நளினி ஜமீலா எழுதிய எனது ஆண்கள் புத்தகமானது முன்னாள் பாலியல் தொழிலாளியின் கதையைச் சொல்கிறது.ஜமீலா இந்தப் புத்தகத்தில் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த ஆண்களைப் பற்றிச் சொல்கிறார்.ஜமீலா கூலித் தொழிலாளியாக இருந்து இருபத்து நான்காம் வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தார்.கேரளா Sex Workers அமைப்பிலும் தற்போது செயற்பட்டு வருகிறார்.பாலியல் தொழிலாளி ஒருவர் சந்திக்கும் போராட்டங்கள் ஏன் பாலியல் தொழிலுக்கு வந்தார் அதன் மூலம் அவர் பெற்றுக் கொண்டது என்ன என்பதைத் தன்னுடைய சுயசரிதையான இந்த நூலில் குறிப்பி ட்டிருக்கிறார் ஜமீலா.மலையாளத்தில் வெளிவந்து மலையாள சமூகத்தையே புரட்டிப் போட்டது இந்தப் புத்தகம்.
திரைப்படங்கள் என்ன புத்தகங்களிலும் பாலியல் தொழிலை மிகவும் எளிமையான பணம் சம்பாதிக்க பெண்களுக்கான வழி என்றுதானே பார்க்கிறோம்.ஜெயமோகனின் அறம் நூலில், “பொட்டச்சியா இருந்திருந்தா வேசியா போயிருப்பேன். ஆம்பளையா போயிட்டனே” என்ற ஒரே வரி எனக்கு அவர் மீது வெறுப்பை வரவைத்தது.ஆண்களும் பாலியல் தொழிலுக்குச் செல்லலாம் என்பதை அவர் அறியவில்லை போல.ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று வரலாம் தவறில்லை.ஆனால், ஒரு பெண் பாலியல் தொழிலுக்குச் சென்றால் தவறு. குடும்பத்திற்கே இழுக்கு. அவர்கள் சென்றுவருவதால் எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை.அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பான்! என்ன ஒரு நியாயம்?இதுதான் இந்த சமூக அமைப்பையே நான் வெறுப்பதற்கு காரணமாக அமைகிறது.ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம்.
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் இயல்பாகக் கடந்து விட முடியும் என்ற சமூகச் சூழலில் பெண்ணுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளும் மறைமுகமான சட்ட திட்டங்களும் சமூகத்தால் வரையறை செய்யப்பட்டிருக்கிறன அத்தகைய தொரு சூழலில்தான் தன்னோடு பழகிய ஆண்களையும் அவர்களது உணர்வு களையும் மன நிலையையும் துணிச்சலாக வெளிக் கொணர்கிறார் ஜமீலா. பல்வேறு சூழல்களால் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களின் இவர் பாலியல் தொழிலாளியாக வெளிச் சமூகத்தில் தான் அறியப்பட்டது ஆண் ஒருவன் செய்த துரோகத்தினால்த்தான் என்கிறார். துரோகங்களும் வலிகளும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் கூடவே காதலும் எனப் பயணிக்கிறது இந்தப் புத்தகம்.
தன் மீதான சமூகப் பார்வைகளையும் வக்கிரங்களையும் கொடுமைகளையும் நூலில் தோலுரித்துக் காட்டியுள்ளார் ஜமீலா.மலையாள சமூதாயத்தில் மிக மோசமாகப் புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க மனோபாவம்,சாதிய மனநிலை,காசு கொடுத்தால் பெண் எனக்கானவள் என்ற சிந்தனை பெண்ணுக்கு பெண்ணே எதிராக இருக்கும் கொடுமை என பலவற்றை தன்னுடைய சொல் அம்புகளால் கிழித்தெறிகிறார் ஜமீலா.
இச் சுய சரிதை ஜமீலாவின் வாழ்க்கையோடு எம்மையும் ஒன்றிணைத்துப் பயணிக்க வைக்கிறது.அருகில் அமர்ந்து கதை சொல்லும் கதை சொல்லியாகி அவர் செல்லும் இடமெல்லாம் எம்மை அழைத்துப் போகிறார்.பகற் பொழுதுகளில் இரவுகளில் நடுநிசிகளில் அவருடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வைத் தருகிறது இந்தப் புத்தகம்.தன்னுடைய வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் ஒவ்வொரு பாலியல் தொழிலாளியின் மன ஓட்டத்தையும் சொல்லாமல் சொல்லி விடுகிறார் ஜமிலா.
பாலியல் தொழிலாளிகளும் மனிதர்கள்தான் அவர்களிற்கும் அனைத்து உணர்ச்சிகளும் உண்டு என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஜமீலா அனேக ஆண்கள் காசு கொடுத்து விட்டால் தனக்கே சொந்தம் என்ற வக்கிர எண்ணங்களோடு இருக்கிறனர் என்றும் பணம் வாங்கும் ஒரே காரணத்தினால் தரக்குறைவாகப் பாலியல் தொழிலாளியை விமர்சிக்கிறனர் என்றும் கூறுகிறார்.
எம்முடைய தொலைக்காட்சிகளிலும் சரி நாடகங்களிலும் சரி பெண்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரம் கன்னித்தன்மையை அழித்தலும் கர்ப்பிணி யாக்குவதும்தான் என்ற ரீதியிலேயே சிந்திக்கிறன.என்ன ஒரு கேவலமான எண்ணம்.நேரடியாக மோத முடியாத போது வன்முறையைக் கையாளுதல் என்பது இயலாமையின் ஒரு எச்சமே.இதுவே அடுத்த தலைமு றைக்கு கடத்தப்படும்போது என்ன நடக்கும் அவர்களும் பெண்களைத் தோற்கடிக்க இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள்.நாம் தான் நல்லவற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் அதாவது ஆணும் பெண்ணும் சமம்.உனக்கு வலிப்பது போலேயே பெண்ணுக்கும் வலிக்கும் என்று.
பாலியல் தொழிலாளிக்கு காதல் இல்லை என்று ஒருபோதும் சொல்ல முடியாது ஆனால் வியாபாரத்திற்காக அது மறைத்து வைக்கப்படலாம்.வியாபாரம் என்ற அடிப்படையில் பார்த்தால் காதல் பிரச்சனை நிறைந்ததுதான் கொஞ்சமாகக் காசு தருவது,அதிகாரப் பிரயோகம் நடத்துவது போன்ற அதிருப்திகளை அது வரவழைக்கும்.சில பாலியல் தொழிலாளிகள் பலரிடமும் காதல் வந்து அதனைக் கைவிட முடியாமல் தலை மறைவாகி ருக்கிறனர் வெறும் கதைக்கு வேணும் என்றால் காதல் இல்லை என்று பாலியல் தொழிலாளிகள் சொல்லலாம் ஆனால் அவர்களிற்கு நல்ல துணை இருந்து கொண்டேதான் இருக்கும்.ஒரு வாடிக்கையாளனை கணவனுடைய நிலையில் வைத்துப் பார்க்கவே பாலியல் தொழிலாளிகள் பழக்கப் படுத்தப்படுகிறனர் நிலைத்திருக்க கூடிய காதல்கள் மிகவும் குறைவு என்கிறார் ஜமீலா.
மொத்தத்தில் எனது ஆண்கள் புத்தகமானது கேரளா ஆண்களின் ஒரு பக்கத்தை மறைக்கப்பட்ட வக்கிரத்தை வெளியில் எடுத்துக் காட்டுகிறது. நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படு த்துகிறது.பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமு றைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல,ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும்.வாசிப்போம்.
Post a Comment