.

ஆடு,மாடுகள், யானை குதிரைகள்,ஒட்டகங்கள் போன்றவற்றை ஏராளமாகக் கொண்ட ஒரு மன்னனுக்குத் திடீரென ஒருநாள் மனதில் ஒரு விஷயம் தோன்றியது. உடனே தன் பணியாளர்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சபைக்கு அழைத்தான். என்ன விஷயமாகத் தங்களை அழைத்துள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மன்னனும் சபையில் நுழைந்தான்.தன் முன்னே அனைவரும் கூடி இருக்கக் கண்டான். இருப்பினும்“அனைவரும் வந்து விட்டார்களா?" என்று கேட்டான். சபையில் மெளனம் நிலவியது வராதவர்கள் யாருமில்லை என்று தோன்றுகிறது. இப்போது நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். உங்கள் ஒவ்வொருவரிடம்இருந்தும் அதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்றான். 


“என் மனதில் என்ன உள்ளது என்று நீங்கள் சரியாகச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் உங்கள் அனைவரையும் அழைத்துள்ளேன். எங்கே, ஒவ்வொருவராக முன் வந்து, உங்கள் பதிலைச் சொல்லுங்கள்” என்றான்.

ஒருவர் பின் ஒருவராக அனைவரும் மன்னன் முன்னால் வந்து நின்று, தனக்குத் தோன்றியதையெல்லாம் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சரியான பதில் அல்ல என்று மன்னன் மறுத்து விட்டான். மன்னன் முகத்தில் ஏமாற்றம், கோபம், சலிப்பு ஆகிய எந்த உணர்ச்சிகளும் தெரியவில்லை.

இறுதியில் அனைவரையும் அனுப்பி விட்டு, தன் மந்திரியிடம் என் மனதிலுள்ளதைக் கண்டு பிடிக்கக் கூடிய ஒரு மனிதனை நம் நாட்டில் எங்காவது தேடிப்பிடித்து நீங்கள் என்னிடம் அழைத்து வர
வேண்டும்.ஒரு மாதத்திற்குள் கொண்டு வரத் தவறினால் உங்களைப்
பதவியிலிருந்து நீக்கி விடுவேன்” என்று எச்சரித்து அனுப்பினான்.

அதைக்கேட்ட மந்திரி தன்னுடைய பிரச்சினையை நினைத்துக் கொண்டு
குழம்பினான். "இரவு முழுதும் இதையே நினைத்து உறக்கம் பிடிக்காத மந்திரி, மறுநாள் காலை தெருவில் போவோர் வரு வோர் எல்லாரையும் வழிமறித்து தன் பிரச்சினையைக் கூறி, அத்தகைய கெட்டிக்கார மனிதன் யாராவது
இருக்கிறானா என்று தீர விசாரித்தான்.ஆனால் பயன் எதுவும் கிடைக்கவில்லை. இதுபோல் பல நாட்கள் தேடியும, மந்திரியால் தீர்வு காண முடியவில்லை.

மந்திரி ஊன் உறக்கம் அனைத்தும்  துறந்து,கவலையே உருவாக மாறினான்.
அவன் மனைவி அவனைப் பலமுறை உண்ண அழைத்தும், மந்திரி உணவைத்
தொடவே மறுத்து, பைத்தியம் போல் திரு திருவென விழித்துக் கொண்டே யிருந்தான்.தனது தந்தையின் நிலையைக் கண்ட மகள், “அப்பா, உங்களை ஏதோ பெரிய பிரச்சினை வாட்டுகிறது என்று தெரிகிறது.அதற்காக நீங்கள் சாப்பிடாமலும்,தூங்காமலும் இருந்தால் உடம்பு என்னத்திற்கு ஆகும்?” என்று
கரிசனத்துடன் கேட்டாள்.அப்போதும் மந்திரி மௌனம் சாதித்தான். “அப்பா, அப்படி என்னதான் பிரச்சினை அது? என்னிடம் சொல்லுங்களேன்.என்னால் அதை தீர்க்க முடியலாம்!”என்றாள். தனது பிரச்சினையை தீர்க்கமுடியும் என்ற சொற்களைக் கேட்டதுமே, மந்திரிக்கு முதன் முறையாக சிறிது நம்பிக்கை ஏற்
பட்டது. உடனே தன் பெண்ணிடம் விஷயத்தை விளக்கிக் கூறினான்.
“இதற்காகவா இத்தனைக் கவலைப்பட்டீர்கள்? முன்னமே என்னிடம் சொல்லியிருந்தால், அப்போதே இதை தீர்த்திருக்கலாமே!” என்றவள்,
“இன்னும் கெடு முடிய எத்தனை நாள் உள்ளது?” என்று கேட்டாள்.
'இரண்டு அல்லது ஒரு நாள்தான் உள்ளது ” என்றான் மந்திரி.
அப்படிப்பட்ட ஒரு கொண்டு வருகிறேன்” என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூறிய தன் மகளை மிகுந்த வியப்புடன் நோக்கினான். “சரி, இப்போது
குளித்து விட்டு, நான் சொல்கிற மாதிரி சாப்பிட வாருங்கள்” என்று
மகள் அன்புக் கட்டளையிட,மந்திரியும் கீழ்ப்படிந்தான். உணவருந்திக் கொண்டே மந்திரி தன் மகளை நோக்கி, “நாளை மறுநாள் நான் அந்த மனிதனை மன்னர் முன் அழைத்துச் செல்ல வேண்டும்'' என்று கூற “கவலையை விடுங்கள்.அவன் உங்களுடன் நாளை மறுநாள் வரும்படி நான் செய்கிறேன்' என்றாள்.

ஆனால் அவனைத் தேடி அவள் அலைந்து எங்கும் சிரமப்படவில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்க்கும் இளைஞனையே சரியான நபராக மனதினுள் தேர்ந்தெடுத்து விட்டாள். அதிசயம் என்னவென்றால் அவன் ஒரு பிறவிச் செவிடனும் ஊமையுமாவான்.அவனுக்கென்று சொந்தத்தில் மூன்று
ஆடுகள் இருந்தன. அவனைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவனுக்கு
வயிறார உணவளித்து தன்னுடைய தந்தையுடன் சென்று மன்னனை
சந்திக்க வேண்டும் என்று மட்டுமே சொன்னாள்.




மன்னரிடம் சரியான மனிதனை அழைத்துச் செல்லும் நாளும்
வந்தது. ஆனால் ஆடு மேய்க்கும் வாலிபனைத் தன் மகள் அழைத்து
வந்திருப்பதைக் கண்ட மந்திரி “இந்த ஊமைச் செவிடனையா நான் அழைத்துச் செல்ல வேண்டும்?” என்று கேட்க அவனது மகள் “ஆமாம்” என்று வழி அனுப்பினாள்.தன் மகளுடைய சாமர்த்தியத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த மந்திரி மறு பேச்சின்றி அந்த வாலிபனை அழைத்துச் சென்று மன்னன் முன்பாக நிறுத்தினான்.அதை வேடிக்கைப் பார்க்க சபை
முழுதும் மக்கள் கூடிஇருந்தனர்.

சற்று நேரங் கழித்து மன்னனும் சபைக்கு வந்தான்.அனைவரும் மன்னனுக்கு
வணக்கம் தெரிவித்தனர். அந்த வாலிபனை மேலும் கீழும்
உற்றுப் பார்த்த மன்னன் மௌனமாக தன் கையை உயர்த்தி ஒரு விரலைக்
காட்டினான். அதற்கு அந்த வாலிபன் பதிலுக்கு இரண்டு விரல்களைக் காட்டினான்.புன்னகை புரிந்த மன்னன்,இப்போது மூன்று விரல்களைக்
காட்டினான். தலையை வேகமாக அசைத்த அந்த வாலிபன் மறுபடியும்
இரண்டு விரல்களையேக் காட்டினான்.

உடனே மன்னனின் முகம் பூரணமாக மலர்ந்தது. “சபாஷ், மந்திரியாரே! சரியான ஆளைத் தான் அழைத்து வந்திருக்கிறீர்கள்!நான் கேட்ட கேள்விகளுக்
கெல்லாம் இவன் சரியான பதில் கூறி விட்டான்” என்று பாராட்டிய மன்னனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். சபையில் மெளனம்
நிலவியது.

“அடடா, உங்களுக்குப் புரியவில்லையா?” என்ற மன்னன் “நானே விளக்குகிறேன். நான் மட்டும் தான் என்று பொருள்பட ஒரு விரலைக்
காட்டினேன். புத்திசாலியான அந்த வாலிபன் மன்னர் கடவுள் என்று இரு தலைவர்கள் உள்ளனர் என்று இரண்டு விரல்களைக் காட்டினான்.
எங்கள் இருவரையும் தவிர அதிகாரம் அதிகமுள்ள மூன்றாவது நபர் யாராவது உள்ளனரா என்று பொருள்பட நான் மூன்று விரல்களைக் காட்டினேன். அதற்கு அந்த அதிபுத்திசாலி, "இல்லை. இந்த நாட்டின் மீது அதிகாரம் செலுத்த வல்லவர் இறைவனும், நீங்களுமே என்று மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டினான்” என்று விளக்கிவிட்டு, மந்திரிக்கும், வாலிபனுக்கும்
வெகுமதிகள் கொடுத்தான்.

வீட்டுக்குச் சென்றதும், மந்திரி தன் மகளின் உதவியுடன் மன்னரது மனதிலுள்ளதை எவ்வாறு அறிந்தான் என அந்த வாலிபனைக் கேட்க,
அவன் தன் சைகைகளால் அவர்களுக்கு விளக்கினான்.

மன்னன் தன்னிடம் அவனுடைய ஒரு ஆட்டை விலைக்குத் தர என்று கேட்டதும்,
முடியுமா பதிலுக்கு அவன், இரண்டு ஆடுகளை தன்னால் தர முடியும் என்று சைகை காண்பித்தான். ஆனால் அடுத்ததாக மன்னன் தன்னுடைய மூன்று
ஆடுகளையும் விலைக்குக் கேட்டதும்,ரண்டுக்கு மேல் தன்னால்தர முடியாது என்று சைகை காட்டினான்.இதைக் கேட்டு, மந்திரியும்  மகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.





Post a Comment

Previous Post Next Post