.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராமத்தில் சுசு, யாமர் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்தனர். சுசு உடல் வலிமை கொண்டவன்.சுறுசுறுப்பானவனும் கூட உடல் வலிமையில் அல்ல.ஆனால்  அவன் ஒரு சோம்பேறி.இருவரும் வாலிப வயது அடைந்து திருமணமும் புரிந்து கொண்டனர். சுசு சிறிய குடிசையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.சுசுவுக்கு உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலை. ஆனால் யாமரின் தந்தை நிலபுலன்களை விட்டுச் சென்றிருந்ததால், யாமர் வேலை ஏதும் செய்யாமல் சுகவாசியாகக் காலம் கழித்தான். அப்படி இருந்தும் இருவரும் நண்பர்களாகவே இருந்து வந்தனர்.

அவர்கள் இருவரும் காட்டுக்கு அடிக்கடி சேர்ந்து செல்வதுண்டு.ஒருமுறை காட்டிலுள்ள குகையினுள் இருவரும் நுழைந்தனர்.அந்த இருட்டு குகையின் ஒரு மூலையில் சில கற்கள் பளபளப்பாக மின்னிக் கொண்டிருப்பதைக் கண்ட சுசு அவற்றை ஆர்வத்துடன் பொறுக்கி எடுத்துக் கொண்டான். இருவரும்
வெளியே வந்து அந்தக் கற்களை வெளிச்சத்தில் சோதித்து பார்த்தனர்.
அவற்றைப் பார்த்தவுடனே,யாமருக்கு அவை விலையுயர்ந்த வைரக்கற்கள் எனத் தெரிந்து விட்டன. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் யாமர் சுசுவிடம்,"நாளைக்கு நகரத்துக்குச் செல்கிறேன் இதற்கு ஏதாவது மதிப்புள்ளதா என்று கண்டு பிடித்து வருகிறேன்'' என்றான்.

மறுநாள் யாமர் அவற்றை நகரத்துக்கு எடுத்துச் சென்றான்.அவன் எதிர்பார்த்தது போலவே அவை வைரக்கற்கள் என்று தெரிந்ததும்
அவற்றை விற்று ஏராளமான பணத்துடன் யாமர் வீடு திரும்பினான். சுசுவுக்கு ஒரு சில காசுகளை மட்டும் கொடுத்துவிட்டு ''சுசு நான் நினைத்தபடியே அவை
உபயோகமற்ற சாதாரண கற்கள்.அவற்றை விற்றதில் சில காசுகள் தான்
கிடைத்தன” என்று பொய் சொல்லி பணம் முழுதும் தானே எடுத்துக்
கொண்டான்.

தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு மாளிகைக் கட்டிக் கொண்டு யாமர் ஆடம்பரமாக வாழ ஆரம்பித்தான். சுசு, தன் நண்பனின் புதிய அந்தஸ்தைக் கண்டு மனம் மகிழ்ந்தான்.

ஒருமுறை சுசுவின் மகன் நோய்வாய்ப் பட்டபோது, மருந்து வாங்க சுசுவுக்குப் பணம் தேவைப்பட்டது. அன்றொரு நாள் தான் குகையினுள் கண்ட கற்கள் மீண்டும் கிடைத்தால், அவற்றை விற்றுப் பணம் திரட்டலாம் என்று அந்த
குகையை அடையும்போது அதனுள் இருந்து யாமர் வெளியே வருவதைக்
கண்டு சுசு ஆச்சரியத்தில் மூழ்கினான்.

“யாமர் எதற்காக இங்கே தனியே வந்தாய்?” என்று சுசு கேட்க, “ஒன்றுமில்லை. இந்த வழியே வந்தேன்.உள்ளே சென்று பார்க்கலாம் என்று தோன்றியது, ஆமாம், நீ எதற்கு இங்கு வந்தாய்?” எனக் கேட்க சுசு தான் அந்த
வைரக் கற்களை தேடி வந்ததாக உண்மையைச் சொன்னான்.

உடனே யாமர், “நல்லது. நாம் இருவரும் சேர்ந்து தேடுவோம்”என்று கூற, இருவரும் தேடினர்.ஆனால் இந்த முறை அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.இருவரும் ஏமாற்றத்துடன் திரும்புகையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவி யாமரை நோக்கி, “மகனே, இந்த விறகுக்
கட்டை சற்று தூக்கியெடுத்து என் தோள் மீது வைப்பாயா?” என்று கேட்டாள். யாமர் அதை செவி மடுக்காமல் சென்று விட்டான்.ஆனால் இரக்க மனம் கொண்ட சுசு அந்த விறகுக் கட்டை தானே தூக்கிக் கொண்டு அந்தக் கிழவியின் வீடுவரை எடுத்துச் சென்றான்.அதனால் மகிழ்ச்சியுற்ற அந்தக் கிழவி சுசுவுக்கு ஒரு கேக் கொடுத்து "இதை உண்டால் உனது பசி மட்டுமல்ல. உனக்குள்ள எந்த நோயும் நீங்கி விடும்” என்றாள். அதைத் தன் நோயுற்ற மகனுக்குத் தரலாம் என்று எண்ணிய சுசு வீடு நோக்கி நடந்தான்.செல்லும் வழியில் மற்றோரிடத்தில் பாதையில் படுத்திருந்த நோயாளி, “ஐயா நான் ஒரு நோயாளி.நான் பல நாட்களாகச் சாப்பிடவே இல்லை” என்று முனக அந்த கேக்கை நோயாளிக்குத் தந்து விட்டான்.




அதை ஆவலுடன் உண்ட நோயாளிக்கு அவனுடைய பசி மட்டுமல்லாமல் நோயும் அகன்றது.சுசுவின் செய்கையால் நெகிழ்ந்து ‘“உன்னுடைய
உதவிக்கு நான் உனக்கு இதைப் பரிசாக அளிக்கிறேன்” என்று கூறி மூங்கில்
கம்புகளால் செய்யப்பட்ட ஒரு சக்கரத்தைக் கொடுத்தான். “தம்பி, இது சாதாரணச் சக்கரமல்ல. இதை வலப்பக்கம் நகர்த்தினால், நீ கேட்பது கிடைக்கும். கேட்டது கேட்டது கிடைத்தவுடன், மீண்டும் நீ இதை இடது பக்கம் திருப்பி விட வேண்டும்.இல்லையேல் நீ கேட்ட பொருள் வந்து கொண்டேயிருக்கும். உனது தேவைகள் நிறைவு பெற்றவுடன் இதைக் கடலுக்குள் எறிந்து விடு” என்றான். சுசு அதைப் பெற்றுக் கொண்டு கிளம்பினான். சக்கரத்தின் மகிமையில் முழு நம்பிக்கை இல்லாததால், பண உதவி வேண்டி தன் நண்பன் யாமரிடமே சென்றான்.“யாமர் எனக்குக் கொஞ்சம் பணம் தேவை. என் மகன் நோயில்.... என்று தொடங்கிய சுசுவை இடை மறித்து “என்னால் உதவி செய்ய முடியாது” என்று இரக்கமின்றி கூறி
சுசுவை திருப்பி அனுப்பிவிட்டான்.

“அப்பா, இது என்ன சக்கரம்?”என்று கேட்ட தன் மகனிடம் “இதைக் கொண்டு நாம் விரும்பிய உணவைப் பெறலாம்’” என்று சொல்லிக் கொண்டே சுசு விளையாட்டாக அதை வலப்புறம் அசைத்தான். என்ன அதிசயம்? உடனே பல உணவுப் பொருட்கள் அவர்கள் முன் தோன்றின.மீண்டும் சோதிக்க விரும்பிய சுசு, தன் மகனுக்கு மருந்து தேவை என்று வலப்புறம் சக்கரத்தை நகர்த்த தேவையான மருந்தும் தோன்றியது. ஒவ்வொரு முறையும் தேவையானதைப் பெற்றவுடன் சக்கரத்தை இடது பக்கம் நகர்த்தியவுடன் பொருட்கள் தோன்றுவது தாமாகவே நின்று விட்டன. மருந்தை மகனுக்கு அளித்து விட்டு கிடைத்த உணவை சாப்பிடும் போது திடீரென மழை பெய்து குடிசையில் ஆங்காங்கே தண்ணீர் ஒழுகியது. “ஒரு நல்ல வீடாகக் கிடைத்தால் போதும்” என்று விரும்ப, அதுவும் நிறை வேறியது. அதுவும் எப்படி? அந்த வட்டாரத்திலேயே பெரிய அழகான மாளிகையாக அவன் வீடு மாறியது.
சில நாட்களிலேயே சுசுவின் வாழ்க்கைப் பாதை மாறி அந்த கிராமத்தில் மிகப் பெரிய செல்வந்தராக சுசு மாறினான்.




இதையெல்லாம் பார்த்த யாமருக்கு பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இவ்வளவு செல்வமும் எவ்வாறு சுசுவுக்குக் கிடைத்தது என்று அறிய யாமர்
மிகுந்த ஆவல் கொண்டான். ஓர் இரவு யாமர் சுசுவின் மாளிகையில் ஒளிந்திருந்து பார்க்கையில் சுசு ஒரு சக்கரத்தைப் பயன்படுத்தித் தான்
விரும்பியவற்றை அடைவதைக் கண்கூடாகப் பார்த்து விட்டான். தான்
வேண்டியதெல்லாம் கிடைக்கப் பெற்ற பிறகு சுசு அந்தச் சக்கரத்தை கடலில் விட்டு விட முடிவு செய்திருந்த நேரத்தில் அந்த சிரமத்தை அவனுக்குத் தராமல்,
யாமர் ஒருநாள் இரவு சுசுவின் மாளிகையிலிருந்து திருடிக் கொண்டான்.

அருகிலுள்ள தீவுக்குச் சென்று அங்கே சக்கரத்தின் உதவியால் ஒரு தனி மாளிகை ஏற்படுத்தி ஆடம்பர வாழ்க்கை வாழத் திட்டமிட்ட யாமர், ஒருநாள் அந்த சக்கரத்துடன் படகில் ஏறி கடலில் பயணம் செய்தான். சற்று தூரம் பயணம் செய்த பிறகு பசியெடுத்ததால் யாமர் தான் கொண்டு வந்திருந்த உணவை உண்ணத் தொடங்கினான். அந்த உணவில் உப்பு இல்லை. ‘அதனால்
என்ன சக்கரத்தின் உதவியால் கொஞ்சம் உப்பு வரவழைத்தால் போகிறது' என எண்ணி அந்த சக்கரத்தை வலப்பக்கம் அசைத்து உப்பு வேண்டுமெனக் கேட்டான்.உடனே ஒரு குவியல் உப்பு அவன் முன் தோன்றியது. அந்த உப்பு
அதிகமாகிக் கொண்டே சென்றது.அதை எவ்வாறு நிறுத்துவது என்று யாமருக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் உப்பு மலையளவு படகில் குவிந்து விட, அந்த பாரம் தாங்காமல் படகு கடலில் மூழ்க யாமரும் நீரில் மூழ்கி இறந்தான். ஆனால் அன்று தொடங்கிய உப்பு, இன்னமும் நிற்காமல் தோன்றி கரைந்து கொண்டே இருப்பதால் எத்தனை மழை பெய்தும், கடல் நீர் உவர்ப்பு குறையவே இல்லை.






Post a Comment

Previous Post Next Post