.

மகேந்திரபுரியை  ஆண்டுவந்த விஜயேந்திர மன்னருக்கு, வடக்கு திசையிலிருந்த கொடூரமான காட்டுவாசி இனத்தினர் அடிக்கடி போர் தொடுத்து ஓயாத தொல்லை கொடுத்தனர். அவர்களை அடக்குவதற்காக தனது படைகளைப் பலப்படுத்த விரும்பிய மன்னர் வீரமும், துணிச்சலும் மிகுந்த வாலிபர்களைக் கொண்டு ஒரு தனிப்படை நிர்மாணிக்க விரும்பி அந்தப் பொறுப்பைத் தன் முதல் மந்திரியிடம் ஒப்படைத்தார்.

ஒருநாள் இருபது வயது நிரம்பிய ஒரு வாலிபன் அரண்மனைக் காவலர்களை அணுகி தான் மன்னருடைய தனிப்படையில் சேர விரும்புவதாகவும் மன்னரைக் காணவேண்டுமென்றும் தெரிவித்தான். அவனைப் பார்த்த உடனேயே காவலர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.அதைக் கண்டு கோபமுற்ற அந்த வாலிபன், “என்னுடைய இடது பக்க மீசை சிறியதாகவும் வலப்பக்கம் பெரியதாகவும் இருப்பதைக் கண்டு சிரிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் என் இடது பக்க குட்டை மீசையின் பின்னணியில் ஒரு வீர சாகசக் கதை உள்ளது. அதை அறிந்தால், நீங்கள் இப்படி சிரிக்க மாட்டீர்கள்” என்றான்.

“அப்படி என்னப்பா கதை அது? நாங்களுந்தான் கேட்கிறோம்!''
என்றனர் காவலர்கள்.


“உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் அதைச் சொல்ல
முடியாது. அதைக் கேட்கும் தகுதி மன்னருக்குத்தான் உள்ளது. வழி விடுகிறீர்களா இல்லை?” என்று தன் வாளை உருவினான்.

“அடேயப்பா! நீ பெரிய சூரன் என்றுதான் தோன்றுகிறது! ஆனால் நீ
முதலில் பார்க்க வேண்டியது முதல் மந்திரியை! அவரிடம் போய் உன்
கதையைச் சொல்” என்று அவனை மந்திரியிடம் அனுப்பி வைத்தனர்.

முதல் மந்திரியிடம் சென்ற அந்த வாலிபன் எடுத்த எடுப்பிலே கொஞ்சமும் தயக்கமின்றி “காட்டு வாசியினரை அடக்குவதற்காக மன்னர் தனிப்படை திரட்டுகிறார் என்று அறிந்தேன். வீரமுள்ள வாலிபர்களையே அவர் விரும்புவதாகவும் அறிந்தேன். அதனால்தான் அதில் சேர நான் இங்கு வந்துள்ளேன்” என்றான்.

தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட மந்திரி “நீ சூரப்புலி என்று
உன் மீசையைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால் உன் மீசையைப் பார்த்தால், எதிரிகள் போர் செய்வதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்து விடுவார்களே என்றுதான் கவலையாக இருக்கிறது” என்றார்.

“என் இடது பக்க மீசை ஏன் பாதிதான் உள்ளது என்ற காரணத்தை
அறிந்தால் நீங்கள் இவ்வாறு பேசாமல் என்னைப் படை வீரனாக ஆக்கி விடுவீர்கள். கேளுங்கள் என் கதையை’” என்று வாலிபன் விளக்கத்
தொடங்கினான்.

“நான் சாமர்த்தியமாகக் காட்டுவாசிகளின் தலைவனின் மாளிகையின் உள்ளே நுழைந்து அவனுக்கு நேரே போய் நின்றேன். தலைவனைப் பார்த்து தைரியமாக ‘அட அற்பப்பதரே! என்ன தைரியமிருந்தால் எங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பாய்? நீ விரும்பினால்,என்னுடன் சண்டையிடு' என்று
சவால் விட்டேன். உடனே அவன் கோபங்கொண்டு தன் வாளை என் மீது
வீசி எறிந்தான். அது என் மீது சரியாகப்படாமல் என் இடது புற மீசையை
மட்டும் வெட்டி விட்டது. அங்கு பிடித்த ஓட்டம், நேரே இங்கு வந்து தான் நிற்கிறேன்” என்றான் அந்த வாலிபன்.

அந்த கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த முதல் மந்திரி,“உனக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும். ஆனால் படை வீரனாக அல்ல ராஜாவின் விதூஷகனாக!’’

"அப்படியென்றால்? ” என்று வாலிபன்திகைத்தான்.

“உன்னை விகடகவியாக,ஆஸ்தான கோமாளியாக நியமிக்க சிபாரிசு செய்கிறேன்” என்றார் மந்திரி.





Post a Comment

Previous Post Next Post