விசால சாம்ராஜ்யத்தில் நகரங்கள் எத்தனையோ இருந்தாலும் மகா நகரம் மற்ற நகரங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விளங்கியது.ராஜ்யத்தின் மற்ற இடங்களில் பஞ்சம் தலை விரித்தாடும் சமயங்களில் கூட மகாநகரம் செழிப்பாக இருந்தது. மகாநகரத்தின் நகராட்சித் தலைவரான சங்கரனுடைய சிறப்பான நிர்வாகமே அந்த நகரத்தின் சிறப்புக்குக் காரணம் என்று பெரும்பாலோர் கருதினர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சங்கரன், மிக எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தான்.தனக்கென்று ஒதுக்கப்பட்ட மாளிகையைப் புறக்கணித்து ஒரு சாதாரண வீட்டில் வசித்து வந்தான்.நிர்வாக நேரம் தவிர,மற்ற நேரங்களில் எல்லாம் பொது மக்களுடன் நெருக்கமாகப் பழகி,அவர்களது குறைகளை நேரில் கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வும் அவ்வப்போது கண்டதால், பொது மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
அனைத்து மக்களின் அன்புக்குப் பாத்திரமாக இருந்த சங்கரனைப் பிடிக்காத ஒரு நபரும் அந்த நகரத்தில் உண்டு. அவன்தான் ராஜப்பிரியன்.அவன் மன்னருக்கு தூரத்து உறவினன். அவன் மனைவி ராணிப் பிரியா, பட்டத்தரசியின் தூரத்து உறவினள். ராஜப்பிரியனிடம் அளப்பரிய செல்வம் இருந்தும், சங்கரனைப் போல் புகழை அவனால் சம்பாதிக்க முடியவில்லை.இதனால் ராஜப்பிரியனுக்கு சங்கரன் மீது பொறாமை ஏற்பட்டது.
ஒருநாள் ராஜப்பிரியன் தன் மனைவியிடம் “புராணக்கதைகளில் வரும் யயாதி, மகாபலி ஆகியோர் சக்கரவர்த்தியாக இருந்ததனால் மட்டுமே புகழ் பெற்றனர். ஆகவே ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் புகழ் அவன் பதவியினால்தான் என்பது என் அபிப்பிராயம்” என்றான்.
அதைத் தொடர்ந்து, ‘பதவி இல்லாமல், தனது சாதனைகளாலும் புகழ் பெறுபவர் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட சாதனைகளைப் புரியும் வல்லமை நமக்கு இல்லை.நம்மைப் போன்ற மனிதர்களுக்குப் புகழ் வர வேண்டுமானால் நம்முடைய பதவியானால்தான் வரும்.ஆகவே ராணிப்பிரியா,நான் சொல்வதைக் கேள். நாம் இருவரும் மன்னரிடம் சென்று முறை
இடுவோம். சங்கரனுக்கு பதிலாக என்னை அவர் இந்த நகராட்சித் தலைவராக நியமனம் செய்தால் புகழ் தானே என்னை நாடி வரும் என்றான்.
இருவரும் மன்னரை சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வெளி இட்டனர். சற்று நேரம் யோசித்த மன்னர், “நமது ராஜ்யத்திலேயே மகாநகரம் ஒரு உதாரண நகரமாக விளங்குகிறது. அதற்குக் காரணமே சங்கரனின் நிர்வாகத் திறமை என்று பலரும் கருதுகின்றனர். அப்படி இருக்க, அவனை எப்படி என்னால் அந்தப் பதவியிலிருந்து அகற்ற முடியும்?” என்று கேட்டார்.அதற்கு ராஜப்பிரியன், “அரசே!மகாநகரத்தின் சிறப்புக்குக் காரணம் நிச்சயமாக சங்கரன் இல்லை. மக்கள் கண்மூடித்தனமாக அவனுக்குப் புகழ்மாலைகள் சூட்டுகின்றனர்.இப்போதே சிலர் உங்களுக்கு பதிலாகசங்கரன் ராஜாவானால் விசால ராஜ்யமே செழிப்பாக இருக்கும் என்று கூட சொல்கின்றனர்” என்று கூறி மன்னரையே திடுக்கிட வைத்து விட்டான்.
ராஜப்பிரியனது வார்த்தைகளால் சஞ்சலம் அடைந்த மன்னர் நன்கு
யோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தார்.உடனே தனது தூதனை மகா நகரத்துக்கு அனுப்பினார். அந்த தூதன் சங்கரனிடம், "உங்கள் சிறப்பான நிர்வாகத்தினால் மகா நகரம் செழிப்பாக இருப்பதைக் கண்ட மன்னர், உங்கள் திறமை முழு ராஜ்யத்திற்கும் பயன்பட வேண்டும் என்று கருதுகிறார். ஆகவே நீங்கள் தலைநகரத்துக்கு வந்து மன்னரது ஆலோசகராகப் பணியாற்ற வேண்டும். உங்கள் இடத்தில் ராஜப்பிரியன் நகராட்சித் தலைவர் ஆவார்'' என்று செய்தி சொன்னான்.
இவ்வாறு ராஜப்பிரியன் அவனுடைய விருப்பப்படியே மகா நகரத்தின் நிர்வாகியாகப் பொறுப்பேற்க, சங்கரன் மன்னரது ஆலோசகராகப் பணிபுரியத் தொடங்கினான்.
ராஜப்பிரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், எப்போதும் தன் புகழ் பாடக்கூடிய நபர்களைப் பொறுக்கியெடுத்துத் தன் பணியாளர்களாக நியமித்துக் கொண்டான்.தன் நீண்ட நாள்
கனவு பலித்ததை எண்ணி ராஜப்பிரியன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.
சங்கரன் தனது புதிய பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, மன்னருக்கு,
அவருடைய பிரச்சினைகள் அனைத்திலும் பங்கு கொண்டு, உதவி செய்து
ஆக்கப்பூர்வமான சாதனைகள் படைத்தான். சங்கரனது மதிநுட்பமான ஆலோசனைகளால் விசால ராஜ்யத்தின் மேன்மை ஓங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகாநகரத்தில் பயங்கரப்
பஞ்சம் உண்டாயிற்று. அந்த ராஜ்யத்தின் மற்ற பகுதிகள் சீராக இருக்க,எப்போதுமே மிகவும் செழிப்புடன் இருக்கும் மகாநகரம் ஏன் இப்படி ஆயிற்று என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.மன்னரும் சங்கரனை அழைத்து மகாநகரத்துக்கு நேரில் சென்று நிலைமையை அறிய வேண்டி அனுப்பினார். அப்போது மந்திரிகள் மன்னரிடம், “அரசே! சங்கரனது பொறுப்பில் இருந்தவரை செழிப்புடன் இருந்த நகரம், இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு சீர்கேடு அடைந்தது ஏன் என்று யோசிக்க வேண்டும். அதுவும் சங்கரனது
ஆலோசனைகளின் பயனை நாம் நாடு முழுதும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
சங்கரன் அங்கிருந்து அகன்றவுடன், மகாநகரமே சீர்கேடு அடைந்து
விட்டது” என்று விவாதித்து ராஜப்பிரியனின் நிர்வாகத்தைப் பற்றி
மறைமுகமாகக் குறை கூறினர்.
ஆனால் மன்னர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “நாடு முழுதும் சங்கரனது ஆலோசனைகளால்
அபிவிருத்தி அடைந்துள்ளது என்கிறீர்கள். மகாநகரமும் இந்த நாட்டின் ஒரு பகுதிதானே! அங்கு மட்டும் ஏன் சங்கரனது சக்தி செயற்படவில்லை?” என்று மன்னர் சந்தேகம் எழுப்பினார்.
‘“அரசே, சங்கரனால் ஆலோசனைகள் மட்டுமே கூற முடியும். ஆனால் அவற்றை ஒழுங்காகப் பின்பற்றுவது அந்த நிர்வாகியின் கையில்தான்
உள்ளது. ஆகவே நீங்கள் ராஜப்பிரியனுடைய நடவடிக்கைகளை நேரில் சென்று கண்டறிய வேண்டும்” என்றனர் மந்திரிகள்.
மந்திரிகளின் கூற்றின் நியாயத்தை உணர்ந்த மன்னர் தானே நேரில் மகா
நகரம் சென்றார். மன்னரை ராஜப்பிரியன் தடபுடலாக வரவேற்றான்.
மன்னர் சங்கரனையும் தன்னிடம் அழைத்தார். பிறகு இருவருடனும் கலந்து ஆலோசனை செய்தார்.சங்கரன் மன்னரிடம் “அரசே! நீங்கள் கூறியவாறு
இங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.மகாநகரம் தற்போது அடைந்துள்ள சீர்கேட்டிற்கு இந்த இரண்டு ஆண்டுகளாக எதையும் திட்டமிட்டு
செயற்படாமல், நேரத்தை வீணாக்கியதும் சட்டம், ஒழுங்கு,அமைதியை நிலைநாட்டத் தவறியதும் தான் காரணங்கள்” என்றான்.உடனே ராஜப்பிரியன் “மகாராஜா!சங்கரன் கூறுவது எல்லாம் பொய்.இப்போதுள்ள நிலைமை தெய்வச் செயலினால் நடந்தது” என்றான்.
“உங்கள் இருவரில் யாருடைய கருத்தை நான் ஏற்பது?” என்று
கேட்டார் மன்னர். அதற்கு சங்கரன்,"அரசே!இந்த நிலைமைக்கு ராஜப்பிரியனே காரணம். பொதுமக்களுடைய குறைகளை இவர் அறிய முயற்சிக்கவே இல்லை.நிர்வாகத்தையும் சீராக கவனிக்கவே இல்லை” என்று குற்றம் சாட்டினான்.
“இல்லை மகாராஜா! நான் ஏழை மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தேன். வேண்டுமானால் உங்களுடன் அந்த ஏழை மக்களை நான் சந்திக்கத் தயார். அவர்கள் கூறுவதைக் கேட்டு நீங்கள் தீர்மானம் செய்யுங்கள்” என்றான் ராஜப் பிரியன்.
“நீ சொல்வது சரி. மாறுவேட மணிந்து நான் உன்னுடன் வருகிறேன். பிறகு சங்கரனுடன் செல்வேன். ஏழை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றார் மன்னர்.
அதன்படி மாறுவேடமணிந்த மன்னரும் ராஜப்பிரியனும் பொது மக்களை நாடிச் சென்றனர். முதலில்அவர்கள் ஒரு வியாபாரியை சந்தித்தனர். அந்த வியாபாரியின் வீட்டில் திருட்டுப் போயிருந்தது. அவனும் அவனுடைய மனைவியும் புதல்வர்களும் ராஜப்பிரியனைக் கண்டதும் தங்களுடைய
களவு போன பொருட்களைப் பற்றி முறையிட்டு கண்ணீர் வடித்தனர். ராஜப்பிரியனும் அவர்களுடன் சேர்ந்து அழுதான்.
அவர்களை விட்டு வந்ததும் ராஜப்பிரியன் "பார்த்தீர்களா அரசே!
அவர்களுடைய பரிதவிப்பைக்கண்டு நான் எவ்வாறு உருகினேன்?
இதிலிருந்தே நான் மக்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தேன் என்று தெரிகிறதல்லவா?” என்றான்.இதுபோல் இன்னும் இரண்டு வியாபாரிகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிலர், பல ஏழைகள் ஆகியவர்களை நேரில் கண்டனர். எல்லா இடங்களிலேயும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்தன.
பிறகு மன்னர் சங்கரனுடன் சேர்ந்து வேறு சில மக்களை சந்தித்தார். ஆனால் சங்கரனின் அணுகுமுறை வேறுபட்டு இருந்தது.அவர்களுடைய துன்பங்களைக் கேட்டபின், மேலும் பல கேள்விகளைக் கேட்டு
சூழ்நிலையை
விவரமாகத் தெரிந்து கொண்ட பின்,அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தான்.
மாளிகை திரும்பியவுடன் மன்னர் சங்கரனிடம் “ராஜப்பிரியன் போல
மனம் உருகாமல் உன்னுடைய அணுகுமுறை வேறாக இருக்கிறதே"என்றார். உடனே சங்கரன் “அரசே!ராஜப்பிரியன் போல் கூடவே சேர்ந்து கண்ணீர் வடிப்பதால் என்ன பயன்?அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தான் நம் கடமை.அந்த பிரச்சினைகள் யாரால், ஏன் எவ்வாறு ஏற்பட்டது
என்று ஆராய்ந்து மீண்டும் வராமல் இருக்கச் செய்ய வேண்டும். அதைத்தான் நான் முறையாகச் செய்தேன்” என்றான்.
மன்னரின்
சந்தேகம் முற்றிலும் தீர்ந்து அவர் தெளிவு பெற்றார்.உடனே சங்கரனை மீண்டும் மகாநகரத்தின் நகராட்சித் தலைவராக மாற்றினார்.
Post a Comment