தொல்குடித் தமிழனின் கடல் கடந்த பயணம் என்பது வாழ்வின் மேம்பாடு நோக்கிய ஒன்றாகவே இருந்துள்ளது. இவ்வாறாக கடல் கடந்து சென்ற தமிழன் சென்ற வினை முடிந்ததும் திரும்பினானே அன்றி அங்கேயே இருந்தவன் அல்லன்.
செந்தமிழ்,பைந்தமிழ்,முத்தமிழ் போன்ற அடைமொழிகள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. ஆனால், இவற்றிற்கெல்லாம் மாறாக, நமக்கு கற்பிக்கப்படாத,நாம் அறியாத 'கூலித்தமிழும்' இருந்துள்ளது மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' (2014) என்னும் ஆய்வுநூல்,தென்னிந்தி யாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக கடத்தி வரப்பட்ட மலையக மக்களின் துயரங்களையும் ஆங்கில ஏகாதிபத்திய துரைமார்களின் ஒடுக்கு முறைகளையும் பேசுகின்றது.தமிழிலக்கியம் அரிதாகவே தீண்டிய தமிழர்களின் கறுப்புப் பக்கங்களை இந் நூல் பேசுகின்றது.இது ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷார் உலகம் முழுக்கத் தங்களுடைய ஆட்சிப்பரப்பை வியாபித்திருந்த நிலையில் காலனித்துவ நாடுகளில் தங்களுடைய தொழிற்பரப்பை விரிவுபடுத்தவும்,சாலைகள் அமைக்கவும்,மலைகளைக் குடைந்து புகையிரத பாதைகளை உருவாக்கவும், நெல்வயல்கள் அமைக்கவும்,கரும்பு,தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியவும் மலிவான கூலிக்கு நிறைவான உழைப்பைத் தரக்கூடிய மனித எந்திரங்கள் தேவைப்பட்டன.வெள்ளை முதலாளிகளின் இத்தேவைகளை நிறைவேற்ற ஒப்பந்த முறையில் கூலிகள் தேவைப்பட்டனர். கூலிகளைக் கொண்டுவர இதற்கென்றே கங்காணிகள் உருவாக்கப்பட்டனர்.
தென் தமிழகத்தில் சமூக, பொருளாதாரத் தளங்களில் வலுவற்ற, ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிவைத்து, பிரிட்டிஷாரின் காலனித்துவ காலத்தில் கங்காணி களால் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு,இழுத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறாக இழுத்துச் செல்லப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் சமூக, பொருளாதாரத் தளங்களில் வலுவற்ற நிலையிலிருந்த தலித் மக்களே ஆவர்.
இவ்வாறாக கூட்டிச் செல்லப்பட்ட தமிழர்களை 'கூலி' என்ற இழிவான சொல் லாலேயே குறித்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் கூலி,'கூலிச் சம்பளம்' என்றே குறிக்கப்பட்டது.இவர்களிடையே மதப் பிரசாரம் செய்த கிறிஸ்தவ மிஷன் 'கூலி மிஷன்' என்றே குறிப்பிடப்பட்டது. இவர்கள் தமிழர்களாக இருந்ததால்,'கூலித் தமிழர்கள்' என்று அழைக்கப்பட்டு,அங்கிருந்த மற்ற இலங்கை மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டனர்.இக்கூலிகளிடம் உரையாட துரைமார்கள் கல்வி கற்க வேண்டியிருந்தது. அதாவது. கூலிகளின் தமிழைக் கற்கவேண்டியிருந்தது. இதுவே 'கூலித் தமிழ்' இந் நூல் கூலிகள் பேசும் மொழியை மட்டும் போதிக்கவில்லை.அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் சொல்கிறது.
தோட்டக்காட்டான்,கூலித் தமிழன் என்ற இழிவான முத்திரையுடன் வாழ்ந்து மடிந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் குறித்த ஆவணமாக, மு.நித்தியானந்தன் அவர்களின் 'கூலித்தமிழ்' திகழ்கின்றது.1869 முதல் மலையகத்தின் தோட்டங்களில் கண்டக்டராகப் பணியாற்றிய ஆபிரகாம் ஜோசப் என்பவர் எழுதிய 'கோப்பிக்கிருஷிக் கும்மி' என்ற நூலே மலைய கத்தின் முதல் நூலாக ஆசிரியரால் குறிப்பிடப்படுகிறது. ஆங்கி லேயரின் துரைத்தனத்தைத் துதி பாடுவதற்காகவே எழுதப்பட்ட இந்நூலே துரதிர்ஷ்டவசமாக மலையகத்தின் எழுத்து இலக்கியத்திற்குச் சான்று பகர்கிறது.இந்நூலே மலையகத்தின் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகால சரித்திரத்தை தேடிக்கொடுத்துள்ளதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
கோப்பித் தோட்டங்களில் தமிழர்களின் உழைப்பு சாறாகப் பிழியப்படும் போது,அவ் வலியிலிருந்து மீள,அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர்.அதற்கு மாறாக,தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இந்நூலைக் காண்கிறார் நூலாசிரியர்.
இந் நூல் கோப்பிப் பயிர்ச் செய்கைக்கான கைந்நூல் எனினும் இந்நூலின் வாயிலாக தமிழர்களுக்கெதிரான மிகப்பெரிய தாக்குதலையே ஆபிரகாம் ஜோசப் தொடுத்துள்ளார்.தமிழர்களின் உயிரோடு, உணர்வோடு இணைந்த வழிபாட்டு முறையைப் புண்படுத்தும் வகையில், தமிழர்களை மட்டுமல்லாது, தமிழர்களுடைய கடவுளையும் தாழ்வாகவே சித்திரித்துள்ளார். 'முனியாண்டி வணக்கம்' என்ற தலைப்பில் கோப்பித் தோட்டத் தொழிலாளர் மத்தியில் காணப்படும் இந்து சமய வழிபாட்டு முறையைக் கண்டனம் செய்யும் ஆபிரகாம் ஜோசப், 'முனியாண்டி ஒரு ஏழைக் கூலி, பிழைப்புக்காக உள்ளாஸ் கிரியாவுக்கு வேலை செய்யப் போனவன். வேலை செய்து கொண்டிருக்கும் போது மரம் அவன் மேல் விழுந்து, ஓங்கி அலறிச் செத்துவிட்டாள். இப்படிப் பரிதாபமாய் இறந்து போன ஏழைக்கூலி முனியாண்டி நோயையும் காய்ச்சலையும் உங்கள்மீது எப்படி ஏவ முடியும்?' என்று கேட்கிறார். முனியாண்டி, கதிரேசன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் வேறுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் மனிதரின் பிள்ளைகளே என்றும், அவர்களில் சிலர் முனியாண்டி போல ஏழைகள் என்றும் மற்றவர்கள் துன்மானிடர் என்றும், குற்றச் செயல்களில் பேர் போனவர்கள் என்றும் கூறுகிறார்.
கூலித் தொழிலாளர்களை துரைமார்கள் குடும்பத் தலைவனைப் போல பாதுகாப்பர்;நல்ல தங்குமிடம், காற்றோட்ட வசதி, நோய்களுக்கு தடுப்பூசி போன்றவை சிறப்பாக கிடைக்கும் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை கங்காணிகள் கூறியுள்ளனர். திருவிதாங்கூரிலிருந்து இலங்கையின் கோப்பித் தோட்டத்திற்கு கூலியாகச் சென்ற ஒருவன்,தான் உழைத்த பணத்தைக் கவனமாகச் சேர்த்து. இப்போது திருவிதாங்கூர் கோப்பித் தோட்டப்பகுதியில் மிகப் பெரிய தோட்டச் சொந்தக்காரனாக இருப்பதாக திருவிதாங்கூர் அரசர் பேசியுள்ளார். அரசரின் இக்கருத்தை வில்லியம் டிக்பி போன்ற ஆங்கிலேய அறிஞர்கள் தமது கட்டுரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளனர்.தமிழர்கள் ஏமாற்றப்படும் இந்நிகழ்வினை ஸி.வி.வேலுப்பிள்ளை. தன்னுடைய ‘நாடற்றவர் கதை' என்னும் நூலில் விளக்கிக் கூறுகிறார்.
நீக்ரோ அடிமைகளைச் சந்தையில் விலைக்கு வாங்கியதற்கு ஒப்பாகும் இது என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். இவ்வாறாக ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் முகாம்களில் தங்கவைக்கப் படுகின்றனர். ஆயிரம் பேர் தங்க வேண்டியஇடத்தில் பத்தாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். தொற்றுநோய் நீக்கம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டனர், நோய்த் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடையாளமாக சூட்டுக்காயைக் கொண்டு சூடு போட்டுள்ளனர். இந்தச் சூட்டுத்தளும்பு தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடையாளம் என்று கூறப்பட்டாலும், அவன் அடிமை என்பதை உறுதிப்படுத்தவே போடப்பட்டது.
அருமையான விமர்சனம்,, வாழ்த்துக்கள் 🙏 🇨🇭 🙏
ReplyDeleteநன்றி
DeletePost a Comment