுமென்பது எனக்குத் தெரியும்"என்று கூறி முடித்தார் டேனியல்.
"தான் இத்தனை நாட்களாக பூசாரியால் ஏமாற்றப்பட்டு வந்ததை
அறிந்த மன்னர் அதிர்ச்சியால் சமைந்து போனார். பூசாரியைக் கைது
செய்ய உத்தரவிட்ட மன்னர்,“கடவுளின் பெயரால் இப்படி எல்லாம்மா மோசடி செய்வார்கள்? ’என்று டேனியலைக் கேட்க, 'பல சமயங்களில் இப்படிப்பட்ட நயவஞ்சகர்களால் கடவுளும் துன்புறுகிறார்"என்றார் டேனியல்.
Post a Comment