.

நாம் வாழும் பூமியை சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக்கலவைகளை கொண்டது.இதில் 79 வீத நைட்ரஜனும் 20 வீத ஒக்சிஜனும், 3 வீத கரியமில வாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன.வாயுக்களின் இந்த சமச்சீர் நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எவ்வித பாதிப்பும் அடையாது.ஆனால் தற்போது உலகை ஆக்கிரமித்துள்ள தொழில்மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைந்து காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன.ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒரு நாளைக்கு 21,600 முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுவதன்மூலம் மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ காற்றைச் சுவாசிக்கிறான். இவ்வாறு நாம் உயிர்வாழ இன்றியமையாததாக காற்று உள்ள நிலையில் அந்த சுத்தமான காற்றையும் நாம் மாசுபடுத்தி வருகின்றோம்.

உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிப் பதாகவும் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உலகெங்கும் உயிரிழப்பதாகவும் இதில் 7 இலட்சம் பேர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.அதுமட்டுமன்றி மாசுபட்ட காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 21 சிகெரட்டை பிடிப்பதற்கு சமம் என்றும் இவ்வாறான மாசுபட்ட காற்றை ஒருவர் சுவாசிப்பதனால் அவரின் ஆயுட்காலம் 3 முதல் 4 ஆண்டுகள் குறைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, ஓர் ஆண்டுக்கு 46 லட்சம் பேர் சுவாசப் பிரச்சினை காரணமாக இறக்கிறார்கள். அதேவேளை உலக அளவில் நிகழ்ந்த இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணங்களோடு தொடர்புடையதாக காற்று மாசுபாடு இருந்துள்ளது என்று 'த லென்செட்' மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.அத்துடன் உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி இறப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் நோய்களில் 29 வீதத்தையும் கடுமையான குறைந்த சுவாச நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் நோய்களில் 17 சதவீதத்தையும் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளில் 24 சதவீதத்தையும் இதய நோயால் ஏற்படும் இறப்புகள் மற்றும் நோய்களில் 25 சதவீதத்தையும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயால் இறப்புகள் மற்றும் நோய்களில் 43 சதவீதத்தையும் இந்த காற்று மாசுபாடு கொண்டுள்ளது.

சுற்றாடல் அதிகார சபை கூறுவது என்ன?

சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித் துகள்களின் தரப் பெறுமதி மீறப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி (காற்றுத் தரக் கல்வி) சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.அதன்படி 24 மணி நேரத்தில் இருக்கக்கூடிய தூசித் துகள்களின் அளவு (ஒரு கனமீட்டரில் இருக்கக்கூடிய மைக்ரோகிராம் அளவு) சுமார் 50 ஆகும்.இந்த நாட்களில் இது சாதகமற்ற முறையில் 75 ஆக உயர்ந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் நடுப்பகுதி முதல் மார்ச் வரை இந்தியாவில் ஏற்படும் பாதகமான காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது.இதன் காரணமாக இந்த நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக உள்ளது.

காற்று மாசடைவது ஏன்?

வளி,காற்று என்னும் இரண்டு வார்த்தைகளையும் தமிழில் பொது வழக்கில் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் அறிவியலில் இவை வெவ்வேறான பொருள் கொள்ளப்படுகின்றன.'வளி' என்றால் நிலைத்து நிற்கும் காற்று.வளி அசையும்போது அது காற்று என்றாகி விடுகிறது. காற்று இல்லாத இடமே இல்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.நாம் உயிர் வாழ ஒக்சிஜன் ஆதாரமாக உள்ளது.மனிதன், விலங்குகள் சுவாசிப்பது ஒக்சிஜனைத்தான்.ஒக்சிஜன் இல்லாவிட்டால் உயிரினங்கள் இருக்காது. மனிதர்கள் ஒக்சிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறார்கள் இதைத் தாவரங்கள் சுவாசித்து, அதற்குப் பதிலாக ஒக்சிஜனை வெளியிட்டு காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.

இவ்வாறு நாம் உயிர் வாழ இன்றியமையாத காற்றானது மனித செயல்களால் தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதே காற்று மாசுபாடு.காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன.காற்று மாசுபாட்டின் விளைவானது மிகவும் மோசமானது.ஏனெனில் காற்றானது மாசுபடும்போது அதிவிரைவாக பரவி எல்லா இடங்களிலும் உள்ள காற்றினை மாசடையச் செய்கிறது. எனவேதான் காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிக வேகமாக பாதிக்கின்றன.


காற்று மாசுபாடு காலநிலை மற்றும் மனித செயல்பாடுகளால்  டைபெறுகிறது.இயற்கை காற்று மாசடைதலுக்கு காட்டுத் தீ,எரிமலை வெடிப்புகள், பூமியின் உள்ளே கதிரியக்கச் சிதைவுகள் மூலம் பாறைகள் வெடித்து வாயுக்களை வெளியேற்றுதல்,தொழிற்சாலைகள், அணு உலைகள், மின் நிலைகள் போன்றவை காரணமாகவுள்ளன. படிம எரிபொருட்களான பெற்றோல் மற்றும் நிலக்கரி போன்றவற்றை எரிப்பது மற்றும் தொழிற்சா லைகளிலிருந்து வெளியேறும் சல்பர் டை ஒக்ஸைட் காற்று மாசடைய முக்கிய காரணமாகும்.போக்குவரத்து சாதனங்களான கார், பஸ் , ரயில்,மோட்டார் சைக்கிள்,கப்பல்,விமானம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கார்பன்டை ஒக்ஸைட், கார்பன்மோனாக்ஸைட், சல்பர்டை ஒக்ஸைட் மற்றும் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் போன்றவையும் காற்றினை மாசடையச் செய்யும் முக்கிய பொருட்களாகும்.


நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அநேக பொருட்களின் தயாரிப்பில் அமோனியா என்ற வாயுப் பொருள் உருவாகிறது. இது வளிமண்டலத்தில் கலந்து காற்றினை நச்சாக்கிறது.இன்றைய விவசாயத்துக்கு பயன்படு த்தப்படும் செயற்கை பூச்சிகொல்லிகள்,செயற்கை உரங்கள் போன்ற வற்றிலிருந்து நச்சு வாயுக்கள் உருவாகி காற்றில் கலந்து காற்றை மாசடையச் செய்கின்றன.உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து கார்பன் மோனாக்ஸைட் ஹைட்ரோ கார்பன்கள், ஆர்கானிக் பொருட்கள் மற்றும் நச்சு வாயுக்கள் அதிகளவு வெளியிடப்படுகின்றன. இவை காற்றில் பரவி வளிமண்டலத்தை நச்சாக்குகின்றன.பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து வெளியிடப்படும் ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் வேதிப்பொருட்கள் காற்று மற்றும் நிலத்தை மாசடையச் செய்கின்றன.

புவியின் அடியில் உள்ள தனிமங்கள் சுரங்கங்கள் மூலம் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு வெட்டி எடுக்கும்போது தூசி மற்றும் நச்சுவாயுக்கள் வெளிவருகின்றன. இவை காற்றில் கலந்து காற்றை நச்சாக்கின்றன. இவை சுரங்கத் தொழிலாளர்களை மட்டுமின்றி எல்லா உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன.வீட்டினைச் சுத்தம் செய்யும் பொருட்களான கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்கள், பினாயில்,டெட்டோல் மற்றும் வண்ணப்பூச்சுகள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது அவற்றில் இருந்து வெளியாகும் வேதிப்பொருட்கள் காற்றினை நச்சாக்குகின்றன.

இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்று மாசடைவதற்கு மிக முக்கிய காரணிகளாக அதிகரித்த வாகனங்களும் தொழிற்சாலைக ளும் அனல் மின்நிலையங்களும் குப்பை மேடுகளுமே காரணமாகவுள்ளன. இலங்கையில் வாகனங்கள் வெளியிடும் புகையால் 70 சதவீத காற்று மாசுபாடு ஏற்படுகிறது. ஒரு வருடத்தில் ஒரு வாகனத்திலிருந்து வெளியேறும் கார்பன் டை ஒக்ஸைடின் அளவு 1.92 தொன்னாகவும் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தும் போது வெளியேறும் கார்பன் டை ஒக்ஸைடின் அளவு 8000 கிராமாகவும் உள்ளதென்றால் நிலைமையின் விபரீதத்தை நாம் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோன்று தொழிற்சாலைகளிலிருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை மற்றும் நகர,மாநகர சபைகளினால் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக மீள் சுழற்சி செய்யப்படாமை,நகரப்பகுதிகளிலேயே அவை சேமிக்கப்பட்டு குப்பை மலைகளாக காணப்படுகின்றமை ஆகியவையும் காற்றை மாசுபடுத்துகின்றன.

அது மட்டுமன்றி எமது அயல் நாடான இந்தியாவும் இலங்கை நகரங்களின் காற்று மாசுபடப் பெரும்பங்கு வகிக்கின்றது.சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐகியூஏர் என்ற நிறுவனம்,‘உலக காற்றுத் தர அறிக்கை' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.106 நாடுகளில், பெரும்பாலும் அரசு சார்ந்த, நிலப்பரப்ப கண்காணிப்பு நிலையங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இந்தியா பிரதான இடம்பிடித்து வருகிறது.தற்போது உலகிலேயே அதிக மாசடைந்த நகரங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அயல் நாடான இலங்கையின் காற்றும் மாசுபடுகின்றது.

காற்று மாசடைவதை தவிர்ப்பது எப்படி?
காற்று மாசுபாட்டை தவிர்க்க குப்பையை எரிக்காமல் மறுசூழற்சி செய்யலாம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்.முடிந்தளவு கார்,மோட்டார் சைக்கிள் போன்ற தனி நபர் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பஸ், ரயில் போன்ற பொது வாகனங்களை பயன்படுத்தலாம்.நிலக்கரி பயன்பாட்டை இல்லாது செய்தல்,மோட்டார் வாகனத்தின் புகை,வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்,தொழிற்சாலை இயக்கமுறை,வாகன தயாரிப்பு,உரங்களின் தொகுதி,கட்டிடத் தகர்ப்பு,திடக் கழிவு மாசுபாடு,திரவத்தின் நீராவி,எரிமலை குழம்பு,எரிபொருள் உற்பத்தி, வீதிக்கட்டமைப்பு, மின்சார உற்பத்தி,உலோகம் பிரித்தெடுத்தல், காட்டுத் தீ, விவசாயம் போன்றவற்றில் காற்றையும் இயற்கையையும் பாதுகாக்கும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வீடுகளில் ஆற்றல் மூலங்களை (energy source) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.அதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்ப டுத்தலாம்.இது காற்று மாசுபாட்டைக் குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்தவும் பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.காற்றை சுத்திகரிக்கும் நிலையங்களை உருவாக்குதல்.காற்று மாசடைதலை கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது. காபனீரொட்சைட் போன்ற கெடுதலான வாயுக்களை மரங்கள் அகத்துறி ஞ்சுவதனால் நாம் அதிகம் மரங்களை வளர்ப்பது காற்று மாசடைவை குறைக்கும்.



பாதிப்புக்கள் என்ன?
இந்த காற்று மாசால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்,நோய்கள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது,காற்று மாசுபாட்டால் இதயம் மற்றும் நுரையீரலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.காற்று மாசுபாட்டால் காற்றில் உயரும் நைட்ரஜன், கார்பன் ஆகிய வேதிப்பொருட்கள் மெல்ல மனிதர்களின் நுரையீரலைத் தாக்கி புற்றுநோயை உருவாக்கும். இது இறுதி அபாயம் என்றால், இதயம் தொடர்பான நோய்கள் இதன் உப விளைவாக இருக்கும்.காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட
வாய்ப்புள்ளது.அதுமட்டுமன்றி ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு நோய் உள்ளிட்டவை ஏற்படும். வயதானவர்களுக்கு அதிக பதற்றம்,நீரிழிவு ஆகியவை ஏற்படுவதோடு கர்ப்பிணிகளுக்கும் நிச்சயம் பாதிப்பு உண்டு.சிறுவர்களுக்கு நுரையீரல் வளர்ச்சி பெறும் நிலையில் காற்று மாசுபாடு அவ் வளர்ச்சியை தடுத்து மெல்ல அவர்களை சுவாச நோயாளிகளாக்குகிறது.

ஒரு கர்ப்பிணிப் பெண் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகையில்,பின்னர் அது பிரசவத்தின்போது எடை குறைந்த பிறப்பு. முன்கூட்டிய பிறப்பு மற்றும் சிறிய கர்ப்பகால காற்று பிறப்புகள் (small ges-tational air births) போன்ற கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும்.காபன் மொனொக்சைட் சல்பர் டை ஒக்சைட்,நைற்ரோயன் ஒக்சைட் ஆகியவை காற்றில் எக்கச்சக்க மாக அதிகரிப்பதால் நாம் சுவாசிப்பதற்கு அவசியமான ஒக்சிஜனின் அளவு குறைகிறது.வாகனங்களின் கரிம எரிபொருட்களால் உருவாகும் கார்பன் மொனொக்சைட் உடலிலுள்ள ரத்தத்தின் ஹீமோகுளோபினில் கலக்கும்போது தேவையான ஒக்சிஜன் கிடைக்காமல் போகிறது.இந்நிலையில் மாரடைப்பு, நெஞ்சுவலி ஆகியவற்றினால் பாதிக்கப்படுவார்கள்.

இளைஞர்கள்,பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரிக்க,காற்று மாசுபாடு காரணம் என்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன.நச்சுக்காற்று ஆழமாக நுரையீரலில் செல்லும் போது, நுரையீரல் புற்றுநோய், சுவாச, இருதய நோய்கள் ஏற்படுகிறது.காற்றுக்கு எந்த எல்லையும் கிடையாது. காற்று வீசும்போது அது தன்னுடன் மாசுபாட்டையும் சுமந்து செல்கிறது.அதன் பாதிப்பை எங்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்லும். சிகரெட்டில் இருக்கும் அதே நச்சு காற்று மாசில் கலந்திருக்கிறது என்கின்றனர்.

இதேவேளை,இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஜெயதேவா இதய நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், செயின்ட் ஜோன்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை இதய நோய் பாதிப்பு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தின. இந்த ஆய்வு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.இந்த ஆய்வில் புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதாவது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 35 சதவீதம் பேர் காற்று மாசினால் இந்த நோய்க்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்தது.

இதய ரத்தக்குழாய் நோயால் பாதிக்கப்பட்ட 2,400 பேரை தேர்வு செய்து இந்த ஆய்வை நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் 40 வயதுக்குட்பட்டவர்கள். இதில்,26 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள்.15 சதவீதம் பேர் விவசாயிகள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள். 12 சதவீதம் பேர் தொழில்நுட்ப ஊழியர்கள்.6.5 சதவீதம் பேர் குடும்ப பெண்கள். 24 சதவீதம் பேர் சாரதிகள்.இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசு இதய நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவில் இடம் பெற்ற ஜெயதேவா இதயநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மஞ்சுநாத் கூறுகையில், எங்கள் ஆய்வில் புகை பிடிப்பவர்களை விட காசு மாற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிக இளைஞர்கள் காற்று மாசினால் இதய நோய்க்கு ஆளாகிறார்கள்.அது. மாரடைப்பை உருவாக்குகிறது.ஒரு நபர் போக்குவரத்து சிக்னலில் 5 நிமிடம் நின்றிருந்தால் அங்கு வாகனங்களின் புகையால் ஏற்படும் காற்று மாசு 5 சிகரெட் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறார்.

இதயநோய் ஆபத்து ஒருபுறமிருக்க .காற்று அதிக அளவு மாசு அடையும் சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.ஜெர்மனியின் மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தலைமையிலான மருத்துவர் குழு ஒன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளி யேறும் புகை போன்றவற்றால் காற்று மாசு அடையக் கூடிய பகுதிகளில் வசிக்கும் 3000 பேரின் உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில் பெரும்பாலான நபர்களுக்கு நீரிழிவு நோய் ஆரம்பநிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்ல.இப்போதுஅதிகரித்துவரும் காற்று மாசு,பச்சிளம் குழந்தைக ளின் மூளையை வெகுவாக பாதிப்பதாக யுனிசெப் அறிக்கை வெளியி ட்டிருக்கிறது.

அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு காற்று மாசு அதிகமுள்ள நாடுகளில் பல மில்லியன் குழந்தைகள் உள்ளனர். அதிலும் தெற்காசிய நாடுகளில்தான் அவர்கள் அதிகம். மூளைக்குள் நச்சுப்பொருள்கள் நுழைவதைத் தடுக்க உதவும் தடுப்பு,காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டு, பிற்காலத்தில் மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் வருவதற்கு பாதை அமைத்துக்கொடுப்பதாகக் கூறப்படுகிறது.கனரக வாகனங்களிலிருந்து வெளியாகும் போலிசைக்ளிக் அரோமெற்றிக்,ஹைட்ரோ கார்பன்கள் மூளையைப் பாதித்து. குழந்தைகளின் அறிவாற்றல், ஞாபக சக்தி, மொழித்திறன் போன்றவற்றைக் குறைக்கிறதாம். குழந்தைப்பருவத்தில் அதிகக் காற்று மாசினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது இளைமைப் பருவத்தில் மனம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும் யுனிசெப் கூறுகின்றது 

காற்று மாசிலிருந்து தப்பிக்க...

கொரோனாவுக்கு அஞ்சி முககவசம் அணிவது போல காற்று மாசடைவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல்,வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வானிலை அறிக்கைகள் மூலம் மாசு அளவை தினமும் சரிபார்த்தல்,மாசு அளவு அதிகமாக இருக்கும் போது, வெளிப்புற பயிற்சிகள் அல்லது நடைகளைத் தவிர்த்தல்,நம்மைச் சுற்றி அதிக வாகன போக்குவரத்துப் பகுதிகள் இருக்கலாம்,ஒருவர் அந்த பகுதிகளில் உடற்பயிற்சி செய்வதையோ அல்லது நடப்பதையோ தவிர்த்தல்,நடைபயிற்சி, மிதி வண்டியை பயன்படுத்துதல், வீட்டுக்குள் புகைப்பதை தவிர்த்தல். முதியவர்கள்,குழந்தைகள்,இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தல், அத்துடன் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் .ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம்
உள்ளவர்கள் வெளிப்புறங்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், நீண்ட நேரம் வெளியில் வேலை செய்வதையோ அல்லது செயல்பாடுகளை மேற்கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.



இவற்றையும் பார்வையிடுக


Post a Comment

Previous Post Next Post