ஒரு ஊரில் முருகன் என்பவன் காய் கறி, பழ வியாபாரம் செய்து வந்தான். ஒருநாள் தன் தோட்டத்தில் உள்ள காய்க்காத பெரிய மா மரத்தை வெட்டுவது பற்றி தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அந்த மரத்தால் எந்தப் பயனும் இல்லை. அதை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. நாளை நான் வியாபாரத்துக்குச் செல்லும்போது ஞாபகப்படுத்து... மரம் வெட்ட ஆள் பார்த்து அழைத்து வருகிறேன் என்றான்.
இவர்களின் பேச்சைக் கேட்ட குருவி ஒன்று பறந்து வந்து, அந்த மாமரத்துக் கிளையில் உள்ளதன்கூட்டிற்குச் சென்றது. தன் அம்மா குருவியிடம் மரம் வெட்டப்போகும் விஷயத்தைச் சொன்னது.இப்போதே நாம் எல்லோரும் வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம் என்றது பயத்துடன்.
அதற்கு அம்மா குருவி, பயப்படாதே... ஒன்றும் ஆகாது என்றது. சிறிது நாட்கள் சென்றன. மீண்டும் குட்டிக் குருவி அம்மாவிடம், அம்மா... அம் இந்த மரத்தை வெட்ட இந்த ஊரில் உள்ளவர்கள் கிடைக்கவில்லையாம். அதனால் வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்துவரப் போகிறாராம் என்றது.
தாய்க் குருவி, அப்படியா? கவலைப்படாதே... ஒன்றும் ஆகாது... நீ போய் விளையாடு என்றது.சிறிது நாட்களுக்குப் பின் மீண்டும் குட்டிக் குருவி, அம்மாவிடம், மரம் வெட்ட ஆள் கிடைக்காததால் அவரின் மனைவி, மகனிடம் நாளை மரத்தை வெட்டச் சொல்லி சென்றிருக்கிறார் என்றது. அம்மா குருவி சிறிதும் பயமின்றி, ஒன்றும் ஆகாது நீ கவலைப்படாதே என்றது.
ஓரிரு நாட்கள் கழித்து குட்டிக் குருவியிடம் அம்மா குருவி, மரம் வெட்டுவது பற்றிய அவர்களின் முடிவு என்ன ஆயிற்று?அவர்களின் பேச்சைக் கேட்டாயா..? என்றது.
அதற்கு குட்டிக் குருவி, மரம் வெட்ட யாரும் கிடைக்கலையாம். அதான் நாளை அவரே வந்து மரத்தை வெட்டப் போகிறாராம்... இவராவது மரத்தை வெட்டுவதாவது என்று சிரித்தது.
உடனே பயந்துபோன அம்மா குருவி அச்சச்சோ... உடனே நாம் நமது கூட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்குச் சென்றாக வேண்டும். எல்லோரும் சீக்கிரம் தயாராகுங்கள் என்று அவசரப்படுத்தியது.
குட்டிக் குருவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அம்மா... இதை நான் பல முறை உங்களிடம் சொன்னபோது நீங்கள் பயப்படவில்லை. ஆனால், இப்பொழுது இப்படி பயப்படுகிறீர்களே...என்ன காரணம்? என்றது.
அதற்கு அம்மா குருவி, மகனே!பிறரை நம்பிக்கொண்டு இருக்கும் வரை அவனால் அந்த வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாது. ஆனால், எப்போது தானே இறங்கி அக்காரியத்தை முடிக்கத்துணிந்துவிட்டானோ அப்போது அவன் அதைச் செய்தே விடுவான். அதில் வெற்றியும் பெறுவான் என்று கூறி, தன் குழந்தைகளோடு பறந்து சென்றது.
Post a Comment