.

அகர முதல்வன் எழுதிய கடவுள் பிசாசு நிலம் என்னும் நாவலானது இலங்கையின் இறுதிப்போருக்கு முன்னுள்ள சம்பவங்களைச் சொல்கிறது ஈழப் போராட்டத்தின் வலியை ஒரு சிறுவனின் மன நிலையில் இருந்து எழுதியிருக்கிறார் அகரமுதல்வன்.நான்காம் கட்ட ஈழப்போருக்கு முன் இடம்பெற்ற சம்பவங்கள் இந்த நூலில் தொகுக்கப்படுகிறன.வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்ப ட்டிருக்கிறன.ஈழ இலக்கியத்தில் பெயர் சொல்லத்தக்க நாவலாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.ஏற்கனவே பால மனோகரனின் நிலக்கிளி நாவலுக்குப் பிறகு என்னைக் கவர்ந்த இலங்கைப் புத்தகங்களில் கடவுள் பிசாசு நிலமும் ஒன்று.

எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் குறிப்பிட்டதைப் போல கடவுளுக்கும் பிசாசுக்கும் இடையே உக்கிரமான போர் மூளும்போது நிலமும் அந் நிலத்தில் வாழும் புல் பூண்டுகள் புழு பூச்சிகள் உள்ளிட்ட ஜீவராசிகளின் கதி இன்னொரு மோசமான யுத்தமாகிவிடுகிற தீவினையை விவரிக்கிறது கடவுள் பிசாசு நிலம் என்ற இந்தப் புத்தகம்.அதாவது ஈழ இலக்கியத்தின் முக்கியமான வருகையாகும்.

ஈழமண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு,கலங்கி நின்ற மண்.இங்கு வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை நன்கு அனுபவித்தவர்கள்.எப்போது என்ன நடக்கும் வெளியில் போனால் வீடு திரும்புவோமா,யார் எப்போது படுகொலை செய்யப்படுவார்கள்,எங்கே எப்போது குண்டு வெடிக்கும் என்ற அச்சத்துடன் வாழ்ந்து பழக்கப்பட்ட மக்கள் எம் மக்கள்.

இலங்கை அரசுக்கும் போராளிகளிற்கும் இடையே ஏற்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிப்போர் தொடங்கும் வரையிலான காலகட்டம்தான் இந்தக் கதையின் களம்.உண்மையும் கற்பனையும் கலந்து போராளிகளின் வாழ்க்கையையும் அரசின் தந்திரங்களையும் அந்தச் சிறுவனின் வழியே கதை நகர்கிறது.என்னதான் கற்பனையாக இருந்தாலும் பத்து வயதுச் சிறுவனுக்கும் அதை விட வயது குறைந்த சிறுமிக்கும் காதல் என்பதும் அவர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வதாகச் சித்தரிப்பதும் மிகைப்பட்ட ஒன்றே.இந்த நாவலுக்கு அந்தக் காதல் ஒட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.சிறுவனும் சிறுமியும் தம் காதலுக்காக ஓடி ஒழிந்து திரிவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.கதையுடனும் பொருந்தவில்லை இறுதியில் சிறுமி கதாப்பாத்திரம் கொலை செய்யப்படுவது வேதனையான ஒன்று.

இறுதிப்போர் தொடங்கிய போது ஈழத்தமிழர்களின் மனநிலை, போராளிகளின் முடிவு,அரசு செய்த சூழ்ச்சி என அத்தனையையும் பல கதாப்பாத்திரங்களின் வழியே சொல்லிச் செல்கிறார் அகரமுதல்வன்.


கடவுள் நிலம் பிசாசு நாவலின் சிறப்பம்சம் என்னவெனில் உயிரோட்டமான தத்ரூபமான ஓவியங்கள்தான்.பார்க்க்க பார்க்க ஆசையாக இருக்கிறன இந்த ஓவியங்கள்.பாலகிருஸ்ணனுடைய கைவண்ணம் நன்றாகவே இருக்கிறது.

யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் பயணிக்கும் கதைக்களம்,தமிழ் சமூகத்தின் சாதிய வேறுபாட்டையும் இன்னமும் ஒடுக்கப்படும் மக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது,அதாவது நீங்கள் என்ன ஆக்கள் என்று கேட்பதன் மூலம் சூசகமாக சாதியைத் தெரிந்து கொள்வதை வெளிப்படுத்தி யிருக்கிறது இந் நாவல்,இந்த எளிய சாதிக்கு கோவிலில் இடமில்லை என்ற வசனம் சாதியத்தின் கோர முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. சாதிய வேறுபாடுகள் எவ்வாறு ஈழத் தமிழ் சமூகத்தில் காணப்படுகிறது என்பதையும் சொல்கிறார் அகரமுதல்வன்.

தமிழ் சமூகத்தின் பிரதேச வேறுபாடுகள் காணப்படுகிறது என்பதையும் சாவல் வெளிப்படுத்தகிறது.வன்னியில் வாழ்ந்தால் ஆங்கிலம் பேசத் தெரியாது என்று நினைப்பது முட்டாள்தானம் என்பதை ஆதிரன் கதாப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.நான் யாழ்ப்பாணமடா நீ வன்னிக்க இருந்து கதைக்கிறதுதான் ஆச்சர்யமாக இருக்கு என்ற வசனம் யாழ்ப்பாணத் துக்காரருக்குத்தான் இங்கிலீஸ் வரும் வன்னி ஆக்களுக்கு வராது என்ற தடிப்புக்கு ஆதிரன் கதாப்பாத்திரம் மூலம் சம்மட்டியடி கொடுக்கப்படுகிறது.

போரை,போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும்,வெட்டியும் தூக்கிட்டும், கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பல கொடுமைகளை,இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா,குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன் னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள்.ஒரு ஊழியை நாம் காண்போம்,அந்தஊழியில் பிணங்கள் பெருகும்,சாவு கடலாகும். அலைகள் குருதியாய் நிறம் மாறும்.கானகங்கள் பறிபோகும் நம் வேங்கைகள் மாயும்.பாதைகள் அழியும்.என்ற முன்னறிவிப்புக்கள் பின்னே ஒருங்கு சேர நடைபெற்றன என்பதே வரலாறாக முடிந்திருக்கிறது.அதற்கு பின்னர் வரும் தூரிகையும் நல்லாளும் பூக்களைச் சூடும் நாள் வரும் என்ற வசனங்கள் நம்பிக்கையூட்டிச் செல்கிறன.

வீரச்சாவும் வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது.அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வைகளையெல்லாம் கிழித்தெறிந்து விட்டு யுத்தம் தொடங்கி விடுகிறது.யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும் இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண் போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

''என்ர பிள்ள மண்ணுக்காக மடிஞ்சிட்டான் அதுக்காக நான் துக்கப்படமாட்டான்,நான் அழுவன்.அது பிள்ளையை இழந்த கருப்பையோட வெக்கை,அதுக்காக இதை துக்க வீடென்று ஒரு நாளும் நினைக்க மாட்டன்'' போன்ற வசனங்கள் ஈழத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தாய்மாரும் சொல்லியதாகவே கொள்ளப்படுகிறது.மண்ணும் மக்களும் இரண்டற உயிரோடு கலந்த ஒன்று என்பதை இந்த வசனங்கள நிரூபிக்கிறன.

பத்து வயதுச் சிறுவனுக்கும் இயக்கத்திற்குமான தொடர்பு என்பது நெருடலை ஏற்படுத்துகிறது கற்பனை என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. குறிப்பிடப்படும் சம்பவங்கள் உண்மை என்றாலும் சிறுவனின் வயதுக்கு மீறிய அனுபவங்கள் அரசியல் வசனங்கள் என்பன இயல்பை மீறியவை என்றே தோன்றுகிறது ஆனாலும் கற்பனைதானே நாவலுக்கு அடித்தளம் என்று கடந்து செல்லலாம் அவை கதையின் உயிரோட்டத்திற்கு முக்கியமானவை என்றே கருதுகிறேன்.

ஆதிரன் பன்னிச்சைத் தாய் என்னும் தெய்வத்தை வணங்குகிறான்.போர் தொடங்கியதும் அந்த தெய்வம் ஓடி ஒளிந்து கொண்டதோடில்லாமல் ஆதிரனின் காதலியையும் பலிவாங்கி அந்தக் கிராமத்தையே விட்டு மக்களை இடம்பெயர்ந்து செல்லும் போது அந்த தெய்வம் தடுக்கவுமில்லை மக்கள் படும் துய்ரங்களைத் தீர்க்கவுமில்லை,அத்தோடு அந்த பன்னிச்சைக் காடும் போரில் பற்றியெரிந்து சின்னாபின்னமாகிறது.போரின் போது முதலில் கடவுளர்தான் காணாமல் போவர்கள் என்பதை உணர்த்துகிறது ஆதிரன் கதாப்பாத்திரம்.

இந்த நாவலில் சில வசனங்கள் வாசித்து முடித்த பின்னரும் நினைவிலிருந்து விலக மறுக்கிறன.அப்படிப்பட்ட வசனங்களாக ''எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஒரு போராளியின் கண்கள் அவன் சாவுக்குப் பின்னரும் அந்த விழிப்பு நிலையிலிருந்து பின் வாங்குவதில்லை,மரணம் எந்தக் கலக்கத் தையும் தராத ஒரு பழம்பொருள் போல ஆகியிருந்தது,எதிரியின் கண்கள் சோதனை செய்வது எங்களுடைய பொருட்களையல்ல பயப்படும் கண்களை த்தான்,நான் அவளுக்குப் பின்னால் ஓடும் திரவமாயிருந்தேன்,யுத்தம் அமைதியை விட நேர்மையானது,சமாதானம் ஒரு கொள்ளை நோய்,இரவு நெடுந்தூரம் போகுமொரு பயணி,பெண்ணின் கண்களுக்கென ஒரு மொழியி ருக்கிறது அதற்கு எத்தனை உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என்று அறியேன்.ஆனால் ஆயுத எழுத்து ஆயிரம் இருக்கிறது.யுத்தத்தில்  கண்ணீருக்கும் கடவுளுக்கும் வல்லமையில்லை,துயரப்பட்ட சனங்களின் தவித்துக் கொண்டிருக்கும் குரலை உற்றுக் கேட்க செவிகளைக் கடவுள் படைத்ததில்லை''இப்படி அனேக வசனங்கள் நெஞ்சைக் கவர்கிறன.

மொத்தத்தில் கடவுள் பிசாசு நிலம் புத்தகமானது ஈழ இலக்கியத்தின் முக்கியமான வரவுதான்.வாசிப்போம்.

2 Comments

  1. அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் 🙏 🇨🇭 🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post