.

அதோ அந்தத் தோட்டத்தில்தான் விளாடிமிரின் அதிசய அப்பிள் மரம் இருந்தது. இன்றும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்று கூறி போலந்து மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் வரையில் பெருமூச்சு விடுவதுண்டு. இன்று அந்தத் தோட்டம் இருந்த இடத்தில் வீடுகள்தான் உள்ளன. தோட்டமும் அப்பிள் மரமும் இல்லாவிடினும் அந்த அதிசய அப்பிள் மரத்தைப் பற்றிய கதை இன்றும் அந்த நாட்டு மக்களுக்கு நினைவிருக்கிறது.

ஒருமுறை விளாடிமிரின் தாயிடம் ஒரு யோகி, "உனக்கு ஓர் அபூர்வக் குழந்தை பிறக்கும். அவன் பணக்காரனாகவோ மகிழ்ச்சியாகவோ இருப்பது உன் விருப்பத்தைப் பொறுத்தது" என்று ஆசீர்வாதம் செய்தார்.ஆனால் வாழ்வில் மனிதனுக்கு மகிழ்ச்சிதான் முக்கியம் என்று கருதிய அவள் தன் மகன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே வரம் கேட்டாள்.

சிறிது காலத்தில் தனக்குப் பிறந்த குழந்தைக்கு விளாடிமிர் என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தாள். பள்ளிக்கு அனுப்ப பண வசதி இல்லாததால், அவள் தன் மகனை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் வேலைக்கு அமர்த்தினாள்.ஆனால் சில நாட்களிலேயே விளாடிமிர் அந்த வேலை பிடிக்காமல் திரும்பி விட்டான். பணக்காரர்கள் மட்டுமே செருப்பு தைத்துக் கொள்கிறார்கள் என்றும், ஏழைகளுக்கு செருப்பு வாங்கப் பணம் இல்லையென்றும், ஏழைகளுக்குப் பயன்படாத தொழில் தனக்குத் தேவையில்லை என்றும் விளாடிமிர் தாயிடம் கூறினான். அவனுடைய வார்த்தைகளில் இருந்த நியாயத்தை உணர்ந்த அவனது தாய் பிறகு விளாடிமிரை ஒரு தையற்காரரிடம் வேலைக்கு அமர்த்தினாள். ஆனால் முன்பு கூறிய அதே காரணத்தினால் அந்த வேலையிலிருந்தும் நின்று விட்டான்.


விளாடிமிரின் தாய் அவனை இப்போது வாட்கள் தயாரிக்கும் பட்டறையில் பணிக்கு அமர்த்தினாள். ஆனால் “மனிதர்களைக் கொல்லப் பயன்படும் வாட்களைத் தயாரிக்க நான் விரும்பவில்லை" என்று கூறி அந்த வேலையையும் விட்டு விட்டான்.

அவன் தாய், “இவ்வாறு ஒவ்வொரு வேலையையும் நீ புறக்கணித்தால், உன்னை எந்த வேலையில் அமர்த்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. நீ இனி ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுவாய். அதுதான் உனக்கு சரியான வேலை” என்று கூற, விளாடிமிரும் அவ்வாறே செய்ய ஒப்புக் கொண்டான். அந்த வேலை விளாடிமிருக்கு மிகவும் பிடித்து விட்டது.

ஒரு நாள் நண்பகல் நேரம் காட்டில் ஓரிடத்தில் ஒரு பாறையைச் சுற்றிலும் வளர்ந்திருந்த காய்ந்த புதர்களில் தீ மூண்டு எரிவதையும், பாறையின் மேல் அமர்ந்த பல்லி ஒன்று வெளியேற முடியாமல் தவிப்பதையும், கண்ட விளாடிமிர் ஒரு நீண்ட குச்சியின் உதவியால் அந்தப் பல்லியை பாறையிலிருந்து வெளியே அகற்றிக் காப்பாற்றினான். அவ்வாறு அவன் காப்பாற்றியவுடன், அந்தப் பல்லி ஒரு கிழவியாக மாறி விளாடிமிருக்கு நன்றி தெரிவித்து,அவனுக்கு ஒரு அப்பிள் செடியைத் தந்தாள். இதை உன்னுடைய தோட்டத்தில் நடுவாய். வளர்ந்தபின் மரமாகியதும் தரும் அப்பிள்கள் பல நோய்களைத் தீர்க்க வல்லது” என்று கூறிவிட்டு மறுபடியும் பல்லியாக மாறி மறைந்து போனாள்.



விளாடிமிர் அதை எடுத்துச் சென்று,தன் தோட்டத்தில் தன்னுடைய அறையின் ஜன்னலுக்கு அருகில் நட்டு வைத்தான். சில மாதங்களில் வளர்ந்து அது மரமாகி அப்பிள்களைத் தந்தது. காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த தன் தாய்க்கு, அந்த மரத்தில் விளைந்த முதல் அப்பிளை விளாடிமிர் தின்னக் கொடுத்தான். உடனே அவனுடைய தாய் குணமானாள். பிறகு நோய் வாய்ப்பட்டிருந்த பல ஏழைகளுக்கு விளாடிமிர் அப்பிள்களைத் தர அவர்கள் அனைவரும் குணமாயினர்.இந்தச் செய்தி அந்த நாட்டு அரசனின் செவிகளை எட்டியது.

அரசனுக்குக் கடுமையான ஜலதோசமும், இருமலும் இருந்தன.உடனே அரசன் விளாடிமிர் வீட்டுத் தோட்டத்து ஆப்பிளை உண்டால் தனக்கு நோய் குணமாகும் என்றும்,அதற்குப் பாராட்டு தெரிவிக்கும் பெயரில் விளாடிமிரை தன்னிடம் பணியில் அமர்த்தலாம் என்று எண்ணினான். ஆனால் அரசனுடைய
மருத்துவருக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை.அதனால் தனது உறவினரான முதல் மந்திரியிடம் அதைத் தடுக்குமாறு கூறினார்.

உடனே முதல் மந்திரியும் விளாடிமிரை அரசுப்பணியில் ஈடுபடுத்தாமல் அவனது அப்பிள் மரத்தை பிடுங்கி அரண்மனையில் நட்டுவிடலாம் என்று அறிவுரை புகன்றார்.அதை அரசனும் ஒப்புக் கொள்ளவே, அரசனின் பணியாளர்கள் திடீர் என ஒரு நாள் விளாடிமிரின் தோட்டத்திற்குள் புகுந்து அவன் அனுமதியின்றியே அந்த அப்பிள் மரத்தை வேரோடு பிடுங்கிச் சென்று அரண்மனையில் நட்டு விட்டனர்.ஆனால் அரண்மனையில் நட்ட பின்னர் அந்த மரத்தில் அப்பிள் உண்டாகவேயில்லை. அரசனுக்கும் இருமல் குணமாகவில்லை.

தனது அப்பிள் மரத்தை இழந்த விளாடிமிர் மிகுந்த வருத்தத்துடன் காட்டுக்குச் சென்று, அந்த மாயக் கிழவியை நாடி தியானம் செய்தான். திடீரென காய்ந்த இலைச்சருகுகள் காற்றில் உயரே பறக்க, அவற்றினூடே அந்தக் கிழவி தோன்றினாள்.அவளிடம் நடந்த விஷயத்தைக் கூறி விளாடிமிர் வருந்த, அவள்
அவனுக்கு ஒரு கூடை நிறைய அப்பிள் கொடுத்து, “இதை அரச சபைக்கு எடுத்துச் சென்று அரசனுக்கும் மற்றவர்களுக்கும் கொடு. பிறகு நடக்கும் வேடிக்கையைப் பார்” என்று சொல்லி விட்டு மறைந்து போனாள்.

விளாடிமிர் அந்த அப்பிள் கூடையை எடுத்துக் கொண்டு அரசனுடைய சபையை அடைந்து மகிமையான ஆப்பிளை அனைவருக்கும் அப்பிள் பழத்தைக் கொடுத்தான்.

அவ்வாறு அரசன் உட்பட அனைவரும் அப்பிளைத் தின்ற உடனே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.அரசனுடைய மூக்கு திடீரென பெரிதாக வளர்ந்து கழுகு மூக்கைப் போல் மாறிவிட்டது. “என்ன ஆகி விட்டது எனக்கு?’’என்று பயத்துடன் கத்தினான் அரசன்.‘அரசே! இது மகிமை வாய்ந்த அப்பிள் என்று சொன்னேன்
அல்லவா? உங்கள் அனைவருக்கும் கழுகு மூக்கு உண்டாகிவிட்டது”
என்றான் விளாடிமிர்.

“வேண்டாம், இந்த மூக்கு வேண்டாம். இதை உடனே சரியாக்கு” என்று அரசன் அலற,மற்றவர்களும் கூக்குரலிட்டனர்.‘“கவலை வேண்டாம் அரசே!என்னுடைய அப்பிள் மரத்தில் விளையும் அப்பிள்களை தின்னுங்கள். உங்கள் அனைவரின் மூக்குகளும் சரியாகிவிடும். ஆனால் என்னுடைய அப்பிள் மரத்தை என்னுடையத் தோட்டத்திலே மீண்டும் நட்டால் தான் அதில் பழங்கள்
உண்டாகும்” என்றான் விளாடிமிர்.மன்னன் உத்தரவுப்படி ஆப்பிள் மரம் மீண்டும் விளாடிமிர் வீட்டுத் தோட்டத்தில் நடப்பட்டது.

ஆனால் மீண்டும் அந்த மரத்தில் அப்பிள்கள் தோன்ற ஒரு வாரம் பிடித்தது. பிறகு ஒருநாள் தன் மரத்தில் விளைந்த அப்பிள்களை எடுத்துச் சென்று, விளாடிமிர் அரசன் உட்பட அனைவருக்கும் அளித்தான். பழைய படி அனைவருக்கும் மனித மூக்கு உண்டானது. அரசனுக்கு நோயும் நீங்கியது. அரசன் விளாடிமிருக்குதன் அரண்மனையிலேயே வேலை
கொடுத்தான். சம்பளம் வாங்காமல் பணி செய்த விளாடிமிர் அந்த
நாட்டு மக்கள் நோய் வாய்ப்பட்ட போதெல்லாம் அவர்களுக்குத் தன்
மரத்து அப்பிள்களைக் கொடுத்து குணமாக்கினான். இவ்வாறு பல காலம் பொது மக்களுக்கு சேவை செய்த விளாடிமிர் இறந்த பிறகு,அந்த அப்பிள் மரத்தில் பழங்கள் உண்டாவது நின்று விட்டது.




Post a Comment

Previous Post Next Post