புத்தகத் தலைப்பு:- மண்டோ படைப்புகள்
ஆசிரியர் :- சாதத் ஹசன் மண்ட்டோ.
தமிழில் :- சீனிவாச ராமானுஜம்.
நூல் வெளியீடு :- பாரதி புத்தகாலயம்.
பக்கங்கள் : - 584.
விலை :- 545/-
ஆபாசம் நிறைந்த எழுத்தாளர், பாலியல் தொடர்பிலும், வாழ்க்கையில் இனி வாழ வழி இல்லை என்றும், இதுதான் கடைசி வழி என்ற உணர்வை வெளிப்படு த்துவார்களைப் பற்றியும், பிரிவினையை முற்று முழுதாக அடியோடு வெறுத்தவரும், தாத்தா வழியில் மிகப்பிரல்யமான வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தாலும்,சேரியில் வாழும் மக்களுடன் இணைந்து வாழ்ந்து, தனது உணர்வு பூர்வமான படைப்புகளைத் தந்து, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வந்து சென்ற ஒரு மகத்தான படைப்பாளி சாதத் ஹசன் மண்ட்டோ அவர்களின் முழுவதுமான (இன்னும் வெளிவராத பல படைப்புகள் தேங்கியிருப்பதாகப் பதிவுகள் கூறுகின்றன.) படைப்பைத் தாங்கி வெளிவந்ததே இந்நூல் ஆகும்.
நவீன இலக்கியத்தின் மூலம் தனது படைப்புக்களை கீழ் நிலை மக்களிடமும், அதைவேளை மிகவுயர்ந்த உச்சத்தில் வாழ்ந்த மக்களிடமும் தனது எழுத்தின் மூலம், தனக்கென ஒரு வரையறையை நிறுவி, அதிலிருந்து விலகாமல் (1912-1955) மிகக் குறுகிய காலத்தில் (42 வயதுவரை) வாழ்ந்து சென்றார்.
ஆங்காங்கே சிதறுண்டு,கண்ணில் பட்டதும்,நாம் படைப்பாளியின் ஆக்கங்களைத் தேடி வாசிப்பதுண்டு.ஆனால் இந்நூல் அவரது மிக முக்கியமான படைப்புக்களை எங்கள் கைகளில் ஆரத்தழுவும்படியாகக் கொண்டு வந்திருக்கிறார் மொழி பெயர்ப்பாளர்,ஆசிரியர் சீனிவாச ராமானுஜம் அவர்கள்.அவரது எழுத்து வல்லமை, வாசிப்போரைத் தொய்வு ஏற்படாத வகையில் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருப்பது பாரா ட்டத்தக்கது.அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந் நூலில் 24 கதைகளும், 32 சிற்சித்திரங்களும், மற்றும் நினைவோடைகள், ஹிப்டுல்லா,அங்கிள் சாமுக்கு எழுதிய கடிதங்கள் போன்ற அற்புதமான படைப்புக்களைக் காணலாம்.
ஒரு மூலப்பிரதிக்குப் பல மொழிபெயர்ப்பு முயற்சிகள் ஏன் அவசியமாகின்றன என்பதன் விளக்கத்தை ஆசிரியர் ராமானுஜம் அவர்கள், ஒரு இயக்குனருக்கும், தான் தெரிவு செய்த நடிகனுக்கும் இடையிலான தொழில் ரீதியாக அவர்களின் இணைந்த பங்கினை எடுத்துக் காட்டுகிறார். இதில் அந்த நடிகனை (மொழியின் வடிவம் அல்லது அதன் ஆளுமை என எனது பார்வை) மக்களே (வாசிப்பாளர்கள்) தீர்மானிக்க வேண்டும் என்றாலும், நடிகனின் பங்கு மிக முக்கியமானதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
மண்ட்டோவின் படைப்புகள் அதிகமாக ஆங்கிலத்தில் எழுதிய காலித் ஹாசன் அவர்களின் நூல்களிலிருந்தே தான் மொழியாக்கம் செய்திருப்பதாகக் கூறும் ஆசிரியர்,உருது மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மாற்றப்ப ட்டிருந்தால்,சில மண்ட்டோவின் படைப்புகளில் இருந்து (மூலப்பிரதி-உருது மொழி) ஆங்கிலத்தில் மாற்றியபோது சில நூறு வரிகளை ஆங்கில மொழி மாற்ற நூல்கள் விழுங்கி விட்டதாகவும்,அதற்கான உதாரணங்களையும் இங்கே அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.காரணம்,ஒரே கதையை வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வாசிக்கும் போது இந்த மாற்றத்தை உணர்ந்ததாக வெளிப்படுத்தும் அதே வேளையில்,காலித் ஹாசனின் மொழியாக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் இறுதியில் ஏற்றுககொள்ளத்தான் வேண்டும் என்கிறார். ஏனெனில் அவரது மொழிபெயர்ப்பு இன்றும் பிரபல்யமாக இருப்பதே. இதன் மூலம் ஆசிரியர் ராமானுஜம் அவர்கள் மிக நீண்ட, சரியாகக் கஷ்டப்பட்டே (584 பக்கங்கள்) தனது வேலையைச் செய்து முடித்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
அதிகமான அவரது படைப்புகள் தனது சொந்த வாழ்க்கையில் தான் அனுபவித்த, அவரது அனுபவத்தின் வெளிப்பாடுகள் கொண்டவையாகவே அமைந்துள்ளன. ஒரு நேர்காணல்களில், தற்போதைய படைப்பாளிகளின் முன்னனியில் இருக்கும் பா.ராகவன் அவர்கள் கூட, எந்த ஒரு எழுத்தாளனும் அல்புனவின் உருவாக்கம் இல்லாமல் புனைவினை உருவாக்க முடியவே முடியாது என்பது போல, மண்ட்டோ அவர்களும் தனது பார்வையிலும், அறிந்ததிலும், செவிவழிச் சொற்களாலும் தனது கிண்டலான முறையில் பல புனைவுக் கதைகளை வடித்துள்ளார் என்பது கண்கூடாக வாசிக்கக்கூடியதாக உள்ளது.
மண்ட்டோவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் உறுதியான சமூக அடையாளங்கள் கொண்ட கிழ்த்தட்டு மக்களையே கூடுதலாக அறிமுகமாக்கி,அதில் வெற்றியும் கண்டார்.அவை,மதச்சார்போ அல்லது தொழில் சார்போ அல்லது உயர்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களோ, அவர்களைத் தனது படைப்பின் கதாநாயக,நாயகிகளாக நிறுத்தினார். இங்கேயும் மரபு இலக்கியத்திற்கும் நவீன இலக்கியத்தற்குமான தன்நிலை, கூட்டு அடையாளம் இவற்றிலிருந்து முற்றிலும் பிரிந்ததாக இல்லை என்ற போதிலும்,தன்நிலை என்ற அடிப்படையிலிருந்து வேறுபட்டு,அதற்குக் கீழ் அடியாழத்திலுள்ள மக்களைத் தேடிச் சென்று, அவர்களைச் சமூகத்தின் பார்வைக்கு இழுத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகார வர்க்கத்தை அடியோடு வெறுக்கும் மண்ட்டோ,மதத்தையும் விட்டு வைக்கவில்லை.மதத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த அவரது தந்தை, தான் நினைத்தது போல் மகன் வரவில்லையே என்று வேதனைப்பட்டார்.சிறு வயதிலேயே தந்தையை விட தாய்மீது மிகவும் பாசம் கொண்டிருந்தார். மதத்தை இரண்டாக உடைத்து,அதனை நம்பிக்கையிலான மதம், அதிகார மையத்தின் கருத்தியல் ரீதியான மதம் என்ற வேறுபாட்டினை அவரது கதைகளில் பார்க்கக்கூடியதாக உள்ளது.மண்ட்டோ தனது படைப்புகளில் கூடுதலாகப் பெண்களையே கருவாகக் கொண்டுள்ளமையைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. உதாரணமாக ஜானகி, சாந்தி, குஷியா,மம்மி, மோஸல் போன்றன.மதத்தை அவர் எதிர்த்தார் இல்லை,ஆனால் மதவாதிகளின் கடும் கட்டுப்பாடுகளையும் அவர்களது நடைமுறைக்கு ஒத்துவராத பல செயல்பா டுகளைக் கடுமையாகவும் கோலியாகவும் கிண்டல் செய்தார். சாதி, இனவாத வேற்றுமைகள் போன்றவற்றைக் கண்டு உள்ளார்ந்தமாகக் கவலைப் பட்டார்.அதனடிப்படையில் மோஸல்,மம்மி,திற போன்ற கதைகளை உருவாக்கினார்.
அதிக காலம் பம்பாய், பூனாவில் வாழ்ந்தாலும் அவர் கல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களிலும் வாழ்ந்து, மீண்டும் பம்பாய்க்கே திரும்பி தனது எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். தனது ஆசான் என்று சொல்லப்பட்ட பாரி அலிக் என்பவரது ஊக்குவிப்பால் தான் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்யமுடிந்ததாகக் கூறும் மண்ட்டோ, ஆரம்பகாலத்தில் திரைப்படங்கள் சார்ந்த விமர்சனங்களை எழுதியதால் மிகவும் வரவேற்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து சினிமா உலகத்திலும் தனது காலை உறுதியாகப் பதித்துள்ளார். இதனையடுத்து அவர் பம்பாய்த் திரையுலக நடிகர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் என்று அவரது தொடர் நட்புகள் எப்படியெல்லாம் விரிந்து சென்றன என்பதற்கு.
அசோக்குமார், ஷியாம், நர்கீஸ், நூர்ஜகான், ஆகியோருடன் மண்ட்டோ பயணித்த காலங்களை அருமையாக எங்களுடன் பகிர்ந்து கொள்வது, அவர்கள் உச்சக்கட்டத்தில் இருந்த போதும் மண்ட்டோவின் எழுத்துக்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார்கள் என்பதும், அவர்களுடனான அந்தநாள் அன்பு, பாசம்,சகோதரத்துவம்,உதவிக்கரம் என்று பலவகைப்பட்ட நிகழ்வுகளை இந்நூல் தாங்கிச் செல்வதை அவதானிக்கலாம் நண்பர்களே.திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் அவரது பங்களிப்பை தனது எழுத்துமூலம் பல விமர்சனங்களை செய்ததுடன்,ஜின்னா சாகிப்புடனான மறக்கமுடியாத பல சம்பவங்களையும் இங்கே நினைவுகூர்வதை வாசிக்கும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது.
மண்ட்டோவின் அவமானம் எல்லோராலும் மிகவும் பேசப்பட்ட நாவலாகவே இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதனையும் தாண்டி இந்நூல் அவரது அதிகமான, மிக்க உணர்ச்சிகளையும், உள்ளத்தையும் அப்படியே கரைத்துவிட்ட, சிந்திக்கவைத்துவிட்ட பல கதைகளை வாசிப்பாளர்களாகிய நீங்கள் உள்வாங்கலம் என்று எனது வாசிப்பின் மூலம் உறுதியாகக் கூறுகிறேன்.இந்திய,பாகிஸ்தான் பிரிவினையின் போது மிகவும் மனமுடைந்தே காணப்பட்டார். தான் நேசித்த,இளம் வயதில் வாழ்ந்த மும்பாயை விட்டு எள்ளளவும் விருப்பமின்றியே 1948ல் பாகிஸ்தான் சென்று குடியேறினார்.
தார்மீக மற்றும் உடல் விவகாரங்களில், கலாச்சார மற்றும் மதத் தடைகள் ஒரு ஆணைப் பெண்ணிலிருந்து பிரித்தெடுத்தன, இது தலைசிறந்த படைப்புகளை உருவாக்குவதற்கான முதல் காரணமாக அமைந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,பாலியல் ஆசைகள் மற்றும் உணர்ச்சிகள் உலக இலக்கியத்தை ஊக்குவித்தன, என்பது போன்ற மேற்கோள்கள் மண்ட்டோவின் படைப்புகளில் காணலாம்.
இலக்கியத்தை எந்த குறிப்பிட்ட மதிப்புகளுடனும் தொடர்புபடுத்த முடியாது, ஏனென்றால் இலக்கிய தலைசிறந்த படைப்புகளை உணர்ச்சிகளால் மட்டுமே மதிப்பிட முடியும்.ஒவ்வொரு காலகட்டத்தின் தார்மீக விழுமியங்கள் அதன் இலக்கியத்தைப் பாதிக்கின்றன. உணர்வு மற்றும் வெளிப்பாட்டின் மதிப்புகள் கலை மற்றும் இலக்கியம், வரலாற்று மற்றும் சமூக உணர்வு, ஒழுக்கம் மற்றும் மனப் போக்கு ஆகியவற்றின் கொள்கைகளால் மட்டுமே அதிகரிக்க முடியும். காலப்போக்கில் இலக்கியத்தின் மதிப்பீடுகளும் அளவீடுகளும் மாறுகின்றன. எனவே,ஒரு தலைசிறந்த இலக்கியப் படைப்பை ஆபாசமாக குற்றம் சாட்டுவது கேலிக்குரியதாகவே தெரிகிறது.
மாண்டோ விபச்சாரிகளை உருவாக்கும் சமூகத்திற்கு எதிராக கொடியைப் பிடித்து,அவர்களின் வாழ்க்கைக்காகப் போராடி, அவர்களின் உண்மை உணர் வுகளை வாசகனிடம் கொண்டு செல்கிறார்.பாலியல் சுரண்டலுக்கு ஆண் ஆதிக்க சமூகத்தை அவர் குற்றம் சாட்டுகிறார். பெண்களை இழிவுபடுத்துதல், மற்றும் அவமானப்படுத்துதல் போன்றவற்றில் ஆண் பின்தொடர்ந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரபல நாடக ஆசிரியர் பல்வந்த் கார்கி இப்படியாக எழுதுகிறார். அவன் விலைமாதுகளின் உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தான்.பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் அவர்களிடம் மனிதத்தன்மையைக் கண்டான்.ஒதுக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்த பெண்களிடம் ஒரு பெண்ணிற்கான இதயத்தைக் கண்டான். சதை வியாபாரம் செய்யும் சந்தையில் கூட ஒரு பெண்ணின் இதயத்தைத் தேடினான் மண்ட்டோ என்று முடிக்கிறார்.
அவரது படைப்புகளில் தண்டா கோஷ் (சில்லிட்டுப்போன சதைப்பிண்டம்) எழுப்பிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அவரைக் கவலைக்குள்ளாக்கியது. அங்கிள் சாமுக்கு எழுதிய கடிதங்களில் அவர் உலக அரசியலை மிகக் கடுமையாகவும் கேலியும் கிண்டலுமாக விமர்சிக்கிறார். அதிலும் குறிப்பாக அமெரிக்காவையும்,ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளையும்,அவற்றுடன் பாகிஸ்தான்,இந்தியா போன்ற நாடுகளின் பங்களி ப்பையும் மறைமுகமாகச் சாடுகிறார் மண்ட்டோ.இந்த உலகத்தை விளக்க முயல்பவர்கள் எல்லோரையும் முட்டாள்கள் என்றே கருதினான். இந்த உலகத்தை ஒருவனால் மற்றொருவனுக்கு விளக்க முடியாது. ஒருவன் தானாக அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மண்ட்டோ.
தான் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளன் என்பதை மண்ட்டோ தன் நிழலோடு சுமந்து திரிந்தார். அவரின் வார்த்தைகளில் சொல்வது என்றால், திருப்தி கொள்ள முடியாத அளவிற்குத் தூய்மையை நேசித்ததால் எப்போதும் தன்னைத் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த மண்ட்டோ,இறந்து போவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு,
இங்குதான் கிடக்கிறான்
சாதத் ஹசன் மண்ட்டோ
அவனோடு புதைந்து விட்டது
சிறுகதை எழுத்தின் ரகசியங்களும் நுட்பங்களும்
பெரும் மண்குவியல்களுக்கு அடியில்
வியந்து கொண்டிருக்கிறான்
யார் பெரிய எழுத்தாளன் என்று கடவுளா? அவனா?
என்று எழுதப்பட்ட வரிகள் தன்னுடைய கல்லறை வாசகமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு மென்மையான இதயத்தின் வலியைத்தான் எதிரொலிக்கிறது.
ரஷ்ய இலக்கியம், ஐரோப்பிய, ஆப்பிரிக்க இலக்கியங்களைக் கொண்டாடும் வாசகர்கள் அத்துடன் சேர்த்து ஆசிய இலக்கியங்களையும் அப்பப்போ நினைவூட்டி,அவர்களையும் வாசகர்கள் மீது திரும்பத்திரும்பக் கொண்டு வருவது பாராட்டத்தக்கது. அந்தவகையில் மண்ட்டோவின் உணர்வு பூர்வமான படைப்புகளையும் நாம் இன்னும் பரந்துபட்ட அளவில் வெளியுலகில் நிலை பெறச் செய்யவேண்டும் என்பதை எனது ஆதங்கம். அன்பான வாசிப்பா ளர்களாகிய நீங்களும் இந் நூலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று உங்கள் முன் வைக்கிறேன்.
@பொன் விஜி - சுவிஸ்
Generating Download Link...
அருமை,, வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
ReplyDeletePost a Comment