.

மங்காபுரம் கிராமத்தில் ராமநாதன் என்ற வியாபாரி தன் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். ஒரு காலத்தில் பெரிய செல்வந்தராக இருந்த அவர் வியாபாரத்தில் நட்டம் அடைந்ததால் தன் செல்வத்தையெல்லாம் இழந்தார். ஆனால் இதனால் மனந் தளராத ராமநாதன் தன் இரு மகன்களுடன் சேர்ந்து மீண்டும் மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட்டுப் பொருள் சேர்க்கலானார்.

மங்காபுரத்தில் பல பணக்கார வியாபாரிகளும் ஜமீன்தார்களும் வசித்து வந்ததால் அடிக்கடி கொள்ளைக்காரர்கள் அந்த கிராமத்திற்கு வந்து வீடுகளில் கொள்ளையடிப்பதுண்டு.அவர்கள் தாக்குதலை எப்படியோமுன் கூட்டியே அந்த கிராமத்தினர் அறிந்து கொண்டு அவ்வாறு கொள்ளையர்கள் வரும் சமயம் தங்களுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பக்கத்து கிராமங்களுக்குத் தலை மறைவாகச் சென்று விடுவதுண்டு.

ஒருமுறை மேற்கூறியவாறு அன்றிரவு கொள்ளைக்காரர்கள் வரப் போவதாக செய்தி கிடைத்தவுடன்,அந்த கிராமத்தினர் தங்கள் உடமைகளுடன் தலை மறைவாகி விட்டனர்.ஆனால் ராமநாதன் இம்முறை எங்கும் ஓடி ஒளிய விரும்பவில்லை. அவர் தன் பிள்ளைகளிடம் “நீங்கள் எல்லாரும் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விடுங்கள். நான் இங்கேயே ஒளிந்து கொள்கிறேன். எனக்கு வேண்டிய உணவுப் பொருட்களை,கொல்லைப்புறம் இருக்கும் வைக்கோல் போரில் ஒளித்து வையுங்கள். நான் எப்படியோ அவற்றைச் சாப்பிட்டு சமாளித்துக் கொள்கிறேன்” என்றார்.

கொள்ளைக்காரர்கள் இரவில் மங்காபுரத்தில் புகுந்தனர். வீடுகளில்
புகுந்து அங்கே கிடைத்தப் பொருட்களை கொள்ளையடித்து அதை மூட்டைகளாகக் கட்டி குதிரைகள் மீது ஏற்றினார்கள். கொள்ளையர்களின்
தலைவனின் குதிரையின் முதுகில் ஏற்றப்பட்ட மூட்டையில் மட்டும்
விலை மதிப்புள்ள ஆபரணங்களும் பணமும் இருந்தன. கொள்ளையர்
தலைவன் அங்குமிங்கும் சுற்றிவிட்டுக் கடைசியில் ராமநாதன் வீட்டுக்கு
வந்தான். குதிரையை வைக்கோல் போருக்கருகே கல்லில் கட்டிவிட்டு தலைவன் ராமநாதன் வீட்டுக்குள் நுழைந்தான். அவர்களது வரவை முன் கூட்டியே அறிந்த ராமநாதன் வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண் டிருந்தான். அருகில் கட்டப்பட்டிருந்த தலைவனது குதிரை வைக்கோலை உண்ணும் சத்தம் கேட்டு வைக்கோல் போருக்குள்ளிருந்து ராமநாதன் மெதுவாக வெளியே வந்து குதிரையின் முதுகில் இருந்த மூட்டையை எடுத்து வைக்கோல் போருக்குள் ஒளித்து விட்டு,குதிரையையும் அவிழ்த்து விட்டு விட்டான்.

இதற்குள் ராமநாதனின்வீட்டிலிருந்து வெளியே வந்த தலைவன் தன்னுடைய
குதிரை அவிழ்த்துக் கொண்டு வைக்கோல் போரினின்று விலகிப்
போய் புல் மேய்வதையும், அதன் முதுகில் இருந்த மூட்டை மறைந்து
போனதையும் கண்டு திடுக்கிட்டான்.உடனே தன் ஆட்களைக் கூப்பிட்டு
விவரத்தைக் கேட்டான்.

உடனே அவனுடைய ஆட்கள் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து விழித்து விட்டு தங்களுக்குத் தெரியாது என்றனர். பிறகு எல்லாரும் அந்த இடத்தை அலசி ஆராய்ந்தும் அந்த மூட்டை மட்டும் கிடைக்கவில்லை.
சலிப்படைந்த கொள்ளையர்கள் அந்தக் கிராமத்தைவிட்டுச் சென்று விட்டனர்.

அவர்கள் கிராமத்தை விட்டுச் சென்றுவிட்ட செய்தி கிடைத்ததும் கிராமத்தினர் மீண்டும் திரும்பி வந்தனர்.அதற்குள் ராமநாதன் வைக்கோல் போரிலிருந்து அந்த மூட்டையுடன் வெளியே வந்து அதைப் பிரித்துப்
பார்த்து அதிலிருந்த பணத்தையும் இதரப் பொருட்களையும் கண்டு
மகிழ்ந்து அதை ரகசியமாக வீட்டினுள் ஓரிடத்தில் ஒளித்து வைத்தான். வீடு
திரும்பிய தன் பிள்ளைகளிடம் கூட இதைப் பற்றி சொல்லவில்லை. தனது
பண மூட்டையை கிராமத்திலுள்ள ஒருவன்தான் திருடியிருக்கிறான் என்று
சந்தேகித்த தலைவன், அந்த ஒருவனைக் கண்டு பிடிப்பதற்காகவே,
கிராமத்தில் திடீர்ப் பணக்காரர்கள் யாராவது முளைத்துள்ளனரா என்று
வேவு பார்க்க வந்திருந்தான்.

ராமநாதனுக்கு கொள்ளையர் தலைவன் தன் வீட்டுக்கும் வேவு பார்க்க வருவான் என்று தோன்றியதால் எச்சரிக்கையுடன் இருந்தான். அவன்
எதிர்பார்த்தபடியே ஓரிரவு தனது வீட்டுக்கு வெளிப்புறம் மாறு வேட மணிந்த தலைவன் பதுங்கியிருப்பதைப் பார்த்து விட்டான். தாங்கள் ஏதாவது பேசினால் அதிலிருந்து தன்னுடைய காணாமல் போன மூட்டையைப்
பற்றிய விவரங்கள் தெரியலாம் என்ற நம்பிக்கையுடன்தான் அங்கே அவன் பதுங்கியிருக்கிறான் என்று ராமநாதன் புரிந்து கொண்டான். உடனே ராமநாதன் அவன்காதில் விழுமாறு, "நேற்று நான் நமது வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுக்கும் போது அதில் பண மூட்டை கிடைத்தது” என்று கூற “அது எங்கே இப்போது?” என்று பிள்ளைகள் கேட்டனர்.

‘அதை நான் கிணற்றில் போட்டு விட்டேன். அங்கேயே அது பத்திரமாக
இருக்கட்டும்” என்றான்.

அதைக் கேட்ட கொள்ளையர் தலைவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். எல்லாரும் உறங்கிவிட்டார்கள் என நினைத்து, ஒரு கயிற்றின் உதவியால் அவன் கிணற்றுக்குள் இறங்கி, அந்த மூட்டையைத் தேடத் தொடங்கினான். திடீரென ராமநாதன் எழுந்து வந்து அந்தக் கயிற்றை அறுத்துவிட, திருடன் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டான்.பெரிய கல்லைத் தூக்கி எறிந்து, ராமநாதனும் அவன் பிள்ளைகளும் தலைவனைக் கொன்று விட்டனர். இதற்குப் பிறகுதான் ஒளித்து வைத்திருந்த செல்வத்தைக் கொண்டு ராமநாதன்
சொகுசான வாழ்க்கை நடத்தினான்.




Post a Comment

Previous Post Next Post