புத்தகத்தின் பெயர். : சிவப்புச் சந்தை
ஆசிரியர். : ஸ்காட் கார்னி.
தமிழில் மொழி மாற்றம் : செ. பாபு ராஜேந்திரன்.
நூல் வெளியீடு . :அடையாளம் பதிப்பகம்.
விலை:- ' :285 /-
பக்கம்:- :282.
எதில் இருந்து ஆரம்பிப்பது என்று என்னால் கூற முடியவில்லை.இந்த உலகத்திலேயே மனிதனுக்கு தேவை என்று சொல்லப்படுகின்ற எத்தனையோ பல விஷயங்கள் இருக்கின்றன, அவற்றிலே அத்தியாவசிய பொருட்களும் உண்டு, ஆடம்பரப் பொருட்களும் உண்டு. ஒவ்வொரு தேவைக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல தொழிற்சாலைகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. அவை மனித முன்னேற்றத்திற்கு உரிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டு போகும் இதேவேளையில், இன்றும் மனிதன் மிகவும் துன்பமான நிலையிலேயே இருக்கின்றான்,அதற்கு காரணம் அவனது வருமானம் என்றுதான் நான் நினைக்கின்றேன். அதனால் அவன் தன்னால் முடிந்த அளவு தன்னுடைய ஜீவியத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஏதோ ஒரு வேலை செய்கின்றான்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொழுது பல இடங்களில் என்னை சிந்திக்க தூண்டுகிறது.மக்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் தங்களுடைய உடல் உறுப்புகளை விற்று வாழ்க்கையை கொண்டு செலுத்துகின்றார்கள் என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. மனித மண்டை ஓட்டின் வாசனை என்னவென்று தெரியுமா? நண்பர்களே, இதுவரை எனக்கும் தெரியாதுதான்,அது ஒரு வறுத்த கோழியின் வாசனையாக இருக்கின்றது. இதை நான் சொல்லவில்லை இந்தப் புத்தகத்தை எழுதிய நூல் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி அவர்தான் இந்தியாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்து இது பற்றி ஆய்வு செய்த பின்னரே இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதனைத் தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார் பாபு ராஜேந்திரன்.அவருடைய மொழிபெயர்ப்பு திறமை மிக அழகாகவும் வாசிக்கும்போது சிறந்த தமிழ் சொற்களைப் புகுத்தியிருப்பது மீண்டும் மீண்டும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகின்றது.
இந்தப் பூமியிலே எத்தனையோ தொழிற்சாலைகள் இருக்கின்றன,ஆனால் ஒரு மனித எலும்பு தொழிற்சாலை இருப்பதை இந்த புத்தக வாசிப்பின் மூலமாக அறிந்து ஆச்சரியப்பட்டேன்.அந்த மனித எலும்பு தொழிற்சாலை கூட இந்தியாவில் கொல்கத்தாவில் தான் இயங்குகின்றது, அது பெரிய தொழிற்சாலை என்று நாங்கள் எண்ணி விடலாகாது.கிட்டத்தட்ட அது ஒரு குடிசை தொழிற்சாலையாகவே இயங்குகின்றது.
ஒரு மனிதனின் உடல் இறந்தபின் ஒன்றில் எரிக்கப்படும் அல்லது புதைகுழியில் தாக்கப்படும். இவை இரண்டையும் எப்படி அவர்கள் திருடுகிறார்கள், அந்த எரிக்கப்பட்ட உடலை அல்லது தாக்கப்பட்ட உடலை அவர்கள் அரைகுறையாக வெளியே எடுத்து அதில் உள்ள தோல்களை நீக்கி, எலும்புகளைக் காயவைத்து பின்பு அவற்றிலிருந்து சில பொருட்கள் (புல்லாங்குழல், புத்த பிக்குகளின் பூஜைப் பொருட்கள் போன்ற) செய்து சந்தைப் படுத்துதல்,அல்லது அந்த முழு எலும்புக் கூட்டையே அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றுமதி செய்வது போன்ற விபரங்களைக் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இது மட்டுமல்ல ஒருவர் இரத்த தானம் செய்கிறார் என்றால் அது தானாக முன்வந்து இரத்தம் கொடுப்பது தான் இரத்ததானம். ஆனால் மிகக் குறுகிய காலம் தொட்டு இரத்தம் மனித உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது. (குறிப்பாக இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், மெக்சிக்கோ மற்றும் ஆபிரிக்க நாடுகளில்) போன்ற அரிய தகவல்களைத் தருகிறார் ஸ்கார்ட் கார்னி.
ஆசிரியர் இதில் 10 தலையங்கங்கள் கொடுத்து மிக அழகாக விரிவாக எழுதியுள்ளார்.
1, உடல் இரசவாதம்
2, எலும்புத் தொழிற்சாலை
3, சிறுநீரகத்தேடல்
4, பெற்றோரை சந்தியுங்கள்
5, களங்கமற்ற கருத்தரிப்பு
6, குழந்தை பெற்றுக் கொடுத்தவுடன் காசு
7, இரத்தப் பணம்
8, பரிசோதனை பிராணிகளின் மருத்துவ ஆய்வு சார்
உழைப்பு
9, ஆழியாத வாக்குறுதிகள்
10, கறுப்புத் தங்கம்
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பட்டப் படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தனது பன்னிரண்டு மாணவர்களுடன் ஒரு குறுகிய கால தொழில்முறை கல்விப் பணியை தொடங்குகிறார் ஆசிரியர்.அதே சமயத்தில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புனித பயணத்தை மேற்கொண்ட வேளையில், அங்கு தனது மாணவர்களில் ஒரு மாணவிக்கு மரணம் ஏற்படுகிறது. அந்த உடலை அமெரிக்காவுக்கு அனுப்பும் பொறுப்பை ஸ்காட் பொறுப்பேற்று, அதன் மூலம் எவ்வளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் நேரடியாக அனுபவித்த பின் தோன்றியதே இந்த ஆய்வுப் புத்தகம்.
சிறுநீரக தேடல் என்னும் தலைப்பின் கீழ் சுனாமி நகரில் நடந்த இன்னல்களையும், அந்தப் பேரழிவின் பின் ஏற்பட்ட அகதி முகாம்களை தன் வசப்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் பல லட்சம் சம்பாதித்த தரகர்களையும், தொண்டு நிறுவனம் என்ற பெயரில் மக்களின் உடல் உறுப்புக்களை உறுஞ்சியும் கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதையும் கார்னி மிக உருக்கமாக பதிவு செய்கிறார் நண்பர்களே. இதன் பின்புதான் அந்த முகாமை கிட்னி வாக்கம் அல்லது கிட்னி நகர் என்று அழைக்கத் தொடங்கினார்கள் என்று குறிப்பிடுகிறார்.
இதன் மூலம் நூலாசிரியர் இந்தியாவையும் உலக நாடுகளையும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளையும் ஒப்பிட்டு மிகவும் கூர்ந்து விரிவாக எழுதுகிறார்.கண்டிப்பாக வாசியுங்கள்.மனிதர்களுடைய சினை முட்டையை எப்படி யெல்லாம் கறுப்புச் சந்தையில் ஒரு வலைப் பின்னாக வலம் வருவதையும், அதிலுருந்து இது தொடர்பான நபர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிற வழி முறைகளையும் தெளிவு படுத்துகிறார்.ஸ்பானியாவில் பார்சலோனாவில் உள்ள ஒரு இன்ஸ்டியூட்டில் மனித சினை முட்டைகளை 0 டிகிரிக்குக் குறைவானவான சூழலில் ஒரு ஆய்வகத்தில் அடித்தளத்தில் அதனை பாதுகாக்க வைத்து செயல்ப் படுத்துகிறார்கள். இதிலே கூடுதலாக குடியேற்றகாரர்களும்,மாணவர்களும் தங்கள் சினை முட்டைகளை தானத்திற்கு 800 முதல் 1500 டொலலர்கள் வரை பணமாகப் பெற்று தங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.
மேலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் அமெரிக்க ஐரோப்பிய மக்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்கு வாழும் வறிய பெண்களின் மூலமாக குழந்தைகளை பெற்று, அவர்களின் வளர்ப்பு பிள்ளை ஏற்றுக் கொள்கிறார்கள். இது பற்றி பல திடுக்கிடும் சம்பவங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இதை நீங்கள் வாசிக்கும்போது அதனுடைய ஒவ்வொரு வரிகளும் எங்களைச் சிந்திக்க வைக்கின்றது. மேலும் உண்மையான பல சூத்திரங்கள்,ஏமாற்று வித்தைகள் யாவும் தெளிவாக நம் கண்முன் தோன்றுகின்றன.
கறுப்புத் தங்கம் என்ற தலையங்கத்தின் கீழ் மிக சுவாரஸ்யமான தகவல்களை எங்களுக்கு தருகிறார் ஆசிரியர்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அருள் மிகு திருமலை திருக்கோவிலில் உள்ள கல்யாண காட்டா மொட்டை அடிக்கும் மையத்துக்கு உங்களை வரவேற்கின்றேன்.இதுதான் உலகின் மிக அதிக இலாபம் தரும் மனித கழிவு வணிகத்தின் தொடக்கப் புள்ளி.இங்கு சேகரிக்கப்படும் மூடி 5 லட்சம் டாலர் அழகு சாதன பொருள் தொழிலுக்கு மூலப்பொருளாக அமைகின்றது. அது உண்மையான உயர்தர இந்திய நீண்ட நேரான முடியை விரும்பும் பெருமளவிலான ஆபிரிக்க,அமெரிக்கப் பெண்கள். மனிதனுக்கான உலகளாவிய சந்தை 90 கோடி டாலர் விற்பனை தாண்டுகிறது. என்று குறிப்பிடுகிறார்.
இப்படியாக பல நல்ல தகவல்களை ஆசிரியர் எழுதுகிறார்.கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசியுங்கள். இதைவிட மேலும் மேலும் பல செய்திகளை நீங்கள் அறியக் கூடியதாக இருக்கும். எனவே தான் மிக மிகச் சுருக்கமாகவே நான் இதில் எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கின்றான். நீங்கள் வாசித்துக் கொண்டு போகும் பொழுது இதை விட பல சுவாரஸ்யமான திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த பல தரவுகள்,உண்மையாக இதில் ஈடுபட்டவர்கள் தந்திருக்கின்ற வாக்கு மூலமாக நிறைய விஷயங்களை அறியலாம்.எல்லாவற்றையும் சொல்லி விட்டால் புத்தகத்தை வாசிக்க முடியாமல் போய்விடும் அதனால் நான் இத்துடன் என்னுடைய விமர்சனத்தை குறைத்துக் கொண்டு, மிகுதியை உங்கள் வாசிப்புக்காக விட்டு விடுகிறேன்.
கடைசியாக பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வணிக வரலாறாக இதை ஆசிரியர் எழுதியிருக்கின்றார். மருத்துவ ஆய்வு,நவீன பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தொடங்கி பாதிக்கப்பட்ட கிராமங்கள்,உயர் தொழில் நுட்பம்,மேலைநாட்டு ஆய்வகங்கள்,அத்துடன் உடல் திருடர்கள், வாடகைத் தாய்கள்,எலும்புக்கூடு வியாபாரிகள்,உயிர் வாழ்வதற்காக தங்கள் உடலை விற்கும் மக்கள்வரை தொடர் கின்றது.இந்த சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக் கைகள் எடுத்தும், அதே சமயத்தில் தொடர்ந்தும் இது உள்ளூர்வாசிகள், ஆளும் சட்டத்தை ஏமாற்றுபவர்களும் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றது. கூடுதலாக அறிவியல் ரீதியான எந்த இடமும் இதில் கொடுக்கப்படவில்லை. இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் பொழுது பல நாட்கள், பல மணி நேரங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு சிந்தனைகள் தோன்றி, நம்மையே ஒரு உலுக்கு உலுக்கிறது. சிந்திப்போம், நமது வாழ்கையை சற்று எடைபோடுவோம்.
கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
@பொன் விஜி-சுவிஸ்
சிவப்புச் சந்தை புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
Generating Download Link...
Post a Comment