தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சிகளை அரங்கேற்றி சாதனை படைத்து வரும் இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக செயற்கை நுண்ணறிவு என பொதுவாக அறியப்படும் செயற்கை மதிநுட்ப (AI) ஆற்றல் மாறி வருகிறது
கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகளின் செல்வாக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரதும் நாளாந்த வாழ்வில் தனது ஆதிக்கத்தை என்றுமில்லாதவாறு விசாலப்படுத்தியுள்ளது.
இன்றைய வாழ்வில் தம்மை செயற்கை மதிநுட்பம் பல்வேறு வழிகளிலும் வழி நடத்துகிறது என்பதை உணராது அதனைப் பயன்படுத்தி அதன் அனுகூலங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் பலர் நம் மத்தியில் உள்ளனர்.
அவர்களில் பலர் தாம் இலத்திரனியல் சாதனங்களில் Google,Facebook, Youtube,நNetflix என்பவற்றைப் பயன்படுத்துகையில் தாம் தேடி அவதானித் தவற்றையும் தம்மால் குரல் மற்றும் எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட கட்டளைகளையும் அந்த வலைத்தளங்களுடன் இணைக்கப்பட்ட செயற்கை மதிநுட்பமானது பகுப்பாய்வு செய்து தகவல்களை வடிகட்டி தேவைப்பாட்டை அனுமானித்து அதனுடன் சம்பந்தப்பட்டவற்றை பார்வையிட சிபாரிசு செய்து வருவதை அறியாது ள்ளனர்.அத்துடன் முன்னணி மருத்துவமனைகளு டன் நள்ளிரவு வேளைகளில் தொடர்பு கொள்கையில் எழுத்து வடிவிலும் இனிமையான பெண் குரலிலும் கிடைக்கும் தகவல்களுக்குப் பின்னணியில் செயற்கை மதிநுட்பங்கள் இருப்பதை பலரும் உணராதுள்ள னர் வர்த்தக மென்பொருள் தீர்வுகளை வழங்கும் டெக்யூரி நெட் நிறுவனத்தின் தரவுகளின் பிரகாரம் உலகில் செயற்கை மதிநுட்பத்தைப் பயன்படுத்தும் 84 சதவீத மான மக்கள் தாம் அந்த மதிநுட்பத்துடன் தொடர்பில் உள்ளோம் என்பதை அறியாது அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செயற்கை மதிநுட்பம் என்பது இயந்திரங்களில் குறிப்பாக கணினிகளில் இலக்கங்கள்,எழுத்துகள், புகைப்படங்கள்,காணொளிகள்.குரல் வடிவில் மென்பெருட்கள் வாயிலாக உரிய தரவுகளை வழங்கி அவற்றில் மனித மதிநுட்பத்தை உருவகபடுத்தல் ஆகும். பொதுவாக செயற்கை மதி நுட்பம் எனும் போது தன்னியக்க ரீதியில் செயலாற்றும் ரோபோக்கள் அனைவரது ஞாபகத்தில் வருவது வழமையாகவுள்ளது ஆனால் அந்த ரோபோக்களை விடவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொடர்பு சாதனங்கள், இலத்திரனியல் கருவிகள் என்பவற்றில் மென்பொருள் வடிவில் மேற்படி குறுகிய நிலை செயற்கை மதி நுட்பம் உள்ளீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி செயற்கை மதிநுட்பத்தி ஆரம்ப நிலையானது தரப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட வரையறைக்குள் தீர்வுகளை வழங்குவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவுள்ளது. இத்தகைய செயற்கை மதி நுட்பங்களின் செயற்றிறன் மற்றும் ஆற்றல் என்பன அவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்கான தீர்வுகள மட்டுமே வழங்கக் கூடியனவாக இருக்கும்.
ஆனால் மனித மூளையைப் பொறுத்த வரை அதிலுள்ள சுமார் 68 பில்லியன் நரம்புக் கலங்களின் சிக்கலான இணைப்புகள் மற்றும் இரசாயன விளைவுகள் காரணமாக அது பல்வேறு விடயங்களையும் ஒரு சமயத்தில் பகுத்தாராய்ந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானத்தை எடுக்கக் கூடிய அற்புத ஆற்றலை பெற்று விளங்குகிறது. அத்தகைய மனித மூளையையும் விஞ்சக் கூடிய செயற்கை நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் அண்மைக் காலமாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை மட்டும் நம்பியிராது ஆழமாகக் கற்றல் முறைமையைப் பயன்படுத்தி அந்தத் தரவுகளுடன் தன்னுடன் பொருத்தப்பட்ட உணர்கருவிகள்,புகைப்படக் கருவிகள் மற்றும் காணொளிக் கருவிகள் என்பவற்றின் மூலம் பெறப்பபடும் நிகழ்காலத் தரவுகளை பகுப்பாய்வு செய்து சுயமாக நடைமுறைத் தீர்வுகளையும் எதிர்கால எதிர்வுகூறல்களையும் முன்வைக்கக் கூடிய வகையில் முன்னேற்றகரமான புதிய தலைமுறை செயற்கை மதிநுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை மதிநுட்பம் தொடர்பான சிந்தனை கிரேக்கத்தில் கிறிஸ்துவுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலவியமைக்கு வரலாறு சான்று பகிர்கிறது.
கிறிஸ்துவுக்கு முன் 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்தவர் என நம்பப்படும் கிரேக்கப் பிரபல கவிஞர் ஹோமர் தனது படைப்புகளில் இயந்திரங்களை தன்னியக்க ரீதியில் இயக்க வைப்பது தொடர்பான கருத்துகளை முன்வைத்திருந்தார்.
அத்துடன் பண்டைய கிரேக்க புராண கதைகளில் கடற்கரையில் காவலிருக்கும் வெண்கல ரோபோ கட்டமைப்பு, செயற்கை பெண்ணான பண்டோரா,அவற்றை உருவாக்கிய கடவுளான ஹிபெஸ்டஸ் என்பன அக்காலத்திலான செயற்கை மதிநுட்பம் தொடர்பான கற்பனைகளுக்கு எடுத்துக் காட்டாகவுள்ளன.
மனித செயற்பாடுகளை தன்னியக்க ரீதியில் இயந்திரங்களைக் கொண்டு செய்ய முடியும், இயந்திரங்களை மனிதனைப் போன்று சிந்திக்கவும் பகுத்தராய்ந்து முடிவெடுக்கவும் வைக்க முடியும் போன்ற எண்ணக்கருக்கள், புனைக் கதைகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சியுடன் இணைந்து வலுவடைந்து வந்துள்ளது. குறிப்பாக 1900 ஆம் ஆண்டுக்கும் 1950 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இது தொடர்பான கருத்துக்கள் தீவிரமடைந்தன.
இந்நிலையில் 1956 ஆம் ஆண்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் கணினி விஞ்ஞானியும் தத்துவஞானியும் உயிரியல் அறிஞருமான அலன்துறிங் செயற்கை மதிநுட்பம் தொடர்பில் ஆய்வை மேற்கொள்வதற்கான கல்விக்கூடமொன்றை நிறுவி செயற்கை மதிநுட்ப வரலாற்றில் மைல்கல் படைத்தார். அவரும் அமெரிக்க கணினி விஞ்ஞானியான ஜோன் மெக்கார்த்தியும் செயற்கை மதிநுட்பத்தின் தந்தையராக கருதப்படுகின்றனர். அவர்களது முயற்சியானது இன்று முன்னேற்றகரமாக பிந்திய தலைமுறை செயற்கை மதிநுட்பங்களின் உருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளது.
இன்று உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட் கையக்கத்தொலைபேசிகள், கணினிகள்,மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்களில் ஆதிக்கத்தைச் செலுத்தி பயனாளர்கள் மத்தியில் பேசுபொருளாக ChatGPT என்ற செயற்கை மதிநுட்பம் விளங்குகிறது.
அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட OpenAI நிறுவனத்தால் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட ChatGPT செயற்கை மதிநுட்பமானது ஆழமாகக் கற்றல் என்ற முன்னேற்றகரமாக ஆற்றலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் பிந்திய ChatGPT-4 பதிப்பானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. மேற்படி மதிநுட்பமானது மென்பொருள் சூத்திரங்கள், கட்டுரைகள், கவிதைகள்,திரைப்பட வசனங்கள் என்பவற்றை எழுதுதல்,ஆய்வை மேற்கொள்ளல்,பாரிய கட்டுரையின் உள்ளடக்கத்தை சுருக்கமாக வழங்கல், சுய விபரக்கோவையை தயாரித்தல், விடுமுறையைத் திட்டமிடல், மொழி பெயர்த்தல்,பார்வைப் புலனற்றவர்களுக்கு ஸ்மார்ட் புகைப்படக்கருவியில் பதிவாகும் காட்சிகளை குரல் வடிவில் விபரித்தல்,குறிப்பிட்ட உணவுப் பொருளின் புகைப்படத்தை வைத்து அதனால் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்களின் செய்முறை குறித்து விபரித்தல் காட்சிப்படுத்தல் உள்ளடங்கலாக பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது.இந்த செயற்கை மதிநுட்பத்தை அப்பிள் மற்றும் அன்ட்ரொயிட் இலத்திரனியல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
ChatGPT செயற்கை
மதிநுட்பம் இரு மாத காலத்தில் 100 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாட்டாளர்களை எட்டி எந்தவொரு செயற்கை மதிநுட்பத்தை விடவும் குறுகிய காலத்தில் அதிகமாக விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்த
ChatGPT-4 ஆல் எழுதப்படும் வார்த்தைகள் மனிதரால் அச்சிடப்பட்டவை அல்ல என அதனைப் பயன்படுத்தும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் அறியாதுள்னர்.
கூகுள் அஸிஸ்டன்ட், சிறி, அலெக்ஸா உள்ளடங்கலான மனித முகத்தையும் மற்றும் குரலையும் அடையாளம் காணும் முறைமை, சுயமாக வாகனங்களை செலுத்த உதவும் தொழில்நுட்பம், கணித மற்றும் பௌதிக கணிப்பீடுகளை பகுப்பாய்வு செய்து தீர்வு வழங்கும் செயற்கிரமம்,புதிய தலைமுறை ஸ்மார்ட் காணொளி கண்காணிப்பு கருவிகள், வீடுகளிலுள்ள ஸ்மார்ட் மின் சாதனங்களை தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் வேறொரு இடத்திலிருந்து கட்டுப்படுத்தும் செயற்கிரமம் என நாளாந்த வாழ்வில் செயற்கை மதிநுட்பம் தனது செல்வாக்கை பல்வேறு வழிகளிலும் பிரயோகித்து வருகிறது.
அத்துடன் வங்கித்துறை மற்றும் வர்த்தகத்துறைகளில் பொருளாதார ரீதியான
தீர்மானங்களை எடுத்தல்,சுயமாக சதுரங்க விளையாட்டு உள்ளடங்கலான அறிவியல் விளையாட்டுகளை விளையாடுதல்,காலநிலை தொடர்பில் எதிர்வு கூறுதல்,மனிதரையொத்த கணினி செய்தி வாசிப்பவர்களையும் அறிவிப்பாளர்களையும் உருவாக்குதல், தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ளுதல், திருமணத்திற்கு பொருத்தமான ஜோடியை தெரிவு செய்வதற்கு உதவுதல் என செயற்கை மதிநுட்ப சேவைகள் விரிவுபடுத்தப் பட்டுக் காணப்படுகின்றன.
இன்றைய கால கட்டத்தில்
செயற்கை மதிநுட்பமானது அரசியல்,பொது நிர்வாகம் சுகாதாரக் கவனிப்பு,நிதி,உற்பத்தித்துறை,போக்குவரத்து விவசாயம்,பாதுகாப்பு உள்ளடங்கலான அனைத்துத் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.கொவிட் - 19 சில்லறை விற்பனை துறையில் செயற்கை மதிநுட்பத்தின் ஆதிக்கம் என்றுமில்லாதவாறு விரிவாக்கம் அடைந்துள்ளது.அத்துடன் மனிதர்கள் பணியாற்றுவதற்கு ஆபத்துமிக்க கட்டிட நிர்மாணம்,இரசாயன மற்றும் உற்பத்தித் தொழிற்றுறைகளில் இதன் பயன்பாடு இன்றயமையாததாக உள்ளது.
மனித மூளையினது ஞாபகசக்தி மற்றும் செயலாற்றல் என்பன வரையறைக்குட்பட்டதாக உள்ளன. ஆனால் செயற்கை மதிநுட்பமானது வாரத்தின் 7 நாட்களும் தினசரி 24 மணி நேரமும் இரவு பகலாக களைப்ப டையாது சேவையாற்றும் வல்லமையைக் கொண்டதால் நிறுவனங்கள் பலவும்
அவற்றை நாடும் சாத்தியம் அதிகமாகவுள்ளதால் எதிர்காலத்தில் பலரும் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது.
உள்ளீடு செய்யப்பட்ட தவறான, பாரபட்சமான தரவுகளை தீர்வுகளுக்குப் பதிலாக பயன்படுத்தும் அபாயம், தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வழங்கும் பிந்திய தலைமுறை செயற்கை மதிநுட்பத் தீர்வுகளில் தரவு மூலங்கள் குறித்து அறிய முடியாத நிலை என்பன காணப்படுவதால் அதன் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்வது கடினமாகவுள்ளது. இத்தகைய மதிநுட்பம் தவறானவர்கள் கையில் சிக்குகையில் அவர்கள் அதனைப் பயன்படுத்தி அபாயகரமான மதிநுட்ப ஆயுதங்களை தயாரித்து பேரழிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
அத்துடன் இந்த மதிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல்களால் அரசாங்க, பொருளாதார மற்றும் தந்திரோபாய ரீதியான இரகசியத் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளது, அத்துடன் வங்கி நிதிப் பரிமாற்ற முறையும் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அரசாங்கம் இந்த செயற்கை மதிநுட்பத்தைப் பயன்படுத்தி பிரஜைகளின் ஒவ்வொரு செயற்பாட்டையும் கண்காணிக்க முடியும் என்பதால் இது தனிநபர் அந்தரங்கத்தன்மை தொடர்பான உரிமை மீறப்பட வழிவகை செய்கிறது.
செயற்கை மதிநுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் பெற முடிவதால் சிறுவர்கள் மத்தியில் தாம் கற்றவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கான முயற்சி குறைவதால் அது அவர்களது தனிப்பட்ட நுண்ணறிவையும் மூளையின் செயற்றிறனையும் பாதிப்பதாக உள்ளது. அத்துடன் இது சாதாரண சிறிய செயற்பாட்டிற்கும் செயற்கை மதிநுட்பத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலையை தீவிரப்படுத்துவதாக உள்ளது.
தவறான நோக்கத்தில் மன அழுத்தத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கை மதிநுட்பமானது ஒருவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் என்பது நிதர்சனமாகும்.
மேலும் எதிர்காலத்தில் சுயமாக சிந்தித்து மனிதரை விடவும் துரிதமாக செயற்படக்கூடிய செயற்கை மதிநுட்பத்தை உருவாக்குவது அந்த மதிநுட்பத்தால் மனிதர்கள் அடக்கி ஆளப்படும் நிலையை தோற்றுவிக்கும் அபாயம் மிக்கதாக உள்ளது.
எது எப்பிடியிருந்த போதும் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் மனித செயற்பாடுகளை இலகுபடுத்தி துரிதப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்துவரும் செயற்கை மதிநுட்பத்தில் தான் எதிர்கால உலகம் தங்கியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
டெக்யூரி நெட் தரவுகளின் பிரகாரம் தற்போது 97 சதவீதமான கையடக்கத்தொலைபேசி பயனாளர்கள் செயற்கை மதிநுட்ப குரல் உதவியாளர்களையும் பயன்படுத்துகின்றனர். அத்துடன் 4 பில்லியனுக்கும் அதிகமான உபகரணங்களில் செயற்கை மதிநுட்ப குரல் உதவி முறைமை பயன்படுத்தப்படுகிறது. மேலும் 40 சதவீதமான மக்கள் அப்பிள் நிறுவனத்தின் சிறி, அமேஸன் நிறுவனங்களின் அலெக்ஸா என்பவற்றைப் பயன்படுத்தி குரல் மூலமான தேடும் தொழிற்பாட்டை தினசரி ஒரு தடவையாவது மேற்கொள்கின்றனர்.
செயற்கை மதிநுட்பமானது அதிகம் வருமானத்தை தரும் ஒன்றாக மாறியுள்ளது. அது உலக சந்தையில் 120 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையதாக உள்ளது.செயற்கை மதிநுட்ப சந்தை ஒவ்வொரு வருடமும் 20 சதவீதத்தால் வளர்ச்சி கண்டு வருகிறது.செயற்கை மதிநுட்பத்தின் மொத்தப் பெறுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்றில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கும் 2030 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் செயற்கை மதிநுட்பத்தால் 85 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்
இழக்கப்படும் என்ற போதும் அதே மதிநுட்பத்தால் 2025 ஆம் ஆண்டுக்குள் மேற்படிதுறை சார்ந்த 97 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 35 சதவீத வர்த்தகங்கள் தமது தினசரி செயற்பாடுகளுக்கு செயற்கை மதிநுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் 97 சதவீதமான மக்கள் செயற்கை மதிநுட்பத்தை தமது பணிகளில் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 150.2 பில்லியன் அமெரிக்க டொலராகவிருந்த உலக செயற்கை மதிநுட்ப சந்தையானது 2030 ஆம் ஆண்டுக்குள் 1,345.2 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என எதிர்வுகூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் செயற்கை மதிநுட்பத்துறையில் சுமார் 97 மில்லியன் பேர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகள் தமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த செயற்கை மதிநுட்பத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. எதிர்காலத்தில் செயற்கை மதிநுட்ப அறிவு இல்லாதவர்களுக்கு இந்த உலகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கையில் அண்மையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பால் பல்வேறு தொழிற்றுறை களும் பாதிக்கப்பட்டுள்ளமை அனை வரும் அறிந்ததாகும். இந்நிலையில் செயற்கை மதிநுட்ப மேம்பாட்டிற்கு ஆதாரமாகவுள்ள தகவல் தொழில்நுட்ப சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் செயற்கை மதிநுட்ப சேவைகள் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவாணிக்கு வரி விலக்களிப்பதாகவும் அந்தத் துறைக்கு அரசாங்கம் ஆதவரவளிப்பதாகவும் உறுதியளித்திருந்தார். அத்துடன் அவர் அதிகரிக்கும் வரி வருமானத்தில் 1.5 பில்லியன் ரூபாவை செயற்கை மதிநுட்பம் உள்ளடங்கலான தகவல்தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்ற போதும், இலங்கையிலிருந்து தொடர்ந்து செயற்கை மதிநுட்பத்துறை நிபுணர்கள் உள்ளடங்கலான புத்திஜீவிகள் வெளியேறி வருவது இத்துறை இலங்கையின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்புவதாக உள்ளது
பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்க தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில்
செயற்கை மதிநுட்பம் தொடர்பான கற்கை நெறிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்ற போதும் அந்த கற்கை நெறிகள் உலக செயற்கை மதிநுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் செயற்கை மதிநுட்ப கற்கை நெறிகளுக்கான கட்டணங்கள் பல இலட்சங்களைத் தாண்டுவதால் வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்கள் பலருக்கு அது எட்டாக் கனியாக உள்ளது.அத்துடன்
இலங்கையில் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்பவர்கள் அதிக சம்பளத்தை வழங்கும் தொழில்வாய்ப்புகளை நாடி அமெரிக்கா,பிரித்தானியா,அவுஸ்திரேலியா நாடுகளுக்குப் புலம் பெயர்வது பாரிய பிரச்சினையாகவுள்ளது.
இந்நிலையில் உள்ளடங்கலான உள்நாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு செயற்கை மதிநுட்பம் சார் தகவல் தொழில்நுட்பத் துறையில் கல்வி கற்க ஊக்குவிக்க புலமைப்பரிசில் திட்டங்களை விரிவாக்கம்
விரிவாக்கம் செய்தல் உள்ளடங்கலான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் துறைசார் அறிவுஜீவிகளின் புலம்பெயர்வை கட்டுப்படுத்தி அவர்களை வைத்துக்கொள்வதற்கான தந்திரோபாய நகர்வுகளை மேற் கொள்வதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
இவற்றையும் பார்வையிடுங்கள்
Post a Comment