.

பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் அவனது மகனாகப் பிறந்தார். அவருக்கு மகாசாசனர் என்ற பெயர் வைக்கப்பட்டது. அவரது தாயார் இன்னொரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். அதற்கு சோமதத்தன் எனப் பெயரிட்டார்கள். அவர்களது தாயார் சில வருடங்களுக்குப் பின் திடீரென இறந்து விடவே மன்னன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டான்.அவளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதற்கு ஆதித்தன் எனப் பெயரிட்டனர்.

இளைய ராணியிடம் மன்னன் ஆதித்தனின் பிறந்தநாள் விழாவின் போது “நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்” எனவே அவளும் “நான் இப்போது எதுவும் கேட்கவில்லை. கொஞ்ச காலம் கழித்துக் கேட்கும் போது கொடுங்கள்’’ என்றாள்.அரசனும் அவ்வாறே வாக்களித்தான்.

ஆதித்தனும் கல்வி கற்று அரசர்குரிய போர்ப் பயிற்சி பெற்றுப் பெரியவன் ஆனான். அப்போது அவனது தாய் மன்னனிடம் போய் “நீங்கள் ஆதித்தன் பிறந்தபோது நான் விரும்புவதை நிறைவேற்றுவதாகக் கூறினீர்கள்.நானும் என் விருப்பத்தைப் பிறகு கூறுவதாகச் சொன்னேன். நீங்களும் சரி எனக் கூறினீர்கள். என் விருப்பத்தை இப்போது கூறுகிறேன். நிறைவேற்றுங்கள். என் மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுங்கள்.உங்களுக்குப் பிறகு அவனே இந் நாட்டின் அரசனாவான்” என்றாள்.அது கேட்டு மன்னன் திடுக்கிட்டுத் திகைத்தான். தன் இளைய மனைவியிடம்“ஆதித்தனுக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள்.அவர்களிலும் மூத்தவனுக்கு இளவரசுப் பட்டம் கொடுக்காமல் உன் மகனுக்குக் கொடுப்பது முறையல்ல” என்றான்.


இளைய ராணியோ விடவில்லை.இப்படியே விட்டால் இளைய ராணி தன் முதல் மனைவிக்குப் பிறந்த இரு மகன்களுக்கும் ஏதாவது ஆபத்து விளைவித்து விடுவாளோ என எண்ணிய மன்னன் மகாசாசனரையும் சோமதத்தனையும் அழைத்து விஷயத்தைக் கூறி “நீங்கள் இருவரும் இரண்டு மூன்று வருடங்கள் நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்குள் உங்கள் சிற்றன்னையின் மனமும் மாறி விடும்” என்றான்.

மகாசாசனரும் சோமதத்தனும் தந்தை சொன்னபடியே நடப்பதாகக் கூறி உடனே கிளம்பினார்கள்.அவர்களோடு ஆதித்தனும் புறப்பட்டு விட்டான். அவர்கள் பல நாடுகளைக் கடந்து இமயமலைப் பகுதியை அடைந்தார்கள். 

ஒருநாள் அவர்கள் ஒரு மரத்தடியே உட்கார்ந்தனர். மகாசாசனர் சற்று தூரத்தில் ஒரு குளம் இருப்பது கண்டு ஆதித்தனிடம் "தம்பீ! நீ அதோ தெரியும் குளத்திற்குப் போய் தாமரை இலைகளைப் பறித்து அவற்றில் நாங்கள் குடிக்க நீர் கொண்டு வா” எனக் கூறி அனுப்பினார்.

ஆதித்தனும் அந்தக் குளத்தை அடைந்து அதில் இறங்கினான்.அப்போது அதிலிருந்து நீர்ப்பிசாசு அவனைப் பிடித்துத் தன் வீட்டிற்குக் கொண்டு போய் விட்டது. வெகு நேரமாகியும் ஆதித்தன் வராததைக் கண்ட மகாசாசனர் தன் மற்ற தம்பியான சோமதத்தனிடம் “தம்பி! நீ போய் ஆதித்தனைப் பார்த்து அழைத்து வா” என்று சொல்லி அனுப்பினார்.

சோமதத்தனுக்கும் ஆதித்தனுக்கு நடந்தது போல் நடந்தது. தண்ணீர் கொண்டு வரப் போன தம்பிகளும் திரும்பி வராதது கண்டு மகாசாசனர் அக் குளத்தை அடைந்து அதன் கரையில் நின்று குளத்தை உற்றுப் பார்க்கலானார்.

அப்போது நீர்ப்பிசாசு ஒரு மலை சாதியினன் போன்ற உருவில் அவர் முன் தோன்றி “ஏன் நிற்கிறீர்கள்? குளத்தில் இறங்கி நீரை அள்ளிக் குடிப்பது தானே?” என்றது. அதைக் கேட்டதுமே அதில் ஏதோ சூது இருப்பதைப் புரிந்து கொண்ட மகாசாசனர் “ஓ! நீ தானா அவன்?” என்றார்.

பிசாசும் “நீர் மகா புத்திசாலி. நான்புத்திசாலிகளை ஒன்றும் செய்ய மாட்டேன். அப்படிச் செய்யக் கூடாது என என் எஜமானன் குபேரன் கட்டளை இட்டிருக்கிறார்” என்றது.மகாசானரும் “ஓ! நீ அறிவுரைகளைக் கேட்க விரும்புகிறாயா! நான் சற்று இளைப்பாறி விட்டுக் கூறுகிறேன்”என்றார்.

நீர்ப்பிசாசும் ''இது குபேரனின் குளம். இதனடியே என் உறைவிடம் உள்ளது. வாருங்கள்" எனக் கூறி மகாசாசனரை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது. அவர் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மகிழ்ந்த நீர்ப்பிசாசு “சரி. உங்கள் தம்பிகளில் ஒருவரை விடுதலை செய்கிறேன்.யாரை உம்மோடு அழைத்துப் போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டது.மகாசாசனரும் “ஆதித்தனைத் தான்”என்றார். பிசாசும் "ஓ! சோமதத்தனை ஏன் விடுவிக்காமல் ஆதித்தனைக் கேட்கிறீர்கள்?'' எனக் கேட்க  மகாசாசனரும் “நான் என் தாய்க்கு
மிஞ்சும் ஒரு மகன். அது போல் என் சிற்றன்னைக்கும் மகன் மிஞ்சட்டுமே என்று தான் ஆதித்தனை கேட்டேன்.விடுதலை செய்யக் மேலும் ஆதித்தனை உன்னிடம் விட்டு சோமதத்தனோடு போனால் உலகத்தவர் நாங்கள் தாம்
ஆதித்தனுக்கு ஏதோ தீங்கு விளைவித்து விட்டதாக எண்ணிக் கொள்வார்கள்' என்றார்.

நீர்ப் பிசாசும் மகாசாசனரை வணங்கி “ஆகா! எவ்வளவு உயந்த உள்ளம்
படைத்தவர் நீங்கள்!உங்கள் தம்பி சோமதத்தனையும் ஆதித்தனோடு சேர்த்து விடுதலை செய்கிறேன்" என்று அவர்களை விடுவித்து மூவருக்கும் விருந்து
அளித்து தன் வீட்டில் கொஞ்ச நாட்கள் இருக்கச் செய்தது.

மகாசாசனர் மன்னரானார். அவர் சோமதத்தனைத் தன் பிரதிநிதியாகவும் ஆதித்தனைத் தன் சேனாதிபதியாகவும் நியமித்தார். நீர்ப்பிசாசிற்கும் அவர் ஒரு மாளிகையைக் கொடுத்து அதற்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து
கொடுத்தார்.







Post a Comment

Previous Post Next Post